திங்கள், 2 ஜனவரி, 2012

குர் ஆனும் முரண்பாடுகளும்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 16


திருக்குர்ஆன் இஸ்லாமிய நம்பிக்கைகளின் முதுகெலும்பு. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகளின் எழுத்து வடிவமே குர்ஆன். அல்லாஹ்வின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்க முடியாது. அதாவது குர்ஆனில் முரண்பாடு இருக்க முடியாது என்பது முஸ்லீம்களின் வாதம். ஒரே ஒரு பிழை இருந்தாலும் இந்த குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை எளிதாக கூறி விடலாம். குர்ஆனைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,
“இந்தக் குர்ஆனை ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”
(குர்ஆன் 4:82) 
குர்ஆன் எவ்விதமான தவறுகளும், முரண்பாடுகளும் இல்லாதது. குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இதுவே சரியான ஆதாரம். அதில் காணப்படும் முன்னறிவிப்புகள் குர்ஆன் இறைவேதம்தான் என்பதை மிக வலுவாக நிருபிக்கிறது என்கிறார்கள்.
குர்ஆனைப் பற்றி பொதுவாக கூறுவதென்றால், சற்று கவிதை நடையில் எழுதப்பட்ட உரைநடையே.
…அ(வருக்கு அருளப்படுவ)து நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர (வேறு) இல்லை.…
(குர்ஆன் 36:69) 
அல்லாஹ் கூறுவதைப் போல குர்ஆன் தெளிவான புத்தகம் அல்ல. குர்ஆனை ஹதீஸ்களின் துணையின்றி முழுமையாக எவராலும் புரிந்து கொள்ள இயலாது. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகள் குர்ஆனில் மட்டுமல்ல ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு பின்வரும் ஹதீஸைக் கவனியுங்கள்  இந்த புலம்பல் குர்ஆனில் இல்லை.
புகாரி ஹதீஸ் -4826
அபூ ஹுரைரா (ரலி ) அவர்கள் கூறியதாவது.
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
        குர்ஆனின் வசனங்களை ஆய்வு செய்யும் பொழுது பல முரண்பாடுகள் தோன்றியது. எனவே  முஹம்மது நபியின் ஒவ்வொரு சொல்லையும், அசைவையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  சுருக்கமாகச் சொல்வதென்றால் குர் ஆனின் விரிவுரையாகவே அவரது வாழ்க்கை அமைந்திருந்தது. ஹதீஸ்கள் எனப்படும் வரலாற்றுச் செய்களை இஸ்லாமிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடாத ஒன்றாகும். இதன் காரணமாகவே இத்தொகுப்பில் ஹதீஸ்களைப் பெருமளவு பயன்படுத்தியிருக்கிறேன். குர்ஆனின் முரண்பாடுகளை விவாதிக்கையில் ஹதீஸ்களை மிகமுக்கிய ஆதராமாக முன்வைக்கிறேன். இனி நாம் குர்ஆனை விவாதிப்போம்.
                புதிதாக குர்ஆனை வாசிப்பவர்கள் அதன் எதிர்பாரத திருப்பங்களால் அதிர்ச்சியடைவது உறுதி. ஒரே செய்தியை சிறிய மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப பலமுறை கூறுவது. ஒரு வரலாற்று செய்தியிலிருந்து மற்றொன்றிற்கு திடீரென்று தாவிக் குதிப்பது. அற்பமானவன் என்று வர்ணிக்கப்பட்ட  மனிதனிடம்  விடப்படும் சவால்கள், எச்சரிக்கைகள், பயமுறுத்தல்கள், முன்னுக்குப்பின் முரணாக தொகுக்கப்பட்ட  முறை என்று நிறைய கூறலாலாம்.
குர்ஆனை நடுநிலையாக ஆய்வு செய்தவர்களின் கருத்து என்னவென்றால், இலக்கண பிழைகளும், எழுத்துப் பிழைகளும் நிறைய காணப்படுகிறது. இது மெய் சிலிர்க்க வைக்கும் இலக்கியமல்ல என்கின்றனர்.
வாதத்திற்காக, எழுத்துப் பிழைகள் குர்ஆனைப் பதிவு செய்த எழுத்தர்களிடம் நேர்ந்திருக்கலாம் என்று விட்டுவிடலாம். இலக்கணப் பிழைகளுடன்தான் அல்லாஹ் உரையாடுவானா? அல்லாஹ்வின் மொழியிலக்கணத்தை அற்ப மனிதர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்று கூற முடியாது ஏனெனில் அல்லாஹ்வின் பதில் வேறுவிதமாக உள்ளது.
அவருக்கு கவிதை (இயற்ற) நாம் கற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் அவருக்கு அது தேவையுமில்லை அ(வருக்கு அருளப்படுவ)து நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர (வேறு) இல்லை.…
(குர்ஆன் 36:69) 
மார்க்க அறிஞர்கள் முன்வைக்கும் “குர்ஆன் ஒரு ஈடுஇணையற்ற இலக்கியம்” என்ற வாதத்தை விவாதிக்கவும் அதன் இலக்கிய நயத்தையும் இலக்கணத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும் என்னிடம் அரபி மொழியில் புலமை இல்லை. அது எனக்குத் தேவையுமில்லை குர்ஆனின் ஏகபோக உரிமையாளர் என்று கூறப்படும் அல்லாஹ்வே குர்ஆனைக் கவிதையில்லை என்று அறிவித்த பிறகு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மட்டும் விடாப்பிடியாக மெய்சிலி்ர்க்க வைக்கும் இலக்கியம் புல்லரிக்க வைக்கும் கவிதை என்று சொறிந்து கொண்டிருப்பது ஏனென்று புரியவில்லை. முரண்பாடுகளை மறைக்க அவர்கள் செய்யும் “ஜிகினா வேலை”யாகத்தான் இருக்க வேண்டும்.  எனவே, கருத்து முரண்பாடுகளை ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன். உருவவழிபாடு இல்லாமை, வழிபடும் முறை,  என்று  மற்ற மதநம்பிக்கைகளுடன் முரண்படுவது சாதாரண விஷயம். உறுதி செய்யப்பட்ட உண்மைகளுடனும், தனக்குத் தானே முரண்படுவதையும் நிச்சயமாக ஏற்க இயலாது. 
 குர்ஆன் தன்னைப்பற்றி இவ்வாறு கூறுகிறது
உம்முடைய ரப்பின் வார்த்தைகள் உண்மையாலும்  நீதத்தாலும்  பரிபூரணமடைந்து விட்டன.
(குர்ஆன் 6:116)
இது மனிதர்களுக்கு விளக்கமாகவும் நேர்வழிகாட்டியாகவும் பயபக்தியாளர்களுக்கு நற்போதனையாகவும் இருக்கிறது
(குர்ஆன் 3:138)
அவர்கள் பயபக்தியுள்ளவர்களாவதற்காக கோணலில்லாத அரபிமொழியில் குர்ஆனை (அருளியுள்ளோம்)
(குர்ஆன் 39:28)
நிச்சயமாக இந்தக் குர்ஆன் எது மிக நேர்மையானதோஅதன் பக்கம் நேர்வழிகாட்டுகிறது…
(குர்ஆன் 17:9)
ஆனால் அல்லாஹ் குர்ஆனின் மற்றொரு பகுதியில்,
அவன்தான் இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தான் அதிலிருந்து தெளிவான வசனங்களும் இருக்கின்றன அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும் மற்றவை முதஷாபிஹத் ஆகும்.…
(குர்ஆன் 3:007)
முதஷாபிஹாத்துகள் என்பது பல பொருள் தரும் வசனங்கள். முதஷாபிஹாத்துகளின் தேவை என்ன?
…எனவே எவர்களுடைய இதயங்களில் சருகுதல் இருக்கிறதே அவர்கள் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவும், அதனில் விளக்கத்தை தேடுவதற்காகவும் அதிலிருந்து பல பொருட்கள் உடையதையே தொடருவார்கள் அதனுடைய விளக்கத்தை அல்லாஹ் தவிர (வேறு யாரும்) அறியமாட்டார்கள்…
(குர்ஆன் 3:007)
அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரும் பொருளறிய முடியாத வசனங்களின் தேவை என்ன? குழப்பத்தை ஏற்படுத்தி நேர்வழி அடைவதை எதற்காக தடுக்கப்பட வேண்டும்? பொதுவாகச் சொல்வதென்றால் மனிதன் தவறு செய்யக் கூடியவனே. அவனது உள்ளத்தில் ஏற்படும் சந்தேகங்களின் காரணமாக நம்பிக்கையில் சருகல் ஏற்படுவது இயல்பு. அப்பொழுது அவனை நேர்வழிப்படுத்த உதவாத வேதம் எதற்கு? கோணலில்லாத தெளிவான மொழியில் கூறப்பட்டுள்ளதாக முரண்படுவது ஏன்?
இதன் நேரடிப் பொருள் என்னவென்றால், குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளே எனவே இது மிகச் சரியானது, கோணலில்லாதது, தெளிவானது, முழுமையானது என்பதை உளமாற உறுதி கொண்ட பிறகே  குர்ஆனை ஆராய வேண்டும். ஆய்வின் முடிவுகள் உங்களது முன்கூறிய உறுதிமொழிக்கு முரண்பட்டால் உங்களது நம்பிக்கையில் சருகுதல் ஏற்பட்டு விட்டது, பாதை விலகிச் சென்று விட்டீர்கள் என்பதே இதன் பொருள்.
இந்தக் குர்ஆனை ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”
(குர்ஆன் 4:82) 
இப்பொழுது இந்த குர்ஆன்வசனத்தை என்ன செய்வது?
பலவிதமான பொருள் தரும்  வசனங்களைக் கொண்டதொரு தொகுப்பை நேர்வழிகாட்டியென தன்னைத்தனே பாரட்டிக் கொள்வது சரியாகத் தோன்றவில்லை. ஏனெனில். பலவிதமாக பொருள்தரும்  வசனங்களிலிருந்து தனக்கு பிடித்தமான பொருளில் ஒவ்வொருவரும் உறுதியானால் இறுதியில் மிஞ்சுவது குழப்பமே!  ஆனால் அல்லாஹ், குர்ஆனின்  மற்றொரு பகுதியில் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி,
இக்குர்ஆனை நினைவுபடுத்த (உபதேசம் பெற) திட்டமாக நாம் லேசாக்கி வைத்துள்ளோம் எனவே (இதனைச்) சிந்தித்துணருகிறவர் எவரேனும் உண்டா?
(குர்ஆன் 54:17, 22, 32, 40)
இது என்னை முரண்பட வைத்தது. குர்ஆனை நடுநிலையாக ஆய்வு செய்தபோது மிகவும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டேன். சில வசனங்கள் ஒன்றுக்கொன்று நேர் எதிரான கருத்துகளை கூறியது அவற்றில் சில,
கஃபிர்களைப்பற்றி குறிப்பிடுகையில்
எனவே அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளைக் கொண்டு வரும் வரை நீங்கள் மன்னித்து விடுங்கள் இன்னும் புறக்கணித்து விடுங்கள்.
(குர்ஆன் 2:109)
சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்களே அத்தகையோரிடம் அவர்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கும் நிலையில், (தம்) கையால் ஜிஸ்யா (வரியை) அவர்கள் கொடுக்கும் வரை நீங்கள் போரிடுங்கள்.
(குர்ஆன் 9:29)
மிகத் தெளிவான வசனங்களை உம் மீது திட்டமாக இறக்கி வைத்திருக்கிறோம்.
(குர்ஆன் 2:106) 
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அது போன்றதை நாம் கொண்டு வருவோம் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
(குர்ஆன் 2:106)
உங்களுடைய பெண்களில் மானக்கேடானதைச் செய்தவர்கள்… அவர்களை மரணம் முடிவாகும் வரையில் அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒருவழியை ஏற்படுத்தும் வரையில் வீடுகளிலேயே அவர்களை தடுத்து வையுங்கள்.
(குர்ஆன் 4:15) 
உங்களி(ன் ஆண்களி)லிருந்து இருவர் அதனை மானக்கேடானதைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (ஏசிப் பேசி) நோவினை செய்யுங்கள் அவ்விருவரும் தவ்வாச் செய்து இருவரும்  திருந்திவிட்டால் அவ்விருவரையும் (துன்புறுத்தாமல்) விட்டுவிடுங்கள்…
(குர்ஆன் 4:16) 
விபச்சாரி விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள் நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வுடைய மார்க்க(மாகிய சட்ட)த்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட்டு விட வேண்டாம். அவ்விருவரின் தண்டனையை முஃமின்களிலிருந்து ஒரு கூட்டம் பார்க்கவும்
(குர்ஆன் 24:2) 
இதற்கு  அறிஞர்களின் பதில் :
முதலில் கூறப்பட்ட வசனங்கள் (சிவப்பு) இரண்டாவது கூறப்பட்ட வசனங்களால் (பச்சை) இரத்து செய்யப்பட்டது. காரணம் முதலில் கூறப்பட்ட வசனங்கள் இறக்கப்படும் காலத்தில் முஹம்மது நபி ஆட்சியாளராக இல்லை, இஸ்லாமிய அரசாங்கம் அமைந்ததிற்குப் பிறகு, அல்லாஹ்வால் புதிய சட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட்டது, முந்தின விதிமுறைகள் இரத்து செய்யப்பட்டது என்று விளக்கம் தருகின்றனர்.
மறுப்பு :
இவ் விளக்கங்கள் அல்லாஹ்வை, தன்னுடைய விதிமுறைகளை தெளிவாக முடிவு செய்யத் தெரியாத உறுதியற்ற மனநிலை கொண்டவனாகவே சித்தரிக்கின்றது. ஒருவேளை இஸ்லாமிய அரசாங்கம் அமையாது என்று அவன் நினைத்திருக்க வேண்டும் அதனால்தான் இறுதியான சட்டவடிவத்தை முன்னமே கூறவில்லை என்று நினைக்கிறேன்.
மேலும், இரத்து செயப்பட்ட விதிமுறைகளை முற்றிலும் நீக்குவதே சரியான முறை. மனிதர்களால் இயற்றப்படும் விதிமுறைகள் மாற்றத்திற்குள்ளாகும் பொழுது பழைய விதிமுறைகளை முற்றிலும் நீக்கி விடுகின்றனர் அல்லது இரத்து செய்யப்பட்ட விதிமுறைகளைப் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றனர். ஆனால் குர்ஆனில் இரத்து செய்யப்பட்ட விதிமுறைகள்  இன்றும்  இடம் பெற வேண்டிய தேவை என்ன?  இது தேவையற்ற குழப்பத்திற்கு வழிவகை செய்து கொண்டிருக்கிறது. இதைப் போன்று சில வசனங்கள் புதிய வசனங்களால் மாற்றப்பட்டுள்ளது. அந்த பழைய வசனங்கள் குர்ஆனில் இடம் பெறவில்லை. ஆனால் இவைகள் மட்டும் எப்படி குர்ஆனில் இடம் பிடித்தன? இது தவறான தொகுப்பு முறைக்கு உதாரணமாகும்.
உண்மையில், சர்வவல்லமையுடைய இறைவனின் வேதம் என்பது, இன்றைய நவீன தொழில் நுட்பங்களுடன் ஒப்பிட்டாலும் எவ்விதமான முரண்பாடுகளுமின்றி மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக Drஜாகீர் நாயக், ஹாரூன் யஹ்யா போன்ற நவீன இஸ்லாமிய அறிஞர்கள் முன் வைக்கும் நவீன கண்டுபிப்புகளைப் பற்றிய முன்னறிவிப்புகள் நினைவிற்கு வந்தது ஒருவேளை அவற்றை ஆராய்ந்தால் தெளிவு பிறக்கலாம் என்று குர்ஆன் தொடர்பாக அவர்களது ஆராய்சிக் கட்டுரைகள் சிலவற்றைப் படித்தேன்.  ஆனால் குர்ஆனின் நிலை தலைகீழானது.
உண்மையில், நவீன கண்டுபிடிப்புகளுக்கும்  குர்ஆனுக்கும்  எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. குர்ஆனில் காணப்படுவதாக முஸ்லீம் அறிஞர்கள் குறிப்பிடும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் முற்றிலும் தவறாகத் திரித்துக் கூறப்பட்டவைகளே. குர்ஆனில் நவீன கண்டுபிப்புகளைப்பற்றிய முன்னறிவிப்புகள் இருப்பாதாக் கூறிக் கொண்டிருப்பது முஸ்லீம் அறிஞர்களின் மதவியாபாரத் தந்திரமே தவிர வேறில்லை. 
நான் அறிந்து கொண்டவற்றில் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சில முரண்பாடுகளைக் கூறுகிறேன். முதலில் வார்த்தைகளைச் சிதைத்து தாங்கள் விரும்பும் பொருளில் குர்ஆனுக்கு விளக்கம் கூறும் அறிஞர்களின் வித்தையைக் கூறுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக