திங்கள், 2 ஜனவரி, 2012

ஆத்மாவும் அதுபடும் பாடும் 4

உலகம் அழிந்த பின்னர் உயிர்கொடுத்து எழுப்பப்படுமா? அல்லது புதைக்கப்படும்போதே உயிர் கொடுக்கப்பட்டுவிடுமா?

இக் கேள்வி அக்காலத்திலேயே தத்துவ இயலாளர்களிடமும் பெறும் தர்க்கத்தை எற்படுத்திய ஒன்றுதான். பாரா இப்னு ஆஜிப் என்பவர் புதைத்தப் பிறகு அவ்வுடலுக்குள் ஆத்மா புகுத்தப்படும் என்கிறார்.
புதைத்துவிட்டு சொந்த பந்தங்கள் கொஞ்ச தூரம் கூட நடந்திருக்கமாட்டார்கள். திடீரென்று நாம் இதுவரை பார்த்தேயிராத இரண்டு வானவர்கள் நம் கண்முன் வந்து நிற்பார்கள். கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாவார்கள். ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (நல்லவர்களின் செயல்கள் பதியப்படும் ஏடு) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள (மண்ணறையிலுள்ள) அவனது உடலில் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள்! பூமியிலே அவர்களை நான் படைத்தேன்… இன்னும் மற்றொரு முறை அதிலிருந்து அவர்களை நான் (மறுமையில்) வெளியேற்றுவேன் என இறைவன் கூறினான். அதேபோல் அவனுடைய ஆத்மா(பூமியிலுள்ள) அவனது உடலில் புகுத்தப்படுகிறது. அப்போது அவனிடத்தில் (முன்கர், நகீர் எனும்) இரண்டு வானவர்கள் வந்து அவனை அமர வைப்பார்கள். அவ்விருவரும் அம்மனிதனை நோக்கிப் பின் வருமாறு கேள்விகள் கேட்க, அவனும் பதிலளிப்பான்.
கேள்வி : உனது இறைவன் யார்?

பதில் : எனது இறைவன் அல்லாஹ்

கேள்வி : உனது மார்க்கம் என்ன?

பதில் : எனது மார்க்கம் இஸ்லாம்

கேள்வி : உங்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல அனுப்பப்பட்டாரே அவர் யார்?

பதில் : அவர் அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

கேள்வி : அதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்?

பதில் : அல்லாஹ்வுடைய (நெறி) நூலை ஓதினேன்; அதனை முழுமையாக நம்பினேன். அதனை உண்மைப் படுத்தினேன். இவ்வாறு அம்மனிதன் பதிலளிப்பான்.
என்னுடைய அடியான் உண்மை சொல்லிவிட்டான். அவனுக்காக சுவனத்தில் இருந்து ஒரு விரிப்பை விரித்துவிடுங்கள். சுவனத்தில் ஒரு ஆடையை அவனுக்கு அணிவியுங்கள்…! சுவனத்திலிருந்து ஒரு கதவை அவனுக்காக திறந்து விடுங்கள்! என்று சொல்லக்கூடிய சப்தமொன்று வானத்திலிருந்து வரும். சுவனத்தில் இருந்து மென்மையான காற்றும், நறுமணமும் அவனிடம் வரும். அவனுடைய பார்வை எட்டுமளவு அவனுடைய மண்ணறை விசாலமாக்கப்படும் (புதுமாப்பிள்ளை எந்த தொல்லையுமில்லாமல் தூங்குவது போல் அவன் மறுமையில் எழுப்பப்படும் வரை தூங்குவான்).

வானவர்கள் சுமந்து சென்ற கெட்ட ஆத்மாவின் செயல்கள் ஸிஜ்ஜீனிலே (தீயவர்களின் செயல்கள் பதியப்படும் ஏடு) பதியப்பட்டு அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். பிறகு அவனிடம் இரண்டு வானவர்கள் வந்து அவனை அமரச் செய்து, அவனிடத்தில் பின்வருமாறு கேள்விகள் கேட்க, அவன் பதிலளிப்பான்.

கேள்வி : உனது இறைவன் யார்?

பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!

கேள்வி : உன்னிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல அனுப்பப்பட்ட மனிதர் யார்?

பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!

இவன் பொய் சொல்கிறான். நரகத்திலிருந்து ஒரு விரிப்பை இவனுக்காக விரித்து விடுங்கள்…! நரகத்திலிருந்து ஒரு கதவை இவனுக்காக திறந்து விடுங்கள்…! என்று சொல்லக்கூடிய சப்தமொன்று வானத்திலிருந்து வரும். நரகத்தின் உஷ்ணமும், விஷக்காற்றும் அவனுடைய மண்ணறைக்குள் வீசும். அவனுடைய வலது, இடது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னுமளவுக்கு மண்ணறை அவனை நெருங்கிக் கொண்டே இருக்கும். அவன் மறுமையில் எழுப்பப்படும் வரை இவ்வாறு வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : பாரா இப்னு ஆஜிப்(ரழி) நூல் : அஹ்மத் ஹ 8561.

பாரா இப்னு ஆஜிப் நபிமொழியை அப்படியே எடுத்துக்கொண்டு ஆத்மா புகுத்தப்படும் என்பதை சேர்த்துக் கொள்கிறார்.

(இந்த ஆதாரத்தை http://senkodi.wordpress.com/2010/10/26/senkodi-pj/#comment-3131 என்ற வலைத்தள முகவரியில் எழுதியுள்ள வலையுகம்; ஹைதர்அலி அவர்களுக்கு நன்றி http://www.valaiyukam.blogspot.com )

ஹைதர்அலி அவர்களுக்கு கலை என்பவர் பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறார்.

ஆஆஆற்றல் மிக்க அல்லாவுக்கு எதற்கு வேலையாட்களாக வானவர்கள். அவரே ”குன்”னுன்னு சொல்லி எல்லாத்தையும் செய்யமுடியாதா?
///அதேபோல் அவனுடைய ஆத்மா(பூமியிலுள்ள) அவனது உடலில் புகுத்தப்படுகிறது///

ஆத்மாவை புகுத்தியவுடன் டபுக்குன்னு எந்திரிச்சிருவாங்களா! அவரு (வானவர்கள்) கேள்வி கேட்டாருன்னா இவரு பதில் சொல்லனும். பதில் சொல்லனும்னா காது கேக்கனும், நாக்கு அசையனும், வாய் அசையனும், நுரையீரல் இயங்கனும், இதுக்கெல்லாம் மூளை இயங்கனும், மூளை இயங்க இரத்தம் வேணும், இரத்ததை பிரிக்க இருதயம் இயங்கனும், அப்புறம் சிறுநீரகம் இயங்கனும் இப்புடி எல்லா இயங்க இரத்தமும் ஆக்ஸிஜனும் வேணும். வானவர்கள் இரத்தத்தையும், ஆக்ஸிஜனையும் கையோடு கொண்டுவருவாங்களா! இல்ல இங்க ஏதாவது ஆஸ்பத்திரியில சுடுவாங்களா!
இதயத்துல அடைப்போடு செத்த பொணத்த என்னா செய்வாங்க! செவிட்டு பொணத்திடன் எப்புடி பேசுவாங்க! மூளை நசுங்கி செத்த பொணத்தோட பேசமுடியுமா! கண்,காது, மூக்கு, நுரையீரல், இதயம், மூளை, சிறுநீரகம் இப்படி எல்லாத்தையும் போஸ்மார்டதின் மூலம் இழந்து வர்ற பொணம் எப்படி பதில் சொல்லும். இல்லாத உறுப்புகளை உடம்புக்குள் பொருத்திவிட்டு அப்புறமா கேள்விக் கேட்பார்களா! வானவர்களுக்கு அறுவை சிகிச்சைத் தெரியுமா! அப்புறம் அறுவை சிகிச்சைக்குத் தேவையான சாமானுல்லாம் வேணும். இதெல்லாம் தேவையில்லை அல்லா தன் ஆற்றலினால் சரிசெய்து பேசவைப்பான் என்றால் பிறகு எதற்கு வானவர்கள்?

///கேள்வி உனது இறைவன் யார்?

பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!///
செத்தபிறகு நான் சொல்லப் போற இக்கேள்விக்குண்டான பதிலை எப்புடி நீங்களாகவே சொல்லுறீங்?

இதற்கு பதில் தேடிப்பாருங்கள், ஆத்மா பற்றிய புளுகுமூட்டையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இன்னொருவகையான முரண்பாடினைப் பார்ப்போம். ஒன்று நடைபெறுமா நடைபெறாதா என்பதில் உங்களுக்கு சந்தேகம் எற்படலாம். உலகையே இயக்கும் கடவுளுக்கு எற்படலாமா?
குர்ஆன் வசனம் 27;80 மற்றும் 30;52 ஆகியவை, (நபியே) நிச்சயமாக நீர் மரணிக்கச்செய்தோரை செவியேற்கச் செய்யமாட்டீர்…… என்று கூறுகிறது.
கல்லரைக்கருகில் நின்றுகொண்டு நாம் இறந்தவர்களிடம் எதனைக் கூறினாலும் வேண்டுதல்கள் வைத்தாலும் அதனை அவர்கள் கேட்கமுடியாது என்று இந்த வசனங்கள் மூலம் அறிவிக்கும் அல்லாவிற்கு சந்தேகமேற்பட்டு,
வசன எண்; 35;14-ல் அவர்களை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். அவர்கள் செவியுற்றபோதும் உங்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்….. என்று அறிவிக்கிறான்.
இறந்தவர்கள் நாம் சொல்லுவதை கேட்க முடியுமா முடியாதா என்று உலகத்தை படைத்த அல்லாவிற்கும் சந்தேகம். அவனுடைய தூதருக்கும் சந்தேகம். 1400 ஆண்டுகள் கடந்து அறிவியலை எல்லாம் கண்டுபிடிக்கும் திரு பி.ஜே. அவர்களுக்கும் இந்த சந்தேகம் விட்டபாடில்லை.
திரு பி.ஜே. அவர்கள் தமது, குர்ஆன் மொழிபெயரப்பில் அதற்கான பொருள் அட்டவணை பகுதியில் பக்கம் எண் 1157, 1158 –ல் இறந்தவர்கள் எதனையும் அறியமுடியாது, செவியேற்கச் செய்ய முடியாது என்று தலைப்பிட்டும் பக்கம் எண் 1150 –ல் செவியேற்றார்கள் என்றுவைத்துக் கொண்டாலும் பதில் தர முடியாது என்று தலைப்பிட்டும் தனது கூட்டத்தாருக்கு அறிவு களஞ்சியத்தை வாரி வழங்குகிறார்.

மேலும் சில முரண்பாடுகளைப் பார்ப்போம்.

மனிதனுக்கு மரணம் இரண்டு, பிறப்பு இரண்டு. ஒருவன் பிறப்பதற்கு முன் உயிர் இல்லாத நிலையில் இருந்த மரணநிலை ஒன்று. (இதன் மூலம் வித்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இல்லை என கூர்ஆன் கூறுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்) பிறந்து வளர்ந்து மரணமடையும் மரண நிலை இரண்டாவது மரணம். அதுபோல பிறந்தது முதல் பிறப்பு. இறந்தபின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது இரண்டாவது பிறப்பு.
நபிமார்களும் மனிதர்களே. மனிதர்கள் உலகம் அழியும் நாள் அன்று உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். உலகம் அழியும் நாளில் முதன் முதலாக முகம்மதுநபிதான் உயிர்கொடுத்து எழுப்படுவார் என்று நபிமொழி கூறுகிறது. அப்படியானால் முகம்மதுநபிக்கு பிறகுதான் பிறநபிமார்களும் மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்றாகிறது.
ஆனால் இதற்கு முரண்பாடாக முகம்மதுநபி ஏழுவானங்களையும் கடந்து அல்லாவை சந்திக்க சென்றபோது (மிஹ்ராஜ் பயணம் என்று இதைக் கூறுவர்) ஒவ்வொருவானத்திலும் ஆதம், மூஸா, இபுராஹிம் என்று ஒவ்வொருநபியையும் சந்தித்த தாகவும், சொர்கத்தில் இன்புறுபவர்களையும், நரகத்தில் துன்புறுபவர்களையும் பார்த்ததாகவும் நபிமொழிகள் கூறுகின்றன.

எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள் என்று நபிமொழி கூறுகிறது

உலகம் அழியும்நாளில்தான் உயிர்கொடுத்து கல்லரையிலிருந்து எழுப்பப்படுவர் என்றும் அதற்கு முரணாக உயிருடன் வானத்தில் பார்ததாகவும் கூறுவது என்னவகைத் தத்துவம்?
செத்து புதைத்த பின் ஆத்மா உடலுக்குள் புகுத்தப்படுமா? புகுத்தப்பட மாட்டாதா? செத்தவனை வேதனை செய்யப்படுகிறதா? இல்லையா?
~வரும்…. ஆனால் வராது.~ திரைப்படத்தில் வந்த இந்த நகைச்சுவைக் காட்சியைக் கண்டதும் ~ என்ன இது. வரும் ஆனால் வராது என்று சின்னத்தனமா உளறுவதைபோய் நகைச்சுவை என்று எடுத்திருக்கிறார்களே என்று நினைத்தேன். உலகின் மாபெரும் தத்துவங்களே இப்படி இருக்கும் போது…. ஒருவேளை, என்னத்த கன்னையை இதிலிருந்துதான் இந்த நகைச்சுவைக் காட்சியை உருவாக்கி இருப்பாரோ!
பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல முடியாத முன்னுக்குபின் முரண்பாடுகளால் ஆன மொத்த உருவம் இசுலாம். ஆத்மா கடவுளிடம் போகிறது என்பதும், மண்ணறை வாழ்வு, சொர்கம், நரகம் என்பதும் ஒட்டுமொத்த மதங்களின் கற்பனை. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் ஒரு உயிர் உள்ளது என்றும் அது பிரிந்துவிட்டால் இறந்துவிடுகிறோம் என்றும் புரிந்து வைத்துள்ளான். அந்த எளிமையான அறிவை பயன்படுத்திக் கொள்ளும் ஆளும் வர்க்கம், செத்தபின்னான ஒரு வாழ்வு இருக்கு என்றும் அங்கே சொர்க்கமும் நரகமும் இருக்கு என்றும் கற்பனைக் கோட்டைகளைக்கட்டி, ஆசைகாட்டியும் பயமுறுத்தியும் பொருளாதாரத்தை புரிந்துகொள்ளவிடாமல் உழைப்பவனிடமிருந்து சுரண்டிக் கொழுக்கிறது.

இந்த ஆத்மா, சொர்கம், நரகம் ஆகிய ஆனைத்தும் பொய் என அவர்களின் முரண்பாடான உளரல்களைக் கொண்டு மட்டுமல்லாது நமக்குத் தெரிந்த எளிமையான அறிவியலைக்கொண்டும் புரிந்து கொள்ளலாம். நம் உயிர் எங்கிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி பதில் தேடுவோம். இதயத்தில், மூச்சுக்காற்றில், மூளையில் இரத்தத்தில் என்று ஒவ்வொன்றாக அலசிப்பாருங்கள்.

இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து மனிதன் வெற்றி பெற்றுள்ளான். மாற்று இதயத்தை பெற்றவரிடம் இருக்கும் ஆத்மா யாருடையது? அவருடைய அறிவு செயல்பாடுகள் எவருடையது போல இருக்கும்? இதயத்தை கொடுத்தவர்போலவா? இதயத்தை பெற்றவர்போலவா? இதயத்தை கொடுத்தவரின் ஆத்மா (உயிர்) பிரிந்து போனபின்தான் இதயத்தை எடுத்து பிறருக்கு பொறுத்தப்படுகிறது. உயிரற்ற இதயம் உயிருள்ளதாகி விடுகிறது. இதய வால்வு மாற்று சிகிச்சை தசைக்கோளாரினால் இயங்கமூடியாத இதயத்தை இயக்கும் பேஸ்மேக்கர் என்ற கருவியைப் பொருத்துவது எல்லாம் இன்று சர்வசாரணம். அப்படியானால் இதயத்தில் ஆத்மா குடிகொண்டில்லை எனலாம்.
கோமாவில் எந்த செயல்பாடும் வெளியுலக உணர்வும் இல்லாதிருக்கும் ஒருவரின் மூளையின் பெரும் பகுதி இயங்கவில்லை. உடல் உள்ளுறுப்புகள் சிலமட்டும் இயங்கத்தேவையான மூளையின் பகுதி மட்டுமே இயங்குகிறது. இதனையறியும் நாம் உயிர் மூளையில் இருப்பதாக கூறலாம். ஆனால் அவருக்கு தொடர்ந்தால் போல் 6 ,7 நிமிடங்கள் சுவாசத்தை நிறுத்திவிடுவோம். என்ன நடக்கும்? கோமாவில் உள்ளவர் மட்டுமில்லாது மூளை உட்பட எல்லா உறுப்புகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்களும்கூட இறந்துவிடுகின்றனர். அதனால் மூளையில் உயிர் மையம் கொண்டில்லை என அறியலாம்.
சுவாசத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நல்ல ஆக்ஸிஜனை குறைவில்லாமல் ஒருவருக்கு கிடைக்கச் செய்துவிட்டு மூளையையோ அல்லது இதயத்தையோ அல்லது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் என்று ஏதாவது ஒன்றை எடுத்துவிடுவோம். உயிருடன் ஒருவர் இருக்க முடியுமா?
இரத்தத்தில் உயிர் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இரத்தமாற்று ஒருவுக்கொருவர் செய்துகொள்வது இன்று சர்வசாதாரணம். பிறரின் இரத்தத்தை தமது உடலில் ஏற்றிக்கொண்டவர் பிறரின் ஆத்மாவிலிருந்து கொஞ்சத்தை பிய்த்து எடுத்துக்கொண்டதாக கூறலாமா? பிஜே அவர்கள் அப்படி சொன்னாலும் வியப்பதற்கில்லைதான்.
உடலின் எந்த உறுப்பின்மீதும் ஆத்மாவை தேடிப்பாருங்கள். எதிலும் இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இப்பொழுது இந்துமதம் சொல்லுவதுபோல தனியாக, கண்ணுக்குப் புலணாகாத, எக்ரே ஸ்கேன் போன்ற கருவிகளுக்கெல்லாம் அகப்படாத ஒன்றாக உடலில் தொங்கிக்கொண்டு உள்ளது என்று எடுத்துக் கொள்வோம். இது ரேடியோ அலைகள் மூலமாக அல்லது எக்ஸ் கதிர்கள், காமா, பீட்டா கதிர்கள் போல ஏதோ ஒரு கதிரைக்கொண்டு உடலை இயக்குவதாக அவர்கள் கூறுவதாகவும் எடுத்துக் கொள்வோம். அலிஅசன் அலைகளையும், கதிர்களையும் ஆய்வு செய்யும் கருவிகொண்டு, தான் பார்த்ததாக கூறும்போது நாம் எவ்வாறு மறுக்க முடியும்? அந்த கருவிகளுடன் தொடர்புள்ளவர்கள் வேண்டுமானால் எளிதாக மறுத்துவிடலாம். சாமாணிய மனிதன் என்ன செய்வான்? ஏற்கனவே தம்மிடமுள்ள நம்பிக்கைகளில் இதனையும் சேர்த்துக் கொண்டு பிறரையும் நம்பச்செய்வதற்கு முயற்சிப்பான்.
அதனால் மதவாதிகளின் புதுபுது தந்நிரங்களை இடைவிடாது கண்காணிப்பதும் அதனை மதக்கோட்பாடுகளுக்குள் புகுந்து அம்பலப்படுத்துவதும், அதற்கான அறிவியலை மக்களிடம் எடுத்துச் செல்வதும், புதிதாக கண்டுபிடிக்கப்படும் அறிவியல் உண்மைகளை உடனுக்குடன் மக்களிடம் எடுத்துச்சென்று அது எவ்வாறு மதக்கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது என்றும் அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமை.
உயிர்பற்றிய அறிவியலை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

உயிர்களின் அடிப்படை அமினோ அமிலமாகும். இது புரதங்களுடன் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் இணையும்போது இயக்கமுள்ள உயிருள்ளதாக மாறுகிறது. இதனை ஒருசெல் உயிரி என்கிறோம். இந்த ஒரு செல் உயிரி புறச்சூழ்நிலையிலிருந்து உணவைப்பெற்று வளர்கின்றன. வளர்ச்சிபெற்ற இந்த ஒரு செல் உயிரி தன்னைத்தானே இரண்டாக பிரித்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின்றன. ஒரு செல் உயிரி காலப்போக்கில் புறத்தாக்குதல்களால் பல செல் உயிரிகளாக ஊர்வன, பறப்பன, நடப்பன என்று பரிணாமம் அடைந்தன.
நமது உடல் செல்கள் அனைத்தும், நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களைப் பெற்று வளர்ச்சியடைகின்றன. செல் பிரிதல் மூலம் தினந்தோறும் இலட்சக் கணக்கில் புதியன பிறக்கிறது. அதுபோல தகுதியற்றதாக மாறிய செல்கள் தினமும் இலட்சக்கணக்கில் இறக்கின்றன. பிறப்பு விகிதம் கூடினால் எடை கூடுதலாகி வளர்கிறோம். இறப்பு விகிதம் கூடினால் மெலிந்து விடுகிறோம். ஆணின் ஒரு சொட்டு விந்தணுவில் பலகோடி உயிரணுக்கள் உள்ளதாம். இது இன்று படிப்பறிவு இல்லாத மனிதர்களும் அறிந்த ஒன்று. அப்படியானால் தினந்தோறும் எவ்வளவு உயிர்கள் இறக்கின்றன. நம் உடலில் எத்தனை ஆத்மாக்கள்தான் உள்ளன? அந்த ஆத்மாக்கள் எல்லாம் எந்த சொர்கம் நரகத்திற்கு போகும்?
தாவரம் மற்றும் பிற விலங்குகளை உண்டு மனிதனும் விலங்கினங்களும் வளர்கின்றன. மனிதனும் விலங்கினங்களும் இறந்த பிறகு சிதைந்து சத்துகளாக மண்ணில் கலந்து தாவரங்களுக்கான உணவாக மாறுகிறது. இதுவே உயிரினச் சுழற்சி முறையாகும்.
உலகில் உயிரினங்களும் மனித இனமும் தோன்றி பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டன. இதோ உலகம் அழியப்போகிறது என்று எல்லாமதங்களும் அப்பப்போ சாமியாடினாலும் உலக அழிவு என்பது கற்பனையாகவே உள்ளது. இலட்சக்கணக்கான ஆண்டுகளாக வினாடிக்கு வினாடி கோடிக்கணக்கான ஆத்மாக்கள் பிறந்துகொண்டும் இறந்துகொண்டும் இருக்கும் போது ஆத்மா பிரிந்து செல்கிறது, அதற்கு சொர்கம் நரகம் உண்டு என்பது கற்பனையே. இந்தப் பொய்யான கற்பிதத்தைக் கொண்டு உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்காதீர்கள்.

ஆத்மா, சொர்க்கம், நரகம் என்று பயமுறுத்துபவர்களே இதுகுறித்து முன்னுக்கு பின் முரனாக உளறுவது மட்டுமல்லாது மனித சமுநாயத்திற்கு எதிராக குற்றங்களை செய்துகொண்டிருக்கும் போது நாம் என் அதனை நம்பி பயப்படவேண்டும்? அதனை நம்பி நமது வாழ்வை சுரண்டுபவர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும்?

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு மனிதன் வாழ எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல நம் சமுதாயம் வாழ நாம் ஒவ்வொருவரும் அவசியம். அதனால் பிறருடன் இணைந்து சமத்துவமாக வாழ்வோம். அதன் மூலம் நம்மை இந்த பூமியில் நிலைத்து நிற்கும் உயிரினமாக ஆக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக