வியாழன், 12 ஜனவரி, 2012

மாயன் நாள்காட்டி + நோவாவின் கப்பல் = 2012


சில மாதங்களுக்கு முன்பு, மாயன் நாள்காட்டியில் 2012 ல் உலகம் அழியப்போவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று மாயன் கலாச்சாரத்தை அலசி ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். அதற்கு அறிவியல் புனைகதை பூசி உலவவிட்டிருக்கிறார்கள் திரைப்படவடிவில், அதுதான் 2012.
மாயன் சமூகத்தை ஆராய்வதற்கு எவ்வளவோ தலைப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக, சிறப்பான தங்கள் கலாச்சாரத்தை பேணி வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், திடீரென மறைந்து போனதன் காரணம் என்ன? என்பதை கருப்பொருளாக கொண்டிருந்திருக்கலாம். வெறிபிடித்த ஸ்பெயின் காலனியாக்கவாதிகள் போரில் கொல்லமுடியாத அம்மக்களை உதவி என்ற பெயரில் அம்மை நோய்க்கிருமிகள் கொண்ட போர்வையை வழங்கி கொத்துக்கொத்தாக கொன்று தீர்த்ததை பரவலாக்கி அம்பலப்படுத்தியிருக்கலாம். ஆனால் அது அவர்களின் அரசியலுக்கு உகந்ததாக இருந்திருக்காது. இருக்கை நுனியில் அமர்ந்து நகம்கடிக்கும் ரசிகர்களுக்கும் உகந்ததாக இருந்திருக்காது.
பிரமாண்டமான வரைகலை உத்திகளின் பரபரப்பை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஏகாதிபத்தியவாதிகளின் சிந்தனை நெருக்கடியான கட்டத்தில் எப்படி மக்கள் விரோதமானதாக இருக்கும் என்பதை ஓரளவிற்கு உணர்த்துகிறது. 2012ல் உலகம் அழியப்போகிறது என்று 2009லேயே தெரிந்து கொண்ட பின்பும் மக்களைக்காக்க எந்த முயற்சியும் செய்யாமல் ஏகாதிபத்திய முதல்நிலை நாடுகளின் தலைவர்களும் பணக்கார பொறுக்கிகளும் தப்பிச்செல்வதற்கு கப்பல் தயாரிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் நிஜத்தில் தன்னுடைய மேலாதிக்கத்தை ஏற்கமறுக்கும் நாடுகளையும் அதன் மக்களையும் குண்டுவீசி கொல்லும் அமெரிக்க நாட்டின் அதிபர் நிழலில் தப்பிப்போக வாய்ப்பிருந்தும் மக்களுக்கு சேவைசெய்தே மடிகிறார். ஆஹா இது போன்ற தலைவர்களல்லவா நாட்டுக்கு வேண்டும்.

பைபிளில் (குரானிலும்) ஒரு கதை உண்டு. நோவாவின் (நூஹ்) காலத்தில் மக்கள் கடவுளின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த மறுக்க கோபம்கொண்ட கடவுள், நோவாவையும் அவரைச்சார்ந்தவர்களையும் கப்பல் கட்டச்செய்து தப்பவைத்து ஏனையவர்களை பெருவெள்ளம் கொண்டு அழிக்கிறார். இந்தக்கதையைத்தான் ராமநாராயணனின் வேப்பிலை அம்மன் அளவுக்கு இல்லாமல் அறிவியல் என்று சுற்றி இருக்கிறார்கள். உலகமக்களுக்கு அன்பை போதிக்கும் ஒரு கதையை எழுதி அது ஐநூறு படிகளே விற்ற நூலின் எழுத்தாளன் தான் கதையின் நாயகன். உலகம் அழியப்போகிறது என்று தனக்கு தெரிந்த உண்மையை உலகிற்கு சொல்ல காலம் இல்லாமல் மயிர் கூச்செரியும் சாகசம் செய்து தன் குடும்பத்தை காக்கிறார். துப்பாக்கியை வைத்துதான் ஆய்வு செய்வீர்களா என்று ஓரிடத்தில் வசனம் பேசுகிறார் நாயகன். உலகம் முழுவதிலும் ஆயுதங்களை முன்னிட்டே ஆய்வுகள் நடக்கின்றன என்பதை தெரியாத இந்த எழுத்தாளரின் நூல் தான் புதிய உலகிற்கு வேதமாக  எடுத்துச்செல்லப்படுகிறது.
பில்லியன் டாலர் லாபம் கிடைத்தது என்று விருந்து கொண்டாடும் முதலாளிதான் அதிபருக்கு அடுத்த இடத்திலிருந்து செயல்களை தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறான் என்பதை வெளிப்படையாக்குகிறது படம். இந்த முதலாளியோடு வாதம் செய்து தான் அறிவியலாளன் மக்களில் சிலரை கப்பலில் பயனிக்கச்செய்கிறான். கப்பலை செய்த தொழிலாளிகள் முதல் உலகம் அழியப்போகிறது என கண்டுபிடித்தவர் வரை எல்லோரும் அழிந்துபோக மில்லியன் டாலர் கொடுக்கமுடிந்தவர்கள் இங்கு ஏழைகளாக சித்தரிக்கப்படுகின்றனர். புதிய உலகின் ஏதுமற்ற வர்க்கம்?
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் தயாரிக்கப்படும் கப்பலைப் பற்றி தகவல் தெரிந்த அனைவரும் வரிசையாய் கொல்லப்படுகிறார்கள். உலக அழிவையும் அதிலிருந்து தப்ப திட்டங்கள் தரும் அறிவியலாலனும் கூட கண்காணிக்கப்படுகிறான். இதையெல்லாம் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் அதிபர் எல்லாம் முடிந்தபின் மக்களுக்கு அறிவிக்கிறாராம். ஆனால், தொடக்கத்திலிருந்தே இந்த அழிவை மக்களுக்கு அறிவிப்பதையே நோக்கமாக கொண்டவன் ஒரு பைத்தியக்காரனைப்போல் காட்டப்படுகிறான். தனக்குத் தெரிந்த தகவலைக்கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பவன் கதாநாயகன், எதிர்வரும் அழிவை மக்களுக்கு சொல்ல நினைப்பவன் பைத்தியக்காரன். முதலாளியமும் இதையே தான் சொல்கிறது, உன்னை மட்டுமே பார் சமூகம் உனக்கு தேவையில்லை என்று.

சூரியனின் நெருப்பு விசிறல்கள் அதிகரித்து நியுட்ரினோக்களின் விளைவால் புவியின் உள்வெப்பம் அதிகரிப்பதால் பூமி பிளந்து எரிமலைக் குழம்புகள் வீசியடிக்கின்றன. ஆனால் இவ்விளைவுகளால் பூமியை மூழ்கடிக்கும் அளவிற்கு பெருவெள்ளம் எப்படி ஏற்படுகிறது?
வரைகலை உத்திகளால் மக்களை பிரமிப்புக்கு உள்ளாக்கி ஒருவித அயர்ச்சியுடன் வெளித்தள்ளும் இதுபோன்ற படங்களைவிட குறைகளிருந்தாலும் விழிப்புணர்வை தூண்டும் நாகரீக கோமாளி, ஈ போன்ற நம்மஊர் படங்கள் பல மடங்கு சிறந்தவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக