சனி, 7 ஜனவரி, 2012

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2

மூளைக்குள் கடவுள் வீடியோ
இது பிபிஸி ஆவணப்படம்.
இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை.
இதன் முதல் பகுதி மட்டுமே இங்கே உள்ளது.
இரண்டாம் பகுதி அடுத்த வாரம் வெளிவரும்

ரூடி: நான் இறந்துவிட்டதாகவும் நான் நரகத்துக்கு சென்றதாகவும் நினைத்தேன்.
க்வென்: என்னுடைய மகனை கடவுள் என்று நினைத்திருந்தேன்
பெர்னி: (க்வெனின் கணவர்) அப்புறம் பார்த்தால், அவள் என்னை ஜோஸப்பாகவும், அவள் மேரி என்றும், சின்ன சார்லி (மகன்) கிறிஸ்து என்றும் நினைத்திருந்தாள்.
குரல் (பார்பரா ஃப்ளைன்): மூளை நோய்களிலேயே மிகவும் வினோதமான மூளை நோயால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தாங்கள் கடவுளால் தொடப்பட்டதாக இவர்கள் நினைக்கும்படி இது ஆக்குகிறது. ஆனால், இவர்களது அசாதாரணமான நிலை, மனித மனத்துக்குள்ளும், மத நம்பிக்கைக்குள்ளும் விஞ்ஞானிகள் நுழைந்து பார்க்க ஒரு தனித்த பார்வையை தருகிறது. இதன் விளைவாக, நமது மூளையின் பௌதீக அமைப்புதான் நம்மை கடவுளை நம்பும்படி தூண்டுகிறதா என்ற மிகவும் அதிரடியான கேள்வியை ஆய்வாளர்கள் கேட்டுகொண்டிருக்கிறார்கள்.
ரூடி: என்னுடைய வலிப்பு நோய் இருக்கும் டெம்போரல் லோப் இவைதான்.
குரல்: ரூடி அஃபோல்டர் தன் வாழ்நாள் முழுவதும் மிகவும் தீவிரமான டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர் 18 மாதமாக இருந்தபோது அவருக்கு வந்த கடுமையான வலிப்பு காரணமாக ஏறத்தாழ சாவுக்கே சென்று மீண்டார். அவரது டெம்போரல் லோப் பகுதியில் அசாதாரணமான மின்சார சிக்னல்கள் தோன்றுவதால் அவருக்கு வலிப்பு வருகிறது.
ரூடி அஃபோல்டர்: ஒரு சில நிமிடங்களுக்கு உங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அதன் பின்னர், உங்களுக்கு பெரும்பாலும் தலை சுற்றும். நீங்கள் கீழே விழுந்து சில நிமிடங்கள் இழுத்துகொள்வீர்கள். சில வேளைகளில் முழு நினைவும் இருக்கும். சில வேளைகளில் நினைவிழந்து கிடப்பீர்கள்.
குரல்: டெம்போரல் லோப் வலிப்புநோய்க்கு ஒரு அசாதாரணமான பக்க விளைவு உண்டு. அந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் சிறுபான்மையினருக்கு மத சம்பந்தமான பிரமைகளை உருவாக்குகிறது. இந்த பிரமைகள் இதுவரை கேட்டிராத சில கேள்விகளை கேட்கும்படி விஞ்ஞானிகளை தூண்டியிருக்கின்றன. ரூடி எப்போதுமே முழுமையான உறுதிப்படுத்தப்பட்ட நாத்திகர். இருப்பினும், 43 வயதில், மிகவும் வலிமையான ஆன்மீக உணர்வு ஏற்பட்டது.
ரூடி: க்ராளி மருத்துவமனையில் நான் படுத்திருந்தபோது திடீரென்று எல்லாமும் மாறியது போல காணப்பட்டது. அந்த அறை அதே அளவில்தான் இருந்தது, இருந்தும் அது வேறொன்றாக மாறிக்கொண்டிருந்தது. இதற்கு எதிராக போராட வேண்டும் என்று முதலில் நினைத்தேன். அதனால், என்னை மீண்டும் மன ரீதியில் சாதாரணமாக ஆக்க முயன்றேன். ஏனெனில் நான் பைத்தியமாக ஆகிகொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். நான் இறந்து நரகத்துக்கு சென்றுவிட்டேன் என்று நினைத்தேன். நான் மதநம்பிக்கையுள்ள கிறிஸ்துவனாக இல்லாததால், நான் நரகத்துக்கு அனுப்பப்பட்டேன் என்று சொல்லப்பட்டேன். கிறிஸ்துவ மதமே சரியானது என்று அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன அழுத்தத்துக்குள்ளானேன். அதே நேரத்தில் திகிலும் அடைந்தேன். என்ன நடந்தது என்பதை அறிந்தும்இங்கேயே இருக்கப்போகிறேன் என்பதை அறிந்து மிகவும் கவலையடைந்தேன்.
குரல்: ரூடியின் அதிர்ஷ்டம், அவருக்கு அதற்கு பின்னால் அப்படிப்பட்ட ஒரு பிரமை தோன்றவில்லை. இன்னும் உறுதியான நாஸ்திகராகவே இருக்கிறார். ஆனால், க்வென் டிகே, பல வருடங்கள் தொடரந்த பிரமைகளால் அவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார். ரூடி போலல்லாமல், அவர் உறுதியான மத நம்பிக்கையுடன், ரோமன் கத்தோலிக்கராக இருக்கிறார். இந்த பிரமைகளால் க்வென் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதன் சாட்சியாக அவரது கணவர் பெர்னி இருந்துவருகிறார். அவரது தேனிலவுக்கு பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அவருக்கு முதலாவது பிரமை தோன்றியது.
பெர்னி டிகே: வார்டின் எதிரே இருந்த ஒரு பெண்மணிதான் சாத்தான் என்று எனது காதில் சொன்னாள். அதுதான் நான் முதலில் அவள் அப்படி சொல்லி கேட்டது. அந்த பெண்மணி பச்சை தோலுடன் ஒரு சாத்தானாக இருப்பதாக சொன்னாள்.
க்வென் டிகே: அது வெறுமே என் மனத்தில்தான். அந்த சாத்தான் என்னை திகிலடைய வைத்தது. பளீரென்ற ஒளியில்.. சாதாரணமாக மக்கள் மங்கின ஒளியில்தான் சாத்தானை பார்த்ததாக சொல்வார்கள். அப்போது பளீரென்று ஒளி இருந்தது. அது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. மிகவும் திகிலாக இருந்தது.
பெர்னி: கிரிக்கி…(சிரிக்கிறார்) நான் என்ன செய்ய… என்ன நடக்கிறது? அதன் பின்னர் பலமுறை அவளுக்கு வலிப்பு வந்தது. சில சமயங்களில் அவளது மருந்து லேசாக தவறாகிவிடும்.. அப்போது குழப்பமடைவாள். அப்போதெல்லாம் சாத்தானை பற்றி பேச ஆரம்பிப்பாள்.
குரல்: பல வருடங்களுக்கு அந்த பிரமைகள் முழுவதுமாக நின்றுவிட்டன. அதன் பின்னர் க்வென் கர்ப்பமடைந்தார்.
பெர்னி: க்வெனுக்கு அழகான கர்ப்பம். எதுவும் தவறாக சென்றதாக தெரியவில்லை.
க்வென்: காருக்கு சென்றோம். காருக்குள் போகும்போது குடம் உடைந்தது. அதன் பின்னால் எதுவும் நினைவிலில்லை.
பெர்னி: சார்லஸ் பிறக்கும்போது, அது என் மகன், பாதிவரை வரும்போது, அவனது தலையில் தொப்பூள்கொடி சுற்றிகொண்டுவிட்டது. அவன் சற்றே முரண்டினான். சிசேரியன் பண்ண லேட்டாகிவிட்டது. ஒருவழியாக சார்லஸ் வந்துவிட்டான். அவனுக்கு ஒரு பாதிப்புமில்லை. அவள் அங்கே உட்கார்ந்திருந்து என்னை பார்த்து புன்னகைத்துகொண்டிருந்தாள். என் பக்கம் திரும்பி, “புனித குடும்பத்தின் பகுதியாக இருப்பது நன்றாகத்தானே இருக்கிறது?” என்றாள். என்னது? ஹோலி ஃபேமிலியா? புனித குடும்பமா? பின்னால், அவள் என்னை ஜோஸப்பாகவும், அவலை மேரியாகவும், சார்லியை கிறிஸ்துவாகவும் நினைத்தாள் என்று அறிந்தேன். அவள் மனநல மருத்துவமனைக்கு போகாவிட்டால், அவளை அடைத்துவிடுவார்கள் என்று சொன்னேன். அந்த சமயத்தில் மிகவும் பயமாக இருந்தது. உண்மையைச்சொன்னால், நான் எங்கே போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
க்வென்: பழையதை திரும்பி பார்க்கும்போது மிகவும் வினோதமாக இருக்கிறது. நான் ஏன் அவற்றை சொன்னேன் என்று தெரியவில்லை.
குரல்: ரூடி, க்வென் ஆகியோரின் பிரமைகள் வினோதமாக இருக்கலாம். ஆனால், இந்த கேள்விகள், தத்துவ கேள்விகளிலேயே மிகவும் ஆழமான கேள்விக்கு பதிலை தரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதாவது மத நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? மூன்று பெரிய மதங்களுக்கு ரெவலேஷன் என்னும் வெளிப்படுத்துதல் அல்லது இறைவசனம் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. தீர்க்கதரிசிகள், நபிகள் போன்றோர் உருவாக்கிய மதங்கள், நம்பிக்கைகளின் வழியே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவற்றுக்காக உயிர்கொடுத்தும் இருக்கிறார்கள். மத நம்பிக்கையாளர்கள் இப்படிப்பட்ட வெளிப்படுத்துதல்கள், இறைவசனங்கள் இறைவனிடமிருந்து வருகின்றன என்று நம்புகிறார்கள். நாத்திகர்களோ, இவை மூட நம்பிக்கைகள் என்றும் சமூக கட்டுப்பாடுகள் என்றும் கருதுகிறார்கள். இரண்டு பக்கமுமே சிந்திக்காக ஒன்று, இது மனித அடிப்படையிலேயே, சாப்பிட விரும்புவது, தூங்குவது , பாலுறவு கொள்வது போன்ற அடிப்படையான ஒன்றாக இருக்கலாம் என்பது. ஆனால், அந்த கருத்து இப்போது மாறிவருகிறது. டெம்போரல் லோப் வலிப்பு நோயே இதன் திறவுகோல். இந்த நோயே, செவந்த் டே அட்வண்டிஸ்ட் என்ற மதப்பிரிவின் தோற்றத்துக்கு காரணம் என்பது தெரிகிறது. இது தற்போது மிகவும் அதிகமாக பரவி வரும் ஒரு மதமாக, ஏறத்தாழ 12 மில்லியன் மக்களை கொண்டதாக உள்ளது. இந்த மதத்தின் சர்ச்சு ஆவணங்களில், எல்லன் வொயிட் என்ற பெண்மணியின் வெளிப்படுத்தல்கள் மூலமாக இதன் ஆரம்பத்தை உணரமுடிகிறது.
மெர்லின் பர்ட்: (எல்லன் ஜி வொயிட், எஸ்டேட் பிரான்ச் ஆபிஸ், லோமா லிண்டா): செவன்ந்த் டே அட்வண்டிஸ்ட் சர்ச்சின் பிரதான நிறுவனர்களில் ஒருவர் எல்லன் ஜி வொயிட் என்னும் பெண்மணி. அவருக்கு வினோதமான ஆன்மீக மத உணர்வு காட்சிகள் மூலம் இந்த சர்ச்சுக்கு வழிநடத்தல், கட்டளைகள் கிடைக்கப்பெற்றன. இது கடவுள் அளித்த கட்டளைகள் என்று நம்புகின்றனர். செவண்ந்த் டே அட்வண்டிஸ்ட் சர்ச்ச்குக்கு இந்த மத உணர்வு காட்சிகள் மிகவும் அடிப்படையானவை.
குரல்: எல்லன் வொயிட் 1827இல் பிறந்தார். அவரது வாழ்நாளுக்குள் 100.000 பக்கங்கள் மத நம்பிக்கை பற்றியும், கடவுளால் உந்தப்பட்டதாக நம்பி கடுமையான ஒழுக்க விதிகளை உருவாக்கி தந்தார். அவர் தேனீர் சாப்பிடுவது பாவம் என்பதிலிருந்து சுயமைதுனம் உட்பட எல்லாவற்றையும் ஒழுக்க விதிகளாக எழுதி வைத்திருக்கிறார். அதே நேரத்தில் அவர் தான் அனுபவித்த நூற்றுக்கணக்கான மத உணர்வு காட்சிகளை பற்றியும் விலாவாரியாக எழுதி வைத்துள்ளார்.
எல்லன் வொயிட்: நான் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும்போது, அங்கே நூற்றுக்கணக்கான முறைகளோ அதற்கு மேலோ, ஒரு மெல்லிய ஒளி அறைக்குள் சுற்றிகொண்டிருக்கும், மலர்களது நறுமணம் போன்ற நறுமணம் வரும். அப்போது கடவுள் அருகே வந்துவிட்டார் என்று அறிந்துகொள்வேன்.
குரல்: இந்த மத உணர்வு காட்சிகள் காரணமாக, அந்த பெண்மணி கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்று அவரை பின்பற்றியவர்கள் முழுமையாக நம்புகிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் எல்லன் வொயிட்டின் கடந்த காலத்தை ஆராய்ந்த போது, இந்த பெண்மணி டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரோ என்று சந்தேகித்தார்கள். ஏனெனில் ஒரு நாள், இந்த நிலையை அவருக்கு உருவாக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவர் 9 வயதாக இருந்தபோது ஒரு பெரிய சிறுமியால் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு துரத்தப்பட்டார்.
எல்லன்: அந்த பெண் எனக்குபின்னால், எவ்வளவு தூரத்தில் வருகிறாள் என்று பார்க்க திரும்பினேன். நான் திரும்பும்போது ஒரு கல் என் மூக்கை தாக்கியது. கண்களை குருடாக்கும், மரத்துப்போகும் ஒரு உணர்வு என்னை தாக்கியது. நான் உணர்வற்று கிடந்தேன். என்னுடைய அம்மா எதையுமே பார்க்காமல், மூன்று வாரம் அப்படியே கிடந்தேன் என்று கூறினார். எனக்கு மீண்டும் நினைவு வந்தபோது நான் அதுவரை தூங்கிக்கொண்டிருந்ததாகத்தான் உணர்ந்தேன். அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய முகத்தின் ஒவ்வொரு வடிவமும் மாறியிருந்தது.
குரல்: அந்த காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட எல்லன் மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு செல்லவே முடியவில்லை. அவரது குணாம்சமே முழுமையாக மாறிவிட்டது. அவர் கடுமையான மத பிடிப்பாளராகவும், ஒழுக்கவாதியாகவும் மாறினார். அதன் பின்னால், முதல்முறையாக சக்திவாய்ந்த மத உணர்வு காட்சிகளை உணர ஆரம்பித்தார்.
பேராசிரியர் கிரெகொரி ஹோல்ம்ஸ் (டார்ட்மவுத் மெடிகல் ஸ்கூல்): பொதுவாக இந்த மத உணர்வு காட்சிகள் திடீரென ஆரம்பிக்கும். அவரது முக பாவத்தில் மாறுபாடு உண்டாகும். பெரும்பாலும் அன்னாந்து பார்ப்பார். அவரது அந்த உணர்வின் போது அவரை சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வு இல்லாமல் இருப்பார். பெரும்பாலும் அடோமேடிஸம் எனப்படும் திருப்பித்திருப்பி ஒரே அசைவை செய்துகொண்டிருப்பார். அந்த நிகழ்வுக்கு பின்னால், அதனை செய்தோம் என்ற நினைவை பெற்றிருக்கமாட்டார்.
குரல்: குழந்தைகள் நியூராலஜியில் உலகத்தில் மிகச்சிறந்தவராக கருதப்படும் பேராசிரியர் கிரெகொரி ஹோல்ம்ஸ், எல்லன் வொயிட்டின் மத உணர்வு காட்சிகள் அவரது தலையில் அடிபட்ட பின்னால் தோன்ற ஆரம்பித்தன என்பது எதேச்சையான விஷயம் இல்லை என்று கூறுகிறார்.
ஹோல்ம்ஸ்: கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்புகள் மிகவும் பலவீனமானவை. கண்களுக்கு பின்னால் இருக்கும் மூளை திசுக்களும், இந்த வலிமையற்ற எலும்புகள் காரணமாக எளிதில் பாதிப்பு அடையக்கூடியவை. முகத்தில் கல்லால் அடி வாங்கியவர்களது மூளையில் உண்மையான பாதிப்பு இருக்கும். தலையில் அடிபடும்போது தலை பின்னால் சென்று திரும்ப வரும். உள்ளே இருக்கும் மூளையும் பின்னால் சென்று திரும்ப வரும்
குரல்: குணாம்சம் மாறுதல், மிகவும் தீவிரமான மத உணர்வு, மத உணர்வு காட்சிகள் பிரமைகள் ஆகியவை எல்லன் வொயிட்டின் நிலைமைக்கு ஒரே ஒரு சாத்தியம்தான் இருக்கிறது என்று ஹோல்ம்ஸ் கூறுகிறார்.
ஹோல்ம்ஸ்: அவர் நிச்சயமாக டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே அவருக்கு நேர்ந்த ஆன்மீக உணர்வு காட்சிகள் நிச்சயமாக உண்மையானவை அல்ல. அது இந்த வலிப்பு நோயால் வந்தது.
குரல்: செவந்த் டே அட்வண்டிஸ்ட் சர்ச் இயக்கத்துக்கு இது பலத்த அடி. இருந்தாலும் எல்லன் வொயிட் உண்மையிலேயே இறைவனால் உந்தப்பட்டார் என்றுதான் அவர்கள் வலியுறுத்தி கூறுகிறார்கள். அவர்களது அதிகாரப்பூர்வ பேச்சாளர், அவரும் ஒரு நியூராலஜிஸ்ட், பேராசிரியர் ஹோல்ம்ஸ் கூறுவதை மறுக்கிறார்.
டாக்டர் டேனியல் ஜியங் (Loma Linda University Medical Center): எல்லன் வொயிட்டின் மத உணர்வு பார்வைகள், டெம்போரல் லோப் வலிப்பு காரணமாக உருவானவை அல்ல என்று நான் நினைப்பதற்கு காரணங்கள் பல. முதலாவது அவருக்கு நடந்த காயம் அவரது மூக்கில் ஏற்பட்டது. அது டெம்போரல் லோபுக்கு தொலைவில் உள்ளது. இரண்டாவது அவருக்கு நேர்ந்த மத உணர்வு காட்சிகள் தலையில் அடிபட்டு 8 வருடங்களுக்கு பிறகு ஆரம்பித்தது. பெரும்பாலான டெம்போரல் லோப் வலிப்பு நோய்கள் தலையில் அடிபட்டு ஒன்று அல்லது மூன்றுவருடங்களுக்குள் வர ஆரம்பித்துவிடும். இறுதியாக அவரது மத உணர்வு காட்சிகள் 15 நிமிடங்களிலிருந்து மூன்று மணி நேரங்கள் வரைக்கும் நீடிக்கும். அவருக்கு எப்போதுமே மிகக்குறைவான நேரத்தில் மத உணர்வு காட்சிகளோ வலிப்போ தோன்றியதில்லை. இவை எல்லாமே வலிப்பு நோயாக இருந்தால், அசாதாரணமானவை.
குரல்: எல்லன் வொயிட்டுக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்ததா இல்லையா என்று அறுதியிட்டு கூறமுடியாது. இருந்தாலும், அவருக்கு வரும் மத உணர்வு காட்சிகள் எடுக்கும் நேரமும், அவருக்கு தலைகாயம் அடைந்து 8 வருடங்களுக்கு பிறகு காட்சிகள் தோன்ற ஆரம்பித்தன என்பதும் இந்த நோயின் அறிகுறிகளே. விவாதத்துக்குரியதாக, இன்னும் ஏராளமான மத தலைவர்களும் இதே டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களே என்று கூறப்படுகிறது.
பேராசிரியர் விலயனூர் ராமச்சந்திரன்: (University of California, San Diego):
மாபெரும் மத தலைவர்களுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கும் என்பது சாத்தியமான ஒன்று. இது அவர்களுக்கு பிரமைகள், காட்சிகள், விளக்கமுடியாத ஆன்மீக உணர்வு ஆகியவற்றுக்கு தயாராக ஆக்குகிறது.
குரல்: செயிண்ட் பவுல் அவர்களை இங்கே குறிப்பிடலாம். டமாஸ்கஸுக்கு போகும் சாலையில் கண் குருடாக்கும் ஒளியில் இறைவன் இவருக்கு காட்சி அளிக்கிறார்.
ராமச்சந்திரன்: பல மதஞானிகள், செயிண்ட் பவுல் உட்பட, அவர்கள் விவரிக்கும் அனுபவங்கள் இந்த நோயாளிகள் விவரிக்கும் அனுபங்களை ஒத்து இருக்கின்றன. ஆகவே செயிண்ட் பவுலுக்கு இதே மாதிரி வலிப்பு இருந்திருக்கும் என்பது சாத்தியமானதுதான்.
குரல்: மோஸஸ்? பத்து கட்டளைகளை கொண்டுவந்த மோசஸ், கடவுளின் குரலை எரியும் செடியில் கேட்டதாக நம்பினார்.
ராமச்சந்திரன்: மோஸசும், அதே போல இந்தியாவின் நிறைய ஞானிகளும் மூளையில் இப்படிப்பட்ட வலிப்புகளால் அப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இருந்தார்கள் என்பது சாத்தியமானதுதான். இந்த அனுபவங்கள் அவர்களது மன வாழ்க்கையை மிக அதிகமாக செழுமைப்படுத்தியிருக்கலாம்.
குரல்: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு இந்த மத ஞானிகளுக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்தது என்பதை அறுதியிட்டு கூறமுடியாது என்று பிஷப் ஸ்டீபன் சைக்ஸ் நம்புகிறார்.
பிஷப் ஸ்டீபன் ஸைக்ஸ் (துர்ஹம் பல்கலைக்கழகம்): அவர்களது மனநிலைகளது விவரணம் அவர்களது காலத்து மக்களிடமே உண்டு. அவர்களது பின்புலம் நமது பின்புலத்தை விட வேறுபட்டது. நான் அவநம்பிக்கையுடனே அணுகுகிறேன். இந்த மனிதர்கள் மத உணர்வு அனுபவத்தை பெற்றது, நமது எல்லையற்ற ஞானத்தின் மூலம் அவர்கள் ஒரு வகை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்வது எளிது. நாம் சற்று அடக்கத்துடன் இருப்பது தவறில்லை என்று கருதுகிறேன்.
குரல்: மோஸஸ், செயிண்ட் பவுல் போன்றவர்களது உண்மையை நாம் அறியமுடியாமலிருக்கலாம். ஆனால், கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ராமச்சந்திரன், டெம்போரல் லோபுக்கும் ஆன்மீக அனுபவத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய முடிவு செய்தார். ஆகவே டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்களது மூளையையும், இல்லாதவர்களது மூளையையும் ஒப்பிட பரிசோதனை ஏற்பாடு செய்தார்
ராமச்சந்திரன்: நாங்கள் என்னசெய்தோமென்றால், இந்த வலிப்பு இல்லாத சாதாரண நபர்களை எடுத்துகொண்டோம். அவர்களது விரல் நுனிகளில் எலட்ரோடுகளை பொருத்தி அவர்களது தோல் மின்சார தடுப்பு அளவை அளந்தோம். இது அவர்கள் ஒரு சில வார்த்தைகளை பார்க்கும்போது எந்த அளவுக்கு வேர்க்கிறார்கள் என்பதை அளக்கிறது. ஒரு சாதாரண மனிதர், மேஜை என்ற வார்த்தையை காட்டினால், வேர்க்கமாட்டார். ஆனால், செக்ஸ் என்ற வார்த்தையை காட்டினால் வேர்க்க ஆரம்பிப்பார். அது பதிவாகிறது. இதன் பெயர் கால்வனிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் அல்லது கால்வனிக் தோல் அளவீடு என்று சொல்லலாம். இப்போது கேள்வி என்னவென்றால், இதே பரிசோதனையை டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்களிடம் நடத்தினால் என்ன நடக்கும்?
குரல்: வலிப்பு உள்ள நோயாளிகளிடம் மூன்று வகையான வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. பாலுறவு ரீதியான வார்த்தைகள், சாதாரண வார்த்தைகள், மத ரீதியான வார்த்தைகள். சாதாரண வார்த்தைகள், எதிர்பார்த்தது போலவே ஒரு உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பாலுறவு மற்றும் மத ரீதியான வார்த்தைகளை காட்டும்போது கிடைத்த அளவீடுகளை பார்த்து அதிசயித்தார் பேராசிரியர் ராமச்சந்திரன்.
ராமச்சந்திரன்: “கடவுள்” போன்ற் மத ரீதியான வார்த்தைகளை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கு மிகப்பெரிய கால்வனிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் இருந்தது என்பதை பார்த்து அதிசயித்தோம். மாறாக, பாலுறவு ரீதியான வார்த்தைகளை காட்டும்போது, குறைவாகவே கால்வனிக் ரெஸ்பான்ஸ் இருந்தது. வேறொரு வகையில் சொல்ல வந்தால், கடவுள் மதம் ஆகிய வார்த்தைகளுக்கு அவர்களது ரெஸ்பான்ஸ் அதிகமாகவும் பாலுறவு வார்த்தைகளுக்கு குறைவாகவும் இருந்தது. சாதாரண மனிதர்களுக்கு தலைகீழாக இருக்கும்.
குரல்: மத ரீதியான பிம்பங்களுக்கு மனித உடலின் பௌதீக வெளிப்பாடு, மூளையில் இருக்கும் டெம்போரல் லோபில் இருக்கும் செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டது என்பதை மருத்துவ ரீதியாக நிரூபித்த முதல் ஆதாரம், தடயம் இதுவே.
ராமச்சந்திரன்: ஆக, நாங்கள் என்ன சொன்னோமென்றால், டெம்போரல் லோபில் சில இணைப்புகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தேர்ந்தெடுத்து செயலாக்கினோம். அந்த இணைப்புகளின் செயற்பாடுகள் இந்த நோயாளிகளிடம் உச்சத்துக்கு கொண்டுசெல்கின்றன. இந்த குறிப்பிட்ட நியூரான்களின் இணைப்புகள் மத நம்பிக்கைக்கும், ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் உகந்தவையாக இருக்கின்றன. இவை இவர்களை நம்பிக்கையாளர்களாக ஆக்குகின்றன.
குரல்: இந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவர்களது மனதில் நடப்பது நம் எல்லோருடைய மனதில் நடக்கும் விஷயங்களே. ஆனால் உச்சகதியில் இவர்களிடம் நடக்கின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இப்போது, டெம்போரல் லோப்களே நமது மத, ஆன்மீக நம்பிக்கைகளின் அனுபவங்களின் திறவுகோல் என்று தெரிகிறது. மத நம்பிக்கை எவ்வாறு மூளையை பாதிக்கிறது என்பதை ஆராயும் இந்த அதிர்ச்சியான ஆய்வுகள் அறிவியலின் புத்தம் புதிய துறையை உருவாக்கியுள்ளன. அதன் பெயர் நியூரோதியாலஜி. வடக்கு கனடாவில் ஒரு விஞ்ஞானி இந்த நியூரோ தியாலஜி துறையை பரிசோதிக்க முனைகிறார். டெம்போரல் லோப்களை தூண்டுவதன் மூலம் செயற்கையாக ஆன்மீக உணர்வை எல்லா மனிதர்களுக்கும் அடைய வைக்க முடியும் என்று டாக்டர் மைக்கேல் பெர்ஷிங்கர் கூறுகிறார். டெம்போரல் லோப்களுக்கு நடுவே ஒரு மின்காந்த புலத்தை உருவாக்கும் ஒரு கருவியை டாக்டர் பெர்ஷிங்கர் வடிவமைத்தார். உண்மையான ஒரு மத வெளிப்பாடு அனுபவத்தை இந்த கருவி மூலம் உருவாக்க முடியும் என்று கூறுகிறார்.
டாக்டர் மைக்கல் பெர்ஷிங்கர்(Laurentian University): இந்த ஹெல்மெட் பலவீனமான காந்த புலத்தை, முக்கியமாக டெம்போரல் லோபில் உருவாக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குள் இருக்கும் சோலனாய்ட்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு நேரத்தில் ஹெல்மட்டுக்குள் காந்த புலம் பாய்கிறது. அதே நேரத்தில் மூளைக்குள்ளும் பாய்கிறது.
குரல்: பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். டான் ஹில் அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது.
டான் ஹில்: ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களை பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். அதிவேகத்தில் சக்தி மேலேயும் கீழேயும் என் முதுகுத்தண்டில் பாய்வதை உணர்ந்தேன். ஏப்பம் (சிரிக்கிறார்) வந்தது. அது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. பொதுவாக நோய்வாய்ப்பட்ட உணர்வு.
குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் காந்த புலத்தை மாற்ற மாற்ற, டானுக்கு வினோதமான உணர்வுகள் தோன்றின. தான் தனியாக இல்லை என்ற உணர்வு.
டான் ஹில்: என் காதுகள் அளவுக்கு என்னுடைய தோள்கள் இறுக்கமடைந்தன.
நான் இருக்கும் அறையில் யாரும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், இங்கே ஏதோ ஒன்று இருக்கிறது என்ற உணர்வை விட முடியவில்ல. அது ஒளிந்திருக்கிறது. என்னை கவனிக்கிறது. அதன் கவனிப்பில் நான் இருக்கிறேன் என்ற உணர்வு. என் பின்னால் வந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு. அது அங்கே இருக்கிறது. அதுமாதிரி உணர்ந்தேன். ஆமாம். அது எப்படி இருக்கமுடியும். அங்கே ஒன்றுமில்லை. பாதுகாப்பான இடத்தில்தான் நான் இருக்கிறேன்.
குரல்: அந்த அறைக்குள் டான் இந்த பரிசோதனை நடத்தும்போதெல்லாம் வரும் பொதுவான, ஆனால்,வினோதமான விளைவை அனுபவித்தார். அவர் கூட இன்னொருவர் இருப்பது போன்ற உணர்வு. டாக்டர் பெர்ஷிங்கர் இதனை “இருப்பறியும் உணர்வு” என்று கூறுகிறார்
பெர்ஷிங்கர்: இந்த பரிசோதனையின்போது அனைவரும் அடையும் அடிப்படையான அனுபவம், இந்த ”இருப்பறியும் உணர்வு”. இன்னொரு வியக்தி அங்கே இருக்கிறது.உங்களை விட பெரியது, காலத்திலும் வெளியிலும் பெரிய வியக்தி இருக்கிறது என்ற உணர்வை வலது மூளையில் இருக்கும் டெம்போரல் லோபை தூண்டினால், மிக எளிதில் அடைந்துவிடலாம் என்று எங்களது பரிசோதனை முடிவுகள் சொல்லுகின்றன.
குரல்: இன்னொரு வியக்தியை உணர்வது இந்த காந்த புலத்தால் மட்டுமே வருகிறதா என்பதை அறிய, காந்தபுலத்தை உருவாக்கியும் உருவாக்காமலும் தன் சோதனைகளை நடத்தினார். முக்கியமாக, இந்த பரிசோதனையின் உண்மை நோக்கம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவில்லை. இது சும்மா மன ஓய்வுக்காக என்று மட்டுமே சொன்னார்கள். பரிசோதனைமுடிவுகள் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஹெல் மட்டில் காந்தப்புலம் இருந்தபோது, 80 சதவீதத்தினர் அருகே யாரோ இருப்பதாக உணர்ந்தனர். டாக்டர் பெர்ஷிங்கர் இந்த ஆய்வை இன்னும் மேலே எடுத்துச் சென்றார். இயற்கையாகவே காணப்படும் காந்தப்புலமும் இதே போல உணர்வை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறார். கடவுளை பற்றிய உணர்வை மட்டுமல்ல, இன்னும் சில அமானுஷ்ய அனுபவங்களையும் விளக்கலாம் என்று கருதுகிறார்.. உதாரணமாக ஆவிகள்.

2 கருத்துகள்: