பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். ஆனால் கடந்த கட்டுரையின் எதிர்வினைகளில் காத்திரமான கேள்விகள் எதுவும் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனாலும் தொடர்கிறேன்.
குரங்கிலிருந்து பரிணமித்தவன் மனிதன் என்றால் குரங்கு தான் மனிதனுக்கு நெருக்கமான விலங்காக இருக்க வேண்டும். ஆனால் பன்றி தானே மனிதனுக்கு நெருக்கமான விலங்காக கூறுகிறார்கள்.
ஒரு மூன்றாம் தர அரசியல் வியாபாரி தன்னுடைய நிலை தவறானது என தெரிந்த பின்னரும் வீம்புக்காகவும் வறட்டுத்தனமாகவும் வாதம் செய்வதைப் போன்றது இது. மற்றெந்த விலங்குகளையும் விட மனிதனுக்கு நெருக்கமாக இருப்பது சிம்பன்சிகள் தான். 97 விழுக்காடு மரபணு ஒற்றுமைகளைக் கொண்டதாக மனிதனும் சிம்பன்சியும் இருக்கின்றன. எளிமையாகச் சொன்னால் சற்றே மனநலம் பிறழ்ந்த ஒரு மனிதனைக்காட்டிலும் சிம்பன்சிகள் புத்திக் கூர்மை உடையவை. உருவத்தில், உள்ளுறுப்புகளில், செயலில், உள்வாங்கும் திறனில், சமூக குடும்ப அமைப்புகளில் மனிதனுக்கு சிம்பன்சியைப் போல நெருக்கமான விலங்கு வேறொன்று இல்லை. இவை அனைத்தும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதனின் இதய வால்வுகள் மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பன்றி இதயத்தின் வால்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. 99 விழுக்காடு ஒற்றுமை எங்கே? ஒரு விசயத்தில் இருக்கும் ஒற்றுமை எங்கே? இந்த ஒன்றைக் கொண்டு மனிதக்கு பன்றியே நெருக்கம் என்று கூறுவார்களாயின், அவர்கள் அறிவியல் பார்வை ஏதுமற்ற வறட்டுவாதிகள் என்பதைத்தவிர வேறு பொருளொன்றுமில்லை.
குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம உயிரிகள் இருக்கின்றனவா?
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் பூமியில் வாழ்ந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரமான தொல்லுயிர் எச்சங்கள் பலவுண்டு. ஆண்ட்ரோபிதஸின், ஹோமோ எரக்டஸ், ஹோமோ செபியன்ஸ், ஹோமோ செபியன் செபியன்ஸ், நியாண்டர்தாலிஸ்ட், க்ரோமாக்னன் இதுதான் மனிதர்கள் பரிணமித்து வந்த பாதை. இதில் க்ரோமாக்னன் என்பது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனம், அதாவது நாம். இன்றைக்கு 30000 ஆண்டுகளுக்கு முன்புவரை நியாண்டர்தால்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா மனித இனங்களின் எலும்புகளும் தொல்லுயிர் எச்சங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
தனிமம் ஒருசெல் பலசெல் என படிப்படியாக நடந்தேறியதா? அல்லது
தனிமம் உயிரினம் அப்படியே வார்த்தெடுக்கப்பட்டதா? உயிரி பல்கிப் பெருகும்போது தனிமங்களின் இனப்பெருக்கம் சாத்தியமா?
பரிணாமம் என்பது ஒருவகை உயிர் இன்னொரு வகை உயிராக மாறிச் செல்வது குறித்து விளக்குவதாகும். முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது குறித்து பரிணாமம் விளக்குவதில்லை. ஆனால் சூழலின் தாக்கத்தால் தான் செல்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த செல்களே எளிய உயிர்களாகவும், அதுவே சிக்காலான கட்டமைப்பு கொண்ட உயிர்களாகவும் மாறின. நேரடியாக தனிமத்திலிருந்து உயிரினங்கள் வந்துவிடவில்லை. தனிமங்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. உயிர்களுக்கும் தனிமங்களுக்கும் உள்ள வித்தியாசமே அது தான். ஆனால் இனப்பெருக்கம் எனும் பண்பு உயிரிங்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இனப்பெருக்கம் வேறு வடிவங்களில் தனிமங்களில் இருக்கிறது. ஒரு பண்புடைய தனிமங்கள் புற வினைப்பாடுகளுக்கு உள்ளாகி தங்கள் பண்புகளை மாற்றிக் கொள்கின்றன. தனியாக இருக்கும்போது ஆக்ஸிஜனுக்கு இருக்கும் பண்பு நீரில் இல்லை அதுவே ஓஸோனில் அதனிலும் வேறுபடுகிறது. இந்த புதிய பண்புகளை அத்தனிமங்கள் எங்கிருந்து பெற்றன? குளோரின், சோடியம் இரண்டின் பண்புகளும் இல்லாமல் புதிதாக இருக்கிறது உப்பு. இது ஒருவகையில் எளிமையான இனப்பெருக்கம் போன்றது தான். இது உயிர்களிடம் நீடித்து இருந்தாக வேண்டிய தேவையுடன் இணைந்து மேம்பட்டதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் ஆகியிருக்கிறது.
குரங்குதான் மனிதனாக மாறியது என்றால் இப்போது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறுவதில்லை?
ஏற்கனவே இதற்கு சுருக்கமாக பதிலளித்திருந்தாலும், இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு விலங்கு பரிணமித்து இன்னொரு விலங்காக மாறுகிறது என்றால் அதற்கு மிக நீண்ட கால அவகாசம் தேவைப்படும். எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். காலில் இரண்டு குளம்புகளுடைய எருது ஒன்று இருக்கிறது. இந்த எருதுக்குப் பிறந்த குட்டி ஒன்றுக்கு டி.என்.ஏ படிகளில் பிரதியெடுப்புப் பிழையால் குழப்புகள் பிளவு படாமல் ஒட்டி பிறக்கிறது. இப்படியான பிழைகளை உலகில் அனேகமனேகம் பார்க்கலாம். இரட்டைக் குழம்புகளுடன் விரைந்து ஓடுவதற்கு சிரமப்படும் எருதுக்கூட்டத்தில் பிழையாக ஒட்டிய குழம்புடன் பிறந்த எருது அதன் உயிர் வாழும் தன்மைக்கு பாதகமில்லதிருக்கும் பிழையுடன் தொடர்ந்து உயிர் வாழ்கிறது. இந்த எருதுக்கு பிறக்கும் குட்டிகளுக்கு ஒட்டிய குழம்புடன் எருது பிறக்கும் என உறுதியாக கூற முடியாது. ஆனால் அதன் சந்ததிகளில் மீண்டும் பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் முதலில் ஒட்டிய குழம்புடன் பிறந்தது பிழைச் செய்தியென்றால் மீண்டும் பிறப்பது டி.என்.ஏ ஏணிகளில் பதியப்பட்ட செய்தியாகும். ஆக பல தலைமுறை கடந்து மீண்டும் ஒட்டிய குழம்புடன் பிறக்கும் எருது பிற எருதுகளைவிட பரிணாமத்தில் ஒரு எட்டு முன்னேறியதாக இருக்கும். எப்படியென்றால் பிளவுபட்ட குழம்புள்ள எருதைவிட பிளவுபடாத குழம்புள்ள எருது விரைந்து ஓடும் தன்மை கொண்டதாக இருக்கும். இப்போது இந்த எருதின் குட்டிகள் குழம்பு பிளவுபடாமல் பிறக்கும் என உறுதி கூற முடியாது. பிளவுபடாத குழம்பின் தன்மை டி.என்.ஏ செய்திகளில் தெளிவாக பதிவாகிவிடுவதால் தலைமுறைகளினூடாக தொடர்ந்து பிறக்கும் குட்டிகள் பிளவுபடாதா குழம்புடன் பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இதன்படி கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து பார்த்தால் அந்த இடத்தில் காலில் இரட்டைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும், ஒற்றைக் குழம்புடன் இருக்கும் எருதுகளும் தனித்தனியே இருக்கும். மட்டுமல்லாது ஒற்றைக் குழம்பு எருது இரட்டைக் குழம்பு எருதைவிட தாக்குவதிலும் தாக்கப்படுவதிலிருந்து காத்துக் கொள்வதிலும் விரைந்து செயல்பட முடிவதால், அந்த விரைந்த தன்மை அதன் உருவ அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மாறுதலுக்குத் தூண்டும். இறுதியில் இன்னொருவகை எருதாக தனித்த விலங்காக இருக்கும். இப்போது இரட்டைக் குழம்பு எருதிலிருந்து பரிணமித்து வந்தது தான் ஒற்றைக் குழம்பு எருது என்பதற்கு என்ன ஆதாரம்? தப்பித் தவறி தொடக்கத்தில் ஒட்டிய குழம்புடன் பிறந்த எருது எதோ வகையில் தொல்லியிர் எச்சமாக கண்டெடுக்கப்பட்டால், அதை இரட்டைக் குழம்பு எருதுகளின் எச்சங்களுடன் ஒப்பிட்டு உயிருடன் இருக்கும் எருதுகளுடன் ஒப்புநோக்கி ஆய்வுகள் செய்து இரட்டைக் குழம்பு எருதிலிருந்து கிளைத்து ஒற்றைக் குழம்பு எருது வந்தது என்று கூறினால் அதை யூகம் என்று ஒதுக்குபவர்களை என்ன சொல்வது? அவர்கள் தங்கள் வாதங்களை நிரூபிப்பதாய் நினைத்துக் கொண்டு இப்போது ஏன் இரட்டைக் குழம்பு எருதுகள் ஒற்றைக் குழம்பு எருதுகளாக மாறவில்லை? என்று கேட்டு புளகமடையவும் வைப்பார்கள்.
அடுத்து நண்பர் ஆஷிக் தன்னுடைய பதிவின் சுட்டிகள் இரண்டைக் கொடுத்து இதற்குப் பதிலென்ன என்று கேட்டிருந்தார். இதைவிட அவர் கேள்விகளாக கேட்பது சிறப்பாக இருக்கும். தங்கள் கேள்விகளாக கேட்பது கூர்மையாக பதில் கூறுவதற்கும் உதவியாக இருக்கும். அந்த இரண்டு சுட்டிகளிலுமே பரிணாம மரம் தவறு என்று சில அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதைக் கொண்டு பரிணாமக் கோட்பாடே தவறு உணர்த்தும் விதமாக தன்னுடைய கட்டுரையை நகர்த்திச் செல்கிறார். மட்டுமல்லாது படைப்புக்கொள்கையே சரியானது என்று மறைபொருளாக உள்ளாடியிருக்கிறார்.
பொதுவாக மத நம்பிக்கையுடையவர்கள் மனிதனின் தோற்றம் குறித்து பேசுகையில் பரிணாமக் கோட்பாட்டில் இருக்கும் சின்னஞ்சிறு பிழைகளையும் கூட விடாமல் துருவி பாருங்கள் அங்கே ஒரு தவறு இருக்கிறது எனவே பரிணாமமே தவறு என்று வாதிடுவார்கள். ஆனால் படைப்புக் கொள்கையைப் பற்றி எந்த ஒரு மீளாய்வோ சிந்தனையோ செய்வதில்லை. வேதத்தில் இருக்கிறது ஆகையினால் அதுதான் சரி என்பதைத்தாண்டி எதையும் செய்வதில்லை. நண்பர் ஆஷிக்கும் இதில் விலக்கில்லை.
இது என்றென்றைக்குமானது எனவே இதில் ஒரு எழுத்தோ காற்புள்ளியோ கூட மாறுவதில்லை எனும் வேத ஜம்பத்தைப் போலவே அறிவியலையும் கருதிக் கொள்கிறார்கள். அறிவியல் தொடர் ஆய்வுகளுக்கு உட்பட்டது. பரிணாம விசயத்தில் டார்வினே, “நான் அமைதியுறும் அளவிற்கு சான்றுகள் எனக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து இதில் ஆய்வு செய்பவர்கள் முனைப்புடன் அவற்றை கண்டடையட்டும், தவறு களைந்து திருத்தட்டும்” என்கிறார். அந்த வகையில் பரிணாமவியலில் திருத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன. புதிய சான்றுகள் கண்டடையப்பட்டிருக்கின்றன. விமர்சனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சில அறிவியலாளர்கள் பரிணாமவியலுக்கு எதிர்க் கருத்து கொண்டிருக்கிறார்கள். இவைகளெல்லாம் அறிவியலுக்கு உட்பட்டவை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் பரிணாம்வியலை விமர்சிக்கும் எந்த அறிவியலாளராவது படைப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? என்பது தான்.
இப்போது சொல்லப்பட்டிருக்கும் பரிணாம மரம் தவறு என்றால் சரியான தகவல் பெற்று திருத்தம் செய்து புதிய பரிணாம மரம் அமைக்கலாம் தவறில்லை. பரிணாமக் கொள்கையே தவறு என்று நாளை புதிய கொள்கை வரலாம், அது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக இருப்பில் அறிவியல் உலகம் அதை ஏற்றுக் கொள்ளும் அதிலும் தவறில்லை. ஆனால் இப்போது பரிணாமக் கொள்கையைவிட சிறப்பாக மனிதனின் தோற்றத்தை விளக்கும் வேறொரு கொள்கை உலகில் இல்லை. மட்டுமல்லாது இதுவரை செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகள் பரிணாமக் கொள்கை சரி என்பதையே நிரூபிக்கின்றன. அலோபதி மருத்துவ முறை பரிணாமவியலை அடிப்படையாக கொண்டது தான். மனித உடற்கூறியல் உள்ளிட்டு மருந்தாய்வு நிறுவனங்கள் வரை பரிணாமவியலை ஆதாரமாகக் கொண்டே செயல்படுகின்றன. ஜார்ஜ் நடால் தொடங்கி பல்வேறு உயிரியல் ஆய்வாளர்கள் பரிணாமவியல் சரிதான் என்பதை நிரூபித்திருக்கின்றனர். மரபணு செய்திப் பரிமாற்றப் பிழைகளால் ஊனத்துடனோ கூடுதல் உறுப்புடனோ பிறக்கும் குழந்தைகளும் விலங்குகளும் பரிணாமவியலின் சான்றுகளே. எளிமையாக சொல்வதென்றால் உழைக்காமல் இருப்பவன் கை மென்மையாய் இருப்பதும் உழைப்பாளியின் கைகளில் காய்ப்பேறிக் கிடப்பதும் கூட பரிணாமவியல் சரி என்பதற்கான எல்லோருக்கும் தெரிந்த சான்று.
இதற்கு நேர் எதிராக படைப்புக் கொள்கை சரிதான் என்று எந்த அறிவியலாளன் கூறியிருக்கிறான்? என்னென்ன ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன அந்தத்துறையில்? எதாவது நிரூபணம் உண்டா படைப்புக் கொள்கை சரிதான் என்பதற்கு? ஒன்றுமில்லை. மதவாதிகள் செய்வதெல்லாம் பரிணாமவியலில் நேரும் பிழைகளை சுட்டிக் காட்டுவதைத்தான். அதன் மூலமே படைப்புக்கொள்கையை தக்கவைத்துக் கொண்டதாய் ஒரு சுய ஆறுதல். வேறொன்றுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக