திங்கள், 12 செப்டம்பர், 2011

குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

இதுவரை நாம், குரான் இறைவனின் வேதம் தான் என்பதற்கு மதவாதிகள் அறிவியல் உண்மைகள், அறிவியல் முன்னறிவிப்புகள் என விதந்தோதியவைகள் அறிவியலாக இல்லாமலிருக்கிறது என்பதையும், புரட்டுகளாக இருக்கின்றன என்பதையும் பார்த்தோம். இனி குரானில் மதவாதிகளால் வெளிச்சமிட்டுக் காட்டப்படாத, மேற்கோளாக அதிகம் பயன்படுத்தப்படாத பகுதிகள், வசனங்கள் எவ்வாறு அறிவியலோடு முரண்படுகின்றன என்பதை கவனிக்கலாம்.

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக குரான் 53:1

……… இன்னும் அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எரிகற்களாகவும் ஆக்கினோம்……… குரான் 67:5

சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது குரான் 81:1,2

இவைகள் நட்சத்திரங்கள் குறித்து குரான் குறிப்பிடும் வசங்களில் சில. இந்த வசனங்கள் நட்சத்திரங்கள் விழுவதாகவும், ஷைத்தானை விரட்டப் பயன்படும் கல்லாகவும், உதிர்ந்து விழுவதாகவும் சுட்டுகின்றன. வசனம் 53:1 ல் நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடுகிறது. ஒரு பொருள் விழுவது எனும் சொல் எதைக்குறிக்கும்? ஒரு பொருள் அதன் இடத்திலிருந்து புவியீர்ப்பு விசையால் கவரப்பட்டு இழுத்துக்கொள்ளப்படுவதையே குறிக்கும். இங்கு நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் எதன் மீது அல்லது எதன் விசையால் கவரப்பட்டு விழுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை. பூமியிலிருந்து மனிதர்களை நோக்கி கூறப்படுவதால் பூமியில் விழுவதாக கொள்வதற்கே வாய்ப்பிருக்கிறது. ஒரு நட்சத்திரம் பூமியில் விழ முடியுமா? பூமியை விட மடங்குகளில் பெரிய அளவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் எப்படி விழமுடியும்? பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலுள்ள தூரம் மிக மிக அதிகம், புவியீர்ப்பு விசை எட்டமுடியாத தூரங்களில் அவை இருக்கின்றன. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமே 14 கோடியே 95 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இவ்வளவு பக்கத்தில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் பூமியின் மீது விழ வேண்டாம், கொஞ்சம் நெருங்கி வந்தாலே போதும் பூமி காணாமல் போய்விடும். பூமியைவிட சூரியன் அளவில் 98 மடங்கு பெரியது, சூரியனை விட பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்களெல்லாம் விண்ணில் இருக்கின்றன. இவைகளில் எந்த நட்சத்திரம் பூமியின் மீது விழுவது. ஆக விழுகின்ற நட்சத்திரம் என குரான் குறிப்பிடுவதில் ஏதாவது அறிவியல் பார்வை இருக்கிறதா?

67:5 ல் நடத்திரத்தை ஷைத்தானை விரட்டப்பயன்படும் எரிகல்லாக குறிப்பிடுகிறது குரான். ஷைத்தான் என்பது அல்லாவின் உதவியாளனாய் இருந்து கட்சிமாறிய ஒரு இனம். முதல் மனிதனை (ஆதாம்) களிமண்ணால் படைத்து தன் உதவியாளர்கள் அனைவரையும் அழைத்து பணியுங்கள் என்று அல்லா கூற, அல்லாவின் ராஜ்ஜியத்தில் முதல் கலகக்குரல் ஒலிக்கிறது. நெருப்பால் படைக்கப்பட்ட நான் களிமண்ணால் படைக்கப்பட்ட மனிதனை பணிவதா என்று இப்லீஸ் எனும் உதவியாளன் மட்டும் மறுக்க, ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டு ஷைத்தான் என்ற பெயரில் பல்கிப்பெருகி மனிதர்களை குரானின் வழியிலிருந்து கெடுத்துக்கொண்டிருக்கிறான். இது மனிதர்கள் அல்லாவை பின்பற்றாமலிருக்கும் மனிதர்களின் அடிப்படை குறித்த குரானின் காரியக் கற்பனை. இந்த ஷைத்தான்கள் வானத்திலிருக்கும் அல்லாவின் ராஜ்ஜியத்தில், அல்லாவும் மலக்குகளும் (அல்லாவின் உதவியாளர்கள், ஷைத்தானும் முன்னர் ஒரு மலக்கு தான்) பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்கிறதாம். அப்படி ஒட்டுக்கேட்க முயற்சிக்கையில்தான் நட்சத்திரங்கள் எரிகற்களாக ஷைத்தான்களை விரட்டுகிறதாம். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது. இதில் எங்காவது அறிவியல் பார்வை தென்படுகிறதா? அப்படி நட்சத்திரங்கள் பூமியை நெருங்கமுடியுமா? இரவில் வானத்தைக் கவனித்தால் எரிகற்கள் விழுவதை பார்த்திருக்கலாம். இதை வைத்து அவை ஷைத்தானை விரட்டுவதாக முகம்மது சுவராசியமாக கதைகட்டியிருக்கிறார், அவ்வளவுதான்.

81 ம் அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்கள் நட்சத்திரங்கள் குறித்த அல்லாவின் பார்வை அறிவியலோடு எவ்வளவு தீவிரமாய் முரண்படுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த வசனங்களில் சூரியன் சுருட்டப்படுகிறது. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. உலகத்தின் இறுதி நாளில் அதாவது நியாயத்தீர்ப்பு நாளில் உலகத்தின் அழிவு எப்படி இருக்கும் என்று இந்த அத்தியாயம் விவரிக்கிறது. அதில் தான் சூரியன் சுருட்டப்படுகிறது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. நட்சத்திரங்கள் உதிர்கின்றன என்றால், சூரியனும் உதிரத்தானே வேண்டும். ஏனென்றால் சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே. எனவே சூரியன் ஒரு நட்சத்திரம் என்பது அல்லாவுக்கு தெரியவில்லை. அவருடைய பார்வையில் புள்ளியைப்போல் மினுக்கிக் கொண்டிருப்பதுதான் நட்சத்திரம். அதனால் தான் அவை உதிரவைக்கப்படுகின்றன, சூரியன் பெரியதாய் இருக்கிறது எனவே அது சுருட்டப்படுகிறது. ஐ.ஆர்.எஸ் 5 போன்ற நட்சத்திரங்களெல்லாம் உதிரும் போது, அதை விட பத்தாயிரம் மடங்கு சிறிய சூரியன் சுருட்டப்படுகிறது என்றால், இது அறிவியல் பார்வையா?

நட்சத்திரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பயன் என்ன? அல்லது எதற்காக அல்லா நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறான்? இதற்கான விடை ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் எண்கள் 3198, 3199 ஆகிய இரண்டுக்கும் இடையில் நட்சத்திரங்கள் எனும் தலைப்பில் இருக்கிறது.

௧) அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.

௨) ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.

௩) அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.

இந்த மூன்றைத்தான் நட்சத்திரங்களை படைத்தததன் காரணங்களாக அந்த ஹதீஸ் கூறுகிறது. வெளியைக்கடந்து ஸூப்பர் நோவாக்களிலிருந்து பூமியை அடையும் காஸ்மிக் கதிர்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிடுவோம். சூரியன் எனும் நட்சத்திரம் இல்லையென்றால் மனித இனம் ஏது? சூரியக்குடும்பத்தில் பூமியின் இருப்புக்கு சூரியன் ஆற்றும் பருண்மையான காரணங்களையெல்லாம் விட்டுவிட்டாலும் கூட, சூரியன் இல்லாமல் ஒரு புல்பூண்டுகூட பூமியில் இருக்கமுடியாதே. தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டே பச்சயம் தயாரிக்கின்றன. உயிரினங்கள் சூரிய ஒளியைக்கொண்டே வெப்பம் பெருகின்றன. ஆக பூமியில் அனைத்தும் உயிர்வாழத்தேவையான ஆதாரங்கள் சூரியன் எனும் நட்சத்திரத்தின் வழியாக பெற்றுக்கொண்டிருக்கும் போது, வழியைக் கண்டறிவதற்கான அடையாளமாக கூறுவது, ஆண்டவனின் அனைத்தும் அறிந்த பண்பையே கேள்விக்குறியாக்கவில்லையா? ஓதத்தெரியாத உம்மி நபிக்கு (முகம்மது) வேண்டுமானால் இவைகள் தெரியாமல் இருந்திருக்கலாம், அந்த இறைவனுக்கு………..?

இரவு வானத்தில் எரிகற்கள் விழுவதைப் பார்த்து, நட்சத்திரம்தான் விழுகிறது என்று எண்ணி தன்னுடைய குரானில் முகம்மது வசனங்களை கட்டியமைத்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு தெளிவான அத்தாட்சியில்லையா? மதவாதிகள் பதில் கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக