சனி, 17 செப்டம்பர், 2011

மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

குரானில் சாதாரணமாக இடம்பெற்றிருக்கும் வசனங்களுக்குக் கூட அறிவியல் முலாம் பூசி, எங்கள் வேதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அறிவியல் வளர்ச்சி குறித்து குறிப்பிட்டிருக்கிறது பார்த்தீர்களா என வியப்பவர்கள், அறிவியலுக்கு எதிராக இருக்கும் கட்டுக்கதைகளை மறந்துவிடுகிறார்கள் என்பதோடு மட்டுமல்லாது, அவைகளை அதிகம் வெளியில் பேசுவதும் இல்லை. ஏனென்றால் அறிவியல் மதமாக இஸ்லாத்தை நிருவ முற்படுகிறவர்களுக்கு அவை இடையூறாகவே இருக்கும். கீழ்காணும் இரண்டு வசனங்களை கவனியுங்கள்.

ஆகவே, பழிப்புக்கிடமான நிலையில் எறியப்பட வேண்டியவரானார். ஒரு மீன் விழுங்கிற்று. ஆனால் அவர் இறைவனைத் துதி செய்து தஸ்பீஹு செய்து கொண்டிராவிட்டால், எழுப்பப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். குரான் 37: 142, 143, 144

உங்களிலிருந்து சனிக்கிழமையன்று வரம்பு மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி சிறுமையடைந்த குரங்குகளாகிவிடுங்கள் என்று கூறினோம். குரான் 2:65

இவற்றில் முதல் வசனம் யூனுஸ் எனும் தூதரைப் பற்றியது. அறிவிக்கப்பட்டிருக்கும் தூதர்களில் இவர் சற்றே மாறுபட்டவர். இவரைப்போல் நடந்து கொள்ளவேண்டாம் என்று அல்லா முகம்மதுவுக்கு அறிவுறுத்துகிறான். இதை சமன்படுத்தும் விதமாக யூனுஸை விட என்னை உயர்ந்தவனாக கூறவேண்டாம் என ஹதீஸ்களில் முகம்மது அறிவுறுத்துகிறார்.

எல்லா தூதர்களையும் போல யூனுஸும் அவர் வாழ்ந்த பகுதிக்கு தூதராக நியமிக்கப்பட்டு மதப் பரப்புரை செய்கிறார். வழக்கமாக ஏனைய தூதர்களின் மத முயற்சிகள் ஏற்கப்படாமல் மறுதலிக்கப்பட்டு அல்லா அந்தப் பகுதி மக்களை அழிப்பதுடன் முடியும். ஆனால் யூனுஸைப் பொருத்தவரை கதையில் ஒரு திருப்பம். தன்னுடைய பரப்புரை முயற்சிகள் பலனளிக்காதபோது அல்லாவிட்ம் முறையிடுகிறார், அல்லாவும் அந்த முறையீட்டை ஏற்று அழித்துவிடுகிறேன் என்கிறார். உடனே யூனுஸ் ஊரைவிட்டு கிளம்பிவிடுகிறார். அவர் கிளம்பிய பின்னர் ஊர் அழிக்கபடவிருக்கிறது என்பதை அறிகுறிகளைக் கொண்டு உணர்ந்த மக்கள் அல்லாவிடம் அழுது மன்னிப்பு கேட்கிறார்கள். அல்லாவும் அழிக்காமல் இரக்கப்பட்டு விட்டுவிடுகிறார். மறுபுறம் ஊரை விட்டு கிளம்பிய யூனுஸ் ஒரு கப்பலில் பயணப்படுகிறார். கப்பலில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையால், பயணிகளில் யாராவது ஒருவரை கடலில் வீசிவிட்டு பயணத்தை தொடரலாம் என முடிவெடுக்கப்படுகிறது. சீட்டு குலுக்கிப் பார்த்ததில் யூனுஸ் பெயர் வந்துவிட அவரை கடலில் தூக்கி வீசிவிட்டு கப்பல் சென்றுவிடுகிறது. கடலில் வீசப்பட்ட யூனுஸை ஒரு மீன் தின்றுவிடுகிறது. மீனின் வயிற்றுக்குள் சென்ற பிறகு தான் யூனுஸுக்கு நினைவு வருகிறது, தாம் அல்லாவிடம் அனுமதி பெறாமலேயே ஊரைவிட்டுவிட்டு வந்துவிட்டோம் என்பது, அதனால் தான் இவ்வளவு துன்பங்களும் தமக்கு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து(!)கொண்ட யூனுஸ் மீனின் வயிற்றுக்குள் இருந்தே அல்லாவிடம் மன்னிப்பு கோருகிறார். அதை ஏற்று அல்லாவும் அவரை மீன் சிறைச்சாலையிலிருந்து விடுவிப்பு ஆணை பிறப்பிக்க அந்த மீன் அவரை கரையில் உமிழ்ந்துவிட்டு சென்று விடுகிறது. கரையில் அவர் அசைவற்றுக் கிடக்க ஒரு சுரைக்கொடி முளைத்து அவருக்கு நிழல் கொடுக்கிறது பின் அதிலிருந்த சுரைக்காய்களை உண்டு தெம்புபெற்று ஊர் திரும்பி மீண்டும் மதப் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

பாட்டிகள் கூறும் மந்திரவாதக் கதைகளை நினைவுபடுத்தும் இந்தக்கதை அப்படியே குரானில் இடம்பெற்றிருக்கவில்லை என்றாலும், இந்தக் கதையை உறுதிப்படுத்தும் அளவுக்கு அதன் வசனங்களில் குறிப்பிருக்கிறது. எவ்வளவு நாள் அவர் மீனின் வயிற்றுக்குள் இருந்தார் என்பது குரானில் கூறப்படவில்லை என்றாலும் நான்கு நாளிலிருந்து நாற்பது நாட்கள் வரை இருந்தார் என பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. எத்தனை நாள் என்பது ஒருபுறமிருக்கட்டும் மீனின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் எப்படி உயிருடன் வெளியில் வந்தார்? அதுவும் மீனின் வயிற்றுக்குள்ளிருந்து நடந்தவைகளை அசைபோட்டு சிந்தித்து அல்லாவை வேண்டித் தொழுது பின்னர் வெளியேற முடிந்திருக்கிறது என்றால்….. சிறு குழந்தைகள் கூட கேட்டால் சிரித்து விடக்கூடிய தன்மையில் இருக்கும் இந்தக் கதையை தங்கள் வேதத்தில் வைத்திருப்பவர்கள் தான் தங்கள் மதம் அறிவியல் மதம் என்றும் நாளை கண்டுபிடிக்கப்படவிருக்கும் அறிவியல் உண்மைகள் கூட தங்கள் வேதத்தை மீறி இருக்க முடியது என்றும் அளந்து விடுகிறார்கள்.

குரங்கின மூததைகளிடமிருந்துதான் மனிதன் கிளைத்தான் என்பது அறிவியல், ஆனால் குரான் தலைகீழ் பரிணாமத்தைக் கூறுகிறது. அதாவது, மனிதன் குரங்காக மாறினான் என்று. இதுதான் இரண்டாவது வசனத்தின் கதை. இப்ராஹிம் என்றொரு தூதர், மதப் பிரச்சாரத்தில் ஒழிச்சலின்றி ஈடுபட்டிருந்தபோதும் இடைவேளையில் மக்கள் ஒரு காளை உருவத்தை கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் கோபமடைந்த அல்லா, சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்று தண்டனை விதிக்கிறார். ஆனால் மக்கள் அதையும் மீறி சனிக்கிழமையும் மீன் பிடித்துவிடுகிறார்கள். அப்படி மீன்பிடித்தவர்களுக்குத்தான் குரங்குகளாக மாறிவிடுங்கள் என்று சாபம் கொடுக்கிறார். மட்டுமல்லாது,

நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக் கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும், பயபக்தியுடைவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம். குரான் 2:66

அதாவது, குரங்காக மாற்றப்பட்ட காலத்தவர்களுக்கு மட்டுமல்ல இன்றைய சமகாலத்தவர்களுக்கும் கூட அந்த குரங்குகளை படிப்பினையாக்கி வைத்திருப்பதாக அல்லா குரானில் கூறுகிறான். இதனால் இப்போது அந்த குரங்குகள் எங்கே என யாரும் கேட்டுவிடக்கூடது என்பதற்காக முகம்மது அவசரமாக அதை மறுக்கிறார்.  உருமாற்றப்பட்டவர்களுக்கு இனப்பெருக்கம் கிடையாது என்று அறிவித்து விடுகிறார்.

குரங்குகளின் மூததை விலங்கு ஒன்றிலிருந்து படிப்படியாக பல லட்சம் ஆண்டுகளில் உருமாறி வந்தவன் தான் மனிதன் என பரிணாமம் கூறினால் அதற்கு எதிராக ஆயிரம் கேள்விகளை எழுப்பும் மதவாதிகள், இங்கே ஒரே நொடியில் மனிதனை குரங்காக மாற்றிய இந்த கதைக்கு எதிராக ஒற்றை ஒரு கேள்வியையேனும் எழுப்ப முன்வருவார்களா?

ஒவ்வொரு உயிரினமும் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்காக பல்வேறு அமிலங்களை தங்கள் செரிமான உறுப்புகளில் சுரக்கின்றன. வெளிப்புற தோல்களில் பட்டால் அரித்துவிடக்கூடிய அளவில் நொதித் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒரு மீனின் வயிற்றில் ஒரு மனிதன் சில நாட்கள் வசதியாக வாழ்ந்துவிட்டு வெளியில் வந்ததாக கதை சொல்கிறது குரான்.

ஒரு விலங்கைவிட அறிவிலும், செயலிலும், நினைவிலும், பரிமாற்றத்திலும், கருவிகளை பயன்படுத்துவதிலும் மேம்பாடு கொண்டவன் மனிதன். ஆனால் மனிதனின் இந்த மேம்பாடுகளையெல்லாம் ஒரு அழிப்பான் கொண்டு அழித்து விடுவதைப்போல் குரங்காக மாறிவிட்டார்கள் என கதை சொல்கிறது குரான்.

ஒரு சொல்லின் எழுத்துகளுக்குக் கூட அசை பிரித்து அறிவியல் விளக்கம் சொல்பவர்கள் இந்த கட்டுக்கதைகளுக்கு என்ன சொல்ல முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக