திங்கள், 12 செப்டம்பர், 2011

அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.

அல்லாவின் ஆற்றல்களாக ஆண்டவனின் சக்தியாக குரான் குறிப்பிடுபவற்றை எல்லாம் குரானிலிருந்து நீக்கிவிட்டால் குரான் பாதியாக குறைந்துவிடும். அந்த அளவுக்கு ஆண்டவனின் பெருமைகளை மிக விரிவாக விளக்குகிறது. அவற்றிலிருந்து சிலவற்றை தருகிறேன், சோர்வடையவேண்டாம்.
அவனைத்தவிர வேறு இறைவனில்லை, அவனுக்குத் தூக்கமில்லை, சோர்வில்லை, மரணமில்லை, அவன் உண்பதில்லை, மறப்பதில்லை, யாரும், எதுவும் அல்லாவுக்கு நிகரில்லை, அவனுக்கு உதவியாளன் யாரும் தேவையில்லை, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் இல்லை, எங்கும் இருப்பவன், இறைவன் அமர்ந்திருக்கும் இருக்கை வானம் பூமியைவிட பெரியது, மன்னிப்பவன், கருணையுள்ளவன், யாவரையும் மிகைத்தவன், அனைவரும் அனைத்தும் அடிமை அவன் ஒருவனே ஆண்டை, அவனே அறிவை வழங்குகிறான், அவனே அறிவீனத்தையும் வழங்குகிறான், குழந்தையை தருவதும் அதை இல்லாததாக்குவதும் அவனே, செல்வத்தை வழங்குவதும், ஏழ்மையை தருவதும் அவனே, நோயும் அதன் நிவாரணமும் அவன் புறத்திலிருந்தே, அவன் எதையும் படைக்க நாடி ஆகுக என்றால் உடனே அது ஆகிவிடுகிறது, அவன் ஒருவனே படைத்தவன் ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை. இன்னும் ஏராளம் ஏராளம்.
இப்படி அனைத்து சக்திகளையும் ஒருங்கே வைத்திருப்பதால் தான் பூமியில் மனிதரை படைப்பதற்காக மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து அதில் வசதிகளுடன் பூமியை அமைத்து மனிதனை வாழச்செய்ய முடிந்திருக்கிறது. இப்படி ஆண்டவன் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பதன் நோக்கம் என்ன? மனிதர்கள் அவனை வணங்கவேண்டும் என்பதே. ஆக முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் மனிதனுக்காக, மனிதன் தன்னை படைத்தவனை வணங்குவதற்க்காக.
குரானில் அனேக இடங்களில் தன் சக்தியையும் பெருமைகளையும் கூறிவிட்டு அவர்கள் (அதாவது மனிதர்கள்) சிந்திக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகிறது. இந்த இடத்தில் நாமும் ஒரு கேள்வியை எழுப்புவோம். மனிதர்களை சிந்திக்கச்சொல்லும் குரான் அதாவது அல்லா, மனிதனுக்கு சுயமான சிந்தனை இருப்பதாக ஏற்கிறதா?
அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது. எனவே முஸ்லீம்களே (இதையே தலைவிதியாக பார்ப்பனீய மதமும், தேவனின் தீர்க்கதரிசனமாக கிருஸ்துவ மதமும் இன்னும் ஏதேதோ வகைகளில் அனைத்து மதங்களும் சொல்கின்றன எனவே ஏனைய மத நம்பிக்கையுள்ளவர்களையும் கூட) உங்களிடம் பகுத்து உணரும் அறிவு இருப்பதாக, சிந்திக்கும் திறனிருப்பதாக, வளர்ச்சியடையும் மூளை வாய்க்கப்பட்ட பிறப்பாக நீங்கள் இருப்பதாக ஏற்கிறீர்களா? ஆம் என்றால் எழுதிவைக்கப்பட்ட அந்த ஏட்டில் இருக்கும் படியே அனைத்தும் நடைபெறும் என்பதற்கான உங்கள் விளக்கம் என்ன?
முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். மனிதர்களை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று குரானில் அல்லா கேள்வி எழுப்புகிறான் என்றால் அதன் பொருள் மனிதனுக்கு சிந்திக்கும் திறனை அல்லா வழங்கியிருக்கிறான் என்பது தான். அதாவது தனக்கிருக்கும் மொத்த ஆற்றலிலிருந்து மனிதனுக்கு சுயமான சிந்தனையை வழங்கியிருப்பதாக கூறும் அல்லா, தன்னிடமிருக்கும் ஏட்டில் உள்ளபடியே எல்லாம் நடக்கும் என முரண்படுவதேன்? ஆனால் மனிதர்களுக்கு (அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும்) சிந்திக்கும் திறன் இருப்பதை நாம் சந்தேகிக்க முடியாது ஏனென்றால் நேரடியாக நாம் அதை பார்க்கிறோம் உணர்கிறோம். என்றால் அந்த ஏட்டில் இருப்பதை மீறி எதுவும் நடக்கமுடியாது என்பது சாத்தியமில்லையல்லவா? எனவே பதிவுசெய்யப்பட்ட அந்த ஏட்டில் உடைப்பு இருப்பது உறுதியாகிறது, அதுவும் முதல் மனிதனை அல்லா உண்டாக்கியது முதலே. இது ஆண்டவனின் முழுமையான ஆற்றலின் முதல் இடர்பாடு. அடுத்ததொரு இடர்பாடும் இருக்கிறது, அது என்ன?
அல்லாவைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை என குரானில் அனேக இடங்களில் அல்லா குறிப்பிடுகிறான். அப்படி என்றால் எதுவும் படைக்கப்படாத காலம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா. அந்த காலத்தில் அதாவது அல்லாவைத்தவிர வேறு எதுவுமே இல்லாத காலத்தில் அல்லா இருந்தது எங்கு? தற்போது அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் ஆண்டவன் இருக்கிறான், ஆனால் இந்த பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன் என்கிருந்து படைத்தான் என்பதே நம் கேள்வி. ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது. இங்கு அல்லாவின் படைப்புத்திறனில் கேள்விகள் எழுப்பப்படவில்லை, வாதத்திற்காக பிரபஞ்சத்தை படைக்கும் திறன் அல்லாவுக்கு இருந்ததாகவே கொள்வோம். கேள்வியெல்லாம் எங்கிருந்து படைத்தான் என்பது தான். இங்கு அல்லா இருக்கும் இடத்தின் முழுமையான முகவரியை தாருங்கள் எனக்கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஷ் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக ஒரு கருதல். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்குமுன் எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். அல்லா மட்டும் தான் சுயம்பு, அல்லா இருக்கும் இடமும் சுயம்புவல்லவே. அல்லா எப்போதும் இருக்கிறான் என்றால் அவனிருக்கும் இடமும் என்றுதான் கொள்ள முடியும். இடமில்லாத பொருள் இருக்கமுடியாது. ஆக தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை எனும் அல்லாவின் கூற்றில் உடைப்பு இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. அல்லாவின் ஆற்றலிலுள்ள முக்கியமான இடர்பாடாகும் இது.
இந்த இரண்டு இடர்பாடுகளும் இல்லாமல் அல்லாவின் ஆற்றல் செயல்படமுடியாது. அல்லாவின் ஐயத்திற்கிடமற்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களே, உங்களின் நம்பிக்கைக்குள்ளிருந்து இவைகளுக்கொரு பதில் கூறுமாறு உங்களை அழைக்கிறேன். தொடர்ந்து நாம் இந்த கற்பனைக்கோட்டையை சுற்றிவருவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக