பூமி உருண்டை என்பதை குறிக்கும் குரானின் வசனங்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதை பார்ப்போம். வசனம் 3:27 நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய், நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்…………… (22:61;31:29;35:13;57:6) இந்த வசனத்தில் பூமியின் வடிவம் குறித்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? ஒன்றுமில்லை. ஆனாலும் இதை பூமியை உருண்டை எனக்கூறுவதற்கு பயன் படுத்துகிறார்கள் எப்படி? இரவையும் பகலையும் ஒன்றின் மீது மற்றொன்றை புகுத்தும் செயல் எப்படி நிகழமுடியும்? புகுத்துதல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற முடியும் முதலில் தலை பின் உடல் பிறகு கால் இப்படி ஒவ்வொரு பகுதியாகத்தான் புகுத்தமுடியும். இந்த புகுத்துதல் எனும் சொல்லை மிகச்சரியாக கையாண்டு தான் இறைவன் இரவை பகலிலும் பகலை இரவிலும் புகுத்துவதாக கூறுகிறான். இரவிலிருந்து பகலோ, பகலிலிருந்து இரவோ திடும் என நிகழ்ந்துவிடுவதில்லை. படிப்படியாக மெதுவாக நிகழ்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது என்றால் பூமி கோள வடிவத்தில் உருண்டையாக இருப்பதால். பூமி சதுர வடிவில் இருந்தால் பகலும் இரவும் மாறுவது திடுமென்று ஒரு நொடிப்பொழுதுடையதாக இருக்கும், இதிலிருந்து பூமி உருண்டை என்பதை தான் குரான் புகுத்துதல் எனும் பதத்தின் மூலம் தெளிவு படுத்துகிறது என்று கூறுகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதன் மட்டுமல்ல 2800 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனும் கூட இப்படி கூறியிருக்க முடியும். ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள். இரவையும் பகலையும் புகுத்துவதாக மட்டும் தான் குரான் கூறியிருக்கிறதா? வசனம் 7:54 பகலை இரவால் மூடுகிறான் என்றும் இரவு பகலை பிந்தொடர்கிறது என்றும் வருகிறது. வசனம் 24:44 இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. வசனம் 25:62 இரவும் பகலும் அடுத்தடுத்து வருகின்றன.வசனம் 39:5 இரவின் மீது பகல் சுற்றுகிறது பகலின் மீது இரவு சுற்றுகிறது, என்றெல்லாம் இரவு பகல் மாறி மாறி வந்துகொண்டே இருப்பதை பல்வேறு வார்த்தைகளில் குரான் குறிப்பிடுகிறது. இந்த வசனங்களிலெல்லாம் அறிவியல் இருக்கிறதா? உலகில் வாழ்ந்து இரவு பகல் மாறுவதை கண்ட எவராலும் சொல்லிவிட முடிகிற இவைகளை மாபெரும் அறிவியல் உண்மை என எப்படி இவர்களால் கதைவிட முடிகிறது?
வசனம் 79:30 இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான். என்றொரு வசனம், இதில் விரித்தான் என்னும் சொல் இருக்கும் இடத்தில் அரபியில் தஹாஹா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தஹாஹா எனும் சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்ற பொருளும் உண்டு. பூமியை குறிப்பதற்கு இந்தச்சொல்லை பயன்படுத்தியிருப்பதன் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்று குரான் தெளிவுபடுத்திவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு குரான் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிட்ட இந்த வசனத்தை யாரும் நெருப்புக்கோழியின் முட்டை என மொழிபெயர்க்கவில்லை. விரித்தான் என்று சிலரும், பிரித்தான் என்று சிலரும் தான் மொழிபெயர்த்துள்ளனர். அப்படியிருக்க நெருப்புக்கோழியின் முட்டை என்னும் பொருள் எங்கிருந்து வந்தது? உலகில் பரவலாக உள்ள எந்த மொழியிலும் ஒரு உயிரினத்தின் முட்டையை குறிப்பிடுவதற்கு தனிச்சொல் இருப்பதாக தெரியவில்லை (குட்டியை குறிப்பதற்கு தனிச்சொற்கள் உள்ளன) பெயரோடு சேர்த்துத்தான் குறிப்பார்கள், கோழி முட்டை, குயில் முட்டை என்று. அரபிலும் அதே போல் தான் முட்டை என்பதற்கு பேத் எனும் பொதுச்சொல்லும் நெருப்புக்கோழியை குறிப்பதற்கு நஆம் எனும் தனிச்சொல்லும் இருக்கின்றன. இவர்களுக்கு எங்கிருந்து தஹாஹா எனும் வார்த்தைக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று பொருள் கிடைத்தது?
பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.
பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள். விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்? விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர். பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?
மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால் பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என முதலில் கூறியவர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரோட்டஸ்தனிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்றளவை தோராயமாக கணக்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய துல்லியமான கணக்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.
அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல. தொடர்ந்து அவர்களின் அறிவியல் வாதங்களூடே பயணிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக