திங்கள், 12 செப்டம்பர், 2011

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

பாலும் தேனும் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் பழமையான நூல்களிலும் சிறந்த உணவுப் பொருட்களாகவும் மருத்துவ குணம் கொண்டவைகளாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டபோது அதனுடன் தேனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாலும் தேனும் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அதாவது கால்நடைகள் அல்லது மாடு தன்னுடைய உடலிலிருந்து பாலை எப்படி பிரித்தெடுக்கிறது? தேனீக்கள் பூக்களில் சேகரிக்கும் திரவத்தை எப்படி தேனாக்குகிறது? என்பது குறித்து பழைய இலக்கிய நூல்களில் இருப்பதாக தெரியவில்லை.(தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்) செயற்கையாக பால் உற்பத்தி, தேன் உற்பத்தி என்று உணவுப்பண்டங்களை வர்த்தகப் பண்டமாக்கும் தேவை அப்போது இருந்திருக்கவில்லை.
தெரியாத விஷயங்களான இவைகளை அல்லா தன்னுடைய வேதத்தில் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதால், அதாவது அவற்றின் உற்பத்தி குறித்த அறிவியல் வளராத காலத்திலேயே சொல்லியிருப்பதால் இது இறைவனின் வேதம் தான் என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது. இது மதவாதிகளின் கோணம். பாலும் தேனும் பற்றி என்ன சொல்லியிருக்கிறது குரானில்?
……அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம். குரான் 16:66
……அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது…….. குரான் 16:69
வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது பால் உற்பத்தியாகும் இடமாக குரான் குறிப்பிடுவது. பால் உற்பத்தியாவது மார்பகங்களிளிருந்து அதாவது மடுக்களிளிருந்து தானே என்பவர்கள் மதவாதிகள் எடுக்கும் அறிவியல் வகுப்புகளையும் கவனிக்கவேண்டும். முன் காலத்தில் இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று மக்கள் நம்பி வந்தனர். உண்ணப்படும் உணவானது கூழாக அரைக்கப்பட்டு அதிலுள்ள சத்துக்கள் குடல்களினால் உறிஞ்சப்பட்டு அது தான் பாலாகவும் இரத்தமாகவும் இன்ன பிற பொருட்களாகவும் மாறுகிறது. அதாவது அரைக்கப்பட்ட உணவுக்கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து தான் பால் உற்பத்தியாகிறது. இதுதான் சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து எனும் குரான் வசனத்திற்கு மதவாதிகளின் விளக்கம். இவர்கள் சொல்லும் இந்த அறிவியல் ஓரளவுக்கு சரியானது தான். ஆனால் இது பாலுக்கு மட்டும் அல்ல, உடலின் அனைத்து ஆற்றலும் இந்த பரிமாற்றத்தின் மூலம் தான் கிடைக்கிறது. நடப்பதற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. கறிக்கோழியின் இறைச்சி எப்படிக்கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. சரிதான், உயிரினங்கள் அனைத்திற்கும் அது இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அது உண்ணும் உணவிலிருந்து தான் பெற்றுக்கொள்கின்றன. அந்த உணவு வயிற்றில் அரைத்து கூழாக்கப்பட்டு குடல்களினால் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. எஞ்சிய சக்கைகள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றன. இது பொதுவான அறிவியல். ஆனால் பால் எப்படி உற்பத்தியாவதாக அறிவியல் கூறுகிறது?
பிரசவ நேரம் நெருங்கியதும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது, இந்த புரோலாக்டின் மடுக்களை அடைந்ததும், ஆரஞ்சு சுளைகளை பிரித்துப்பார்த்தால் அதில் நெருக்கமாக இருக்கும் மொட்டுக்களைப்போல் மடுக்களில் இருக்கும் அல்வியோல் எனும் சுரப்பிகள் ஒரு வித திரவத்தை சுரக்கின்றன. இது தான் காம்புகள் வழியாக வெளியேற்றப்பட்டு பால் என அழைக்கப்படுகிறது. சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இதில் நேரடியாக தொடர்பு ஒன்றுமில்லை. காம்புகளிளிருந்து கரக்கப்படுவது தான் பால் என்பது அனைவரும் அறிந்தது தான், முகம்மதுவும் கூட. அதை வித்தியாசமாக சொல்ல நினைத்த முகம்மது, உடலில் எங்கிருந்தோ உற்பத்தியாகி வருகிறது எனும் நினைப்பில் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்று பொதுவாக சொல்லி வைத்திருக்கலாம். அறிவியல் பூர்வமாக சொல்லவேண்டும் என்ற தேவை அன்று அவருக்கில்லை. ஆனால் இன்று இருக்கிறது.
தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுகிறது. அந்தக்காலத்தில் தேனீ மலர்களிலுள்ள தேனை வாயினால் உறிஞ்சி கொண்டுவந்து அடைகளில் சேர்த்து வைக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வந்த குரான் வசனமோ வயிற்றிலிருந்து எனும் சொல் மூலம் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது உண்மையல்ல என்று அறிவியலை பேசுகிறது. இக்கால அறிவியலும் அதையே நிரூபித்திருக்கிறது என்கிறார்கள் மதவாதிகள். ஆனால் முகம்மதின் குரான் அறிவியலை பேசவும் இல்லை, குரான் சொல்வது போல அறிவியல் சொல்லவும் இல்லை என்பதே உண்மை.

குரான் தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுவதாக கூறுகிறது. வயிற்றிலிருந்து வெளிப்படுவதாக இருந்தால் உணவாக உண்டது செரித்து கழிவாக வெளிப்படுவதாக இருக்கும். தேனீ ஏன் தேனை சேமிக்கவேண்டும் எனும் ஆதாரக் கேள்வியோடு இது முரண்படுகிறது. வெயிர்காலங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் தேனீக்கள், குளிர்காலங்களில் சேமித்த தேனையே உணவாகக் கொள்கிறது. கூட்டிலிருக்கும் ராணித்தேனீ, ஆண் தேனீக்களின் உணவும் தேன் தான், அதாவது வேலைக்காரத் தேனீக்கள் மட்டும்தான் தேனை சேகரிக்கின்றன. ஏனைய தேனீக்கள் அதை உண்கின்றன. என்றால் தேனீக்கள் தங்களின் கழிவுகளையே மீண்டும் உண்கின்றனவா? அவ்வாறல்ல, தேனீக்கள் உணவாக தேனை உண்ணும் போது வயிற்றுக்கும், சேகரிக்கும் போது வேறொரு பையிக்கும் அனுப்புகின்றன. வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது. எனவே குரான் வயிற்றிலிருந்து எனக் குறிப்பிடுவது தவறான கூற்றாகும்.
இந்த வசனத்தை முழுமையாக கவனித்தால் வேறொரு உண்மையும் தெரியவரும். “பின் நீ எல்லாவிதமான கனிகளிருந்தும் உணவருந்தி உன் இறைவன் எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல். அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” இது தான் முழுமையான வசனம். இதில் கனிகளிருந்து உணவருந்தி என்று வருகிறது. எந்த தேனீ கனிகளை உணவாக உட்கொள்கிறது? அதிலும் எல்லாவிதமான கனிகளிருந்தும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இடத்தில் அரபியில் தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமர் என்றால் பேரீத்தம் பழத்தை குறிக்கும் சொல்லாகும். ஆக முகம்மது சொல்வது தேனீ பேரீத்தம் பழத்தை உணவாக உட்கொள்கிறது என்று. குரான் இறை வேதம் என அடம் பிடிப்பவர்கள் பதில் சொல்லலாம்.
இந்த வசனத்தில் இருக்கும் இன்னொரு விஷயம் தேனீக்களின் நடனம். எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல் எனும் சொற்களை பிடித்துக்கொண்டு அதற்கு கொடுக்கும் அறிவியல் விளக்கம்தான் தேனீக்களின் நடனம். தேனீக்கள் தேன் கிடைக்குமிடம் பக்கத்தில் இருக்கிறதா தூரமாக இருக்கிறதா என்பதை பிற தேனீக்களுக்கு அறிவிக்க இரண்டு விதமாக பறந்து காண்பிக்கிறது. அருகில் என்றால் வட்டவடிவமாகவும் தூரமாக என்றால் வேறு வடிவிலும் பறக்கிறது. இதை தேனீக்களின் நடனம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நடனத்தை ஒடுங்கிச்செல் எனும் சொல்லில் ஒட்டவைத்து அறிவியலாக்கி களத்தில் இறக்கிவிட்டார்கள்.
இது இறை வசனம் என்றால், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்றால் இப்படி தப்புத்தப்பாக அறிவியல் சொல்லித்தருவது ஏன்? இல்லை முகம்மது தனக்கு தெரிந்தவற்றை வைத்து இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் என்றால் எப்போது திருத்தப்போகிறீர்கள் அல்லது திருந்தப் போகிறீர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக