வியாழன், 15 செப்டம்பர், 2011

நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

இந்த வரைகலை படம் தான் 54:1 வசனத்திற்கு ஆதாரமாம்.
நிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக‌ 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே கொண்டிருந்தாலும், நிலவின் தாக்கம் பூமியில் குறிப்பிடத்தகுந்த அளவு செயல்படுகிறது. வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறான். ஒரு கோளோ, விண்மீனோ, விண்கற்களோ உடைந்துபோய் மீண்டும் ஒட்டிக்கொன்டு பழைய நிலையிலேயே செயல்படமுடியும் என்பதற்கான எந்தவித வாய்ப்பும் வானவியலில் இல்லை. ஆனால் குரானில் அப்படியான ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்துவிட்டது” “எனினும் அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் புறக்கணித்துவிடுகிறார்கள். இது வழமையாக நடைபெறும் சூனியம்தான் என்றும் கூறுகிறார்கள்” குரான் 54:1,2. இந்த குரான் வசனத்தின் விளக்கமாக சில ஹதீஸ்களும் இருக்கின்றன. “நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது” புஹாரி 3869.

அதாவது, அன்றைய அரபு மக்கள் முகம்மதுவிடம், நீர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங்களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அத்தாட்சி? என்று கேட்க அதற்கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார். ஆனால் மனிதனால் செய்யமுடியாத மிகப்பெரிய அதிசய நிகழ்வான இதைக் கண்டு அன்றைய அரபு மக்களில் யாரும் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்பது ஆச்சரியம் தான். பிளந்த அந்த நிலவு என்ன ஆனது? எவ்வளவு நேரம் இரண்டு துண்டுகளாக இருந்தது? எப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை. அதே நேரம் பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்து ஒன்று அழிந்துபோய் இன்னொன்று மட்டும் மிச்சமிருப்பதாக யாரும் கூறிவிட முடியாது என்பதால், உடைந்த அந்த நிலவே ஒட்டிக்கொண்டு இப்போதும் தொடர்ந்து பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்புவோமாக‌.

1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அந்த உலகில் குரான், ஹதீஸுக்கு வெளியே, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை. கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெற்றிருக்க, ஆக மிகப்பெரும் அதிசய நிகழ்வான இந்த நிலவு இரண்டான செய்தி உலகின் வேறெந்தப் பகுதியிலும் காணப்பட்டதாக தகவல் இல்லை. ஏன் அன்றைய அரேபியாவின் வேறு ஊர்களில் கூட இதை யாரும் கண்டதாக சாட்சியில்லை. இப்படியிருக்க நிலவு பிளந்ததை எந்த அடிப்படையில் ஏற்பது? இப்போது தந்திர விற்பன்னர்கள் தொடர்வண்டியை மறைப்பது, தாஜ்மஹாலை மறைப்பது என்று வித்தை செய்து காட்டுகிறார்களே அதுபோல முகம்மதுவும் தன்னிடம் கேள்விகேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் வித்தை காட்டி விட்டாரா? அப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த குரான் வசனம் நேரடியாக மிகத் தெளிவாகவே இருக்கிறது “சந்திரனும் பிளந்துவிட்டது” என்று. தவிரவும் நிலவு உடைந்தது மறுமை நாளுக்கான அத்தாட்சி என்றும் சில ஹதீஸ்கள் கூறுகின்றன. மறுமை நாள் என்பது உலகில் மக்கள் வாழ்ந்தது போதும் என இறைவன் முடிவு செய்து உலகை அழிக்கும் நாள் என்பது ஐதீகம். அந்த மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் என்று சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் இந்த நிலவு உடைந்ததும் ஒன்று. அந்த அத்தாட்சிகள் நிகழ நிகழ மறுமை நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது பொருள். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது, “நேரம் நெருங்கிவிட்டது சந்திரனும் பிளந்து விட்டது” ஆக நிலவு உடைந்தது கட்டுக்கதையோ, கண்கட்டு வித்தையோ அல்ல உண்மையான நிகழ்வு இஸ்லாமியர்களைப் பொருத்தவரையில்.

நிலவு எப்படித் தோன்றியது என்பது குறித்து பல யூகங்கள் இருந்தாலும், 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் அளவுள்ள ஒரு கோள் பூமியை தாக்கியதால் சிதைந்து பிரிந்துபோனது தான் நிலவாக பூமியை சுற்றுகிறது எனும் சேய்க்கொள்கைதான் ஓரள‌வுக்கு ஏற்கப்பட்டிருக்கிறது. இப்படி பூமியை சிதைத்து நிலவைப் பிரித்த அந்த மோதல்தான், புவியில் உயிரினங்கள் ஏற்படுவதற்கான சாதகமான சூழலை தொடங்கிவைத்தது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் ஆண்டுக்கு தோராயமாக 3.8 செமீ தூரம் பூமியை விட்டு நிலவு விலகிக் கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து புவியை உயிரினங்கல் வாழ்வதற்க்குத் தோதாக நகர்த்திக்கொண்டு வருவதில் நிலவு குறிப்பிடத்தகுந்த பங்காற்றி வருகிறது. நிலவின் தாக்கங்கள் என்று முதன்மையானதாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, பூமியின் பருவ மாறுதலுக்கு காரணமான பூமி தன் அச்சில் 23 பாகையளவு சாய்ந்திருப்பதை நிலைப்படுத்துவது. இரண்டு, கடல் நீரின் ஏற்ற வற்றங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்சுழற்சிக்கு உதவுவது.

முக்கியமான இந்த இரண்டு தாக்கங்களை பூமியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலவு, திடீரென ஒரு நாள் உடைந்துபோனது என்றால் அதன் தாக்கம் பூமியின் பருவகால நிலைகளில் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது போன்ற எந்த மாறுதல்களும் பூமியில் ஏற்படவில்லை என்பதே உண்மை. இந்த நிகழ்வை முகம்மது நிகழ்த்திக்காட்டியது மக்கா எனும் ஊரில் அதாவது செங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு ஊர். கடலின் ஏற்றவற்றங்களைக் கட்டுக்குள் வைத்துருக்கும் நிலவு உடைந்தபோது செங்கடலில் ஏதாவது மாற்ற‌ங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமல்லவா? அந்த மாற்றங்கள் அருகிலிருந்த மக்கவும் எட்டியிருக்க வேண்டுமல்லவா? அது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? (நிலவு உடைந்ததற்கான ஆதாரமாகவேனும்) அப்படி ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா? என்றால் நிலவு உடைந்தது என்பதை எப்படி ஏற்பது?

நிலவின் ஈர்ப்பு விசை மிகமிகக் குறைவு. தனக்கான வளிமண்டலங்களைக்கூட ஈர்த்து தக்கவைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவின் ஈர்ப்புவிசை பலவீனமானது. அதனால்தான் அங்கு காற்று இல்லை. காற்றைக்கூட ஈர்த்துவைத்துக்கொள்ள முடியாத நிலவு உடைந்து அதன் இரண்டு துண்டுகளும் மலையின் இருபக்கம் தெரியும் அளவுக்கு பிரிந்துவிட்ட பிறகு தமக்குள் எப்படி ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டன?

குரானில் அனேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறார்கள்? எப்படி புரிந்து கொள்கிறார்கள்? ஒரு கதை கூறப்படுவதுண்டு, வானில் கடவுள் தெரிகிறார் என்று ஒருவன் கூற மற்றவர்கள் தெரியவில்லையே எனக்கேட்க, வாழ்நாளில் பொய்யே கூறாதவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி தருவார் என்று அவன் கூறவும், மற்ற எல்லோரும் ஆமாம் தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். அப்படித்தான் அந்த ஹதீஸ்களைக் கூறியவர்கள் நிலவு உடைந்ததைக் கண்டார்களோ. எது எப்படியோ! முகம்மது தன் சொந்தக் கற்பனைகளை மெய்ப்படுத்திக்கொள்ளத்தான் அல்லாவையும் வேதத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக