"மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று குரான் கூறுகிறது". ஆனால் குரான் சில இடங்களில் களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாகவும், சில இடங்களில் தண்ணீரிலிருந்து படைத்ததாகவும் குறிப்பிடுகிறது. நண்பர் குறிப்பிடுவதுபோல் 'மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால்' என்ற வாசகங்கள் இல்லை. மனிதனின் உடலிலுள்ள மூலக்கூறுகள் என்று ஐம்பத்தெட்டு தனிமங்களை அட்டவணைப்படுத்தியிருந்தார். பூமியிலுள்ள மண்ணிலும் தண்ணீரிலும் உள்ள மூலக்கூறுகளான இவைகளே மனிதனின் உடலில் இருப்பதால் மனிதன் குரங்கிலிருந்து உருவானான் என்பது பொய்யென்றும் இறைவனே மனிதனை படைத்தான் என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்படுவதுமாக குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஆய்வு, எந்த அறிவியல் உண்மை டார்வின் கோட்பாட்டை மெய்ப்பிக்கிறதோ அந்த ஆய்வை, அந்த அறிவியல் உண்மையை டார்வின் கோட்பாட்டிற்கு எதிராக காட்டும் நிலை வேடிக்கையானது.மனிதனின் உடலில் நண்பர் அட்டவணைப்படுத்திய தனிமங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த தனிமங்களால் ஆக்கப்பட்டவன் தான் மனிதன். இதன் பொருள் என்ன? இந்த பூமியிலேயே தோன்றினான் மனிதன், இந்த பூமியில் உருவானதையே நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவாக உட்கொள்கிறான். அப்படி அவன் உட்கொள்ளும் உணவிலிருந்தே தேவையான ஆற்றலைப்பெறுகிறான். அதன் மூலமே அவன் வளர்ச்சியடைகிறான். அதனால் தான் அவன் உடலை அந்த தனிமங்கள் நிறைத்திருக்கின்றன. அந்த தனிமங்களால் ஆக்கப்பட்டிருக்கிறான். இது எப்படி இறைவனின் படைப்பாகும்? மண்ணிலுள்ள தனிமங்கள் என்பதையும் களிமண்ணால் படைத்தோம் என்பதையும் முடிச்சுப்போடுகிறார் நண்பர் டென்தாரா ஆனால், மனிதன் படைக்கப்பட்டதாக குரான் கூறுவது எந்தக்களிமண்? பூமியிலுள்ள களிமண்ணா? அல்லது வேறு ஏதாவது கோளிலுள்ள களிமண்ணா? இதைப்பற்றி குரான் குறிப்பிடுவதென்ன? "ஆதாமே நீயும் உன் மனவியும் இந்த சொர்க்கத்தில் தங்குங்கள்" குரான் 7:19. "இறங்கிவிடுங்கள் உங்களில் ஒருவர் மற்றவருக்கு பகைவராவீர்கள். உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன" குரான் 7:24. இந்த இரண்டு வசனங்களும் தெரிவிப்பது என்ன? சொர்க்கத்தில் படைத்து பூமியில் தங்கவைக்கப்பட்டவர்தான் ஆதிமனிதர் என்றுதானே குரான் தெரிவிக்கிறதென்றால் சொர்க்கத்தின் களிமண்ணில் பூமியிலுள்ள தனிமங்கள் வந்ததெப்படி? குறைந்தபட்சம் பூமியிலில்லாத தனிமங்கள் ஒன்றிரண்டாவது இருக்கவேண்டாமா? ஏன் இல்லை? ஏனென்றால் மனிதன் பூமியிலேயே தோன்றினான். அதனால் தான் பூமிக்கு வெளியிலுள்ள தனிமங்கள் ஏதுமில்லை.
மனிதனைதான் களிமண்ணால் படைத்ததாக குரான் கூறுகிறது. ஆனால் பூமியில் மனிதன் மட்டுமல்ல செடி கொடி மரங்கள் விலங்குகள் பூச்சிகள் பறப்பன ஊர்வன நிலத்தில் வாழ்வன நீரில் வாழ்வன உயிருள்ளவை உயிரற்றவை என்பனபோன்ற எந்தப்பாகுபாடும் இல்லாமல் கல்லானாலும் மண்ணானாலும் இயற்கையான பொருளானாலும் செய்ற்கையான பொருளானாலும் பூமியிலுள்ள மனிதன் உட்பட அனைத்துவகை பொருட்களிலும் இன்தவகை தனிமங்கள் தாம் நிறைந்திருக்கின்றன. மெண்டலீப் என்ற வேதியலாளர் தன்னுடைய தனிம வரிசை அட்டவணையில் சற்றேறக்குறைய 108 தனிமங்களை வரிசைப்படுத்தியுள்ளார். பூமியிலுள்ள எந்தப்பொருளானாலும் அதில் இன்த 108 தனிமங்களிலுள்ளவைதான் நிறைந்திருக்கும். இந்த தனிமங்கள் இணந்து தான் பொருட்கள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு ஹைட்ரஜனும் ஒரு ஆக்ஸிஜனும் இணிந்தால் அது நீர். மூன்று ஹைட்ரஜன் சேர்ந்தால் அது ஹீலியம். மூன்று ஆக்ஸிஜன் சேர்ந்தால் அது ஓசோன். சோடியம் குளோரின் ஆக்ஸிஜன் இந்த மூன்றும் சேர்ந்தால் சோடியம் குளோரைடு அதாவது உப்பு. இப்படி லேசான மூலக்கூறுகள் முதல் சிக்கலான மூலக்கூறுகள் வரை மேற்குறிப்பிட்ட 108 தனிமங்களில் சிலவும் பலவுமாய் இணைந்து உருவாவதுதான் பொருட்கள். எந்தெந்த தனிமங்கள் கலந்திருக்கின்றனவோ அதைவைத்து பொருட்கள் மாறுபடும். இப்படி எல்லாப்பொருட்களிலுமே இந்த தனிமங்கள் நீக்கமற நிறைந்திருக்க மனிதனை மட்டும் களிமண்ணால் படைத்ததாக குரான் கூறுவது ஏன்? பூமியிலுள்ள அனைத்து பொருட்களையும் களிமண்ணால் படைத்தோம் என்று கூறினால் அது அறிவியலை நெருங்கிவரும். ஆனால் மனிதனை மட்டும் குறிப்பிட்டு களிமண்ணால் படைத்ததாக கூறி தனக்கு அறிவியல் அறிவு இல்லையென நிரூபிக்கிறது குரான். சரி, இது எப்படி டார்வின் கோட்பாட்டை நிரூபிக்கும்?
மேற்குறிப்பிட்ட தனிமங்களில் எளியவகை தனிமங்களிலிருந்து உருவான எளியவகை உயிரினங்களிலிருந்து படிப்படியாக பரிணாமவளர்ச்சி பெற்று அதிலிருந்து சூழலின் தாக்கத்தால் மாற்றங்களுக்கு உள்ளாகி இயற்கை தேர்வுக்கு ஆட்பட்டு உருமாறிவந்தவன் தானே மனிதன். இதுதானே டார்வின் கோட்பாடு. மனிதன் உடலில் இருக்கும் தனிமங்கள் இதைத்தானே மெய்ப்பிக்கின்றன. டார்வின் கோட்பாடு தவறு என்றால் மனிதன் உடலில் பூமியிலில்லாத வேறு ஏதாவதுவகை தனிமங்கள் இருக்கவேண்டும் அல்லது பூமியிலுள்ள மனிதன் தவிர்த்த ஏனைய பொருட்களிலுள்ள தனிமங்களுக்கும் மனிதனிலுள்ள தனிமங்களுக்கும் தொடர்பே இருக்கக்கூடாது. இந்த இரண்டுமே இல்லையெனும் போது அது டார்வின் கோட்பாட்டையல்லவா நிரூபிக்கிறது நண்பர் டென்தாரா அவர்களே.
அடுத்து நண்பர் தன்னுடைய இரண்டாவது பின்னூட்டத்தில் தியரி ஆப் ஸ்பான்டேனியஸ் ஜெனரேசன் என்ற நூலைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். டார்வின் எழுதிய நூல்களின் தொகுப்பில் மேற்கூறிய தலைப்பில் ஒரு நூல் வெளிவந்ததாக தெரியவில்லை. டார்வின் வெளியிட்ட ஏதாவது ஒரு நூலின் பாகமாகவோ ஏதேனும் அத்தியாயமாகவோ இருக்குமா என்பதை நண்பர் டென் தாரா தெரியப்படுத்த வேண்டுகிறேன் மேலும் டார்வின் தனது கோட்பாடு குறித்த நூல்களில் தன்னுடைய ஆய்வை மட்டுமல்ல வேறுபல அறிவியலாளர்களின் ஆய்வையும் பயன்படுத்தியிருக்கிறார். டார்வின் மட்டுமல்ல அவருக்கு முன்பும் பின்பும் பல அறிவுயலாளர்கள் டார்வின் கோட்பாட்டிற்கு பங்களிப்பை செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக மனிதன் கடலுக்குள்தான் நிமிர்ந்து நிற்கும் தகுதியை பெற்றான் என்ற அலிஸ்டர் ஹார்டியின் மேற்கோளைக்கூட டார்வின் தன்னுடைய orgin of speicies என்ற நூலில் பயன்படுத்தியுள்ளார்(இந்த கருதுகோளை மறுத்திருக்கிறார்) இது போன்ற ஒன்றாக மேற்கூறிய நூல் இருக்கலாம்.
தொடர்ந்து நண்பர் மனிதனக்கு பிறகு ஏன் பரிணாமம் நடைபெறவில்லை? யார் நிறுத்தியது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். யாரும் நிறுத்திவிடவில்லலை. அப்படி யாரும் நிறுத்திவிடவும் முடியாது. முந்தைய கட்டுரையில் கூட மூளையை சுற்றி புதிய உறை ஒன்றை மனிதன் பரிணாம வளர்ச்சியில் பெற்றுள்ளான் என்பதை குறிப்பிட்டுள்ளேன். மேலும் மனிதன் முடி நகங்களை இழந்துவருகிறான். கால்களில் விரலை இழக்கிறான். நண்பர் டென்தாரா வேறுஏதவது கோளில் சென்று தங்கிவிட்டு சில பத்து லட்சம் ஆண்டுகள் கழித்து பூமிக்கு வந்தால் மனிதனிலிருந்து பரிணாமம் பெற்று கிளைத்த வேறுஏதாவது உயிரினத்தை காணலாம். அதுவரை மனிதன் பூமியை அழிக்காமல் விட்டுவைத்திருந்தால். மாறாக குரங்கு குட்டிபோட்டு மனிதன் உருவானதாய் கற்பனை செய்துகொண்டு மனிதன் ஏன் வேறொரு உயிரினத்தை குட்டிபோடவில்லை என்றுகேட்டால் நண்பருக்கு பரிணாமம் குறித்த புரிதல்கள் இல்லை என்பதையே அது வெளிக்காட்டும். அமீபா இன்னும் இருக்கிறதே எப்படி? மனிதன் எப்படி இனவிருத்தி செய்யமுடியும்? என்ற கேள்விகளும் இன்த வகையை சேர்ந்ததே. மற்க்கவேண்டாம் டைனோசரஸ் போன்ற விலங்குகள் பூமியில் மூன்று கோடி ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன. மனிதன் லட்சங்களைதான் கடந்துகொண்டிருக்கிறான். மற்றப்படி டார்வினின் மகன் டார்வின் கொள்கையை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது டார்வின் கோட்பாட்டோடு சம்பந்தமில்லாத விசயம்.
ஐசக் நியூட்டன் கூறியதாக ஒரு மேற்கோளை குறிப்பிட்டிருந்தீர்கள், இதோ நான் ஐன்ஸ்டீனின் மேற்கோள் ஒன்றை தருகிறேன் " இந்த பிரபஞ்சத்தின் கட்டமைவையும், ஒழுங்கையும் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. அந்த பிரமிப்பு கடவுள் என்ற ஒன்றை நினைவூட்டினாலும் அது தனிப்பட்ட மனிதனின் தினசரி நடவடிக்கையில் குறுக்கீடு செய்யும் கடவுளில்லை". இதில் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு நீங்கள் வேறு ஏதாவது ஒரு பின்னூட்டத்தில் மேற்கோள் காட்டலாம். அறிவியலாளர்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றனர். தினசரி வணக்கங்களை, பிரார்த்தனைகளை நிறைவேற்றிய அறிவியலாளர்களை காண்பதரிது. ஆனால் ஏதாவது சந்தர்ப்பத்தில் அவர்களிடம் கடவுள் குறித்து கேள்வி கேட்கப்படும் போதுவஞ்சப்புகழ்ச்சி அணியாக இல்லை என்பதையே இருக்கிறார் என்பது போல் சொல்லியிருப்பார்கள். அதற்கு கலிலியோ கலிலி போன்ற அறிவியலாளர்களின் அனுபவம் காரணமாக இருக்கலாம்.
நண்பர் டென்தாரா தன்னுடைய மூன்றாவது பின்னூட்டத்தில் ஹார்ரூன் யஹ்யா என்பவரின் atlas of creation என்ற நூலைப்பற்றியும் அதுகுறித்தான ஐரோப்பிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார். அந்த நூலின் சாரத்தை நண்பர்கள் யாராவது தமிழ்படுத்தித்தந்தால் அதற்குறிய விளக்கத்தை தர ஆயத்தமாகவே இருக்கிறேன். அந்த நூலின் விபரங்களை கல்வியில் சேர்க்கும் விசயத்தில் ஆட்சேபனையொன்றுமில்லை. பரிணாமக் கொள்கையோடு படைப்புக்கொள்கையையும் கற்றுக்கொள்ள்வது ஒன்றும் தவறான விசயமில்லை. இரண்டையும் கற்று சிந்தித்து சரியானதை தேர்ந்தெடுக்கும் சுத்தந்திரம் அவர்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் ஏழு வயதுமுதல் வணக்கத்திற்கு வரவில்லையென்றால் அடித்து இழுத்துச்செல்லுங்கள் என்று கூறும் மதத்தில் இந்த சுதந்திர நிலைப்பாடு அங்கீகரிக்கப்படுமா? படைப்புக்கொள்கையை கல்வியில் சேர்க்கவேண்டும் என்ற ஹாரூன் யஹ்யாவின் நூலைப்பற்றிய நிலைப்பாட்டை டார்வினிஸ்டுகள் பயந்து, அஞ்சி, நடுங்கி, எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடுவதாய் விதந்து கூறும் நண்பர் டென்தாரா சாதிமதம் இல்லையென்று கூறும் ஒரு பாடத்தை கல்வியில் சேர்த்தத்ற்காக கேரளாவில் பாடநூல்களை சாலையில் குவித்து எரித்துப்போராடும் முஸ்லீம்களை பற்றிய தனது கருத்தை கூறுவாரா?
நண்பர் தன்னுடைய பின்னூட்டங்களில் சில இடங்களில் டார்வினிஸ்டுகளிடம் இதற்கு பதிலில்லை எனக்குறிப்பிட்டிருந்தார். எந்த டார்வினிஸ்டிடம் கேள்விகேட்டு அதற்கு அவர் பதில் கூறமுடியாமல் நின்றார் என்ற விபரத்தையும் சேர்த்து தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். டார்வினிஸ்டுகளிடம் பதில் இருந்துவிடக்கூடாது என்ற நண்பரது ஆசை அல்லது பதைப்பு கற்பனையாக அப்படி ஒரு முடிவை தோற்றுவித்தது போலும். நண்பரின் எந்தக்கேள்விக்கும் விளக்கமளிக்க ஆயத்தமாக இருப்பதால் இது போன்ற சொற்களை தவிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் டென்தார தனது நான்காவது பின்னூட்டத்தில் "டார்வின் கோட்பாடு அறிவியல் என்னும் தகுதியை பெறவில்லை கற்பனையும் யூகமும் நிறம்பிய ஒன்றாகவே இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். அறிவியல் என்ற தகுதியை அடைவதற்கு நண்பர் என்ன இலக்கணங்களை வைத்துள்ளார் என்று தெரிவித்தால் நலம்.
பூமியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகள் கார்பன் டேட்டிங் முறையில் காலநிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. என்னுடைய முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போல ஆஸ்ரோலோபதஸின் இன்றைக்கு இருபத்துஇரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரும், ஹேமோஹெபிலைன் இன்றைக்கு பதினாறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரும், ஹேமோஎரக்டஸ் இன்றைக்கு பத்து லட்சத்திலிருந்து நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலும் நியாண்டர்தால்கள் இன்றைக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளிலிருந்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ஐயம்திரிபற கார்பன் டேட்டிங் முறையில் கண்டுபிடிக்கப்பட்டு எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. தற்கால மனிதனான க்ரோமாக்னன் வகை எலும்புகள் மேற்குறிப்பிட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லையே ஏன்? அந்தந்த வகை மனிதர்களின் எலும்புகள் அவர்கள் படிபடியாக பெற்றுவந்த மாற்றத்தை தெளிவாக உணர்த்தும் போது, மாற்றங்கள் ஒரே சீராக இருக்கும் போது அதாவது ஆஸ்ரோலோபிதஸின் வகை மனிதர்க்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஹேமோஹெபிலைன் வகையினரின் எலும்புகளோ, ஹேமோஎரக்டஸ் வகையினரின் எலும்புகளோ கிடைக்கவில்லை. ஹேமோஹெபிலைனின் காலத்தில் ஹேமோஎரக்டஸ் வகையினரின் எலும்புகளோ, ஹேமோசெபியன்ஸ் வகையினரின் எலும்புகளோ கிடைக்கவில்லை. ஹேமோஎரக்டஸின் காலத்தில் ஹேமோசெபியன்ஸ் வகையினரின் எலும்புகளோ, நியாண்டர்தால்கள் வகையினரின் எலும்புகளோ கிடைக்கவில்லை. ஹேமோசெபியன்ஸின் காலத்தில் நியாண்டர்தால் வகையினரின் எலும்புகளோ க்ரோமாக்னன் வகையினரின் எலும்புகளோ கிடைக்கவில்லை. இப்படி தெளிவான ஆதாரங்களுடன் மனிதனின் பரிணாம வளர்ச்சி நிரூபிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு அறிவியலாக தெரியவில்லையா? 1800களில் லூயி பாஸ்டர் உயிரினங்கள் திடீரென்று ஏற்பட்டிருக்க முடியாது அதாவது ஆகு என்று கூறி ஆகியிருக்க முடியாது என்று நிரூபித்தாரே அது அறிவியலாக தெரியவில்லையா உங்களுக்கு? 1905ல் ஜார்ஜ் நாடல் ரத்த எதிர்ப்பு ஸீரத்தை உருவாக்கி குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை நிரூபித்தது அறிவியலாக தெரியவில்லையா உங்களுக்கு? சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் டிஎன்ஏ மரபணுக்களில் 97 விழுக்காடு ஒற்றுமையிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்களே, மந்தபுத்தியுள்ள ஒரு மனிதனைவிட சிம்பன்சி புத்திசாலித்தனமானது என நிரூபித்துக்காட்டியிருக்கிறார்களே இவைகளெல்லாம் உங்களுக்கு அறிவியலாக தெரியவில்லையா? எத்தனை ஆய்வுகள் நிரூபித்த பின்னும், எத்தனை முறைகள் பலரும் இதற்கு பதில் சொன்ன பின்னரும் டார்வின் கோட்பாடு யூகம் தான் அறிவியல் உண்மையில்லை என்று கூறித்திரிவது மோசடியானது. என்னுடைய முந்தைய கட்டுரையில் எழுப்பிய கேள்வியின் படியே இதை நீங்கள் கோட்பாடு யூகம் என்றால் பெருவெடிப்புக்கொள்கை, சார்பியல் கோட்பாடு போன்றவற்றை அறிவியலாக எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறீர்கள்? இவைகளெல்லாம் அறிவியல் என்றால் டார்வின் கோட்பாடு எந்த அடிப்படையில் அறிவியல் இல்லை? கொஞ்சம் விளக்கிச்சொல்லுங்களேன்.
அடுத்ததாக நண்பர் டென்தாரா ஹாரூன் யஹ்யாவின் நூலில் இடம்பெற்றிருக்கும் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதாவது மனிதன் பரிணாம வளர்ச்சியின் மூலம் படிப்படியாக மாறிவந்தானென்றால் முதல் உயிர் எப்படி தோன்றியது? ஒரு உயிரினத்திலிருந்து தானே இன்னொரு உயிர் தோன்றமுடியும். எந்த உயிரினமும் இல்லாமல் பூமி மண்ணும் கல்லும் மலையுமாய் இருக்கையில் உயிரற்ற பொருட்களிலிருந்து உயிருள்ள ஒன்று எப்படி தோன்றியிருக்க முடியும்? என்பது அந்தக்கேள்வி?
இதற்கு விளக்கம் சொல்லுமுன் உயிர் என்றால் என்ன? என்பதைப்பற்றி சரியான தெளிவான புரிதல்களை ஏற்படுத்தியாகவேண்டும். உயிர் என்பதற்கு மதவாதிகள் மிகப்பிரமாண்டமாய், மிக அரிதான ஒன்றாய், தெய்வீகத்தன்மையுடையதாய் புனைவுகளை ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். உயிருள்ள மனிதனாய் இருப்பது இறைவனின் மிகப்பெரிய கருணை எனவே நீ அவனை வணங்கவேண்டும்.கடவுள் நம்பிக்கையின் அடித்தளமே உயிர் பற்றிய சிறப்பான மிகைப்படுத்தப்பட்ட கற்பனையில் தான் அமைந்திருக்கிறது. உன்னை அவன் மண்ணாக படைத்திருக்க முடியும் ஆனால் மனிதனாக படைத்திருக்கிறானே அதற்கு நீ நன்றி செலுத்து. இப்படி உலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் ஆத்தீகர்களானாலும், நாத்தீகர்களானாலும் உயிர் பற்றிய மிகைமதிப்பிலேயே இருக்கின்றனர் ஆனால் உண்மையில் மண்ணுக்கும் மனிதனுக்கும் பெரிய வெறுபாடு ஒன்றுமில்லை. உலகிலுள்ள எந்தப்பொருளை எடுத்துக்கொண்டாலும் உயிருள்ளதானாலும் உயிரற்றதானாலும் அவை அணுக்களாலேயே அக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அணுவுக்குள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்ற மூன்று பொருட்கள் இருக்கின்றன. இதில் புரோட்டானையும் நியூட்ரானையும் எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன. இது தான் அணுவின் அமைப்பு. இந்த அணுதான் மண்ணிலும் இருக்கிறது மனிதனிலும் இருக்கிறது. உயிருள்ள பொருளிலும் அதேஅணுதான் உயிரற்ற பொருளிலும் அதே அணுதான். இரண்டுவகை பொருட்களின் அணுவிலுமே புரோட்டானையும் நியூட்ரானையும் எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன. என்றால் உயிரற்ற பொருட்களுக்கும் உயிருள்ள பொருட்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அசைவு. உயிருள்ள பொருட்கள் அசைகின்றன, வளர்ச்சியடைகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இதுதான் உயிர் என்பதன் பொருள். ஆனால் உயிரற்ற பொருட்கள் இதை செய்வதில்லையா? அவைகளும் இதை செய்கின்றன. எப்படி? தண்ணீர் ஒரு உயிரற்ற பொருள் தான் அதை ஒரு இடத்தில் வைத்தால், வைத்த இடத்தில் அது அப்படியே இருக்கிறதா? பள்ளமான இடத்தை நோக்கி அசைகிறது இடம் பெயர்கிறது. காற்று உயிரற்ற பொருள்தான் அது அசைவற்றா இருக்கிறது? வெற்றிடத்தை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறது. ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சியடைகிறது. ஓரிரு மில்லிமீட்டர்கள் வளர்ச்சியடைகிறது. காற்றடைத்த பலூனை லேசாக சூடாக்குங்கள் (பலூனுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம்) பலூன் வெடித்துவிடும் ஏன்? காற்றானது பெருக்கமடைகிறது. உப்பை எடுத்துக்கொள்ளுங்கள் சோடியம், ஆக்ஸிஜன், குளோரின் இந்த மூன்று பொருளும் ஒன்றுகூடி சோடியத்தின் பண்பும் இல்லாத, குளோரினின் பண்பும் இல்லாத, ஆக்ஸிஜனின் பண்பும் இல்லாத சோடியம் குளோரைடு என்ற புதிய பொருள் அதாவது உப்பு என்ற புதிய பொருள் பிறக்கிறது. இவைகளெல்லாம் நாம் அன்றாடம் பார்க்கும் விசயங்கள். உயிருள்ளவைகளை போலவே உயிரற்றவையும் செயல் படுகின்றன. சரி, மனிதனுக்கு வருவோம். காலில் முள் குத்தியதும் வலிக்கிறது. இதில் நடைபெரும் செயல் என்ன? தோலில் தூண்டப்படும் உணர்வுகள் நரம்பு அணுக்கள் வழியாக மூளைக்கு கடத்தப்படுகிறது. எப்படி ஒரு கம்பியின் ஒரு முனையை சூடாக்கினால் மறுமுனைக்கு சூடு கடத்தப்படுகிறதோ அதே அடிப்படையில். ஆசை, கோபம், சிந்தனை நினைவு போன்ற மூளையின் செயல்பாடுகள் எப்படி நடைபெறுகின்றன? வேதியியல் வினைமாற்றங்கள் தான். மூளையில் வேதிவினைமாற்றங்கள் செய்வதன் மூலம் மனிதனின் மனோபாவத்தை மாற்ற முடியும். கவலையாக இருந்தால் தூக்கமாத்திரை உட்கொண்டு தூங்குகிறோம். அது என்ன செய்கிறது? செயற்கையாக தூக்கத்திற்கான வேதிவினையை மூளையில் நிகழ்த்துகிறது. அதனால் தான் தூக்கம் வருகிறது உடனே. மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு மனிதனை மூளையின் குறிப்பிட்ட பகுதியை காந்த ஊசியால் நிரடுவதன் மூலம் எந்த இழப்பும் இல்லாமலேயே சோகத்தில் தள்ளமுடியும். அப்படியென்றால் என்னதான் வித்தியாசம் உயிரற்றவைகளுக்கும் உயிருள்ளவைகளுக்கும்? உயிரற்றவை ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் செயல் படுகின்றன, உயிருள்ளவை வரையரைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகின்றன. இதுதான் உயிரற்றவைகளுக்கும் உயிருள்ளவைகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம். இதை புரிந்து கொள்ளாததுதான். இதை சரிவர உள்வாங்காமல் உயிர்பற்றிய மிகை மதிப்பு இருப்பதால் தான் நண்பர் டென்தாரா (அல்லது ஹாரூன் யஹ்யா) ஒரு உயிர்னத்திலிருந்து தானே இன்னொரு உயிர் வரமுடியும். அப்படியிருக்கும் போது உயிரில்லாத பொருட்களிலிருந்து உயிர் எப்படி தோன்றமுடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஒருவகையில் அவர்களின் கேள்வியும் சரியானதுதான். ஒரு உயிரினத்திலிருந்து தான் இன்னொரு உயிர் பிறக்கமுடியும். ஒரு குதிரையிலிருந்து இன்னொரு குதிரைதான் பிறக்கமுடியும். யானையிலிருந்து யானை தான் பிறக்குமேயல்லாது கரடி பிறக்காது. அப்படி இருக்கும் போது குரங்கிலிருந்து மனிதன் எப்படி உருவாகமுடியும்? இங்கு தான் பரிணாமத்தின் பங்களிப்பு வருகிறது.
நெருப்புக்கோளங்களிலிருந்து வெளிப்பட்ட பூமி, கொஞ்சம் கொஞ்சமாய் குளிர்ந்த போது அதன் விளைவால் வாயுக்கள் தோன்றின, வாயுக்கள் நெருக்கத்தால் ஒன்றுகூடி நீர் உருவாகி மழையாகி ஆறுகளும் கடல்களும் உருவாயின. ஆறுகளின் வேகத்தல் பாறைகள் உடைபட்டு கடலோரங்களில் மணலாய் சேர்ந்தது. மணலிலுள்ள சிலிகானும் பாஸ்பரசும் மின்னலின் மின்சாரத்தால் வினையூக்கப்பட்டு அசைவைப்பெற்றது. இது தான் முதல் உயிர். இப்படி தொடங்கியது தான் பூமியின் உயிர்களின் பயணம்.
எப்படி மனிதன் உயிர்பற்றி மிகை மதிப்பு கொண்டிருக்கிறானோ அதுபோலவே பரிணாமம் பற்றி குறை மதிப்பு கொண்டிருக்கிறான். ஓர் உயிரிலிருந்து மற்றொரு உயிர் பிறந்து வந்ததாய் கற்பனையிலிருக்கிறான். ஆனால் பரிணாம வளர்ச்சி என்பது அப்படியானதல்ல. கருவறை நிலைபாடு டார்வினிசமா?......... என்ற கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பது போல, ஒரு உயிரிலிருந்து பிரிதொரு உயிர் வரும்போது. டிஎன்ஏ மரபணு ஏணிகளில் அதற்கான செய்திகள் பதிந்திருக்கும். புதிய உயிரின் உருவ உறுப்புகளின் அமைப்பை இது தான் தீர்மானிக்கிறது. இப்படி கடத்தப்படும் செய்திகளில் தற்செயல் வாய்ப்பாக ஏதேனும் தவறுகள் நேர்ந்துவிட்டால் அப்பொது புதிய உயிர் தாய் உயிரிலிருந்து ஒரு மாறுதலான அம்சத்தைப்பெறும். எடுத்துக்காட்டாக தாயின் கழுத்தைவிட சற்று நீளம் கூடுதலான செய்தி புதிய உயிரின் டிஎன்ஏ மரபணு ஏணிகளில் பதிவாகிவிட்டால் தாயைவிட குட்டிக்கு கழுத்து கொஞ்சம் நீளமாக இருக்கும். அடுத்து இந்த மாறுதலானது சமூக உயிர்ப்பிற்கு, தகவமைதலுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு காட்டு எருதை எடுத்துக்கொள்வோம் அது ஈனும் குட்டியின் மரபணுவில் பிளவுபட்ட குளம்பு என்பதற்குப்பதிலாக பிளவுபடாத குளம்பு என்று ஆகுமாயின் பிறக்கும் குட்டி எருதாகத்தான் இருக்கும் ஆனால் காலில் ஒரு குளம்புடன் இருக்கும். எருதுகளை விட விரைவாக ஓடுவதற்கு பயன்பட்டால் அது நிலைத்திருக்கும் மாறாக தட்டையான கால்களுடன் ஓடுவதற்கு இடையூறாக இருந்தால் அது நீடிக்காது அழிந்துவிடும். இப்போது அந்த ஒற்றைக்குளம்பு எருது தேவையான மாற்றம் அமையப்பெற்றிருப்பதால் தாயை விட பரிணாம வள்ர்ச்சியில் ஒருபடி மேலோங்கியிருக்கும். (இது போன்ற மரபணு மாற்றங்கள் இப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வயிற்றில் காலுடன் பிறந்த மாடு ஒன்றின் படம் எல்லா தினசரிகளிலும் வெளியானது. மூன்று கைகளுடன் குழந்தை, மூக்கு நீண்ட பன்றி என உலகில் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற மரபணு செய்தியின் தவறுகளுக்கு படைப்புவாதிகள் முடிந்தால் விளக்கம் சொல்லட்டும்)இப்படி ஏற்படும் மாற்றம் மேலும் மேலும் தொடரும் சூழல் அமைந்தால் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப்பிறகு ஒற்றைக்குளம்புடன் கூடிய புதிய எருதுவகை ஒன்று பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும். இதைபோன்ற வளர்ச்சியினூடாகத்தான் ஒலிகோஸீன் காலகட்டத்தில் அதாவது இன்றைக்கு நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் வாலில்லாத குரங்கின் வகையிலிருந்து பரிணாமவளர்ச்சியின் மூலம் மனிதன் உருவாக ஆரம்பித்தான். அதிலிருந்து தற்கால மனிதனின் உருவ அமைப்பை பெற்றது ஹோலோஸீன் காலகட்டத்தில் தான் அதாவது இன்றைக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.
இப்படி வள்ர்ச்சியடைந்த மனிதனின் பரிணமவரலற்றைத்தான் டார்வின் பீகிள் கப்பல் பயணத்தின் மூலம் ஐந்தாண்டுகள் மனிதன் காலடி படாத தீவுகளிலெல்லாம் சுற்றியலைந்து புதிபடிவுகளை தேடிஎடுத்து சேகரித்து முப்பத்தைந்து ஆண்டுகள் செய்த ஆய்வின் பலனில் உருவாகிய டார்வின் கோட்பாட்டை, தொடர்ந்துவந்த அறிவியலாளர்களீன் ஆய்வில் உருதிப்படுத்தப்பட்ட டார்வின் கோட்பாட்டை யூகம் என்று சொல்பவர்கள் நிரூபித்துக்காட்டவேண்டும். நீங்கள் தயாரா நண்பர் டென்தார அவர்களே
குரானில் ஜின் என்ற ஒரு உயிரினத்தைப்பற்றிய குறிப்பு இருக்கிறது. மனிதனைப்போல் ஆனால் மனிதனைவிட சக்திவாய்ந்த உயிரினமாக குரானில் காட்டப்படுகிறது. இந்த ஜின் என்ற உயிரினத்தைப்பற்றி இப்படி ஒரு உயிரினம் பூமியில் இருப்பதைப்பற்றி ஏதாவது ஒருவகையில் உறுதிப்படுத்த முடியுமா? இங்குமனிதனைப்பற்றித்தான் விவாதம் ஜின்னை தேவையில்லாமல் இழுத்து வைப்பதாக யாரும் கருதவேண்டாம். இதன் மூலம் நான் கூற வருவது, அறிவியல்பூர்வமான உண்மையல்ல என்று டார்வின் கோட்பாட்டை சொல்பவர்கள் அறிவியல் தாகத்தால் அப்படிக்கூறவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான். எவ்வளவு அறிவியல் ஆதாரங்களைக் காட்டினாலும் டார்வின் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ஏனென்றால் அது குரானுக்கு மற்றமாக இருக்கிறது. குரானில் கூறப்பட்டிருக்கும் ஜீனை எந்த ஆய்வும் இருப்பதாக காட்டிவிடமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும் ஆனால் ஜின் இல்லை என்று முஸ்லீம்கள் கூறமாட்டார்கள். கூறவும் முடியாது. குரானில் சொல்லப்பட்டிருக்கிறது அதற்கு மேல் ஒன்றும் தேவையில்லை. அதேபோலத்தான் மனிதனை நாமே(இறைவன்)படைத்தோமென்று குரானில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை எந்த முஸ்லீமும் மீறமுடியாது. அறிவியல்பூர்வமாக பேச எத்தனிப்பதெல்லாம் எங்கள் மதத்தில் சேருங்கள் என்ற பிரச்சார உத்திதானேதவிர வேறொன்றுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக