திங்கள், 12 செப்டம்பர், 2011

பிரபஞ்சமும் அதனை கட்டுப்பட அழைத்த குரானும்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து துவங்கியதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், எரிமீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள், பால்வீதிகள் என்று எண்ணிலடங்கா பொருட்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் நிறைந்துள்ள  இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவு தற்போதைய அளவுகோல்களின் படி 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு பயணம் செய்தால் எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்குமோ அவ்வளவு. ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிமீ. இவ்வளவு வேகம் கொண்ட ஒளி ஒருமுனையிலிருந்து மறுமுனையை அடைய 2500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றால் நம் பிரபஞ்சத்தின் அளவுகளை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அளவு இப்படியே இருக்குமா? அல்ல இன்னும் விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு ஒருமையிலிருந்து வெடித்துப்பரவியதில் தொடங்கியது, அதைத்தான் பெருவெடிப்பு கொள்கை என்கிறார்கள்.  இந்த பெரு வெடிப்புக்கொள்கை குரானில் கூறப்பட்டிருக்கிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இன்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவான குரானில் இன்றைய அறிவியல் எப்படி இடம்பெற்றிருக்க முடியும்? எனவே குரான் இறைவனால் அருளப்பட்டது என்பது அவர்களின் வாதம்.

பிரபஞ்சம் குறித்து குரான் கூறுவதென்ன?

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் ……….. அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? வசனம் 21:30

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான் விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. வசனம் 41:11

இந்த இரண்டு வசனங்களும் தான் பெருவெடிப்புக்கொள்கையை விளக்குவதாக இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள். முதல் வசனத்தில் வானங்களும் பூமியும் இணைந்திருந்ததாகவும் பின்னர் அவைகள் பிரிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இரண்டாவது வசனமோ வானத்திற்கு முந்தைய நிலை புகை என்றும் அதை பின்னர் வானமாகவும் பூமியாகவும் மாற்றியதாக குறிப்பிடுகிறது. இந்த இரண்டின் பொருளும் எப்படி பெரு வெடிப்புக் கொள்கையை பேசுவதாக அறியப்படுகிறது? விண்மீன்கள் (ந‌ட்சத்திரங்கள்) தோன்றுவதற்கு முன் அதாவது ஆரம்பகால பிரபஞ்சத்தில் 72 விழுக்காடு கரும்பிண்டமாக இருந்தது எனவும் இக்கரும்பிண்டங்களின் திணிவிலிருந்து விண்மீன்கள் தோன்றின என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். கரும்பிண்டங்கள் என்பது எந்த ஒரு பொருளுமாக இல்லாமல் ஆற்றலாக இருந்தன. இந்த இடத்தில் இதை பொருலாக இல்லாமல் ஆற்றலாக என்பதை புகை என்பதாக உருவகப்படுத்தி, அந்தப்புகையிலிருந்து நட்சத்திரங்களும் ஏனைய பொருட்களும் தோன்றின என்பதாக பொருள் எடுத்துக்கொண்டு மேற்கண்ட வசனங்கள் பெருவெடிப்புக்கொள்கையை கூறுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

முதலில் வானம் என்பது என்ன? உயரத்தில் நீலமாக தெரிவதா? பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் வெளிதான் வானம் எனப்படுகிறது. நட்சத்திரங்கள், கோள்கள் உள்ளிட்ட அனைத்துபொருட்களையும் உள்ளடக்கிய பெரு வெளியை பிரபஞ்சம் என்றால் பருப்பொருட்களை நீக்கியபின் இருக்கும் வெளி வானம் எனலாம். ஆனால் குரான் கூறுகிறது வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான் என்று. விண்மீன்கள் கோள்கள் முதலான பொருட்களை புகையாக இருந்தபோது நாடினான் என்றிருந்தாலும் கூட கொஞ்சம் அறிவியல் வாசம் அடித்திருக்கும்.  தொடர்ந்து அவர்கள் வானம் என்பதை பூமியை தவிர்த்த அனைத்தும் என்பதாக பொருள் கொள்ளச்சொல்கிறார்கள். ஏனென்றால் குரானின் படி அப்படி பொருள்கொண்டால் தான் அந்த வசனங்களுக்கு அறிவியல் சாயம் பூச முடியும். வானங்களும் பூமியும் இணைந்திருந்த போது என்றும், அதற்கும் பூமிக்கும் கூறினான் என்றும் குரான் வானத்தையும் பூமியையும் மட்டுமே குறிப்பிடுகிறது. எனவே பூமியை தவிர்த்த அனைத்தும் வானம் என்று எடுத்துக்கொண்டு சுலபமாக பொருள் பண்ணிக்கொண்டார்கள். ஆனால் குரானில் மற்றொரு வசனம் வானமும் அதன் பொருட்களும் வேறு வேறு என்று தெளிவாக அறிவிக்கிறது. வசனம் 41:12 …………. கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்………….. இந்த வசனத்தில் இருக்கும் விளக்குகளால் எனும் சொல் விண்மீன்கள் கோள்களை குறிக்கிறது. எனவே வானம் என்பதற்கு பூமியை தவிர ஏனைய அனைத்தும் என்று பொருள் கொள்வது குரானின் படியே முரணானது.

வானத்தை கண்களுக்கு புலனாகும் ஒரு பொருளாக கருதுவதும், அது புகையிலிருந்து உருவானதாக நினைப்பதும் மனிதன் மேகத்தை பார்த்ததன் திரிபாக கொள்ளலாம். வசனம் 50:6 ……………. அதில் எந்த ஓட்டைகளும் இல்லை என்று கூறியிருப்பதன் மூலம் நிறமாலையின் நீல நிற‌த்தை பிரதிபலிக்கும் நீலப்பின்னணியை அதன் சீறான தன்மையையே குரான் வானம் என குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது.  மீண்டும் இரண்டாவது வசனத்தை கவனியுங்கள் புகையாக இருந்த வானத்தை நாடிய போதே பூமியும் சேர்த்து கூறப்படுகிறது அதற்கும் பூமிக்கும் கூறினான் என்று. ஆக குரானின் இந்த வசனங்களில் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுவது போல் எந்த அறிவியல் கூறுகளும் இல்லை. மரபுவழி புராணங்களின் துணையுடன் சாதாரண மனிதன் கூறிவிட முடிகிற இந்த வசனங்களை அறிவியலுடன் முடிச்சுப்போடுவது இவர்களின் வெற்று பிதற்றல்கள் தானேயன்றி வேறில்லை.

ஒரு சிங்குலாரிடியிலிருந்து வெடித்து விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக்கொள்கையின் எந்த சாயலும் இல்லாத மேற்கண்ட இரண்டு வசனங்களும் இன்னொன்றையும் தெளிவாக்குகிறது. வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது. இந்த அறிவியலை அறியாத குரான், பூமியையும் வானத்தையும் பிரித்துவிட்டதாய் விளம்புகிறது. பூமியின் அருகிலிருக்கும் வானத்தை விளக்குகளால் அலங்கரித்ததாய் கதைக்கிறது.

மதவாதிகள் தேடுவதெல்லாம் அறிவியலோடு ஐக்கியமாகிப்போகின்ற வசனங்கள், அதைவைத்துக்கொண்டு அதற்குள் அறிவியலை வளைத்து  நுழைத்துவிடுகிறார்கள். பின்னர் அவர்களே ஆச்சரியப்பட்டு ஆஹா குரான் இன்றைய அறிவியலை மெய்ப்பித்துவிட்டது என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை இறைவன் எனும் ஒன்றை இவர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு கூடிய ஒரு ஆற்றலை அறிவியல் திடமாக மறுக்கிறது என்பதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக