திங்கள், 12 செப்டம்பர், 2011

பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

இரண்டாம் ரமோஸஸின் உடல்
குரான் ஒரு இறை வேதம் தான் என்பதற்கு திட ஆதாரமாக மதவாதிகள் காட்டும் ஆதாரம் ஒன்றிருக்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களில் கரைகண்ட மதப்பரப்புரையாளர்கள் என்றில்லை வாசிப்புப் பழக்கம் ஏதுமற்ற ஒரு சாதாரண முஸ்லிமும் விதந்து போற்றும் ஒன்று பிர் அவ்னின் உடல். குரானில் கதை ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

“மேலும் இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்கவைத்தோம். அப்போது பிர் அவ்னும் அவனது படையினரும் கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள். அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் வைக்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவனாக இருக்கிறேன் என்றும் கூறினான்.
இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” குரான் 10: 90,91,92

அதாவது, எகிப்தில் முன்னொரு காலத்தில் பிர் அவ்ன் என்றொரு மன்னன் இருந்தான். இந்த கதை நடக்கும் காலம் சற்றேறக்குறைய முகம்மதுவின் காலத்திற்கு 1900 ஆண்டுகளுக்கு முன்னர். அந்த மன்னனிடம் இறைவனின் நேரான மதத்தை எடுத்துச் சொல்வதற்காக மூஸா எனும் தூதர் வருகிறார். (கிருஸ்தவர்கள் இவரை மோசஸ் என்றும், யூதர்கள் மொசையா என்றும் அழைக்கின்றனர்) அவரின் போதனைகளுக்கு செவிகொடுக்காத அந்த மன்னன் அவரையும் அவரின் சீடர்களையும் துன்புறுத்தத்துகிறான். ஒரு கட்டத்தில் தன்னுடைய சீடர்களுடன் நாடுகடந்து செல்கிறார். இதையறிந்த மன்னன் தன் வீரர்களுடன் துரத்திச்செல்கிறான். செங்கடல் குறுக்கிடுகிறது. உடனே மூஸா தன் இறைவனின் கட்டளைப்படி தன் கைத்தடியால் கடலை அடிக்க இது இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழி விடுகிறது. அந்த வழியே அவர்கள் தப்பிக்க மன்னனும் அதே வழியில் துரத்துகிறான். மூஸா சீடர்களுடன் மறுகரையை பாதுகாப்பாக அடைந்ததும் கடல் பழையபடி மூடிக்கொள்ள மன்னனும் வீரர்களும் கடலில் மூழ்கி இறக்கின்றனர்.

இந்த கதை நடந்து 1900 ஆண்டுகளுக்கு பிறகு முகம்மது சொல்கிறார், பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக அந்த உடலை பாதுகாப்போம் என்று. அப்போது யாரும் எங்கே அந்த பாதுகாக்கப்பட்ட உடல்? என்று எதிர்க்கேள்வி எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால் இது அந்தப்பகுதியில் புராணரீதியாக வழிவழியாக வழங்கப்பட்டு வரும் கதைதான்.

இப்போது அன்மைக்காலங்களுக்கு வருவோம். எகிப்தின் நைல் ஆற்றங்கரை பள்ளத்தாக்கு ஒன்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்படுகிறது. ஆய்வுகளுக்குப் பின்னர் அது பண்டைய மன்னனான இரண்டாம் ரமோஸஸ் என்பவனின் உடல் தான் அது என கண்டறியப்பட்டு தற்போது கெய்ரோவிலுள்ள ராயல் மம்மி எனும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குரானில் குறிப்பிடப்படும் பிர் அவ்னின் உடல்தான் அது, இறைவன் தான் வாக்களித்தபடி பிர் அவ்னின் உடலை கெட்டுப்போகாமல் பாதுகாத்து, உடலை பாதுகாத்து வைக்கும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு தெரிந்த காலத்தில் அதை வெளிப்படுத்தி குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதை ஐயம் திரிபற மெய்ப்பித்துவிட்டான். என்னே அவனின் கருணை என்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் காலம், இஸ்ரேல் எனும் தேசத்தை பாலஸ்தீன அரேபியர்களின் பகுதிகளில் உருவாக்குவதற்கான திட்டம் தயாராக இருந்தது. அந்தப்பகுதி மெய்யாகவே தங்களின் தாயகம் தான் என யூதர்களை நம்பவைக்க சியோனிச தலைவர்கள் புராணக்கதைகளுக்கு வரலாற்று வடிவம் கொடுக்கும் வேலைகளில் இறங்கினர். தங்களின் கடவுளான மொசையா எகிப்தின் கொடுமைகளில் இருந்து மீட்டுவந்து வாக்களித்து வாழவைக்கப்பட்ட பகுதிதான் பாலஸ்தீனப் பகுதி என்பதற்கு ஆதாரமாக கடலில் மூழ்கி இறந்துபோன மன்னனைத்தேடி, தங்களின் புராணக்கதைக்கு ஆதாரம் தேடி பல மன்னர்களின் சடலங்களை குறிப்பிட்ட அந்த மன்னனாக அடையாளப்படுத்தும் வேலையை செய்தனர். அஹ்மோஸ், தட்மொஸ், அமேன்கொதப், சேத்தி, ரமோஸஸ், மேர்நெப்தா போன்ற மன்னர்களின் சடலங்களை அதுதான் அந்த மன்னனின் சடலம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு உடலை அடையாளமாக காட்டமுயன்று பின்னர் கைவிட்டனர். இதில் ஒரு உடலான ரமோஸஸ் உடலைத்தான் இஸ்லாமியர்கள் பிர் அவ்ன் உடலாக, ஆதாரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முதலில் பிர் அவ்ன் அல்லது பாரோன் அல்லது பரோவா என்பது குறிப்பிட்ட ஒரு மன்னனின் பெயரல்ல, மாறாக அது அரச பரம்பரையின் பெயர். அடுத்து, ஆரம்பத்திலேயே அந்த சடலத்தை வெளிப்படுத்தியிருந்தால் மனிதர்களால் அதை பாதுகாத்து வைக்கமுடியாமல் போயிருக்கும் என்பதால் மனிதர்கள் அந்த தொழில்நுட்பம் தெரிந்ததும் இறைவன் வெளிப்படுத்தியிருக்கிறான் என்பது மோசடியானது. ஏனென்றால் செத்த உடல்களை மம்மிகளாக பதப்படுத்தி வைப்பதை மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே செய்துவருகின்றனர். அவர்கள் பதப்படுத்திய உடலும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

எகிப்தின் அன்றைய காலகட்டத்தை மூன்றாக பிரிக்கலாம். கிமு 2950லிருந்து கிமு 2150வரையான முதல் காலம். இந்த காலத்தில்தான் மன்னர் குடும்பத்தினரின் உடலை மம்மியாக பதப்படுத்திவைக்கும் முறை தொடங்குகிறது. இந்த மன்னர்களின் மம்மிகள் புதையல் திருடர்களால் சிதைக்கப்பட்டுவிட்டன. கிமு 2150லிருந்து கிமு 1500 வரையான இரண்டாம் காலம். இந்தக்காலத்தில் முறையான அரசமைப்பு இன்றி குழப்பமான நிலை நிலவியது. கிமு 1500லிருந்து கிமு 1000வரையிலான மூன்றாவது காலகட்டத்தில் தான் மேற்கண்ட மன்னர்கள் எகிப்தை ஆண்டார்கள். இந்த மன்னர்களின் மம்மிகள் அனைத்தும் செயற்கையான முறையில் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தானேயன்றி இயற்கையான முறையில் பாதுகக்கப்பட்டவையல்ல. இவைகளில் அதிகம் சிதையாமல் கிடைத்திருப்பது இரண்டாம் ரமோஸஸ் மம்மிதான்.

மதவாதிகள் இரண்டாம் ரமோஸஸ் மம்மி 1898ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இரண்டாம் ரமோஸஸ் மம்மி கெய்ரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் புகைப்படத்தைத்தான் தங்கள் பரப்புரைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் 1898ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவைகள் இரண்டு உடல்கள். அமேன்கொதப், மேர்நெப்தா ஆகிய இரண்டு மம்மிகள் அந்த ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் ரமோஸஸ் கண்டெடுக்கப்பட்ட ஆண்டு 1881. இரண்டாம் ரமோஸஸ் கிமு 1279ல் ஆட்சியேறி 67 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கிமு 1213ல் தனது 90ஆவது வயதில் மூட்டு வலியால் அவதியுற்று மரணமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மாரிஸ் புகைல் என்றொரு பிரஞ்சு மருத்துவர், சவூதி அரசரின் தனி மருத்துவராக பணியாற்றியவர். குரானின் அறிவியல் பார்வை என்ற நூலை எழுதியவர். இவர் எகிப்து அரசின் அனுமதியுடன் மேர்நெப்தாவின் மம்மியை ஆராய்ந்தார். ஆராய்ந்து இது நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தார். அதற்கு அவர் கொடுத்த ஆதாரம் அந்த மம்மியில் உப்புத்தன்மை இருந்தது என்பது தான். ஆனால் உடலை மம்மியாக பதப்படுத்த நேட்ரான் எனும் உப்புதான் அந்தக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் நகைக்கக்கூடிய இன்னொரு செய்தி என்னவென்றால், இவரின் வெற்றித்தூண் எனும் கல்வெட்டில் கிமு 1207ம் ஆண்டில் கானான் மீது படையெடுத்து அதை வென்றதாக பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மேர்நெப்தாவின் ஆட்சியில் அவரால் துன்புறுத்தப்பட்டு மூஸாவால் தன்னை பின்பற்றியவர்களுடன் செங்கடலை பிளந்து மறுகரையில் குடியிருப்பு உருவாக்கப்பட்டதோ அதுதான் கானான் பிரதேசம் எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடலில் மூழ்கி இறந்துபோன மன்னன், தான் உயிருடன் இருக்கும்போது அந்தப்பகுதியை போரிட்டு வென்றதாக கல்வெட்டு நட்டிருக்கிறான்.

தன் கைத்தடியால் தட்டி கடலை பிளந்தது ஒருபுறம் இருக்கட்டும், இஸ்ரவேலர்கள் பெரும் தொகையில் நாடுகடந்து சென்றதாக வரலாறுகளில் எந்தக்குறிப்பும் இல்லை. கானான் பிரதேசம் அதாவது இன்றைய பாலஸ்தீனப் பகுதி தீவல்ல, தரை வழியாகவே செல்லமுடியும் போது கடலை பிளந்து போகவேண்டிய தேவை என்ன? அன்றைய எகிப்தில் கானான் பிரதேசம், இன்றைய சிரியா, நுபுன்கள் தேசம் எல்லாம் அடக்கம். நாடு கடந்து போகும் மூஸா அதே நாட்டின் இன்னொரு பகுதிக்கு தான் போகிறார்.

ஒட்சியின் உடல்
இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள உடல்களை மனிதன் மம்மிகளாக்கி செயற்கையாக பத்திரப்படுத்தியிருக்கிறான். இதே காலகட்டத்திலுள்ள ஒரு உடல் மனிதனால் பத்திரப்படுத்தாமல் இயற்கையாக  பதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ரமோஸஸ் விசயத்தில் உண்மை என்றே ஒரு வாதத்திற்காக கொண்டாலும் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. கார்பன் நிர்ணய முறையில் அவ்வுடல் கிமு3300க்கும் 3200க்கும் இடையில் வாழ்ந்த மனிதனுடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்சி என்று பெயரளிக்கப்பட்டுள்ள அந்த உடல் ஆஸ்திரியாவிலுள்ள சவுத் டைரோல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த ஓட்சிக்கு பின்னால் வேதமோ கதையோ இல்லை.


எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும் அறிவியலையே தங்களுக்கு ஏற்ப வளைத்து தங்கள் வேதவிவகாரங்களை வண்ணம் பூசிக்கொள்ளும் மதவாதிகள், வரலாற்றை விலை பேசாமல் விட்டுவைப்பார்கள் என்று நம்பமுடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக