குரான் பலவகையான உயிரினங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ௧) கழுதை, தேனீ போன்ற எல்லோருக்கும் அறிமுகமான பூமியில் இருப்பவைகள், ௨) எதிர்காலத்தில் தோன்றவிருப்பதாகவும், பூமியில் இருப்பதாகவும் ஆனால் மனிதர்களுக்கு அறிமுகமில்லாத இரண்டு உயிரினங்கள். இதில் முதல்வகை உயிரினங்கள் குறித்து அனைவரும் அறிந்திருப்பதால் விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் இரண்டாவதுவகை உயிரினங்கள் இஸ்லாமியர்கள் கேள்வியாக மட்டுமே அறிந்தது என்பதால் அவற்றை விவரிப்பது அவசியமாகிறது. பூமியில் மனிதன் வாழத்தொடங்கியது முதல், மனிதர்கள் கடவுளால் அழிக்கப்படும் நாள் வரை பூமியில் மனிதர்களூடே வாழ்ந்துகொண்டிருக்கும் ‘ஜின்’ எனும் உயிரினமும், யுகமுடிவு நாளின் அடையாளமாக பூமியிலிருந்து வெளிப்படுத்தப்படும் ‘தப்பாத்’ எனும் ஒருவகை மிருகமுமே அந்த உயிரினங்கள். இதில் தப்பாத் ஒரே ஒரு மிருகம் தான் ஜோடியோ இனப்பெருக்கமோ கிடையாது. ஆனால் ஜின்கள் அப்படியல்ல, மனிதர்களைப்போலவே உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து கொண்டிருப்பவைகள். மனிதனைவிட சில வகைகளில் மிகைத்த ஆற்றலுடைத்தவை, பறவைகளைப் போல் பறக்க முடிந்தவை. மனிதர்களை நல்வழிப்படுத்த(!) தூதர்களை அனுப்பியது போலவே ஜின்களுக்கும் தூதர்கள் உண்டு. குரானில் அனேக இடங்களில் ஜின்களை குறிப்பிட்டிருந்தாலும் தப்பாத் குறித்து ஒரு வசனம் தான். இந்த இரண்டு உயிரினங்களுமே பேசும் ஆற்றல் கொண்டவை என்பதும் ஷைத்தான் என பரவலாக அறியப்படுவதும் ஜின் வகையைச் சேர்ந்ததுதான் என்பதும் தனித்தன்மையானது.
இது குறித்த குரான் வசனங்கள்,
“மேலும் நாம் உம்மிடம் இந்த குர் ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரைத் திருப்பியதும், அவர்கள் அங்கு வந்தபோது ‘மௌனமாக இருங்கள்’ என்று சொன்னார்கள். முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்” குரான் 46:29
“அவர்கள் மீது வாக்கு நெருங்கும்போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம். அது நிச்சயமாக, மனிதர்கள் நம் வசனங்கள் மீது உறுதி கொள்ளவில்லை என்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்” குரான் 27:82
ஜின்கள் குறித்து ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன. அவைகள் எங்கு தங்குகின்றன? எவற்றை உண்கின்றன? என்பன தொடங்கி ஜின்களுடன் மனிதனுக்குள்ள தொடர்புவரை விரிவாக பேசுகின்றன ஹதீஸ்கள். ஜோதிடர்கள் கூறுபவைகள் சில வேளை உண்மையாக நடந்துவிடுகிறதே அது எப்படி எனும் கேள்விக்கு, முகம்மது ‘வானவர்கள் பேசுவதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு தங்கள் நண்பர்களான ஜோதிடர்களிடம் கூறிவிடுகின்றன. அவர்கள் அந்த ஒன்றில் நூறு பொய்யைக் கலந்து ஜோதிடமாக கூறிவிடுகிறார்கள்’ என்கிறார். முகம்மதின் மனைவி ஆயிஷா கூறியதாக புஹாரி 6213 ல் இந்த ஹதீஸ் இருக்கிறது.
“நான் தொழுவதை ஒரு ஜின் தடை செய்ய நினைத்தது, அதை பள்ளிவாசல் தூணில் கட்டிவைத்து உங்களுக்கு காட்டலாம் என நினைத்தேன். ஆனால் ” பின்னாளில் எவருமே அடையமுடியாத ஆளுமையை எனக்கு வழங்குவாயாக” என சுலைமான் கேட்டுக்கொண்டதற்கு மாறாக அமைந்துவிடும் என்பதால் விட்டுவிட்டேன்” என முகம்மது ஓரிடத்தில் கூறியிருக்கிறார். இதுவும் ஹதீஸ்தான்
“நச்சுப்பாம்புகளை கொல்லுங்கள் ஆனால் நச்சில்லாமல் வீடுகளில் உலவும் பாம்பைக் கொல்லாதீர்கள், ஏனென்றால் ஜின்கள் பாம்புகளின் உருவத்தில் இருக்கின்றன. போய்விடு என மூன்றுமுறை கூறுங்கள், அதன்பிறகும் அவை போகவில்லையென்றால் பின்னர் அடியுங்கள்” என முகம்மது கூறுகிறார் இதுவும் ஹதீஸ் தான்.
மக்கள் வசிக்கும் நகரங்களில், குப்பை கொட்டும் இடங்கள், கழிப்பிடங்கள், ஒட்டகத் தொழுவங்கள், மண்ணறைகள், அடர்ந்த காடுகள், பாலைவெளிகள், குகைகள் இன்னும் பல இடங்களிலும் வசித்து எலும்புகளையும் காய்ந்த மலத்தையும் உணவாக உண்ணும், ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து இனப்பெருக்கம் செய்யும் நெருப்பினால் படைக்கப்பட்ட இந்த ஜின் எனும் உயிரினங்கள், உலகில் எங்கும் அகப்படவில்லை. இவ்வாறான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதற்கான சின்னஞ்சிறு தடயங்கள் கூட உலகில் தட்டுப்பட்டதில்லை. மனிதர்களைப் போல பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும் இந்த உயிரினங்களின் இருப்பினால் பூமியில் நிகழ்ந்த விளைவுகள் என்று எதுவும் அறுதியிடப்படவில்லை. ஆனாலும் இப்படி ஒரு உயிரினம் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் எப்படி? நாங்கள் ஏனைய மதத்தவர்களைப் போலல்ல குரான் எங்களை சிந்திக்கச் சொல்லியிருக்கிறது எனும் முஸ்லீம்கள் எந்த அடிப்படையில் ஜின்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா?
கடைசிக்கால ஒற்றை விலங்கான தப்பாத் எனும் உயிரினம் குறித்து ஜின்னைப்போன்ற விரிவான விபரங்கள் எதுவும் இல்லை. பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என கடவுள் முடிவெடுத்தபின்னர் இந்த விலங்கு பூமியைப் பிளந்து கொண்டு வெளிவரும். வெளிவந்து மனிதர்களைப் பார்த்து இவர் இறை வேதத்தை உண்மையாகப் பின்பற்றினார், இவர் பின்பற்றவில்லை, இவர் பின்பற்றுவது போல நடித்தார் என்று அவரவர்களின் நிலைக்கேற்ப அவர்களிடம் பேசி சான்றிதழ்கள் வழங்கும்.
புமியிலிருந்து தாவரங்கள் தானே முளைக்கும்? புழு பூச்சிகள் பொந்துகளில் வாழும், ஆனால் பூமியிலிருந்து திடீரென ஒரு உயிரினம் வெளிப்பட முடியுமா? அப்படி வெளிப்படும் ஒரு உயிரினம் உடனே பேச முடியுமா? எந்தப் பகுதியில் என்ன மொழியில் பேசும்? பேச்சு என்றால் என்ன? ஒரு உயிரினம் சமூக வயப்பட்டிருப்பதன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? அதுவும் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?
அல்லாவுக்கு இவைகளெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான், ஆண்டவனின் மகிமை இது என்பவர்களுக்கு அறிவியல் குறித்துப் பேச எந்த அறுகதையும் இல்லை. இன்று கண்டுபிடிக்கப்படும் அறிவியல் நுணுக்கங்கள் கூட குரானில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது, என ஜல்லியடிப்பவர்கள் இந்த பேசும் உயிரிங்கள் குறித்து என்ன கூறுவார்கள்?
தான் விரும்பும் ஒழுங்கை மக்களிடம் கட்டியமைப்பதற்காக முகம்மது 23 ஆண்டுகளாய் சிந்தித்து சிறுகச் சிறுக கோர்த்துத்தொகுத்தது தான் இஸ்லாமும் குரானும், இதில் மக்களை ஈர்ப்புடன் பயணப்படவைக்க சேர்த்தவைகள் தான் இதுபோன்ற கதைகளும். இதை புனிதம் என்பதும் எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்ற ஓரிறை என்பதும் உயர்வு நவிற்சி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக