திங்கள், 12 செப்டம்பர், 2011

மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

டாப்கபி அருங்காட்சியகத்தில் உள்ள குரான்
இதில் முரண்பாட்டை காணமுடியுமா? இதைப்போல் ஒன்றை உருவாக்கிக்காட்டமுடியுமா? எனும் இரண்டு கேள்விகளை அடுத்து, குரான் இறைவனால் இறக்கப்பட்டதுதான் என்பதற்கு எடுத்துவைக்கப்படும் இன்றியமையாத இன்னொன்று அன்றிலிருந்து இன்றுவரை அதாவது ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாத ஒரே வேதம் இது தான் என்பது. அதற்கு சான்றாக இரண்டு குரான் படிகள் இன்றும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரின் அருங்காட்சியகத்தில் ஒரு படியும், துருக்கியின் இஸ்தான்புல் நகரின் டாப்கபி அருங்காட்சியகத்தில் ஒருபடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இன்னும் விரிவாக அறிந்துகொள்ள குரான் எப்படி தொகுக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்வது தேவையானதாகும்.
சற்றேறக்குறைய கிபி 610 ல் முகம்மதுவின் 40ஆவது வயதில் தொடங்கி 633ல் அவர் இறக்கும் வரை 23 ஆண்டுகளில் ‘வஹி’யாக வெளிப்பட்டதுதான் குரான். ஆண்டவனின் சிறப்பு பணியாளரான ஜிப்ரீல் என்பவர் முகம்மதுவுக்கு கற்றுக்கொடுக்கொடுக்கும் நிகழ்வு தான் ‘வஹி’ என்பது. அந்தந்த காலகட்ட பிரச்சனைகள் தேவைகளுக்கு ஏற்ப சிலச்சில வசனங்களாக அவ்வப்போது இறங்கியது(!) முகம்மது தனித்திருக்கும்போதும், மக்களுடனிருக்கும் போதும் வசனங்கள் இறங்கியிருக்கின்றன. ஆனால் ‘வானவரை’ பார்த்தவர்களோ அல்லது அவர் வந்து சென்றதுக்கான தடையமோ கிடையாது. இதன் காரணமாக ஆண்டவனே நேரடியாக முகம்மதின் மனதில் சில வசனங்களை போட்டதாகவும் கூறுவர். இப்படி முகம்மதுவுக்கு வெளிப்படும் குரான் வசனங்களை மனனம் செய்து தன் தோழர்களிடம் கூறுவார், அவர்கள் அதை தோல்களிலும் மரப்பட்டைகளிலும் எழுதிவைத்துக்கொள்வர். குரானை எழுதிவைத்துக்கொள்வதற்காக ஒரு குழுவையும் முகம்மது நியமித்திருந்தார். அவர்களில் முகம்மதுவுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்ற அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, முஆவியா ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர். இப்படி தொகுக்கப்பட்ட குரான் இன்றைய குரானிலிருந்து வேறுபட்டது, இன்றுள்ளதைப்போல் வரிசைப்படுத்தப்படாமல் வசனங்களின் மொத்தமான தொகுப்பாக இருந்தது. யாருக்கு எந்தப்பகுதி வேண்டுமோ அதை எடுத்து படித்துக்கொள்ளலாம். முஸ்லீம்களின் வணக்கமுறையான ஐவேளை தொழுகையின் போதும் குரானின் பகுதிகள் ஓதப்படும் இது முஸ்லீம்கள் குரானை மறந்துவிடாமலிருக்க முகம்மது செய்த ஏற்பாடு.
முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இது தான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது. இதனால் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் தனக்கு அடுத்த நிலையிலிருந்த உமரின் ஆலோசனையுடன் குரானை தொகுக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது. ஸைத் பின் ஸாபித் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு முகம்மது தொகுத்திருந்த குரான் , மனப்பாடாம் செய்து வைத்திருந்தவர்களின் உதவியுடன் ஒரு குரான் தயாரிக்கப்பட்டு அதுவே அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்பட்டது. ஐயம் ஏற்படும் வேளைகளில் இந்த குரானின் அடிப்படையிலேயே தீர்வுகள் பெறப்பட்டன. இந்த குரான் அபூபக்கருக்கு பிறகு வந்த உமரின் ஆட்சியிலும் அதிகாரபூர்வமானதாக இருந்தது. உமருக்குப்பின் அவரின் மகளும் முகம்மதின் மனைவியுமான ஹப்ஸா என்பவரிடத்திலும் இருந்தது. உமருக்குப்பின் ஆட்சிக்கு வந்த உஸ்மான் மீண்டும் ஒரு குரானை தொகுக்க முற்படுகிறார். உஸ்மான் தானே தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வசனங்களை அத்தியாயமாக ஒழுங்குபடுத்தி இன்றிருக்கும் வரிசைப்படி ஒரு குரான் தயாரிக்கப்பட்டு, அது பல படிகள் எடுக்கப்பட்டு விரிவடைந்திருந்த பல ஆட்சிப்பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அப்படி அனுப்பிவைக்கப்பட்ட குரான் படிகளில் இரண்டு தான் ரஷ்யாவிலும் துருக்கியிலும் இருக்கிறது, அதாவது முகம்மதின் மரணத்திற்குப்பின் கால் நூற்றண்டு கழிந்து. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் உஸ்மான் தனது ஆட்சியில் தயாரிக்கப்பட்ட குரானைத்தவிர ஏனைய அனைத்து குரானையும் எரித்துவிடுமாறு உத்தரவிடுகிறார். அதன் படி அனைத்தும் எரிக்கப்படுகின்றன, முகம்மது தயாரித்திருந்தது, அபூபக்கர் காலத்தில் தயாரிக்கப்பட்டு ஹப்ஸாவிடம் இருந்தது என அனைத்தும் எரிக்கப்படுகின்றன. ஏனைய குரான்களை அழிப்பதற்கு உடன்பட மறுத்து சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் அவர்களும் வற்புறுத்தப்பட்டு அனைத்தும் அழிக்கப்படுகிறது. இன்று நடைமுறையில் இருக்கும் அனைத்து குரானும் உஸ்மான் காலத்தில் தயாரிக்கப்பட்டதின் அடிப்படையிலேயே அச்சிடப்படுகின்றன.
இந்த இடத்தில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதல் கேள்வி, உலகம் உள்ளவரை தோன்றும் அனைத்து மனிதர்களுக்கும் அழகிய முன்மாதிரி முகம்மது தான் என்பதில் எந்த முஸ்லீமுக்கும் ஐயம் எழும் வாய்ப்பே இல்லை. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் செருப்பு, வாள் வைத்திருந்த தோலுறை கூட பத்திரப்படுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் முகம்மது எதன் அடிப்படையில் சமூகத்தை திரட்டினாரோ, உலகம் உள்ளவரை எந்த இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கூறினாரோ அந்த இறைவனால் முகம்மதுவுக்கு வழங்கப்பட்டு அவரின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்ட குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது. இது ஏன்?
இதற்கு பதில் கூறுமுகமாக, முகம்மது தொகுத்ததற்கும் இப்போது இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது முறையாக தொகுக்கப்படாமல் தனித்தனி வசனத்தொகுதிகளாக இருந்தது. அதன் அடைப்படையில்தான் இது தொகுக்கப்பட்டிருக்கிறது எனவே வித்தியாசமில்லை, முகம்மது இருக்கும் போது மனனம் செய்திருந்தவர்கள் தான் தொகுத்தார்கள், எந்த எதிர்ப்பும் எழவில்லை என்றெல்லாம் காரணங்களாக அடுக்குகிறார்கள். ஆனால் முக்கியமான விசயம் என்னவென்றால் ஐயம் என்று வந்துவிட்டால் ஒப்பிட்டு பார்ப்பதற்கு முகம்மது தொகுத்த குரான் இன்று இல்லை, உஸ்மான் காலத்தில் தொகுத்தது தான் இருக்கிறது. வரிசை மாறியிருக்கும் என்பது தானே அதை அழித்ததற்கு கூறும் காரணம், வரிசை மாறினால் என்ன வசனம் அதே வசனம் தானே அழிக்கும் தேவை ஏன் எழுந்தது? வரிசையை வசன எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டிய அவசியமில்லை எப்படியும் இருக்கலாம். இன்று இருக்கும் குரான்களில் கூட வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் வசனத்தை ஒப்பிடுவதற்கு திடனான ஆதாரம் ஒன்றுமில்லை. உஸ்மானுக்கு பிறகு குரானில் மாற்றமில்லை என்றால் அதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால் முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 15 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா? முஸ்லீம்கள் நேர்மையாக சிந்தித்துப்பார்க்கும் நேரமிது.

முதன் முதலில் முகம்மதுவுக்கு வஹீ வந்த ஹீரா குகை
இரண்டாவது கேள்வி, அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் அவரின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு உமரிடம் வருகிறது. உமரின் ஆட்சிக்காலத்திற்குப்பின் அது உஸ்மானின் பொறுப்பில் வந்திருக்கவேண்டும். ஏனென்றால் அது வெறும் நூலல்ல, வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஆவணம். உமருக்குப்பின் அந்த ஆவணம் உஸ்மானின் பொறுப்பில் வராமல் உமரின் மகளான ஹப்ஸாவின் பொறுப்பில் போகிறது. இது ஏன்? இதனால் தான் உஸ்மானால் குரான் மீண்டும் தொகுக்கப்பட்டதா? இதன் காரணமாகத்தான் உஸ்மான் தான் தொகுத்ததை தவிர மற்றவற்றை எரித்து விட உத்தரவிட்டாரா?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் நேர்மையான பதில் கிடைக்காதவரை குரான் பாதுகாக்கப்பட்டது என்பது நம்பிக்கையாகத்தான் இருக்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக