சனி, 17 செப்டம்பர், 2011

மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3


பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். கடந்த கட்டுரையில் நண்பர் இப்ராஹிம் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
பிரபஞ்சம் தோன்றி கோடான கோடிகள் ஆண்டுகள் ஆகியும் எத்தனை பரிணாமங்கள் நடந்தும் ஏன் மனிதன் மட்டுமே பேச கற்றுக் கொண்டான்? ஏன் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு உள்ளது?
இந்தக் கேள்விக்கு அடிப்படை இஸ்லாமிய மதப் பிரச்சார மேடைகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்றில் இருக்கிறது. சூழ்நிலைதான் மனிதன் பரிணாமமடைவதற்கு முக்கிய காரணி என்றால் மனிதன் பகுத்தறிவு கொள்வதற்கு என்ன சூழ்நிலை பூமியில் நிலவியது? என்பது தான் அந்தக் கேள்வி. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாலே புரியும் இப்படி கேள்வி எழும்புவதன் காரணம் அதுகுறித்தான அடிப்படை புரிதல் இல்லாததே என்பது. மனிதன் மட்டுமா பேசுகிறான்? மனிதனுக்கு மட்டுமா பகுத்தறிவு உள்ளது?
இல்லை. மனிதன் மட்டும் தான் மொழி எனும் கருவியுடன் பேசுகிறான். மனிதன் மட்டும் தான் பகுத்தறிவை சிறப்பாக பயன்படுத்துகிறான். பொதுவாக மனிதன் தானும் ஒரு சமூக வயப்பட்ட விலங்குதான் எனும் உண்மை அவன் வரித்துக் கொண்டிருக்கும் தகுதிக்கு இழுக்கானதாக கருதுகிறான். அதுதான் அவனை அந்த உண்மைகளை விளங்கிக் கொள்வதற்கு தடைகளாக முன்னிற்கிறது. எல்லா விலங்குகளுமே தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றன. ஆனால் அது மனிதன் அளவுக்கு விரிந்த பொருளில் இல்லை. ஏனென்றால் விலங்குகளுக்கு அதன் உயிர் வாழும் தேவைகளைத்தாண்டி வேறெந்தக் கருத்துகளும் இல்லை. மாட்டின் கத்தல்களை நம்மாலே நான்கைந்து விதமாக பிரித்து புரிந்து கொள்ள முடியும். காகம் உணவு கிடைத்ததும் கரைந்து தன் குஞ்சுகளை அழைக்கிறது. தன் குஞ்சை கொத்த வரும் பருந்தை எதிர்த்து கோழி கீச்சலாக கூவி தன் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. எல்லா விலங்குகளுமே ஆபத்து காலங்களில் பலமாக குரலெழுப்பி உதவி தேடுகின்றன. இவைகளெல்லாம் பேச்சில்லையா? “முனியாண்டி விலாசில் இன்னிக்கு நாஸ்தா இன்னாபா?” என்றால் மட்டும் தான் அதை பேச்சாக கொள்ள வேண்டுமா? அதனதன் தேவைக்கு ஏற்பவே அவை தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
மனிதனும் அந்த நிலையிலிருந்து தொடங்கியவன் தான். நியாண்டர்தால்கள் வல்லொலிகளை மட்டுமே பேசியிருந்தார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்று பேசப்படும் மொழிகளும் கூட தற்கால தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் பெருகின்றன. இவைகளையெல்லாம் உள்வாங்காமல் மனிதர்களைத்தவிர வேறெதுவும் ஏன் பேசவில்லை என்று கேட்பதற்கு அவர்களின் உள்ளீடாய் மதம் இருக்கிறது என்பதைத்தவிர வேறெதுவும் காரணம் இல்லை.
இதுபோலவே மனிதனைத்தவிர வேறெதற்கும் பகுத்தறிவு இல்லை என்பதும். அறிவு என்பது மனிதன் விலங்கு என உயிருள்ள அனைத்திற்கும் பொதுவானது. அதை மனிதன் தன்னுடைய வசதிக்காக ஐந்தறிவு, ஆறாவது அறிவு பகுத்தறிவு என பகுத்துக் கொண்டான். தனக்கு நேரும் அனுபவங்களை தொகுத்து நினைவில் வைத்திருந்து அதை சூழல் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது தான் அறிவு. இதை எல்லா விலங்குகளுமே செய்கின்றன. ஓரிடத்தில் தொடர்ச்சியாக சில முறை கல்லெறி வாங்கிய ஒரு நாய் மீண்டும் அந்த இடத்தைக் கடக்கும் போது சற்று பதுங்கி கவனித்துச் செல்வது பகுத்தறிவின்றி வேறென்ன? சிலவகை நச்சுச் செடிகளை மட்டும் உண்ணாமல் விலக்கும் மலை ஆடுகளுக்கு இருக்கும் அறிவை என்னவாக வகைப்படுத்துவது? ஏனைய விலங்குகளை விட குரங்குகள் இதை இன்னும் சிறப்பாக பயன்படுத்துகின்றன. எட்டாத உயரத்திலிருக்கும் கனிகளைப் பறிக்க கிளைகளை ஒடித்துப் பயன்படுத்தும் அளவிற்கு அதன் பகுத்தறிவு விருத்தியடைந்திருக்கிறது. மாறாக பகுத்தறிவு என்பதை மனிதனுக்கு மட்டுமேயான தனிச்சிறப்பான ஒன்றாக உருவகப்படுத்தி அதற்கு காரணமென்ன என்று கேட்பது பொருளற்றது. மனிதனின் தேவைகள் அவனை அந்த அறிவை மேம்பட்ட நிலையில் கையாளும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
மனிதன் ஏன் பறப்பவனாக பரிணாமமடையவில்லை? வெட்கம், நெருங்கிய இரத்த உறவு கொண்டவர்களுடனான உடலுறவு தவறு போன்றவற்றை எந்த விலங்கிலிருந்து மனிதன் கற்றுக் கொண்டான்?
மனிதன் ஏன் பறக்கவில்லை என்பதை விட எல்லா பறவைகளும் பறக்கின்றனவா? என்பது பொருள் பொதிந்த கேள்வி. பறப்பது என்பது எல்லா உயிரிங்களுக்குமான பொதுப் பண்பல்ல. எளிய எடை குறைந்த விலங்குகளுக்கான சிறப்புப் பண்பு. பறக்கும் உயிரினங்கள் ஏனைய எடைகூடிய உயிரினங்களைப் போல் நடக்கவோ ஓடவோ செய்வதில்லை. எடை குறைவாக இருக்கும் உயிரினங்கள் ஆபத்து காலங்களில் பறந்து தப்பிக்கின்றன. எடை அதிகமாக இருக்கும் உயிரினங்கள் ஓடித்தப்பிக்கின்றன. ஆனால் பறவை இனமாக இருந்த போதிலும் மயிலால் நீண்ட தூரம் பறக்க முடிவதில்லை. ஆனால் நடக்கின்றன. கோழியோ பறக்கவும் செய்கிறது நடந்து ஓடவும் செய்கிறது. ஈமு, நெருப்புக் கோழி போன்ற பறவையினங்கள் பறப்பதில்லை ஆனால் விலங்குகளைப் போல் ஓடுகின்றன. இதிலிருந்து தெரிவதென்ன? உயிரினங்களின் பறப்பது எனும் பண்பு அவற்றின் எடையோடு தொடர்புடையது. மனிதன் குரங்கு வகைப்பட்ட உயிரினத்திலிருந்து பரிணமித்தவன். அவை பறக்கும் தன்மையற்ற உயிரினங்கள் அவற்றிலிருந்து கிளைத்த மனிதன் எப்படி பறக்க முடியும்?
வெட்கம், நெருங்கிய இரத்த உறவு கொண்டவர்களுடனான கலப்பை தவிர்ப்பது போன்றவைகளை மனிதன் எந்த விலங்குகளிடமிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை. மனிதனின் தொடக்க காலங்களில் அவைகள் இருந்தன. பின்னர் சமூக கூடிவாழும் நெறிகளுக்கு ஏற்ப மனிதன் வகுத்துக் கொண்ட விதிமுறைகள் தான் யாருடன் உறவு கொள்வது? யாரை விலக்குவது? என்பது. இன்றும் கூட ஒரு குழுவின் மணவிதிகள் இன்னொரு குழுவின் மண விதிகளுடன் முழுவதுமாக பொருந்துவதில்லை. வெட்கம் ஆடை அணிவது, பிறப்புறுப்புகளை மறைப்பது போன்றவைகளும் எளிமையாக தாக்கப்படும் இலக்குகளை பாதுகாப்பது என்பதில் தொடங்கி வெயில் மழை போன்றவற்றிலிருந்து உடலை பாதுகாப்பது எனும் அம்சங்களின் வளர்ச்சி தான்.
பரிணாமம் என்பது ஒருவகை உயிரிலிருந்து இன்னொருவகை உயிருக்கு மாறிச் செல்வது என்றால் முதல் உயிர் எப்படி தோன்றியிருக்க முடியும்?
இத‌ற்கு விள‌க்க‌ம் சொல்லுமுன் உயிர் என்றால் என்ன‌? என்ப‌தைப்ப‌ற்றி ச‌ரியான‌ தெளிவான‌ புரித‌ல்க‌ளை ஏற்ப‌டுத்தியாக‌வேண்டும். உயிர் என்ப‌த‌ற்கு ம‌த‌வாதிக‌ள் மிக‌ப்பிர‌மாண்ட‌மாய், மிக‌ அரிதான‌ ஒன்றாய், தெய்வீக‌த்த‌ன்மையுடைய‌தாய் புனைவுக‌ளை ஏற்ப‌டுத்திவைத்திருக்கிறார்க‌ள். உயிருள்ள‌ ம‌னித‌னாய் இருப்ப‌து இறைவ‌னின் மிக‌ப்பெரிய‌ க‌ருணை என‌வே நீ அவ‌னை வ‌ண‌ங்க‌வேண்டும் என்பது கடவுட் கோட்பாட்டின் அடித்தளமாய் இருக்கிறது. க‌ட‌வுள் ந‌ம்பிக்கையே உயிர் ப‌ற்றிய‌ சிற‌ப்பான மிகைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னையில் தான்‌ கட்டியமைக்கப் பட்டிருக்கிறது. உன்னை அவ‌ன் ம‌ண்ணாக‌ ப‌டைத்திருக்க‌ முடியும் ஆனால் ம‌னித‌னாக‌ ப‌டைத்திருக்கிறானே அத‌ற்கு நீ ந‌ன்றி செலுத்து. இப்ப‌டி உல‌கிலுள்ள‌ பெரும்பாலான‌ ம‌னித‌ர்க‌ள் ஆத்தீக‌ர்க‌ளானாலும், நாத்தீக‌ர்க‌ளானாலும் உயிர் ப‌ற்றிய‌ மிகைம‌திப்பிலேயே இருக்கின்றன‌ர்,

ஆனால் உண்மையில் ம‌ண்ணுக்கும் ம‌னித‌னுக்கும் பெரிய‌ வேறுபாடு ஒன்றுமில்லை. உல‌கிலுள்ள‌ எந்த‌ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் உயிருள்ள‌தானாலும் உயிர‌ற்ற‌தானாலும் அவை அணுக்க‌ளாலேயே அக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அணுவுக்குள் புரோட்டான், நியூட்ரான், எல‌க்ட்ரான் என்ற‌ மூன்று பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌. இதில் புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. இது தான் அணுவின் அமைப்பு. இந்த‌ அணுதான் ம‌ண்ணிலும் இருக்கிற‌து ம‌னித‌னிலும் இருக்கிற‌து. உயிருள்ள‌ பொருளிலும் அதேஅணுதான் உயிர‌ற்ற‌ பொருளிலும் அதே அணுதான். இர‌ண்டுவ‌கை பொருட்க‌ளின் அணுவிலுமே புரோட்டானையும் நியூட்ரானையும் எல‌க்ட்ரான்க‌ள் சுற்றிவ‌ருகின்ற‌ன‌. என்றால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ளுக்கும் உயிருள்ள‌ பொருட்க‌ளுக்கும் உள்ள‌ வேறுபாடு என்ன‌? அசைவு. உயிருள்ள‌ பொருட்க‌ள் அசைகின்ற‌ன‌, வ‌ள‌ர்ச்சிய‌டைகின்ற‌ன‌, இன‌ப்பெருக்க‌ம் செய்கின்ற‌ன‌ இதுதான் உயிர் என்ப‌த‌ன் பொருள்.


ஆனால் உயிர‌ற்ற‌ பொருட்க‌ள் இதை‌ செய்வ‌தில்லையா? அவைக‌ளும் இதை செய்கின்ற‌ன‌. எப்ப‌டி? த‌ண்ணீர் ஒரு உயிர‌ற்ற‌ பொருள் தான் அதை ஒரு இட‌த்தில் வைத்தால், வைத்த‌ இட‌த்தில் அது அப்ப‌டியே இருக்கிற‌தா? ப‌ள்ள‌மான‌ இட‌த்தை நோக்கி அசைகிற‌து இட‌ம் பெய‌ர்கிற‌து. காற்று உயிர‌ற்ற‌ பொருள்தான் அது அசைவ‌ற்றா இருக்கிற‌து? வெற்றிட‌த்தை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிற‌து. ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சிய‌டைகிற‌து. ஓரிரு மில்லிமீட்ட‌ர்க‌ள் வ‌ள‌ர்ச்சிய‌டைகிற‌து. காற்ற‌டைத்த‌ ப‌லூனை லேசாக‌ சூடாக்குங்க‌ள் (ப‌லூனுக்கு பாதிப்பு ஏற்ப‌டாவ‌ண்ண‌ம்) ப‌லூன் வெடித்துவிடும் ஏன்? காற்றான‌து பெருக்க‌ம‌டைகிற‌து. உப்பை எடுத்துக்கொள்ளுங்க‌ள் சோடிய‌ம், ஆக்ஸிஜ‌ன், குளோரின் இந்த‌ மூன்று பொருளும் ஒன்றுகூடி சோடிய‌த்தின் ப‌ண்பும் இல்லாத‌, குளோரினின் ப‌ண்பும் இல்லாத‌, ஆக்ஸிஜ‌னின் ப‌ண்பும் இல்லாத‌ சோடிய‌ம் குளோரைடு என்ற‌ புதிய‌ பொருள் அதாவ‌து உப்பு என்ற‌ புதிய‌ பொருள் பிற‌க்கிற‌து. இவைக‌ளெல்லாம் நாம் அன்றாட‌ம் பார்க்கும் விச‌ய‌ங்க‌ள். உயிருள்ள‌வைக‌ளை போல‌வே உயிர‌ற்ற‌வையும் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌.

ச‌ரி, ம‌னித‌னுக்கு வ‌ருவோம். காலில் முள் குத்திய‌தும் வ‌லிக்கிற‌து. இதில் ந‌டைபெறும் செய‌ல் என்ன‌? தோலில் தூண்ட‌ப்ப‌டும் உண‌ர்வுக‌ள் ந‌ர‌ம்பு அணுக்க‌ள் வ‌ழியாக‌ மூளைக்கு க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. எப்ப‌டி ஒரு க‌ம்பியின் ஒரு முனையை சூடாக்கினால் ம‌றுமுனைக்கு சூடு க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌தோ அதே அடிப்ப‌டையில். ஆசை, கோப‌ம், சிந்த‌னை நினைவு போன்ற‌ மூளையின் செய‌ல்பாடுக‌ள் எப்ப‌டி ந‌டைபெறுகின்ற‌ன‌? வேதியிய‌ல் வினைமாற்ற‌ங்க‌ள் தான். மூளையில் வேதிவினைமாற்ற‌ங்க‌ள் செய்வ‌த‌ன் மூல‌ம் ம‌னித‌னின் ம‌னோபாவ‌த்தை மாற்ற‌ முடியும். க‌வ‌லையாக‌ இருந்தால் தூக்க‌மாத்திரை உட்கொண்டு தூங்குகிறோம். அது என்ன‌ செய்கிற‌து? செய‌ற்கையாக‌ தூக்க‌த்திற்கான‌ வேதிவினையை மூளையில் நிக‌ழ்த்துகிற‌து. அத‌னால் தான் தூக்க‌ம் வ‌ருகிற‌து. ம‌கிழ்ச்சியாக‌ இருக்கும் ஒரு ம‌னித‌னை மூளையின் குறிப்பிட்ட‌ ப‌குதியை காந்த‌ ஊசியால் நிர‌டுவ‌த‌ன் மூல‌ம் எந்த‌ இழ‌ப்பும் இல்லாம‌லேயே சோக‌த்தில் த‌ள்ள‌முடியும். அப்ப‌டியென்றால் என்ன‌தான் வித்தியாச‌ம் உயிர‌ற்ற‌வைக‌ளுக்கும் உயிருள்ள‌வைக‌ளுக்கும்? உயிர‌ற்ற‌வை ஒரு குறிப்பிட்ட‌ வ‌ரைய‌ரைக்குள் செய‌ல் ப‌டுகின்ற‌ன‌, உயிருள்ள‌வை வ‌ரைய‌ரைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இதுதான் உயிர‌ற்ற‌வைக‌ளுக்கும் உயிருள்ள‌வைக‌ளுக்கும் இடையிலுள்ள‌ வித்தியாச‌ம். இதை புரிந்து கொள்ளாத‌துதான். இதை ச‌ரிவ‌ர‌ உள்வாங்காம‌ல் உயிர் ப‌ற்றிய‌ மிகை ம‌திப்பு இருப்ப‌தால் தான் ஒரு உயிரின‌த்திலிருந்து தானே இன்னொரு உயிர் வ‌ர‌முடியும். அப்ப‌டியிருக்கும் போது உயிரில்லாத‌ பொருட்க‌ளிலிருந்து உயிர் எப்ப‌டி தோன்ற‌முடியும்? பூமியில் உயிரே இல்லாதிருக்கும் போது முதல் உயிர் எப்படி தோன்றியிருக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இங்கு தான் ப‌ரிணாம‌த்தின் ப‌ங்க‌ளிப்பு வ‌ருகிற‌து.

நெருப்புக்கோள‌ங்க‌ளிலிருந்து வெளிப்ப‌ட்ட‌ பூமி, கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் குளிர்ந்த‌ போது அத‌ன் விளைவால் வாயுக்க‌ள் தோன்றின‌, வாயுக்க‌ள் நெருக்க‌த்தால் ஒன்றுகூடி நீர் உருவாகி ம‌ழையாகி ஆறுக‌ளும் க‌ட‌ல்க‌ளும் உருவாயின‌. ஆறுக‌ளின் வேக‌த்த‌ல் பாறைக‌ள் உடைப‌ட்டு க‌ட‌லோர‌ங்க‌ளில் ம‌ண‌லாய் சேர்ந்த‌து. ம‌ண‌லிலுள்ள‌ சிலிகானும் பாஸ்ப‌ர‌சும் மின்ன‌லின் மின்சார‌த்தால் வினையூக்க‌ப்ப‌ட்டு அசைவைப் பெற்ற‌து. இது தான் முத‌ல் உயிர். இப்ப‌டி தொட‌ங்கிய‌து தான் பூமியின் உயிர்க‌ளின் ப‌ய‌ண‌ம்.

பரிணாமம் என்றதும் அது கட்டுக் கதை, யூகம், நிரூபிக்கப்படாதது என்றெல்லாம் அள்ளிவிடும் மதவாதிகள், அவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால் பரிணாமம் குறித்து எழுப்பும் கேள்விகளைப்போல் படைப்புக் கொள்கையிலும் கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதை மட்டும் தந்திரமாக எழுப்ப மறுத்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கே தெரியும் படைப்புக் கொள்கையை அறியியலின் அடிப்படையில் நிரூபிக்க முடியாது என்பது. படைப்புக் கொள்கையை நோக்கி யாரும் கேள்விகளை எழுப்பிவிடக் கூடாது என்பதற்காகவே பரிணாமக் கொள்கையின் மீது கேள்விகளை எழுப்புகிறார்கள். குரான் கூறும் படைப்புக் கொள்கை என்ன? மனிதனின் தொடக்கம் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது. அறிவியலின் பார்வையில் அது சரியா? என்பதை அடுத்த பதிவுகளில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக