திங்கள், 12 செப்டம்பர், 2011

ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

மொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி. ஆதி மனித இனம் தோன்றியபோதே மொழியறிவு அவனுக்கு எட்டியிருக்கவில்லை. அவனது பாதுகாப்பற்ற சூழல் இன்னொரு மனிதனிடம் தொடர்பு கொண்டே ஆகவேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு அவன் கண்டு, கற்று, வளர்த்துக்கொண்டது தான் மொழி அதாவது பேச்சு.

இப்போது குரானின் ஒரு வசனத்தைப் பார்க்கலாம்.

ஆதமே அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று சொன்னான். அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது… குரான் 2:33

ஆதம் என்பது அல்லா உருவாக்கிய முதல் மனிதன். தன் படைப்பின் பெருமையை தன் உதவியாளர்களுக்கு (வானவர்களுக்கு – மலக்குகளுக்கு) விளக்கும் வகையில் இந்தக்கதை குரானில் இடம்பெற்றிருக்கிறது. பூமியில் மனிதன் எனும் ஒரு குலத்தை வாழவைப்பதற்காக ஒரு மனிதனை களிமண் கொண்டு அல்லா படைக்கிறான். இதற்கு அவனது உதவியாளர்களில் சிலர் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இதை மறுத்து அல்லா நானே எல்லாம் அறிந்தவன் என்பதை உணர்த்தும் பொருட்டு சில பொருட்களைக் காட்டி இவற்றின் பெயர்களைக் கூறுங்கள் என தன் உதவியாளர்களைக் கேட்கிறான். அதற்கு அவர்கள் அல்லாவாகிய நீ எங்களுக்கு கற்றுத்தராத எதுவும் எங்களுக்கு தெரியாது என்கின்றனர். பின் முதல் மனிதனாகிய ஆதமிடம் இவைகளின் பெயர்களைக் கூறு எனப்பணிக்க அவர் அவைகளின் பெயர்களைக் கூறுகிறார்.

இங்கு கடவுளாகிய அல்லா நடத்தும் உரையாடலைப் புரிந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஆதி மனிதனாகிய ஆதம் பதிலளிக்கிறார், அவரின் பதிலை அல்லாவின் உதவியாளர்கள் கேட்டுப் புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின் படி உலகின் முதல் மனிதன் ஆதம். இவ்வுலகில் அவர் பல்கிப் பெருகி அவரின் வழித்தோன்றல்களே இன்று உலகிலிருக்கும் அனைவரும். அந்த முதல் மனிதனாகிய ஆதமுக்கு பேசும் திறன் இருந்திருக்கிறது. அதுவும் பொருட்களை பிரித்தறிந்து தனிப்பட்ட பெயர்களில் அழைக்கும் அளவுக்கு பேச்சு வளமடைந்திருக்கிறது. ஆனால் இது சரியா? வரலாறு இதை ஒப்புகிறதா? இல்லை.

வரலாற்றில் முதன் முதலில் பேசியவர்கள் எனும் பெருமையை பெற்றிருப்பவர்கள் நியாண்டர்தால் மனிதர்கள். இன்றைய மனிதனான குரோ மாக்னன் இனத்திற்கு முந்திய இனம் நியாண்டர்தால் இனம். தோராயமாக இன்றைக்கு மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்து அழிந்த மனித இனம். இவர்கள் தான் வரலாற்றில் முதன் முதலில் பேசிய இனம் என்பதை இரண்டு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். முதலாவது, இஸ்ரேலில் கெபாரா எனும் இடத்திலுள்ள கார்மேல் மலைக் குகையில் யோயல் ராக் எனும் மானுடவியலாளரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டையோட்டில், தற்போதைய மனிதனுக்கு தொண்டையில் நாக்கின் சதையோடு இணைந்திருக்கும் ஹயாய்ட் எனும் சிற்றெலும்பும் காணப்பட்டது. தற்போதைய ஹயாய்ட் எலும்புக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். இரண்டாவது, பிரான்ஸில் லாஹினா எனும் இடத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன, அதில் மயிரடர்ந்த மிகப்பெரிய மாமதம் (உருவில் பெரிய யானை) போன்ற விலங்குகளின் எலும்புகளும் இருந்தன. இதுபோன்ற பெரிய விலங்குகளை திட்டமிட்டு வசிக்கும் இடத்திற்கு அருகில் விரட்டிவந்து வேட்டையாடியிருக்க வேண்டுமென்றால் எண்ணிக்கையில் அதிகமான மனிதர்கள் கூடியே செய்திருக்க முடியும். எனவே அந்த இனம் ஒருவகையில் பேசியிருக்க வேண்டும் என யூகிக்கிறார்கள். அவர்களும் கூட நம்மைப் போல் மொழி பேசியிருக்க முடியாது. ஆ, ஊ, ஈ போன்ற வல்லொலிகளையே இனம் பிரித்து மாற்றியோ சேர்த்தோ ஒருவிதமான ஒலிகளை எழுப்பி தமக்குள் எண்ணப் பரிமாற்றங்களை நடத்தியிருக்க வேண்டும்.

ஆதி மனித இனங்களான ஆஸ்டிரேலோபிதஸின், ஹெபிலைன், ஹோமோ எரக்டஸ் போன்ற இனங்களை அடுத்து தான் ஹோமோ செபியன் நியாண்டர்தாலிஸ் எனும் நியாண்டர்தால் மனிதர்கள் வருகிறார்கள், இதன் பிறகுதான் குரோ மாக்னன் எனும் தற்போதைய மனித இனமான ஹோமோ செபியன் செபியன்ஸ் வருகிறது. ஆக ஆதி மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துதான் மனிதன் பேசவே தொடங்கியிருக்கிறான். ஆனால் குரான் கூறுகிறது படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் பேசினார் என்று. குரானில் அந்த வசனத்திற்கு மேல் விளக்கமில்லை, அல்லா வந்து அறிவியல் கூறப்போவதில்லை. எனவே இஸ்லாமியர்கள் தான் இதற்கு விளக்கம் தரவேண்டியவர்கள்.

இப்போது குரானின் இன்னொரு வசனத்தைப் பார்க்கலாம்,

பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்கவேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டிற்று, அவர் “அந்தோ! இந்த காகத்தைப் போல் கூட நான் இல்லாதாகிவிட்டேனே! அப்படி இருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே” என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார். குரான் 5:31

பூமியில் நிகழ்ந்த முதல் மரணமே கொலைதான் என்று குரான் இந்த வசனத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறது. ஆதி மனிதனான ஆதமின் மகன்களில் இருவர் தொடர்பான வசனம் இது. இருவரும் அல்லாவுக்கு வணக்கம் செய்கின்றனர் (பலியிடல்?) அதில் ஒருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மற்றொருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ஏற்றுக்கொள்ளப்படாதவர், ஏற்றுக்கொள்ளப்பட்டவரை அடித்துக்கொலை செய்து விடுகிறார். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்த போதுதான் அல்லா ஒரு காகத்தை அனுப்பி அதன் மூலம் பிணத்தை அடக்கம் செய்யும் முறையை கற்றுக்கொடுக்கிறார். இப்படிப் போகிறது அந்தக் கதை.

இந்த வசனத்தின் மூலம் நிறைய வியப்புகள் நமக்கு கிடைக்கின்றன. ஆதி மனிதர்கள் உயிர்பற்றி அறிந்திருக்கிறார்கள். ஒருவனை கொலை செய்துவிடமுடியும் அதாவது செயற்கையாக அவன் உயிரைப் போக்குவதன் மூலம் அவனை முடக்கிவிட முடியும் என்பது தெரிந்திருக்கிறது. தாக்கினால் அவன் உயிர் அவனைவிட்டு நீங்கிவிடும் என்பது தெரிந்திருக்கிறது. வெற்றி தோல்வி பற்றி தெரிந்திருக்கிறது. இவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஈமச்சடங்கை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உலகின் முதல் மரணம் அல்லது முதல் கொலையின் பிறகு மனிதன் ஈமச்சடங்கைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள்.

ஈமச்சடங்கு என்பது இறந்த மனிதர்கள் மீண்டும் வருவார்கள் அல்லது உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது, ஆன்மா திரும்பி வரும் போது உடல் பத்திரமாக இருக்க வேண்டும் எனும் நினைப்பில் உடலை பாதுகாக்கும் வழிமுறையில் வந்த சடங்குமுறை. இந்த முறையை மனித இனம் தோன்றி வெகு காலத்திற்கு பிந்திய மனிதர்களே கைக் கொண்டிருந்தனர். சீனாவில் சௌகௌடியன் பகுதியில் ஆய்வை மேற்கொண்டிருந்த டேவிட்சன் பிளேக் அவரைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் வெய்டன் ரேய்ஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதில் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த (பீகிங் மனிதர்கள் என்று பெயரிடப்பட்ட) மனிதர்கள் குறித்து உலகிற்கு தெரிவித்தனர். இவர்கள் மனித மாமிசத்தை உண்டவர்கள் என்பதையும் தம் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதாவது இவர்கள் இறந்த மனிதனுக்கு ஈமச்சடங்கு செய்யவில்லை மாறாக தின்றிருக்கிறார்கள்.

ஈமச்சடங்கு செய்வதையும் முதலில் நியாண்டர்தால் மனிதர்களே செய்திருக்கின்றனர். இஸ்ரேலின் டாபுன், ரஷ்யாவின் டெஷிக்டாஷ் போன்ற பகுதிகளில் நியாண்டர்தால்கள் ஈமச்சடங்கு செய்ததற்க்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆக வரலாற்றில் முதலில் ஈமச்சடங்கு செய்தவர்களும் நியாண்டர்தால்களே.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு குரான் வசனங்களும் அதன் உள்ளீட்டில் அறிவியலோடு முரண்படுகின்றன. ஆதிமுதல் மனிதனிலிருந்து மனிதர்களுக்கு மொழியறிவு இருந்தது என்பதும், ஆதில் முதல் மனிதர்களிலிருந்தே ஈமச்சடங்கு நடைமுறையிலிருந்தது என்பதும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் பொய் என்று தெரியவருகிறது. இறைவன் என இஸ்லாமியர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு உள்ள ஒரு ஆற்றல்தான் முகம்மதுவுக்கு குரானை கொடுத்தது என்றால் இதுபோன்ற பிழையான தகவல்கள் குரானில் இடம்பெற்றிருக்கக் கூடாது. எனவே குரானை முகம்மது தன்னுடைய தேவை கருதி ஆக்கம் செய்துவிட்டு அதன் நம்பகத்தன்மைக்காக அந்நேரத்தில் மக்களால் வணங்கப்பட்டுவந்த அல்லா எனும் கடவுளை சீர்திருத்தி பயன்படுத்திக்கொண்டார் என்பது தெளிவாகிறது. அன்று முகம்மதுவுக்கு தொல்லியல் குறித்த அறிவு இல்லை என்பதில் தவறொன்றுமில்லை, ஆனால் இன்று…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக