செவ்வாய், 22 நவம்பர், 2011

கடவுள் என்றொரு மாயை ... 4

ஜெபம் / தொழுகை / வேண்டுதல்கள் கேட்கப்படுகின்றனவா? - ஒரு அறிவியல் சோதனை:

முதன் முதல் இதைப் பற்றிய ஒரு முயற்சியை மேற்கொண்டது Francis Galton. இவர் டார்வினின் (ஒன்றுவிட்ட!?) சகோதரர். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எல்லா கோயில்களிலும் அந்த நாட்டின் அரச குடும்பத்தினருக்காக மக்கள் அனைவரும் ஒன்றாய் வேண்டுவது வழக்கம். மற்ற சாதாரண மக்களுக்கு அவர்களின் உற்றார் உறவினர்கள் மட்டுமே வேண்டுவார்கள். அப்படியானால், அரச குடும்பத்தினர் மற்ற சாதாரணர்களை விடவும் திடகாத்திரமானவர்களாக, ஆரோக்கியத்தோடு இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அப்படியேதும் இல்லை.

வேறு வேறு நிலங்களில் நின்றுகொண்டு அங்குள்ள பயிர்களுக்காகவும் ஜெபித்தார். ஆனால் அந்தப் பயிர்கள் ஜெபிக்கப்படாத பயிர்களை விடவும் அதிக விளைச்சல் எதுவும் தரவில்லை!


சமீபத்தில் 2006-ம் ஆண்டு ஒரு அறிவியல் சோதனை மேற்கொள்ளப் பட்டது: H.Benson et al. "Study of the therapeutic effects of intercessory prayer (STEP) in cardiac bypass patients". American Heart Journal151: 4, 2006, 934 - 42. நடத்த பொருளுதவி செய்தது மதச்சார்புள்ள Templeton Foundation.
விளையாட்டல்ல; இதற்காக செலவிடப்பட்ட காசு: 2.4 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்!

மூன்று குழுக்களாக நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; மொத்தம் ஆறு மருத்துவ மனைகளிலிருந்து 1802 நோயாளிகள்; எல்லோருமே coronary bypass surgery செய்து கொண்டவர்கள். ஒரு குழுவிற்காக கூட்டு வழிபாடு நடந்தது (experimental group); இன்னொரு குழுவிற்கு(control group)அப்படி ஏதுமில்லை. யார் யாருக்காக வழிபாடு நடக்கிறதென்பது நோயாளிகளுக்கோ, மருத்துவர்களுக்கோ,யாருக்குமே தெரியாது. வழிபாடு நடத்துபவர்களுக்கும் கூட நோயாளிகளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒவ்வொரு நோயாளியின் இனிஷியலும் முதல் பெயரும் மட்டுமே. (இந்த ரெண்டை வச்சே கடவுள் சரியான நோயாளியைக் கண்டுபிடித்துவிட மாட்டாரா என்ன!)வழிபாடு நடத்தியவர்கள் வேறு வேறு தொலைவில் உள்ள மாநிலங்களில் உள்ள நம்பிக்கையாளர்கள்.

நோயாளிகளில் மூன்றில் ஒருகுழுவிற்காக வழிபாடு நடந்தது; ஆனால் அவர்களுக்கு அது தெரியாது.(Experimental Group). இரண்டாவது குழுவிற்காக வழிபாடு ஏதுமில்லை; அவர்களுக்கு அது தெரியாது. (Control group). மூன்றாவது குழுவிற்காக வழிபாடு நடந்தது; அது அவர்களுக்கும் தெரியும். முதலிரண்டு குழுவும் ஜெபத்தின் / தொழுகையின் தாக்கம் குறித்து அறிய. மூன்றாவது குழு ஜெபத்தால் ஏற்படக்கூடிய மன-உடல் பாதிப்புகளைக் கண்டு கொள்ள.

RESUTLS & DISCUSSION !!

மூன்று குழுக்களுக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமுமில்லை என்பதே American Heart Journal-ன் ஏப்ரல் 2006-ல் வந்த முடிவு.

சில நோயாளிகளுக்கு மட்டும் தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பது தெரியும். இதில் intersting ஆன விஷயம் என்னவென்றால், தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பதைத் தெரிந்திருந்த நோயாளிகள் மற்ற நோயாளிகளை விடவும் அதிகமான உடல் கேடுகளுக்கு உட்பட்டார்கள். ஒருவேளை அவர்களிடம் எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்பட்ட அதீதமான டென்ஷனும் காரணமாக இருக்கலாமோ!? ஒரு ஆராய்ச்சியாளர், 'பொதுவழிபாடு நடத்த வேண்டிய அளவிற்கு தங்கள் உடல் நிலை மோசமாக இருக்கிறதோ' என்ற அச்ச உணர்வுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.

கேலியும் கிண்டலும் செய்யப்படுவதற்கான ஒரு ஆராய்ச்சிதான் இது. அதுபோலவே நடக்கும்போதும் நடந்து முடிந்த போதும் பலவிதமாக இந்த ஆராய்ச்சி கேலி செய்யப்பட்டது. அதைப் போலவே முடிவுகள் தெரிந்த பிறகு பலவித சால்ஜாப்புகள் / காரண காரியங்கள் தரப்பட்டன. கடவுள் நியாயமான வேண்டுதல்களை மட்டும்தான் கேட்பார் (Oxofd theologian: Richard Swinburne). Swinburne ஏற்கெனவே ஹிட்லரால் யூதர்கள் கொல்லப்பட்டதுகூட ஒரு விதத்தில் நல்லது என்று சொன்னவர். இவர் மட்டும் இல்லை; வேறு சில மத நம்பிக்கையாளர்களும் இந்த சோதனை முடிந்த பிறகு 'ச்சீ .. சீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போன்ற கருத்து முத்துக்களை உதிர்த்தார்கள். ஆனால், ஒரு வேளை இந்தச் சோதனையில் வழிபாடுகளுக்கு வலு உண்டு என்பதுபோன்ற முடிவு கிடைத்திருந்தால், இதே நம்பிக்கையாளர்கள் அவைகளை அப்போது சும்மா விட்டிருந்திருப்பார்களா? (91)

*

புத்தகத்தில் அடுத்த பகுதி: chapter 3: ARGUMENTS FOR GOD'S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக