செவ்வாய், 29 நவம்பர், 2011

உலகப் பகுத்தறிவாளர் - ஏரியன் ஸெரீன்

 

லண்டன் பேருந்து விளம்பரப் புகழ்  ஏரியன் ஸெரீன்
உலகப் பகுத்தறிவாளர்களிலேயே தனித்த சிறப்பான இடம் தந்தை பெரியாருக்கு உண்டு. ஏனைய நாட்டுப் பகுத்தறிவாளர்கள் அனைவருமே தங்களின் கருத்துகளை ஏடுகளில் எழுதினர். நூல்களில் பதிவு செய்தனர். மண்டபங்களில் கூட்டப்பட்ட சிறு கூட்டத்தினர் மத்தியில் விளக்கினர். இவை அத்தனையையும் செய்த பெரியார், தம் கொள்கைகளை விளக்கி ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் மத்தியில் பேசினார். கொள்கைகளைப் பரப்புவதற்கான இயக்கத்தைத் தோற்றுவித்தார். தம் காலத்திற்குப் பிறகும் கொள்கைப் பரப்பல் நடைபெற்றிடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்தார்.
அதன் விளைவாக அவர் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார். அவரின் கருத்துகள் இன்றளவும் புதிய புதிய பற்றாளர்களையும் பின்பற்றுவோர்களையும் கொண்டிருக்கிறது. இந்நிலை அமெரிக்காவின் இங்கர்சாலுக்குக் கிடைக்காதது. இங்கிலாந்தின் சார்லஸ் பிராட்லாவும், பெர்ட்ரண்ட் ரசலும் பெறாதது.
மற்ற மற்ற பகுத்தறிவாளர்களுக்கும் கிட்டாத நிலை. ஆனாலும்கூட, அந்நாட்டு மக்கள் படித்தவர்களாகவும், சிந்திப்பவர் களாகவும் இருக்கின்ற காரணத்தால் பகுத்தறிவின் பயனை உணர்ந்தும் செயல்பட்டும் வருகின்றனர். ஆனாலும்-கூட, மவுடிகப்போக்கு மதப்பற்றும் வெறியும் வெகுவாக மண்டிக் கிடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
மேலை நாடுகளில்...
கிறித்துவர்களாக இருந்தால்தான் கதிமோட்சம், இல்லையேல் கடும் நரகம்தான், கடைசிவரை எரியும் நெருப்பில் எரிந்து கொண்டேதான் இருக்க வேண்டும் என்கிற பரப்புரை கிறித்துவ மத நிறுவனங்களால் செய்யப்படுகிறது. யேசு இருக்கிறார், யேசு ஜீவிக்கிறார், யேசு அழைக்கிறார், யேசு குணப்படுத்துகிறார் என்று புளுகும் மதப் பிரச்சாரகர்கள் பில்லி கிரகாம் போன்றவர்கள் அங்கும் வளர்ந்து கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மூர் டிஜிஎஸ் தினகரன் கோடிகோடியாகப் புளுகியே சம்பாதித்ததைப்போல சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான விளம்பரங்கள், பரப்புரைகள் ஏராளம். அவற்றோடு ஒப்பிட்டால் பகுத்தறிவுப் பரப்புரையோ, விளம்பரமோ ஒன்றுமே நடைபெறுவதில்லை என்றே கூறலாம். அதனைச் செய்திடும் ஆர்வமுள்ள அமைப்பு இருந்தாலும் எடுத்துச் செய்திடும் தொண்டர்கள் இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்.
தூண்டிவிட்ட சிறு பொறி
கிறித்துவ மதத்தின் பெருமை பேசும், மிரட்டல் தொனியில் அமைந்த வாசகங்களை விளம்பரம் செய்த ஒரு மதத் தொண்டர் அமைப்பின் செயல் லண்டன் நகரின் பகுத்தறிவாளர்களிடையே சிறு பொறியைக் கிளப்பியது. மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பேருந்துகளில் விளம்பரப் பதாகைகளை வைத்தது. கிறித்துவராக இல்லாதவர்கள் நரகத்தில்தான் உழல வேண்டும், எரியும் நெருப்பு ஏரியில் கடைசிவரை எரிந்து கொண்டுதான் கிடக்க வேண்டும் என்கிற வாசகங்களை அதில் எழுதி வைத்தது.
சொர்க்கலோகங்களைப் பட்டியலிட்டுத் தத்தம் மதங்களைப் பின்பற்றுமாறு தூண்டில் போடுவதென்பது உலகம் முழுக்க எல்லா மதங்களுக்குமே வாடிக்கை. இந்துவாக இல்லாவிட்டால் வைகுந்தம் இல்லை, கிறித்துவராக இல்லாவிட்டால் சொர்க்கம் இல்லை, இசுலாமியனாக இல்லாவிட்டால் சுவனம் இல்லை என்ற வகையில் ஆசை காட்டல்கள் ஒரு பக்கம். மறு பக்கத்தில் அப்படி இல்லாவிட்டால் நரகத்தீதான் என எல்லா மதங்களுமே மிரட்டல்கள்தான், பிளாக் மெயில்கள்தான். இத்தகைய பிளாக் மெயிலை விளம்பரம் செய்த காரணத்தால்தான் அதே லண்டன் நகரப் பேருந்துகளில் பகுத்தறிவு வாசகங்களை எழுதி விளம்பரம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
இத்தகைய சிந்தனைப் பொறியில் தூண்டப்பட்டுச் செயலாற்றியவர் 23 வயதே ஆன ஏரியன் ஷெரீன் எனும் இளம்பெண். கிறித்துவத்தின் நூற்றுக்கணக்கான பிரிவுகளில் ஒன்றான UNITARIAN UNIVERSALIST எனும் மதத்தைச் சார்ந்த தந்தைக்கும் பார்சி மதத் தாய்க்கும் பிறந்த பெண். 03-.07.1980இல் இங்கிலாந்தில் பிறந்து தம் 21 வயதில் இதழாளராகப் பணியைத் தொடங்கி நகைச்சுவை எழுத்தாளராக விளங்கி வருபவர். பேருந்துகளில் பகுத்தறிவுக் கருத்துகளை விளம்பரம் செய்த பெரும் காரியத்தின் கர்த்தா. அதன்மூலம் அய்ரோப்பிய நாடுகளில் அதிர்ச்சி அலைகளை எழும்பச் செய்தவர். வானொலி, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நடத்துபவர். கடவுள் ஒரு பொய் நம்பிக்கை எழுதிய ரிச்சர்டு டாகின்ஸ் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி போலவே, இவரது நிகழ்ச்சிகளும் வரவேற்பைப் பெற்றன என்பது இளவயதுக்காரரான இவரது பெரும் சாதனைதான்.
எதிர்வினைக் கடவுள் மறுப்பு
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு எனும் இயற்கை விதிக்கேற்ப, மதப்பிரச்சாரகர் வைத்த விளம்பரப் பதாகை - பகுத்தறிவுப் பிரச்சாரப் பதாகை வைத்திடும் எண்ணத்தை இவருக்குள் ஏற்படுத்தியது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஆகிவிட்டது. லண்டன் மாநகரில் பயணிக்கும் பேருந்துகளில் 30 பேருந்துகளில் மட்டும் விளம்பரம் செய்து நான்கு வாரங்கள் மட்டும் விளம்பரம் செய்வதற்கு 5,500 பவுண்ட் பணம் தேவைப்படும் என மதிப்பிட்டார். இத்தொகையை வசூலிப்பதற்கு பிரிட்டிஷ் மனித நேயச் சங்கம் (BRITISH HUMANIST ASSOCIATION) உதவியது. இந்த அளவுக்குத் தொகையை வசூலித்துவிட்டால், அதே அளவு தொகையைத் தனிப்பட்ட முறையில் தாம் நன்கொடையாகத் தருவதாக ரிச்சர்டு டாகின்ஸ் அறிவித்து ஊக்கப்படுத்தினார்.
அமோகமாக ஆதரவு
நன்கொடை வசூல் தொடங்கிய சில நாள்களிலேயே (21-_10_2008) 11,000 பவுண்ட்கள் வசூலாகிவிட்டது. அதன்பிறகு மூன்றே நாள்களில் அதாவது 24_10-_2008இல் வசூலான தொகை ஒரு லட்சம் பவுண்ட்கள் ஆகும். வசூலுக்கான இறுதிநாளான 11-04-2009 முடிவில் வசூலாகியிருந்த தொகை 1,53,516 பவுண்ட்கள் என்றால் பிரிட்டன் மக்கள் இதன் அவசியத்தை எந்த அளவுக்கு உணர்ந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
800 பேருந்துகளில் கடவுள் மறுப்பு
30 பேருந்து போதும் எனத் திட்டமிடப்பட்ட தனது, 6-1-2009 இல் தொடக்க நாளன்று லண்டன் மாநகரத்தில் மட்டுமல்லாது பிரிட்டன் முழுவதுமாக 800 பேருந்துகளில் எனச் செயல்படுத்தப்பட்டது. அத்தோடு, புகழ்பெற்ற நாத்திகர்களின் கருத்துகளை பதாகைகளில் எழுதி பாதாள ரயில் நிலையங்களில் வைத்தனர். லண்டன் நகரின் ஆக்ஸ்போர்டு தெருவிலும் மத்திய லண்டனிலும் மிகப் பிரம்மாண்டமான LCD திரைகள் அமைத்து இவ்வாசகங்களை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தனர்.
பெரும்பாலும், கடவுள் இல்லை. எனவே கவலையை விடு; வாழ்க்கையை அனுபவி (THERE’S PROBABLY NO GOD. NOW STOP WORRYING AND ENJOY YOUR LIFE) என்பவைதான் வாசகங்கள். வாசகங்கள் படித்தவர்களின் மனதில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும் 326 பேர்கள் வாசகங்களைப் பற்றிப் புகார்கள் கூறியிருந்தனர். விதிமுறைகளுக்கு முரணானது எனும் கருத்துப்பட கிறித்துவர் குரல் (CHRISTIAN VOICE) எனும் அமைப்பின் புகார் இருந்தது. ஆனால், விதிமீறல் எதுவும் இல்லை என்று தொடர்புடைய துறை அறிவித்துவிட்டது.
பிஷப் எதிர்ப்பு
வழக்கமாக எதிர்பார்த்ததைப் போலவே. கான்டர்பரி ஆர்ச் பிஷப் ஆக இருந்த ஜியார்ஜ் காரி என்பவரும் பீட்டர் பிரைஸ் எனும் BISHOP OF BATH AND WELLS பிரிவின் பிஷப்பும் எதிர்ப்புத் தெரிவித்தனர். வாசகங்கள் எழுதப்பட்ட பேருந்தை ஓட்டவேண்டிய ஓட்டுநர் ஒருவர் மறுத்துவிட்ட நிகழ்ச்சியும் நடந்தது. வேறு ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் சென்றாரே தவிர, வாசகம் அகற்றப்படவில்லை. நிச்சயமாக கடவுள் இல்லை என்றே போட்டிருக்கலாம் என்று நாத்திகர்கள் கூறினர். என்றாலும், பெரும்பாலும்  எனும் சொல் சேர்க்கப்பட்ட காரணத்தால் விளம்பர விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்பதால் நாடு முழுவதும் அது அனுமதிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மறுப்புக்கு எதிர்ப்பு மடத்தனம்
மதவெறியர்கள் சும்மா இருப்பார்களா? எதிர் விளம்பரம் போட்டார்கள். நிச்சயமாகக் கடவுள் உண்டு. கிறித்துவக் கட்சியில் சேருவீர்! வாழ்க்கையை அனுபவிப்பீர் என்று ஒரு விளம்பரம். பைபிளில் வரும் முட்டாள்கள் தம் மனதுக்குள் கடவுள் இல்லை என்று சொல்லிக் கொள்வர் என்பது மற்றொரு விளம்பரம். கடவுள் உண்டு, நம்புங்கள். கவலைப்படாமல் வாழ்க்கையை அனுபவியுங்கள் என்பது இன்னொரு விளம்பரம். தந்தை பெரியார் 1967 இல் கடவுள் மறுப்பு வாசகங்களைத் தந்து அதனைப் பொதுஇடத்தில் கல்வெட்டாகப் பதிவு செய்த சம்பவம் திருச்சி தேவர்ஹால் அருகில் நடந்தது.
எதிர்வினை என்ற பெயரில் பக்தர்கள் இல்லை என்பதற்குப் பதில் உண்டு என்று எழுதினார்கள். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற பெரியாரின் வாசகத்திற்குப் பதில், கடவுளைக் கற்பித்தவன்அறிவாளி என்று எழுதி வைத்தனர். அந்த இடத்தில் கூட்டம் போட்டுப் பேசிய தந்தை பெரியார் கூறினார், கடவுள் தானாகத் தோன்றியதல்ல, முட்டாள் மனிதனால் கற்பிக்கப்பட்டது என்று நான் கூறினால், இல்லை, இல்லை அறிவாளி மனிதனால் கற்பிக்கப்பட்டது எனக் கூறிகிறீர்களே! அட முட்டாள்களே, கடவுள் கற்பிக்கப்பட்ட கற்பனையான ஒன்று என்பதை நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்களே! எனக் கூறினார். அதேபோலத்தான் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் பக்தர்கள் பாமரத்தனமாகவே இருக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக