சனி, 26 நவம்பர், 2011

மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை

ஆத்திகன்: மதங்கள் கடவுள் களால் உண்டாக்கப்பட்டவை
பகுத்தறிவுவாதி: அல்ல; அவை மனிதர்களால் உண்டாகி யவை.
பகுத்தறிவுவாதி: மதங்கள் எத்தனை உண்டு?
ஆத்திகன்: பல மதங்கள் உண்டு
பகுத்தறிவுவாதி: உதாரணமாகச் சில சொல்லும்.
ஆத்திகன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்தமதம், கிருத்துவ மதம், முகமது மதம், சீக் மதம், பார்சி மதம், சவுராட்டிர மதம் முதலியவைகளும் இவற்றுள் பல உட்பிரிவுகளும் உண்டு.
பகுத்தறிவுவாதி: கடவுள்கள் எத்தனை உண்டு?
ஆத்திகன்: ஒரே கடவுள்தான் உண்டு
பகுத்தறிவுவாதி:  இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை
ஆத்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான்.
பகுத்தறிவுவாதி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன?
ஆத்திகன்: மனிதன். கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்குப் பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.
பகுத்தறிவுவாதி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன்?
ஆத்திகன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக இருக் கிறது. பெரியார் மதங்களைக் கண்டு பேசிய பிறகு பதில் சொல்லுகிறேன்.
மத விவரம்
பகுத்தறிவுவாதி: அதுதான் போகட்டும். இந்துமதம் என்பது என்ன? அது கடவுளால் எப்படி ஏற்படுத்தப்பட்டது.
ஆத்திகன்: இந்து மதம் என்றால் வேதமதம் என்றும் பெயர்.
பகுத்தறிவுவாதி: வேதம் என்றால் என்ன?
ரிக்-யசுர்
ஆத்திகன்: ரிக், யசுர், சாமம், அதர்வணம் என 4 வேதம் உண்டு. அவ்வேத முறைதான் இந்து மதம் என்பது.
பகுத்தறிவுவாதி: இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப் பட்டவை?
ஆத்திகன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை
பகுத்தறிவுவாதி: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்வை என்று யார் சொன்னார்கள்?
ஆத்திகன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லுகிறது. வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது.
பகுத்தறிவுவாதி: இதற்கு ஏதாவது சாட்சியோ ஆதாரமோ உண்டா?
ஆத்திகன்: வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதார மோ, சாட்சியோ கேட்பது என்றால் அது பாபமான காரியமேயாகும்.
பகுத்தறிவுவாதி: அது பாபமாக இருக்கலாம்.  ஆனால் ஆதாரம் ருசு இல்லாமல் ஒன்றை ஒருவர் நம்புவது என்றால் அது குற்றமாகாதா?
ஆத்திகன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கின்றது. பெரியவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
பகுத்தறிவுவாதி: புத்தமதம் என்றால் என்ன?
ஆத்திகன்: புத்தர் என்கிறவர் காலத்தில் ஏற்பட்டது.
பகுத்தறிவுவாதி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆத்திகன்: புத்தர் என்கிறவர் சொன்னதாகச் சொல்லப் படும் வாக்குகள்தான்.
பகுத்தறிவுவாதி: புத்தர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?
ஆத்திகன்: புத்தர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக் கிறது. அன்றியும் அதில் இன்றைய நிலையில் மற்ற மதங் களைப் போலக் கடவுள், கடவுள் வாக்கு, பல அற்புதங்கள் முதலியவை இல்லை என்பதோடு ஆலோசனைக்கும், அறிவுக்கும் பொருத்தமானதை எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளி விடுவதில் பாவமோ, குற்றமோ, கடவுள் தண்டனையோ இல்லை. ஆகையால், அதற்கு ஆதாரம் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ப-தி: சரி மிக நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள். அப்படியானால் அம்மதத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.
ப-தி: கிருத்துவ மதம் என்பது என்ன?
ஆ-ன்: கிருத்துவ மதம் என்பது கிருத்துவால் சொல்லப்பட்ட கொள்கை.
ப-தி: அது எது?
ஆ-ன்: பைபிள்
ப-தி: கிருத்து என்பவர் யார்?
ஆ-ன்: கிருத்து கடவுள் குமாரர்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: கிருத்து சொல்லி இருக்கிறார்
ப-தி: ஒருவர் தன்னை இன்னான் என்று நிரூபிக்க அவரது வாக்கு மூலமே
போதுமா?
ஆ-ன்: ஏன் போதாது?
ப-தி: அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம் தான் கடவுள் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினைதான் பெரியவர் களைக் கேட்க வேண்டும்!
முகமதிய மதம்
ப-தி: முகமதிய மதம் என்றால் என்ன?
ஆ-ன்: முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகள்.
ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆ-ன்: குரான் என்னும் வாக்கியம்.
ப-தி: அது யாரால் சொல்லப்பட்டது?
ஆ-ன்: கடவுள்களால் முகம்மது நபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: நபி அவர்கள் சொன்னார்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன், வேறுபல சாட்சியங்களுமிருக்கின்றன.
ப-தி: வேறு பல சாட்சியங்கள் என்பது எவை?
ஆ-ன்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்கள் வாக்கு இருக்கிறது.
ப-தி: அவை உண்மை என்பது ஆதாரம் என்ன?
ஆ-ன்: அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்ப வேண்டியது தான்.
ப-தி: மற்ற மதங்களும் இதுபோல் தானே?
ஆ-ன்: ஆம்!
ப-தி: அனேகமாக கடவுள் வாக்கு. கடவுளால் அனுப்பப் பட்டவர்கள். கடவுள் அவதாரங்கள் என்பவர்கள் அவர் களது வாக்குகள் சம்பந்தப்பட்ட மதங்கள் ஆகிய எல்லோரையும், ஒரே கடவுள் சொன்னார் சிருட்டித்தார் என்பதும் நியாயமாகுமா? ஆதலால் இதுமாதிரி மதம் என்பது வியாபாரம் மதகர்த்தர் வேதம் புராணம் என்பவை  வியாபாரச்சரக்குகள் என்பது பகுத்தறிவுக்காரர் களுக்கும் படும் விடயம். இது ஒரு சமயம் தப்பாக இருந்தாலும் இருக்கலாம்.
ஆ-ன்: ஆம் எல்லாம் இப்படிப்பட்டதுதான்.
ப-தி: அப்படியிருக்க இவ்வளவு மதங்களையும் ஒரே கடவுள் உண்டாக்கி இருப்பார் என்று நீரே நம்புகிறீரா? அதனால் தான் இவை ஒவ்வொரு சீர்திருத்தக்காரர்களால் அறிவாளி களால் முன்பின் ஆராய்ந்து பார்த்து மனித சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கவலை கொண்டவர் களால் (மனிதர்களால்) உண்டாக்கப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமல் ஒரே கடவுள் இருந்து அவரே இவ்வளவு மதத்துக்கும், மதகர்த்தருக்கும் ஆதார புருடர் என்றால் அப்போது கடவுளின் மேன்மைக் குணம் பாதிக்கப்படவில்லையா? யாரோ சில மனிதர் களுக்கு மேன்மை கொடுப்பதற்காகக் கடவுளை முட்டா ளாக்குவதும் பல கடவுள்களைச் சிருட்டிப்பதும் பல வேதங் களைச் சிருட்டிப்பதும் சரியா?
நாம் இருவரும் இவ்விசயங்களில் ஒரே கருத்துடையவர் களாகி இவை எல்லாம் சற்று நேரத்துக்கு உண்மை என்றே ஒப்புக் கொள்வோம். அதாவது இந்துமதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்பதையும், வேதம் கடவுள் வாக்கு என்பதையும், முகமது நபி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும், குரானையும் மற்ற மதத்தையும் ஒப்புக் கொள்வோம். ஆனால் அவை எல்லாம் இன்று ஒன்றாய் இல்லாமல் வேறு அபிப்பிராயங்களாகவும் சில முரணானவையாகவும்  ஒரு மத தத்துவத்துக்கும் மற்றத் தலைவருக்கும் மாறாக இருப்பானேன்? ஒன்றுக்கொன்று இன்றைய அனுபவத்தில் அதிருப்தி: வெறுப்பு துவேசம் உடையவைகளாக இருப்பானேன்?
ஆ-ன்: இதுவும் சிரமமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களை கேட்க வேண்டும்.
ப-தி: சாவகாசமாய்ப் பெரியவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்து கொள்வது?
ஆ-ன்: இவை எல்லாம் உண்மை என்றோ அல்லது உண் மை அல்லது என்றோ எப்படியோ இருக்கட்டும். அதற்கு ஆக நாம் கவலைப்பட வேண்டா. உலகில் மனிதன் உயி ருள்ளவரை நல்லது எண்ணு நல்லது செய் அவ்வளவு தான்.
ப-தி: நல்லது எது? தீயது எது? என்பதற்கு அளவு கருவி என்ன?
ஆ-ன்: இது மிகவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பெரியவர்கள் நடந்து காட்டியது, சொல்லியிருப்பது இவைகளைக் கொண்டு தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
ப-தி: பெரியவர் யார் என்பதற்கு அளவு கருவி என்ன? ஒருவர் ஒருவரைப் பெரியவர் என்றால் மற்றொருவர் அவரை ஒப்புக் கொள்வதில்லை. அவருக்கு மாறாக அல்லது வேறொன்றைச் சொன்னவர்களைப் பெரியவர் என்கிறான் இதற்கு ஒரு பரீட்சை குறிப்பு வேண்டுமே?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் உம்முடைய சமாதானம்தான் என்ன சொல்லு பார்ப்போம்.
ப-தி: என் சமாதானம் என்ன? நான்தான் மதத்துவேசி. பார்ப்பனத்துவேசி, நாத்திகன், சுயமரியாதைக்காரன் என்றெல்லாம் பெயர் வாங்கினவனாய் விட்டேனே, என் பேச்சை யார் கேட்பார்கள். நீர் ஆத்திகராயிற்றே. உமக்குத் தெரியுமென்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத் தில் சதா குடிகொண்டிருக்கிற கடவுள் உணர்த்துவார் என்றும் கருதி உண்மையான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகக் கேட்டேன். நல்ல வேளையாக நீர் பதில் சொல்லாவிட்டாலும் என்னை வையாமல் பெரியவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று சொன் னீரே. அதுவே எனக்கு மிகவும் திருப்தி ஆத்திகர்களில் இப்படிப்பட்டவர்கள் அருமை மிக மிக அருமை: சந்தேகம் கேட்டால் அடி, உதை, நாத்திகன், பிராமண துவேசி, ஆரிய துவேசி என்றெல்லாம் வெறி பிடித்தவர்கள் போல் ஆடுவார்கள். ஆதலால், உம்மைப் பற்றிக் கூட எனக்கு சந்தேகம்தான்.
ஆ-ன்: என்ன சந்தேகம்?
ப-தி: நீர் ஆத்திகரோ என்னவோ என்று.
ஆ-ன்: நான் உண்மையில் ஆத்திகன்தான். அதாவது ஒரு கடவுள் இருப்பார் என்று நம்புகிறவன்.  ஆனால் இத்தனை மதங்களையும், மத கர்த்தாக்களையும், அந்தந்த மதவேதங்களையும், அவையெல்லாம் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதிலும் அவ்வேதக்கதைகள், புராணங்கள் ஆகியவை உண்மை என்பவைகளையும் பற்றி அவ நம்பிக்கை கொண்டவன்தான்.
ப-தி: அப்படியானால் நீர். இருப்பார் என்ற கடவுள் நம்பிக்கையை யார் எந்த ஆத்திகர் இலட்சியம் செய்வார்? ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது ஒரு குறிப்பிட்ட மதகர்த்தா அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் என்பவைகளை ஏற்றுக் கொள்ளாதவர் நம்பாதவர் எல்லோரும் மற்ற மதக் காரனுக்கு நாத்திகனே - நம்பிக்கை யற்றவனே யாவான் நாத்திகம் என்பதும் நம்பிக்கையற்றது என்பதாக எல்லாம் ஆத்திகர்களுக்கும் ஒரே பொருள்தான்.
ஆ-ன்: யாரோ எப்படியோ போகட்டும் எனக்கென்ன? என் புத்திக்கு சரி என்று பட்டதை செய்து விட்டு செத்துப் போகிறேன்.
ப-தி: ஏன் சாகிறீர். உயிருடன்தான் இருமே உமக்கு சரி என்று பட்டதைத்தான் செய்யுமே எனக்கென்ன கவலை? எப்படி இருந்தாலும் ஆத்திகர்கள் வைது கொண்டு தானிருப்பார்கள்.
                                                                                                                                                                       (குடிஅரசு, 20.3.1938)
                                                                                      சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் பெரியார் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக