செவ்வாய், 29 நவம்பர், 2011

ஆத்திகத்தின் சலசலப்புக்கு அஞ்சிவிடுமா நாத்திகம்? யார் அந்தத் தந்தை, யார் அந்தத் தாய்?

 

- பேராசிரியர் ந. வெற்றியழகன்

விழித்தெழு  - என்கிற கிறித்துவ முத்திங்கள் ஏடு 83 மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது.
அது, எத்தனையோ சங்கதிகளை உச்சவரம்பின்றி உளறல் வேலை செய்திருக்கிறது. 2011 ஏப்ரல் - ஜூன் இதழில் பல உடம்பெரிச்சல் உள்ள அரிப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
எல்லாம், நாத்திகம் பற்றித்தான்! எல்லாம் நாத்திகம் பற்றிய ஆத்திகப் பிதற்றல்தான்.
வழக்கம் போல, தனது ஆத்திகப் பரப்புரைக்குச் சில அறிவியலாளர்களின் கருத்துகளை வெளியிட்டுச் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறது.
அவற்றில் சில கட்டுரைகளை மட்டும் எடுத்து வைத்து அவற்றிற்கான மறுப்புகளை நாம் கூறியுள்ளோம்.
பழையது என்ன? புதியது என்ன?
நாத்திகர்கள் என்று கூறப்படுவதைச் சற்று மாற்றிப் புதுவகை நாத்திகர்கள் என்கிறது விழித்தெழு.
நாத்திகர்களுள் புதுவகை நாத்திகர்கள் - பழைய வகை நாத்திகர்கள் என்று இல்லை. பழங்காலத் தில் உள்ளவர்கள் பழைய வகை நாத்திகர்கள். தற்காலப் புதிய காலத்தில் உள்ளவர்கள் புதிய நாத்திகர்கள். அவ்வளவுதான்! பழைய வகையோ, புதுவகையோ அடிப்படையில் அனைவரும் அசைக்க ஒண்ணா நாத்திகர்தாம். புதிய நாத்திகர்களைப் பொறுத்தவரை கடவுள் ஒன்று இல்லவே இல்லை! அவ்வளவுதான் - என்கிறது ஏடு.
பூனைக்குட்டி வெளியே, புரிகிறதா?
இப்பொழுது புரிகிறதா? பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இந்தப் புதுவகை நாத்திகர் என்பவர்கள் யாரென்று இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்குமே?
நம்மைத்தான்! தந்தை பெரியாரின் பின்பற்றாளர்களைத்தான்! நாத்திக நாயகர் தந்தை பெரியார், கடவுள் இல்லவே இல்லை! என்று மட்டுமா சொன்னார். இல்லையே?
அதுமட்டுமா சொன்னார்?
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்!;
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்;
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! இந்த முழக்கங்களை வசதியாக மறைத்துவிட்டது ஏடு. ஏன்? தம்கை,  முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி என்று ஏற்றுக் கொள்ளத் துணிச்சல் இல்லை என்றுதானே பொருள்?
விஞ்ஞானம் விளக்கவில்லையே?
இயற்பியல் வல்லுநரும் எழுத்தாளருமான பால் டேவிஸ், மின்னல், இடி, மழை போன்ற இயற்கை நிகழ்வுகளுக்கு விஞ்ஞானம் அழகாக விளக்கம் அளிக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.
ஆனால், இயற்கைச் சட்டங்கள் ஏன் தோன்றின? என்பதைப் போன்ற ஏராளமான கேள்விகளுக்கு அது தெளிவான விளக்கம் அளிப்பதில்லை! என்று சொல்கிறார்.
வேண்டியதை மட்டும் விளக்கும்
இயற்கைச் சட்டங்கள் என்பதாக எவையும் இல்லை! இயற்கையில் நிகழும் நிகழ்வுகளில் ஓர் ஒழுங்கு முறை இருக்கிறது என்று அறிவியலார் விளக்கம் சொல்வார்களே தவிர அதில் சட்டங்கள் என்று கூறார். சட்டங்கள் என்றால் அவற்றை இயற்றிய ஒருவரோ, பலரோ இருக்கவேண்டுமே? அப்படி எவரும் இல்லவே இல்லையே?
நிகழ்வுகள் ஒரு தொடர்ச்சியாக இயங்குவதை அவர்கள் கண்டுபிடித்து விளக்குவர். மனித இனத்திற்குத் தேவையான விளக்கங்களை மட்டுமே அவர்கள் ஆய்ந்தறிந்து கூறுவர். தேவையற்றவைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதில்லை அறிவியலார்.
நாத்திக ஆத்திகர் ஆனாராமே?
50 ஆண்டுகளாக நாத்திகராக இருந்த ஆண்டனி ஃப்ளூ என்பவர் - விஞ்ஞானம் என்பதன் காரணமாக ஆத்திகர் ஆகிவிட்டாராம். 2007இல் அவர் இப்படி எழுதினாராம். உலகம் அதிநுட்பமான வடிவமைப்பு. இது இருக்கிறதென்றால் அதை வடிவமைத்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதை அன்றாட வாழ்க்கை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
நிரம்பச் சரி
இந்தக் கருத்தை 2 பகுதிகளாகப் பகுத்து ஆய்வோம். அதிநுட்பமான வடிவமைப்புள்ள இந்த உலகைப் படைத்தவர் ஒருவர் வேண்டும் என்பது முதற்பகுதி.
இதனை மிக எளிமையாக ஆராய்வோம்!
அப்பா யாரோ? அம்மா யாரோ?
ஒரு பானையைப் பார்க்கும்போது அதை உண்டுபண்ணிய மண்பாண்டத் தொழிலாளி இருப்பதுபோல, இந்த உலகைக் கண்டதும் அதை உண்டுபண்ணும் ஒரு கடவுள் உண்டு என்பதை நம் அன்றாட வாழ்க்கை காட்டுவது என்னும் உவமை இதற்குப் பொருந்தும்.
இந்தக் கருத்தினைக் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமே? பானையைச் செய்த இந்த மண்பாண்டத் தொழிலாளி இருக்க வேண்டும் என்பதோடு நில்லாமல் அந்தத் தொழிலாளியை உண்டுபண்ண _ பெற ஒரு தந்தை வேண்டுமல்லவா? ஒரு தாய் வேண்டுமல்லவா?
அதுபோல, உலகைப் படைத்த கடவுளுக்கும் ஒரு தந்தை, ஒரு தாய் வேண்டுமல்லவா? யார் அந்தத் தந்தை, யார் அந்தத் தாய்? பதில் கூறட்டுமே? இதுதானே நாம் அன்றாட வாழ்க்கையில் காண்பது?
யார், யார், அவர் யாரோ?
இன்னும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமே? மண்பாண்டத் தொழிலாளிக்கு உடன்பிறப்பு, வாழ்க்கைத் துணைவி, இருப்பது போல அந்தக் கடவுளுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, துணைவி முதலியோர் இருக்கவேண்டுமே? யார் யார், யார் அவர் யாரோ? ஊர் பேர் தெரியாதோ?
அடுத்த பகுதி, அதிநுட்பமான வடிவமைப்புக் கொண்டது உலகாம். இதை வடிவமைத்தவர் ஒருவர் இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் காணும் கருத்துக்குச் சரியான விளக்கத்தைப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஓர் உவமை வாயிலாக விளக்கியுள்ள கருத்தினைப் பார்ப்போமா?
உண்டுபண்ணும் ஒருவன்!
நுட்பமான அமைப்புக் கொண்ட ஒரு கடிகாரத்தைப் பார்த்தவுடன் அதை உண்டுபண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டுமே என்றால், கடிகாரத்தின் அமைப்பினையும் அது எதற்காக வடிவமைக்கப்பட்டது என்பதையும் நாம் தெளிவாக விளக்கிக் கூறமுடியும். அதுபோல, பிரபஞ்ச அமைப்பைத் தெளிவாக விளக்கிக் கூறமுடியாது! அது வடிவமைக்கப்பட்டது ஏன்? எதற்காக? என்று கூறமுடியுமா?
கடிகாரத்தை உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டும் என்றால் கடிகார உற்பத்திக்குக் காரணமான பொருள்களை உண்டுபண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது! - பெரியார்
(குடிஅரசு --  3.5.1936)
இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?
கடவுளுக்கு யார்(எது) காரணம்?
சுருக்கமான ஒரு விளக்கத்தினை மட்டும் நாம் எடுத்துரைக்க விழைகிறோம். அதிநுட்பமான வடிவமைப்புக் கொண்ட உலகு ஒரு காரியம் என்றால், அந்தக் காரியம் தானாக வராது; அதற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா? அதுதான் கடவுள் என்று வாதிடுகிறார்கள். அவர்களுக்கு நமது பதில் இதுதான். யாவற்றிற்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமானால் கடவுளுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?
அநாதியான அவர்!
இதற்கும் ஒரு விடையை ஆத்திகர் வைத்துள்ளனர். கடவுளுக்குக் காரணம் - ஆதி முதல் மூலம் தேவையில்லை! அவர் அநாதியாக (யாரும் உண்டுபண்ணாமல்) தானாகவே இருக்கிறார் என்பதே அவர்களின் விடை. இதற்கும் தந்தை பெரியார் நெற்றியடிப் பதிலைக் கொடுத்துள்ளார். அது இது: காரணமின்றி அநாதி காலமாக கடவுள் இயங்க முடியுமானால் பிரபஞ்சம் எக்காரணமுமின்றி அநாதியாக இயங்க முடியும் - (3.5.1936 - குடிஅரசு)
படைக்கப்பட்டதா இது?
அடுத்து, பிரபஞ்சத்தைப் பற்றி எந்த அளவு அதிகமாகத் தெரிந்து கொள்கிறோமோ, அந்தளவு படைப்பாளரான கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் இந்தப் பிரபஞ்சத்தை ஒரு நோக்கத்தோடு வடிவமைத்தார் என நம்புவோம் என லெனாக்ஸ் குறிப்பிடுகிறார்.
எத்தனை தடவை, எந்த அளவு நாம் சொல்லியழுவது. இந்தப் பேரண்டம் படைக்கப்படவில்லை; படைப்பு என்றால் (Creation) அது ஒரு காலத்தில் இல்லாமல் இருந்து பிறகு ஒருவரா(கடவுளா)ல் படைக்கப்படுவது ஆகும்.
பேரண்டம் அப்படி அன்று; அது என்றும் இருப்பது (Eternal); என்றும் அழியாதது (Everlastur) பேரண்டப் பொருள் அற்றதாகவும் (Energy) ஆற்றல் பேரண்டப் பொருள் (Matter) ஆகவும் நிலைமாறுமே தவிர அழியாதது. எனவே, அதற்கு முதல் அல்லது மூலம் கிடையாது. எனவே, முடிவும் கிடையாது.
அரைத்த மாவை அரைக்கட்டுமா?
என்ன விளக்கம் சொன்னாலும் அதனைச் சற்றும் செவிமடுக்க மாட்டோம்; என்ன விளக்கம் எழுதினாலும், அதனைக் கொஞ்சமும் படிக்க மாட்டோம். ஏற்கெனவே சொன்னதை, எழுதியதை சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டும்தான் இருப்போம் என்பவர்களை நாம் எப்படித் திருத்துவது? அரைத்த மாவை அரைக்கட்டுமா? துவைத்த துணியைத் துவைக்கட்டுமா? என்ற நிலையில் இருப்பவர்கள் இந்த ஆத்திக மே(பே)தைகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக