சனி, 26 நவம்பர், 2011

"ஈஸ்டர் திருநாள்" - இயேசு உயிர்த்தெழுந்தாரா?

இயேசு கி.பி 33-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இறந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கணிக்கின்றனர். வேறு சிலர் இதற்கு மாற்றாக கி.பி 34-ஆம் ஆண்டு இயேசு இறந்திருக்கக்கூடும் என்கிறார்கள். வரலாற்று குழப்பம் ஒருபுறம் இருக்க...
"மத்தேயு, மார்க், லூக்கா, யோவான்" என்னும் நால்வரும் இயேசுவின் வரலாற்றையும், போதனைகளையும் எழுதி நூல்களாக வெளியிடுகிறார்கள். இதில் ´யோவான்´ இயேசுவின் வாழ்க்கையில் இறுதியில் நடந்த நிகழ்வுகளை விரிவாக எழுதி இருக்கிறார்.
இந்நூல்கள் கிபி 65-முதல் 110-க்குள் உட்பட்ட காலகட்டங்களில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இந்நால்வர் எழுதிய நூல்களிலும் பல்வேறு தகவல்களில் குழப்பங்களும், மாற்று கருத்துக்களும் இருந்திருக்கின்றன. இருப்பினும் கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்க சபை, லூத்தரன் சபை, மரபுவழா சபை உட்பட முக்கியத்துவமான அங்கத்தவர்களால் அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் சிறப்பு பெற்றன.
இந்நூல்களை முன்வைத்து பின்னாளில் அறிஞர்கள் பல ஆய்வுகளும் பல திருத்தங்களும் செய்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இனி, இயேசு கடவுளாக ஏற்றுக் கொண்ட வரலாற்றுக்கு செல்வோம்.
உலக வரலாற்றில் எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பாரசீக கிரேக்க அரசுக்களின் ஆட்சிக்குப் பின் ரோம் அரசு கி.மு 168 முதல் கி.பி 476 வரையில் ஆட்சி செய்தது. ரோம் ஆட்சியில் கி.பி 34-இல் (அல்லது கி.பி 33-இல்) இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர் பெற்றார் என்று இயேசுவின் சீடர்களையும் அதை நம்பிய மக்களையும் ரோம் அரசு கொடுமைப்படுத்தியது.
பலருக்கு மரண தண்டனை கொடுத்தது. கிட்டத்தட்ட 300-ஆண்டுகள் இயேசு கடவுளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கி.பி 306-இல் ரோம் மன்னன் ´கான்ஸ்டன்டைன்´ ஸ்பெயின் நாட்டின் மீது போருக்கு செல்லும் இடத்தில் சிலுவையை கண்டார். ´வெற்றி பெறுவாய்´ என்று அருள்வாக்கும் கிடைத்தது. போரில் வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்திருந்த கான்ஸ்டன்டைனுக்கு பெரும் வெற்றி கிடைத்தது.
தனது நாட்டுக்கு திரும்பிய பின் சிலுவை குறித்து ஆராய்ச்சிகள் செய்யும்படி அறிஞர்களிடம் கோரினார். மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் எழுதிய நூல்களில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இயேசு உயிர்த்தெழுந்த வரலாறுகள் வரை ரோம் மன்னன் கான்ஸ்டன்டைனுக்கு போதிக்கப்பட்டது.
கி.பி 313-இல் ரோம் நாட்டு மன்னன் ´கான்ஸ்டன்டைன்´ இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டார். இயேசு கடவுளின் அவதாரம் என்று அறிவித்தார். மக்களையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி பரப்புரை செய்தார்.
´இயேசு பிறப்பதற்கு முன்´, ´இயேசு பிறப்பிற்கு பின்´ என்று வரலாறுகளை கணிக்கும்படியும் ஆணையிட்டார். ´கி.மு - கி.பி´ வரலாற்று கணக்கிடுகள் இன்றைய காலம் வரையில் இப்படியே கணிக்கப்படுகின்றது. அதேப்போல் ´சிலுவை குறி´ புனிமாகவும், கிறிஸ்துவ மதத்தின் சின்னமாகவும் இருக்கிறது.
´கான்ஸ்டன்டைன்´ காலத்திற்கு பிறகும் ரோம் மற்றும் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இயேசுவின் வரலாறுகளும், போதனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீவிரம் அடைந்தன.
கி.பி 391-இல் பண்டைக்கால நாகரிகத்தின் சின்னங்களான ´சிரபிஸ்´ (Serapis) கோயில்கள் அனைத்தும் கிறிஸ்துவ மதகுருமார்கள் பாதிரியார்களால் அழிக்கப்பட்டன.
கி.பி 590- 604 இல் ரோம் போப்பாண்டவராக இருந்த ´கிரிகோரி1´ கொடுங்கோலனாக இருந்தார். கடவுள் மறுப்பாளர்கள் விஞ்ஞானிகள் உட்பட பலரை கொடூரமாய் தண்டித்தார். அறிவியல் நூல்களை முற்றாக அழிக்கும்படி கட்டளையிட்டார்.
17-ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க கொள்கைகளை எதிர்ப்போர்களைத் தண்டிக்க ரோம் போப்பாண்டவர் சமயத்துறை சார்ந்த உயர்மன்றம் ஓன்றை ஏற்படுத்தினார். இந்த உயர் மன்றத்தின் மூலமாகத்தான் தத்துவஞானியும், விஞ்ஞானியுமான ´புருனோ´ (Bruno) வுக்கு, ´வான நூலை´ எழுதியதற்காக உயிரோடு கொளுத்தி கொல்லும்படி கட்டளை இட்டு நிறைவேற்றப்பட்டது.
´கலிலியோ´வின் (Galileo) பூமி உருண்டை என்னும் கருத்தை வாபஸ் வாங்கும்படி சமயம் மிரட்டியது.
17-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானத்திற்கும், சமயத்திற்கும் பெரும் போராட்டமே நடந்தது.
´மனிதனில் இருந்து மனிதன் தான் தோன்ற முடியும்´ என்ற பைபிளின் வாதத்தை ´டார்வின்´ கூற்று மறுத்தது. ´மனிதன் குரங்கில் இருந்து வந்தவன்´ என்னும் டார்வின் ஆய்வு சர்ச்சையை கிளப்பியது.
கிறிஸ்துவத மதத்திற்குள் உட்பிரிவுகள் சில ஏற்பட மதகுருக்கள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தினர். கிறிஸ்துவமதக் கோட்பாடுகளை உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்புகளும் நடந்தன. பல்வேறு குழுக்களான இருந்த மக்களிடம் கிறிஸ்துவ மதத்தில் இணைத்துக் கொள்ளும்படி தூண்டப்பட்டனர். அல்லது கட்டாயப்படுத்தப்பட்டனர்.
கடவுள்களும், மதங்களும் ஏற்பட்ட காலங்களிலேயே கடவுள் இல்லை மதங்கள் இல்லை என்று கூறுவோர்களும் இருந்தனர். இவர்களை பொருள் முதல்வாதிகள் என்று அழைக்கப்பட்டனர். அதாவது தாங்கள் காண்பவைகளை மட்டும் ஏற்பவர்களாகவும் உலக யதார்த்தத்தோடு வாழ்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் வெளிப்படையாக கடவுள் மறுப்பு கருத்துக்களை பேச முடியவில்லை. அப்படி பேசுபவர்கள் அரசாங்கத்தினரால் கடுமையான தண்டனைக்குள்ளானார்கள்.
சில வரலாற்று ஆதாரங்களை பார்ப்போம்.
கிரேக்க பொருள் முதல்வாதியான ´அனக்ஸகோரஸ்´ (Anaxagoras) நாத்திகர் என்று ´ஏதென்ஸ்´ மாநகரில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
"உலகில் உள்ள அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை" என்ற பைபிள் வாக்கியத்திற்கு எதிராக ´டெமோக்கிரடஸ்´ (Democritus), "மனித சமுதாயத்தின் வாழ்க்கையிலும், உலகில் இருக்கும் இயற்கையின் செயல்களிலும் கடவுள் கண்காணிப்புகள் எதுவும் இல்லை" என்று கூறியதோடு, "இல்லாத கடவுளை தேடி ஆராய்ச்சி" என்ற நூலையும், "மனித வாழ்க்கையில் கடவுள் தலையிட உரிமை இல்லை" என்ற நூல் உட்பட வேறு பல நூல்களும் எழுதினார். மேலும் தனது ஆராய்ச்சியில், "பொருளின் சிறு துளி அணு என்றும், பொருட்கள் அணுக்களால் ஆனது" என்றும் தனது ஆய்வின் முடிவு குறித்து கூறிய போது கிறிஸ்தவ சமயவாதிகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. ´டெமோக்கிரடஸ்´ நூல்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. இன்றைய சந்ததியினருக்கு ´டெமோக்கிரடஸ்´ சிந்தனைகள் எதுவும் கிடைக்காவண்ணம் முற்றாக அழிக்கப்பட்டன. ´மெமோக்கிரடஸ்´ இறப்பு குறித்தும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.
´எபிக்கூரஸ்´ (Epicurus) இவர் ´டெமோக்கிரடசின்´ சீடர். "மனிதன் கடவுள் நம்பிக்கையில் இருந்து விடுபட்டு பகுத்தறிவையும், விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும்" என்று மக்களிடம் தொடர்ச்சியாய் பிரச்சாரம் செய்தவர். இவரையும் கிறிஸ்துவ சமயம் விட்டுவைக்கவில்லை.
ஐரோப்பாவில் மதத்திற்காக நடைப்பெற்ற போர்களை "கிறிஸ்தவப் போர்" என்று அறிவித்தனர். இப்படி பல உதாரணங்கள் இருந்தாலும் ஈஸ்டர் திருநாள் தொடர்புடைய தகவல் ஒன்றை பார்ப்போம்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி ´வானினி´ (Vanini) 1619-இல் பைபிளில் இருக்கும் வாசகங்களையும், இயேசுவின் வரலாறுகளையும், அதில் இருக்கும் முரண்களையும் கேள்விக்குட்படுத்தி சமயவாதிகளிடம் விவாதித்தார். ´வானினி´யின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் தடுமாறிய சமயவாதிகள், "பைபிள் கருத்தை ஆய்வுகள் இன்றி ஏற்க வேண்டும்" என்று பிற்போக்குத்தனமாய் பேசியது.
´வானினி´ தொடர்ச்சியாய் பைபிள் வாக்கியங்கள் குறித்து விமர்சனங்ளை முன்வைத்துக் கொண்டே இருந்தார்.
"இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்த பின் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்" என்னும் வாதத்தை ஏற்க மறுத்தார் வானினி.
இவ்விவாதம் பெரும் சர்ச்சையை கிளப்ப, கிறிஸ்தவ மதகுரு ´வானினி´யை உயிரோடு நெருப்பில் எரித்து கொல்லும்படி ஆணையிட்டது.
பிரான்ஸ் நாட்டில் தெற்குப் பகுதியைச் சேர்ந்த ´துளுஸ்´ நகரத்தில் முக்கிய சாலை ஒன்றில் பொது மக்களுக்கு முன்பு தண்டனை நிறைவேற்றப்படும் தருணம்.
நெருப்பில் தள்ளப்படும் முன் ´வானினி´ மதகுருவை பார்த்து கூறுகிறார்:
"உங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த போது பிதாவே அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்கள் அறியாமையில் தான் இக்காரியத்தை செய்கிறார்கள் என்று இயேசு கூறியதை போல் நான் கூறமாட்டேன். நீங்கள் செய்யும் குற்றத்தை நீங்கள் உணர்ந்தே செய்கிறீர்கள்" என்று ஆவேசமாய் முழங்கினார்.
´வானினி´யின் வார்த்தைகளில் மேலும் கோபம் அடைந்த மதகுரு, "இவனை நெருப்பில் தள்ளும்முன் நாக்கை பிடுங்கி எறிந்துவிட்டு தள்ளுங்கள்" என்று கூறுகிறார்.
´வானினி´யை சுற்றி இருந்த கிறிஸ்தவ பாதிரிகள் வானினியின் நாக்கில் இரும்பினால் ஆன கொக்கியை சொருகி நாக்கை பிடுங்கி வெளியே எறிந்துவிட்டு வானினியை நெருப்பில் எறித்து கொன்றனர்.
"இயேசு மரணித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரா?" என்று விவாத்தித்ததற்காக வானினி படுகொலை செய்யப்பட்டார்.
ஆனால், அவர் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை பதிலே இல்லை...
இன்று 21-ஆம் நூற்றாண்டு.
2011-இல் ´ஈஸ்டர் திருநாள்´ என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மதகுருக்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை பரிமாறுகிறார்கள்.
எல்லாம் சரி...
தத்துவஞானி ´வானினி´ எழுப்பிய கேள்வியை ஒரே ஒருமுறை உங்கள் மதகுருக்களிடம் கேளுங்கள். அல்லது ´வானினி´க்கு நடந்த கொடூரத்தை நினைவுப்படுத்துங்கள்.
"மதங்கள் அன்பை மட்டுமா போதிக்கிறது?"
வன்முறைகளை செலுத்தி மக்களை முட்டாள்களாக வைத்திருக்க ´பைபிள்´ சொல்லும் கதைகளை இந்நாள் மனிதனும் கேள்விகளின்றி ஏற்க வேண்டுமா?
உங்களிடம் முன்வைத்திருக்கும் கேள்வி இதுதான்:
"ஈஸ்டர் திருநாள் - இயேசு உயிர்த்தெழுந்தாரா?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக