மதம் என்றால் என்ன என்று பலர் பல விதமாக விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். அவற்றுள் ஒரே ஒரு விளக்கம்தான் பொருள் புரிந்தாகவும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம் - இதுதான் மதம் என்பதற்கு உண்மையான விளக்கம்.
சமுதாயத்தை நிர்வகிப்பதற்காகச் சில விதிகளை அதன் மீது திணிக்கிறோம். அது மதம். மதத்தைப் பற்றிய என்னுடைய கருதுகோளும் அதுவேதான். இந்த விளக்கம் எதார்த்த அடிப்படையிலும் தர்க்க அடிப்படையிலும் சரியாகவே இருக்கிறது. ஆனால் சமூகத்தை ஆளும் அந்த விதிகளின் இயல்புகள் என்னவென்று தெளிவாக்க இந்த விளக்கம் முயலவில்லை. அவ்விதிகளின் இயல்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் கேள்விக்கு இதில் பதிலில்லை.
மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விதிகளின் இயல்பு பற்றிய இந்தக் கேள்வி முக்கியமானது.
எது - மதம் - எது மதமில்லை என்பது மதத்திற்கு தரப்பட்ட விளக்கத்தைப் பொறுத்து அமைவதில்லை. மாறாக, சமுதாயத்தின் மீது ஆளுமை செலுத்தும் விதிகளின் இயல்புக்கு என்ன நோக்கமோ, அதை அடிப்படையாக வைத்து இந்தப் பிரச்சினையை அலசும்போது இன்னொரு பிரச்சினையும் எழுகிறது.
மனிதனுக்கும், சமுதாயத்திற்குமான உறவு என்ன, நவீன சமூகத் தத்துவாசிரியர்கள் இந்தக் கேள்விக்கு மூன்று விதத்தில் பதில் தந்தார்கள்.
தனிமனித மகிழ்ச்சியைப் பெற்றுத் தருவதே சமுதாயத்தின் இலக்கு என்பது சிலர் கருத்து.
இன்னும் சிலர், மனிதனின் இயல்பான பண்புகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவே சமுதாயம் நிலைத்திருக்கிறது. அவன் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ள அது உதவுகிறது என்றார்கள் வேறுசிலர்.
இப்படித் தனிமனிதனுக்கு முக்கியத்துவம் தராமல் லட்சிய பூர்வமான சமுதாயத்தைப் படைப்பதே நோக்கமென்று சொன்னார்கள்...
மதத்தில் தனி மனிதருக்கு இடமில்லை. அதன் அடிப்படைக் கருதுகோள் வர்க்கம் சார்ந்தது. ஒரு தனிமனிதன் இன்னொரு தனிமனிதருடன் எப்படி உறவாட வேண்டுமென்று மதம் கற்பிக்க முயலவில்லை.
தனிமனிதனை ஏற்காத எந்த மதத்தையும் நான் ஏற்பதற்கில்லை.
ஒரு தனிமனிதனுக்குச் சமுதாயம் என்பது தேவைதான். ஆனால் சமூக நலன் மட்டுமே ஒரு மதத்தின் லட்சிய எல்லையாக இருக்கமுடியாது. தனிமனிதன் நலனும் முன்னேற்றமும் மதத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தே தீரவேண்டும் என்பதே என் கொள்கை.
தனிமனிதன் என்பவன் சமுதாயத்தின் அம்சம்தான். ஆனால் அவனுக்கும் சமுதாயத்துக்குமான தொடர்பு உடலுக்கும், உறுப்புகளுக்கும் இடையிலான தொடர்பு, வண்டிக்கும் சக்கரங்களுக்கும் இடையிலான தொடர்பு போன்றதோ ஆகாது.
- அம்பேத்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக