புதன், 30 நவம்பர், 2011

சீதை கற்புக்கரசியா... ஒரு அருவருக்கத்தக்க ஆராய்ச்சி..

சீதை கற்புடையவளாக எப்படி இருக்கக்கூடும்" என்று ஒரு பகுத்தறிவாளர் ஆராய்ச்சி செய்து இருக்கிறார். தேவையா இந்த ஆராய்ச்சி. சாதாரண ஆராய்ச்சி அல்ல அது, அருவருக்கத்தக்க ஆராய்ச்சி. ஒரு பெண் கற்புடையவளாக இருக்கிறாள் அல்லது இல்லாமல் போகிறாள். அது அவள் பிரச்சனை. பெரிய பெரிய கிரிமினல்களையே கண்டும் காணாமல் வாழ்கிற சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்.

கற்பு அவளது சொந்த விஷயம். நாம் அந்த பெண்ணிற்கு உறவாக இருந்தாலும் கூட, இந்த ஆராய்ச்சி செய்ய யாருக்கும் உரிமை இல்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் இப்படி சிந்திப்பது அவர்களது வக்ர தன்மையை காட்டும். நாம் அவர்களை பற்றி பேச வரவில்லை.

"கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது" என்று சொன்னவர், "கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலை மீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண் மக்களை உலகம் முன்னேற்றமடையச் செய்ய முடியாது" என்றும் சொன்னவர். "கற்பு என்பன கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே" என்றவர் தான் சீதை எப்படி கற்புடன் இருக்க முடியும் என்று யோசிக்கிறார். சொல்வது ஒன்று, சிந்தனையில் இருப்பது வேறொன்றா.

ஆத்திகம் சீதையின் கற்பை விவாதப்பொருள் ஆக்கி இருந்தால், நாத்திகம் என்ன சொல்லி இருக்க வேண்டும். "போய் வேலைய பாருங்கடா வெட்டி பயல்களா. நாட்டுக்கு இது தான் தேவையா" என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்லவில்லை.

ஒரு பட்டிமன்றம் வைப்பார்கள். "கற்பில் சிறந்தவள் கண்ணகியா... மாதவியா... " என்று. இதில் ஒரு விந்தை என்னவென்றால், தாசியாக சொல்லப் பட்டவரையும், உயர்குடியில் பிறந்தவரையும் ஒப்பிட்டு விவாதம் செய்வார்கள். தாசி குலத்தில் பிறந்தவர் கற்புடனேயே வாழ்ந்தார் என்று கண்ணகியோடு ஒப்பிட்டு உயர்த்தி பிடிப்பார்கள். அதை தமிழரின் மாண்பு, பெண்மை மீது கண்ணியம் போற்றுதல் என்று சொல்லலாம். அதே விவாதத்தை இவர்கள் செய்திருந்தால், "கற்போடு இருந்தவள் கண்ணகியா.. மாதவியா.." என்று விவாதம் செய்திருக்கக்கூடும். அதான் அளவாய் சிந்திப்பவருக்கும், அதிகமாய் சிந்திப்பவருக்குமுள்ள வித்தியாசம் போலும். 

சீதையின் கற்பை பற்றிய ஆராய்ச்சியில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா, "சீதையை ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்பு ராமன் அந்த மீட்பை அரசியல் காரியத்தை உத்தேசித்து சீதையை மீட்டதாகவும் ராவணன் அனுபவித்ததை தான் அனுபவிக்க முடியாதென்றும் சொல்லி அவளை தனது மனைவியாக ஏற்க மறுத்த சமயத்தில்" சீதை தைரியமாக விளக்கமாக தன்னை ராவணன் அனுபவிக்கவில்லை என்று சொல்லவே இல்லை.

 மற்றபடி என்ன சொன்னாள் என்றால் "நான் ஒரு பெண், அபலை, ராவணன் மகா பலசாலி அவனிடம் எனது சரீரம் சுவாதீனமாய் விட்டது. நான் என்ன செய்ய முடியும்? சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது" என்று தான் சொன்னாளே ஒழிய மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.) ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதை கற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பது தான் இந்த வியாசத்தின் கேள்வியாகும்.

சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். "
ராமாயணம் பொய், ராமர்,சீதை எல்லாமே கற்பனை என்போர், ஏன் அந்த கற்பனைக்கு இவ்வளவு உயிர் கொடுக்க போராட வேண்டும்.


தனக்கே தெரியாமல் ஒரு முடிவை சொல்லி விடுகிறார் - இந்த கற்பின் விஷயத்தில். ராவணனை வதம் செய்த ராமனை பழிக்கும் பகுத்தறிவாளர்களுக்கு ஒரு கேள்வி. சீதை கற்பழிக்கப்பட்டாள் என்றால், "ராவணனால் சீதை கெடுக்கப்பட்டார் என்று உறுதியாக நம்பி விவாதம் செய்வதால் - கேட்கிறோம். தன் மனைவியை கெடுத்த ராவணனை அழித்தது எப்படி தவறாகும். தன் மனைவியை கற்பழித்தவனை கொன்றது நியாயமா. நியாயமில்லையா. கற்பழித்தவனை கொல்லுதல் பாவம் என்று, எந்த மதமும் சொல்லவில்லை(பகுத்தறிவாளர்களுக்கு பிடித்த மதமும்). மனிதனும் சொல்ல மாட்டான்..'

 நமக்கு ராமனும் தேவையில்லை. ராவணனும் தேவையில்லை. ஒரு பெண்ணின் கற்பு குறித்து எதற்கு அதீத ஆராய்ச்சி என்ற கேள்வியின் பலனாக, பெண்மையின் குரலாக பதிவானது இந்த பதிவு.

கடைசியாக, இந்த வருஷமும் திராவிடத்தின் சின்னத்தம்பி கன்னடம், காவிரியில் நீரை விடாது பகுத்தறிவாளர்களுக்கே பட்டை நாமம் சாத்தியுள்ளது. திராவிடத்தின் மீட்சிக்காக உழைக்கும் திராவிடர்களே, தமிழகத்தின் விவசாயிகளின் மீட்சிக்காகவும் உழையுங்கள். அதை தான் தமிழகம் எதிர்பார்க்கிறது. சீதையின் கற்போடு இருந்தாளா இல்லையா என்பதை பற்றி அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக