புதன், 23 நவம்பர், 2011

இஸ்லாமும் பெண்களும் .. / WHY I AM NOT A MUSLIM.. 19

தமிழில் எதற்கு ... இதை மட்டும் ஆங்கிலத்திலேயே தந்து விடுகிறேன்:
I tell you, this country is being sodomized by religion. ........ a Pakistani businessman, ex-air force officer


இன்று பாகிஸ்தானில் பெண்களுக்கான மரியாதை முற்றிலும் இல்லை. அவர்களுக்கெதிரான குற்றங்கள் பலுகிப் பெருகுகின்றன. எங்களை ‘இஸ்லாமிய மயமாக்கியுள்ளார்கள் (islamized).’ ஆனால் ஏற்கெனவே இஸ்லாமியராக இருக்கும் எங்களை மீண்டும் எப்படி இஸ்லாமிய மயமாக்குவது? ஜியா (Zia) முல்லாக்களுக்கு அதிகாரம் கொடுத்த பிறகு, அவர்களுக்கெல்லாம் எந்தப் பெண்ணையும் கிழித்து எறியும் அதிகாரம் இருப்பதாக எண்ணுகிறார்கள்.    ..........Mrs, Farkander Iqbal, D.S.P., Lahore, Pakistan

பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது ஜின்னா சமயவாதியல்ல. ஒரு வேளை இப்போது அவர் உயிரோடு இருந்தால் பாகிஸ்தானில்  ஒரு தெரு முக்கில் கசையடி வாங்கிக் கொண்டிருப்பார்! இங்கிலாந்தில் இருந்த போது அவர் விஸ்கியும், பன்றிக் கறியும் சாப்பிட்டுப் பழகினார். 

அவரது சுதந்திர நாள் பேச்சு::

உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது; எந்தக் கோவிலுக்கும் போகவும், எந்த மசூதிக்குப் போகவும், மற்றும் எந்த கடவுளை வழிபடவும்  உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது.  ... நீங்கள் எந்த சமயத்திலோ, ஜாதியிலோ, இனத்திலோ இருக்கலாம். இதற்கும் பாகிஸ்தானின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ... நாமனைவரும் இந்த நாட்டின் சம நிலை குடிமக்களாகிறோம். ... நமக்கு முன்னால் ஒரே ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். இதனால் நாளடைவில் நாம் இந்துக்கள் இந்துக்களாக இல்லாமலும், இஸ்லாமியர் இஸ்லாமியராக இல்லாமலும் இந்த நாட்டின் பொதுக் குடிமக்களாவோம்.  நான் இதை சமய நோக்கோடு சொல்லவில்லை; ஏனெனில், சமய  உணர்வுகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கை.”

(இதைக் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. ஜின்னாவின் கனவு நனவாகாமலேயே  கலைந்து விட்டதே !) 


1947 ஜூலையில் ஒரு நிருபர் பாகிஸ்தான்  சமயச்சார்புள்ள நாடாக இருக்குமா என்று கேட்க, ஜின்னா, ‘என்ன முட்டாள்தனமான கேள்வி; சமயச் சார்புள்ள நாடு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது’, என்றார். 

எம்.ஜே. அக்பர்:   பாகிஸ்தான் இஸ்லாமிய மக்களால் நிறுவப்படவில்லை. முல்லாக்களும், பெரும் நிலச்சுவான்தாரர்களும் இணைந்து உருவாக்கியது பாகிஸ்தான். முல்லாக்கள்  தங்கள் ஆளுகையை நிலச்சுவான்தாரர்கள் உருவாக்கிக் கொள்ளவும். நிலச்சுவான்தாரர்கள் முல்லாக்கள் ஒரு இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை மாற்றிக் கொள்ளவும் வழி வகுத்ததே பாகிஸ்தானும் பங்களா தேசமும் உருவாகக் காரணமாயிருந்தன. 

1948ல் ஜின்னா மரணமடைந்ததும்  லியாகத் அலிகான் பொறுப்பெடுத்ததும் மதச் சார்பற்ற அரசியல் சட்டம் கொண்டு வர முனைந்தார். முல்லாக்கள் கோபத்தில் நுரை தள்ளி நிற்க, அச்சட்டம் தூக்கி எறியப்பட்டது. 1951-ல் லியாகத் சுட்டுக் கொல்லப்பட்டார். முல்லாக்களின் கூலிப்படையினரே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. 

1971-ல் வந்த பூட்டோ சமயச் சார்பில்லாதவர். ஆனாலும் அவரும் மக்களாட்சியை வெறுத்தவர். அவரும் முல்லாக்களுக்கு வளைந்து கொடுத்தார். 1977ல் ஜெனரல் ஜியா ராணுவப் புரட்சியால் பதவிக்கு வந்தார்.முல்லாக்களின் பேச்சைக் கேட்கும் ஜியாவினால் முழுமையான இஸ்லாமிய ஆட்சி வந்தது.(322)

முழுவதுமாக ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்த ஜியா துப்பாக்கி முனையில் ராமதான் நோம்பை எல்லோரும் கடைப்பிடிக்க வைத்தார். பெண்கள் எந்தவித விளையாட்டுகளிலும் பங்கெடுக்கத் தடை வந்தது. இஸ்லாமிற்கும் குடியரசிற்கும் எந்த வித  தொடர்பும் இல்லையென வெளிப்படையாகத் தெரிவித்தார். பெண்களுக்கெதிரான சட்டங்கள் உருவெடுத்தன. அதில் இரு முக்கிய சட்டங்கள்: ஜினா, ஹுதுத்.  

(ஹுதுத் சட்டங்கள் பற்றிய குறிப்பு முன் பதிவில் உள்ளது). ஜினா என்பது கள்ள உறவுகள், கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கெதிரான சட்டம். கல்லெறிதல், கசையடி போன்ற இஸ்லாமியச் சட்டங்கள் வந்தன. 

இச்சட்டங்கள் கற்பழிப்பில் கற்பழித்தவனை விடவும் கெடுக்கப்பட்ட பெண்ணே
அதிகம் சிரமப்படுவதாக ஆனது. ஏனெனில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் மீது கள்ள உறவு, திருட்டுக் காமம் போன்ற குற்றங்களும் சாட்டப்படும். ஆண்களின் சாட்சியமே எடுக்கப்படும்.(323)

பாகிஸ்தானின் மனித உரிமைக் கமிஷன் ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்கிறது. அதில் பாதி மிகவும் சிறு வயது பெண்கள். (எல்லோருக்கும் பர்தா போட்டு விடுகிறார்கள். ஆனால் கற்பழிப்பும் குறைவில்லை; மனித ஒழுக்கமும் அவர்கள் சொல்வது போல் மேம்படவும் இல்லை. பர்தாவை ஆதரிப்போர் இத்தகைய கற்பழிப்புகளுக்கு என்ன காரணம் சொல்வார்களோ!) சிறையில் இருப்போரில் 75 விழுக்காடு ஜினா என்ற சட்டத்தினால் அடைக்கப்பட்டவர்கள்.  வேண்டாத மனைவியை ஜினா சட்டத்தின் மூலம் சிறையில் அடைப்பது எளிது. 

(Mukhtaran Bibi என்பவரின் சமீபத்திய உலகை உலுக்கிய உண்மைச் சம்பவம் பற்றி இங்கு வாசித்துக் கொள்ளுங்கள்.)

ஜியாவின் இஸ்லாமிய மாற்றம் பெண்களின் மீது நடந்து வந்த வன்முறைகளை அதிகமாக ஆக்கி விட்டது. 1991ல் வந்த ஷாரியா சட்டங்கள் நிலைமையை இன்னும் கொடுமையாக்கி விட்டது. 

பெனாசிர் பூட்டோ வந்ததும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷரிப் முல்லாக்களைத் தூண்டி விட்டதில் பூட்டோவின் ஆட்சி 20 மாதங்களில் முடிவுக்கு வந்தது. பூட்டோவின் பெண்களுக்காக ஏதும் செய்யாது முல்லாக்களை மகிழ்ச்சிப் படுத்த முனைந்தார். ஆனாலும் முல்லாக்கள் ஒரு பெண் பிரதமராக இருப்பதை விரும்பவில்லை. (324)

ஆண்களை விட சராசரி பெண்களின் ஆயுள் குறைவாக இருக்கும் நான்கு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று. குழந்தைப் பேற்றில் இறக்கும் பெண்களும் அதிகம். 1000ல் 6 பேர் இறக்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டை  முல்லாக்கள் எதிர்ப்பதால் குழந்தை பிறப்பும் அதிகமாக,  6.9 வரை  உயர்ந்துள்ளது. 1994ல் பெண்களின் கல்வியறிவு வெறும் 2 விழுக்காடு. பெண் குழந்தைகள் கைவிடப்படுகின்றன. கராச்சியில் மட்டும் ஒரே ஆண்டில் 500 குழந்தைகள் கண்டெடுக்கப் பட்டன. அவைகளில் 99 விழுக்காடு பெண் குழந்தைகள். 

வரதட்சணைக் கொடுமை மிக அதிகம். 1991ல் 2000 வரதட்சணை மரணங்கள். இவைகள் பெரும்பாலும் சமையலறை விபத்துகளாக உரு மாறுகின்றன. (325)
Brides of Koran என்றொரு துன்புறுத்தல் பெண்களுக்கு உண்டு. வரதட்சணைக் கொடுமையால் பெண்களை குரானுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இவர்கள் வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்படுகிறார்கள். தொலைக்காட்சிகள் கூட இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. சிந்து மாகாணத்தில் மட்டும் 3000 குரானிய மணப்பெண்கள் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டன. (இந்துக்களிடையே இருக்கும் வரதட்சணைக் கொடுமைகள் எங்கள் மதத்தவரிடம் இல்லையென்று அடிக்கடி நம் இஸ்லாமிய நண்பர்கள்  சொல்வதுண்டு. ஆனால் ... நிலைமை ...?)


ஜின்னா தன் 1944 வருடப் பேச்சில் கூறியவைகள் மிகவும் உண்மைகளாகி விட்டன. “தங்கள் நாட்டுப் பெண்களையும் ஆண்களோடு சமமாக வளர்க்காத எந்த நாடும் உயர்ந்ததாக வரலாறு இல்லை. நம்மிடையே பல முட்டாள்தனமான பழக்க வழக்கங்கள் உண்டு. நம் பெண்களை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து மூடி வைப்பது சட்டப்படியும், மனித நேயத்தின்படியும் மிகவும் பெரிய தவறு.”

பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் அடிப்படைவாதிகளிடம் அச்சத்தோடு இருக்கிறார்கள். இந்த அச்சமே அடிப்படைவாதிகளின் எண்ணிக்கையை  மேலும் அதிகமாக ஆக்குகின்றன. 

Women's Action Forum  (WAF) and War Against Rape - என்ற அமைப்பு 1981ல் பாகிஸ்தானில் நிறுவப்பட்டது. பெண்கள் ஹுதுதிற்கும், ஜினாவிற்கும் எதிராக வீதியில் வந்து போராடினார்கள். 1983ல் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் பெண்களின் போராட்டம் நடந்தது.


==================================

எனது சில வார்த்தைகள்:
நடந்து வரும் தீவிரவாதங்களால் இஸ்லாமியச் சமூகத்தின் பேரில் மற்றைய மதத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது உண்மையே. அதில் எத்தனை விழுக்காடு சரி, தவறு என்று கணக்கிடலாம். ஆனால் நான் பேச வந்தது அதுவல்ல. இந்த வேறுபாடுகளைக் களைய இஸ்லாமியர்கள் தயாராக வேண்டும். ஆனால் இந்த வேறுபாடுகளை அவர்கள் தீவிரமாக்குவது போலவே எனக்குத் தோன்றுகிறது. 
சின்ன வயதில் மதுரை தெற்கு வாசலில் இஸ்லாமிய நண்பர்களே அதிகமாக இருந்த காலம் உண்டு. ஆனால் அப்போது இஸ்லாமியரிடம் “வெளி அடையாளங்கள்’ அதிகமாக இருக்காது. கைலியைத் தவிர, தாடி, தொப்பி, நெற்றியில் தொழுகையில் ஏற்பட வைத்துக் கொள்ளும் கருப்பு காய்ப்பு  - இப்படி எதையும் அந்த வயதில் என் கண்களில் அதிகமாகப் பட்டதில்லை. அவர்கள் வீட்டுக்குள் மற்ற நண்பர்களின் வீடுகளைப் போல் போய்வர முடியாது என்பது மட்டும் ஒரே வித்தியாசம். நண்பர்கள் நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் இப்போது தங்கள் உடை நடை பாவனை என்று எதிலும் அவர்கள் தனிமைப் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். பர்கா போடும் பெண்கள் அதிகமாகக் கண்ணில் படுவது இரு காரணங்களால் இருக்கலாம்: அதிகமான பெண்கள் பர்தா அணிகிறார்கள். அல்லது. பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்கள் வீட்டிலிருந்து வெளி வந்திருக்கிறார்கள். 

இப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதால் நம் பதிவர் ஒருவர் அவர் பதிவில் எழுதிய வார்த்தைகளை இங்கு தருகிறேன்.


//மாற்று மத/சமுதாய மக்களிடையே கலந்து வாழும் வாய்ப்புகள் அற்று, அவர்கள் நம்மை விநோதமாகப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது அவர்களிடம் நம்மை அநியாயமாக ஒதுக்க எண்ணங்களைத் தூண்டுகிறது.  ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை நாம் ஒருவிதமான "புதியவர்கள்" (strangers). நம்மைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்கள் அவர்களது மனதிலிருந்து அகலாமல் அப்படியே இருக்கக் காரணமாகின்றோம்.

மற்ற சமுதாயத்தினரோடு கலந்து பழக வேண்டும்.
மக்கள் வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு நாம் விநோதகர்களாக இருக்கமாட்டோம்.//

நமது பதிவுகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். வெறும் மதப்பிரச்சாரத்தைச் செய்வது  இந்து, கிறித்துவ பதிவர்கள் அதிகமாகப் போனால் ஒவ்வொன்றிலும் நாலைந்து பேர் இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியப் பதிவர்களில் நாலைந்து பேர் மட்டுமே மதங்களைத் தாண்டி எழுதுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் tag line-லிருந்து அனைத்தும் மதம் பற்றி மட்டுமே. அவைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் (என்னைப் போன்ற ஒரு சிலர் தவிர) அனைவரும் இஸ்லாமியர்களே. அவ்வளவு எதுக்குங்க! தொப்பை குறைக்க ஒரு நல்ல பதிவு; எழுதியது
. அதில் வந்த ஒரு பின்னூட்டம் அந்தப் பதிவு ’இஸ்லாமியத் தொப்பைகளுக்கு’ மட்டும் என்பது போல் தோன்றியது! இப்படிப் ‘பிரச்சாரம்’ செய்வது ஏன்? இப்படிப் பிரச்சாரம் செய்வதால் எத்தனை மனங்களில் நல்ல வித்துக்களை அவர்கள் போட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் ஒரு உரைகல் சோதனை செய்தால் நலம். பதிவுலகிலேயே இப்படி ஒரு தனிப்போக்கை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?

சகோ. என்று அழைக்கும் வழக்கமான பாணியை நடப்பிலும், நட்பிலும் கொண்டுவரவேண்டும். உங்கள் மதம் உங்களுக்கு; என் மதம் எனக்கு. பிரிவினையை மதம் ஊட்டுவது கடவுளுக்கே(??) அவமரியாதை! மதத் தீவிரம் குறைந்து, மனிதனுக்கு மனிதன் என்ற உறவை வலுப்படுத்துவதே நமது தேவை என நான் மிக உறுதியாக நம்புகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக