இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக கூறுவது பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது தான். பொதுவாக மனிதனின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை பெண்களுக்கு சொத்துரிமை என்பது முழுமையான அளவில் இல்லை. இன்று பல நாடுகள் சட்டரீதியாக பெண்களுக்கு சொத்துரிமையை ஏற்படுத்தியிருக்கின்றன. என்றாலும், நடைமுறையில் ஆணாதிக்க உலகம் பெண்களுக்கான சொத்துரிமையை அதன் முழுமையான பொருளில் அங்கீகரிக்கவில்லை என்பதே மெய். சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழி நடத்திய போதும் அவளுக்கு தனித்த சொத்துரிமை ஒன்றுமில்லை. ஏனென்றால் அன்று சமூகம் பொதுவுடமை சமூகமாய் இருந்தது. அது மாறி தனியுடமை கொண்டுவரப்பட்ட போதோ ஆணின் தலைமையில் பெண் அடிமையாக்கப்பட்டாள். இந்த நிலை இன்றுவரை பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை. ஆனால் வரலாற்றின் சிற்சில போதுகளில் பெண்களுக்கு ஆதரவாக சில சில்லரை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இஸ்லாமும் சில சீர்திருத்தங்களை பெண்களுக்காக செய்திருக்கிறது. வரலாற்றின் வழியில் நடைபெற்று வந்த மாற்றங்களூடாகத்தான் இவைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி, ஆண் பெண் சமத்துவம் என்று விதந்தோதுவது வழக்கமாக இஸ்லாமிய மதவாதிகள் செய்யும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சார உத்தி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
பெண்ணின் சொத்துரிமை குறித்து குரான் கூறுவதென்ன?
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் ….. பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் அவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு) …. குரான் 4:11
…. உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் அவர்களுக்கு பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்கு பாதி பாகம் உண்டு.அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்கு கால் பாகம் தான். ….. உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்கு கால் பாகம் தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் தான்….. குரான் 4:12
….. அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. …. அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால் அவள் சகோதரன் அவள் விட்டு சென்ற சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். குரான் 4:176
மேற்கண்ட குரான் வசனங்கள் கூறுவதை சாராம்சமாக பார்த்தால் ஆணுக்கு வழங்கப்படுவதில் பாதி பெண்களுக்கு. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது? இதற்கு மதவாதிகள் ஒரு ஆயத்தப் பதிலைக் கூறுவார்கள். இஸ்லாம் குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆண்களிடம் வழங்கியிருக்கிறது, அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைவாகவும் வழங்குகிறது என்று. இன்றைய ஆணாதிக்க உலகம் அப்படித்தான் இருக்கிறது என்பதால், ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், பெற்றோர்களையும் உற்றோர்களையும் கவனிக்காமல் புறந்தள்ளும் ஆணுக்கு அதிக பாகம் இல்லாமல் பெண்களுடன் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கொள்வதற்கு ஏதுவாக குரானில் வசனம் உண்டா? இன்று பெற்றோரை கவனிப்பதில், பாதுகாப்பளிப்பதில் ஈடுபடும் எத்தனையே பெண்களை, குடும்பங்களைக் காணலாம் இது போன்ற குடும்பங்களில் ஆணைவிட பெண்ணுக்கு இரண்டு மடங்கு சொத்து பகிர்ந்தளிக்க முடியுமா குரான் வசனங்களைக் கொண்டு?
ஆணுக்கே அதிக பொறுப்பு எனவே அவனுக்கே அதிக சொத்து என்பது மதவாதிகளின் சமாளித்தல்களே அன்றி வேறில்லை. இதையும் குரானே தெளிவுபடுத்தி விடுகிறது. மேற்கண்ட குரான் வசனம் 4:11 இதை தனியாக குறிப்பிடுகிறது.
…… இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள். ஆகையினால் அல்லாவிடமிருந்து வந்த கட்டளையாகும். ….
மகனா? மகளா? நன்மை செய்வதில் யார் நெருக்கமாக இருப்பர்கள் என்று உங்களுக்கு தெரியாது என்றாலும் இது அல்லாவிடமிருந்துவந்த கட்டளை. அதாவது ஆணுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது, அவனே பெற்றோரை குடும்பத்தை கவனிப்பவனாக இருக்கிறான் என்பதால் அல்ல, அல்லாவின் கட்டளை என்பதால் ஆணுக்கு இரண்டு மடங்கு. பெண்ணே பொறுப்பேற்பவளாக இருந்தாலும் ஆணுக்கு இரண்டு மடங்கு தான். இதில் மறுப்பதற்கோ, விளக்கம் சொல்வதற்கோ வழியில்லாத அளவுக்கு ஆணும் பெண்ணும் சமமல்ல என்று குரான் தெளிவாகவே கூறிவிடுகிறது. மதவாதிகள் தான் சமாளிப்பு விளக்கங்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.
குரான் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. மஹர் தொகை பெண்களுக்கானது என்பது முகம்மதின் நிலைப்பாடு. அதாவது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு அளிக்கும் மணக்கொடை மணப் பெண்ணுக்கே சொந்தம். முகம்மதுவுக்கு அல்லது இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் மஹர் பெண்ணுக்கு என்பது பெயரளவில் இருந்தாலும் அதை பெண்ணின் தந்தையே அனுபவித்து வந்தனர் (இதுகுறித்து தனித்தலைப்பில் விரிவாக பின்னர் பார்க்கலாம்)இதை சீர்திருத்தி முகம்மது குரானில் பெண்ணுக்கே உரியது என்கிறார். இந்த கிடக்கையிலிருந்து தான் பெண்ணின் சொத்துரிமைக்கான அங்கீகாரம் கிளைத்து வருகிறது.
மஹரின் நிர்ப்பந்தத்தினால் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கிய முகம்மது மிகக் கவனமாக அது பெண்களிடம் தங்கி விடாமல் ஆண்களிடம் வந்து சேரும்படியான ஏற்பாட்டையும் செய்திருக்கிறார். வசனம் 4:12 ஐ கவனித்துப் பார்த்தால் இது விளங்கும். கணவன் இறந்த பின்னர் மனைவிக்கு குழந்தை இருந்தால் எட்டில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் நான்கில் ஒருபங்கும்; மனைவி இறந்த பின்னர் கணவனுக்கு குழந்தை இருந்தால் நான்கில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் இரண்டில் ஒருபங்கும். இதை மேலோட்டமாக பார்த்தால் ஆணுக்கு இரண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது போல்தான் தோன்றும் ஆனால் ஆணுக்கு நான்கு திருமணம் வரை அனுமதி என்பதோடு இணைத்துப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கணவனுக்கும் அவனது நான்கு மனைவிகளுக்கும் தனித்தனியே 100 ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று கொண்டால், மனைவிகள் இறந்தால் கணவனுக்கு குழந்தைகள் இருந்தால் 100 ரூபாயும், குழந்தைகள் இல்லாவிட்டால் 200 ரூபாயும் மனைவிகளிடமிருந்து கணவனுக்கு சொத்தாக கிடைக்கும். மாறாக கணவன் இறந்தால் மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் 6.25 ரூபாயும், குழந்தைகள் இருந்தால் 3.12 ரூபாயும் கணவனிடமிருந்து மனைவிகளுக்கு தனித்தனியே சொத்தாக கிடைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முகம்மது எவ்வளவு துல்லியமாக சிந்தித்திருக்கிறார் என்பது விளங்குகிறதா?
இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழலாம். என்னைருந்தாலும் இஸ்லாம் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரித்திருக்கிறதல்லவா? என்று. முகம்மதுவிற்கு முந்தைய அரேபியாவில் பெண்களுக்கு அறவே சொத்துரிமை இல்லை என்றெல்லாம் கூறமுடியாது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அடிமைகள் இருந்ததை சில ஹதீஸ்கள் பதிவு செய்திருக்கின்றன. ஷீபா நாட்டு அரசியாக ஒரு பெண் திறம்பட ஆட்சி புரிந்ததாக குரான் குறிப்பிடுகிறது. முகம்மதின் முதல் மனைவியாகிய கதீஜா சொந்தமாக பன்னாட்டு வர்த்தக நிறுவனமொன்றை நடத்தி வந்தார். எனவே இல்லாத ஒன்றை புதிதாக முகம்மது பெண்களுக்கு வழங்கிவிடவில்லை. நடப்பில் இருந்ததைசில மாற்றங்களுடன் அங்கீகரித்திருக்கிறார், அவ்வளவு தான்.
பல்வேறு வகைகளில் பெண்களை அடக்கி ஒடுக்கி ஆணாதிக்கத்தில் அமர்ந்திருக்கும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய சொத்துரிமையின் பின்னணி இது தான். மேலோட்டமான அனுபவ ரீதியான வசனங்களுக்குள் அறிவியலை அடித்து இறக்கிய அனுபவத்தில், ஆண்குழந்தைக்கு பெண்குழந்தையாய் வேடமிடுவது போல ஆணாதிக்கத்தையே பெண்ணுரிமையாய் உருமாற்றிவிட்டார்கள் மதவாதிகள் என்பதைத்தவிர இதில் வேறொன்றுமில்லை.
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்
பதிலளிநீக்குடே முட்டாள் இஸ்லாம் பெண் கேட்க்கும் மனகொடையை தரசொல்லி இருக்கிறது , இது சொத்தை விட கூடுதல் , ஆண் மனைவியை பராமரிக்க வேண்டும் மேலும் அவனுக்கு பல தேவைகள் உள்ளதால் பெண்ணுக்கு 1/2 பங்கு என்று சொல்கிறது