சனி, 19 நவம்பர், 2011

இயேசு கிருஸ்துவின் இரத்தமும்.. லெனினியமும்!

ப்ரல் 22ம் தேதி புனித வெள்ளியையும், 24ம் தேதி ஈஸ்டரையும் கோலாகலமாக கொண்டாடும் மக்களுக்கு மாமேதை லெனின் பிறந்த ஏப்ரல் 22ம் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அவர்களுக்கு லெனின் என்னும் பெயரைத்தவிர அவரது அரசியல் பற்றியும் அவரைப்பற்றியும் வேறென்ன தெரிந்திருக்க போகிறது?
புனித வெள்ளி – இயேசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளாக கருதப்படுகிறது. ஈஸ்டர் – இயேசு உயிர்த்தெழுந்த நாளாக கருதப்படுகிறது.
அவர்களின் நம்பிக்கையின் படி, கடவுளால் படைக்கப்பட்ட பாவப்பட்ட மனிதனுக்காக, தன் இரத்தம் சிந்தி மனித பாவத்தை கழுவிய நாள் புனித வெள்ளி. ஆனால் மனித பாவம் இன்னும் கழுவியபாடில்லை. மாறாக இன்னும் பல மனிதர்களின் இரத்தம் பூமியிலே இன்னும்  சிந்திக்கொண்டுதான் இருக்கின்றன.
அடிமைசமூகத்தில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக நடப்பதை கண்டு அவர்களுக்கு ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் போதித்தார் இயேசு.
அடிமைச்சமூகத்தில் காட்டுமிராண்டித்தனமான மன்னனின் அரசுக்கெதிராக மனித நேயத்தைப்பற்றி பேசியதால்  ‘கலகக்காரன்’ என்று அழைக்கப்பட்ட இயேசு கடைசியில் சிலுவையில் அறையப்பட்டார். பைபிள் சொல்லும் கதை இதுதான். அன்று சிலுவையில் அறையப்பட்டு பிறகு புதைக்கப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார்(!).
ஆனால் மனிதனின் விடுதலை என்பது இன்னும் புதைக்கப்பட்டே இருக்கின்றது.
இறந்து போன இயேசு மக்களின் பாவங்களை கழுவ மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையோடு இன்றும் காத்திருக்கின்றனர் பலர். பாவத்திலிருந்து விடுதலையடைய அவர்களுக்கு இயேசுவைவிட்டால் வேறு வழி தெரியவில்லை. இரட்சகர் இரட்சிக்க வரபோவதில்லை என்ற உண்மையும் தெரிவதில்லை. அவர்களின் பாவம் என்ன என்பதும் அவர்களுக்கு புரிவதில்லை.
இந்த பூமியில் பிறந்த உழைக்கும் மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதை புரியாமல், தங்கள் பிரச்சனைகளை பாவம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உதாரணமாக ஒரு விவசாயி தான் படும் கடன் துன்பத்தை எப்படி நினைத்துக்கொண்டிருப்பார்? அதை அவரது விதியென்றும் அவரது பாவம் என்றே தான் நினைத்துக்கொண்டிருப்பார்.
கட்டிட தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் தாம் சுரண்டப்படுவதை புரிந்து கொள்ளாமல், தங்கள் ஏழ்மையை நினைத்து தங்கள் வாழ்க்கையே பாவம் பொதிந்த வாழ்க்கை என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
படித்த பட்டதாரியான வேலையில்லா இளைஞன் தன் வேலையில்லா பிரச்சனையை நினைத்து தன் பாவம் என்றே குமுறுகிறான்.
தன் பிள்ளைகள் படிக்க பள்ளியில் பணம் கட்ட முடியாமல் வாடும் பெற்றோர்களும் தங்கள் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாமல் தங்கள் பாவம் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வரதட்சனையால், மாமியார் கொடுமையால் அவஸ்தைப்படும் பெண்களும், பள்ளிக்கு போகும் வயதில் குப்பை எடுக்கும் வேலைசெய்யும் சிறுவர்களும் தங்கள் பிரச்சனைகளுக்கு பாவம் என்றே பெயர் வைத்து புரிந்து கொள்கின்றனர்.
ஒருபுறம் இந்த பாவங்கள் என்னும் பிரச்சனைகள், இயேசு அன்று இரத்தம் சிந்தியும் இன்றும் போக்கப்படாமல் உள்ளது.  மறுபுறம் உழைப்பாளர்களின் இரத்தங்கள் மேலும் மேலும் உறிஞ்சப்பட்டுதான் இருக்கின்றன. இயேசு இரத்தம் சிந்தும் போது நிலவிய அதே சுரண்டலும், கொடுமைகளும் இன்றும் தொடந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதன் வடிவங்கள் மட்டும் தான் மாறியிருக்கின்றன.
அன்று அரசன். இன்று முதலாளித்துவம்.
அன்று மன்னர் வாரிசுகள் மக்களை தொடர்ந்து சுரண்டினர். இன்று குடும்ப ஆட்சி மக்களாட்சி என்ற பெயரால் மக்களை சுரண்டுகின்றன.
அன்று கசையடி, இன்று துப்பாக்கி.
அன்று சிலுவை. இன்று  போலி என்கவுண்டர்.
அன்று ஆண்டான் அடிமை. இன்று முதலாளி தொழிலாளி.
அன்று பெரும்பாலான நிலங்கள் கோவில்களின், மன்னனின் உடமை. இன்று நிலங்கள் அரசியல் வாதிகளின், தனியார் கம்பெனிகளின் உடமை.
அன்று சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் நடந்த அதே வர்க்க பிரச்சனை இன்றும் தொடர்கிறது. இன்னும் நுட்பமாக அதிதீவிரமாக இன்று நடந்து வருகின்றது.
அன்று குடிக்கும் தண்ணீருக்கு விலையில்லை. ஆனால் இன்று நம் நாட்டிலேயே எடுக்கப்பட்ட தண்ணீரை நாமே காசு கொடுத்து வாங்கும் நிலை.
அன்று ஆறுகள் விற்பனைக்கில்லை. இன்று ஆறுகள் தண்ணீர் கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுள்ளன.
அன்று மலைகள் விற்பனைக்கில்லை. இன்று மலைகளும் காடுகளும் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் ஸ்டெர்லைட்டுக்கும், டாடாவுக்கும் விற்கப்பட்ட நிலைமை.
அன்று கடல் விற்பனைக்கில்லை. இன்று சொந்த நாட்டின் கடலின் எல்லையில் மீன்பிடிக்க தடை. ஏனெனில் குறிப்பிட்ட எல்லைகளில் பன்னாட்டு கப்பல்கள் மட்டும் தான் மீன் பிடிக்க வேண்டுமாம்.
அன்று நிலவிய மன்னராட்சியிலும் சுரண்டல். இன்று நிலவும் முதலாளித்துவத்திலும் சுரண்டல். முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சிதான் ஏகாதிபத்தியம்.
ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளில் தவித்த காலனிய நாடுகளில் வாடும் மக்களின் பாவங்களை கழுவ இயேசு மறுபடியும் பிறக்கப்போவதுமில்லை. அவர் சிந்திய இரத்தம் ஏகாதிபத்தியத்திலிருந்தும் முதலாளித்துவத்திலிருந்து விடுதலை தரப்போவதுமில்லை.

“கெட்டொழுகிச் சாகும் தருவாயில் உள்ள முதலாளித்துவம்” என்று ஏகாதிபத்தியத்தை அழைத்தார் லெனின்.
மார்க்சிய தத்துவத்தை உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதை சாதித்து, மார்க்சிய தத்துவத்தை சரியென உலகுக்கு உரசிக்காட்டியவர் லெனின்.
ஜார் மன்னனின் கொடும்கோன்மையிலிருந்தும் அன்று ரஷ்யாவை சூழ்ந்திருந்த ஏகாதிபத்தியத்திலிருந்தும் மக்களை விடுதலை அடையச் செய்யும் நடைமுறையை உலகுக்கு காட்டியவர் தோழர் லெனின்.


நாட்டின் பிரச்சனைகள்
உலக நாடுகளில் உள்ள கனிம வளங்களை தங்கள் வர்த்த லாபத்திற்காக சுரண்டியது போல நம் நாட்டிலும் ஆங்கிலேய ஆட்சி கனிம வளங்களை சுரண்டியது. பாட புத்தகத்தில் கூட படித்திருப்போம். அது தான் ஏகாதிபத்திய ஆட்சி.  இந்திய சுதந்திர போராட்டம் என்பது உண்மையிலேயே வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனிய இந்திய மக்களின் போராட்டம் தான் அது.
எண்ணெய்வளத்தை கைப்பற்ற ஈராக்கில் கால் வைத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தை எதிர்த்து நடத்தும் ஈராக் மக்களின் போராட்டம் என்பது காலனிய மக்கள் நடத்தும் போராட்டம் தான் அது.

ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிய காலனிய மக்களின் பிரச்சனை ஒரு வர்க்கப்பிரச்சனை தான்.
அவர்கள் நடத்தும் போராட்டம் என்பதும் வர்க்க போராட்டம் தான்.
முதலாளித்துவ நாடுகளில் உழைக்கும் மக்களுக்கு நிலவும் பிரச்சனை வர்க்கப்பிரச்சனை தான். அமெரிக்காவில் கருப்பின மக்கள் நடத்தும் போராட்டம் என்பதும் வர்க்கப் போராட்டம் தான்.
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை வர்க்கப்பிரச்சனை தான்.
மக்களின் பிரச்சனைகள் அனைத்துமே வர்க்கப்பிரச்சனைகள் தான்.
இந்த வர்க்கப்பிரச்சனைகளுக்கு வர்க்கபோராட்டத்தின் மூலம் முடிவு கட்டியவர் தோழர் லெனின்.
மக்களின் பிரச்சனைகள்
கூலி விவசாயிகளின் பிரச்சனை, தொழிலாளிகள் பிரச்சனை, சிறு தொழில் செய்வோர்க்கும் ஏற்படும் பிரச்சனை, ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்படும் பிரச்சனை,  ரிக்சா ஓட்டுபவருக்கு உள்ள பிரச்சனைகள் என்று மக்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுமே வர்க்கபிரச்சனைகள் தான்.
ஆக, மக்கள் தங்கள் பாவங்கள் என்று கருதும் இந்த வர்க்க பிரச்சனைகளுக்கும் இயேசுவின் இரத்தமும் அவர் வருகையும் தீர்வு ஒன்றும் தர முடியாது. இந்த பிரச்சனைக்களுக்கு ஒரே தீர்வு சோசலிசம் தான்.
மனிதர்கள் பிறவியிலேயே பாவப்பட்டவர்கள் என்று பைபிள் கூறுகிறது. ஆனால் இந்த உலகத்தை தங்கள் உழைப்பால் அழகானதான ஆக்கப்பூர்வமானதாக செய்ய வல்லவர்கள் மனிதர்கள் என்று  கூறுவது சோசலிசம்.
சொர்க்கம் விண்ணுலகில் இருக்கிறதென்ற கட்டுக்கதையை உடைத்து மண்ணுலகில் சொர்க்கத்தை படைக்க நமக்கு வழிகாட்டுவதே சோசலிசமே!
சோசலிச சமுதாயம் படைக்க நமக்கு தேவை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்னும் கோட்பாடும் செயல் முறையும். இந்த கோட்பாட்டையும் செயல்முறையையும் வகுத்துக்காட்டி அதை நிரூபித்தவர் தான் தோழர் லெனின்.


அதனால் தான் துணிந்து கூறுவோம்,
பாவத்திலிருந்து(?) விடுதலை கொடுப்பது இயேசுவின் இரத்தமல்ல.. லெனினியமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக