வெள்ளி, 18 நவம்பர், 2011

ஒழுக்கத்தைவிட பக்தி முக்கியமானதா?

.
இன்று நாம் மக்களிடையில் பார்ப்பனர்களும், அவர்களது பத்திரிகைகளும், குருமார்கள் என்பவர்களும் கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும் என்பதையே முழு மூச்சாகக் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்

ஒழுக்கமா? பக்தியா?
பார்ப்பனத் தலைவரான ராஜாஜி அவர்கள், இன்று நேற்றல்லாமல் பல ஆண்டுகளாகவே, மக்கள் “கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும்” என்பதையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி செய்து வருவதில் இவர்,”ஒழுக்கத்தைவிட பக்தியே முக்கியமானது” என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கட்கு இன்று பக்தியைப் பற்றி இவ்வளவு அக்கறை வந்ததன் காரணம் என்ன என்பதை மக்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.

பக்தி ஆடுகிறது.

நம் நாட்டு மக்கள் இன்று ஏராளமாக அதாவது 100க்கு 50 பேருக்கு மேல் கல்வி அறிவு ஏற்படும்படி ஆக்கிய பின்பும், சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் ஏற்பட்ட பின்பும் பலமான பிரச்சாரம் நடந்து வருவதுடன் பெரும்பாலான மக்களுக்கு இயற்கையாகவே கடவுள், மத நம்பிக்கைகளில் பெரும் ஆட்டம் கொடுத்து விட்டது.

மாணவர்கள் இடையிலும் ஆதாரம் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் இடையிலும், கடவுள், மத நம்பிக்கை பெரிதும் குறைந்து வருகிறது. இந்த மனித சமுதாயத்தில் இன்று இருந்துவரும் ஜாதிப் பாகுபாடு அடியோடு அழியும்படியான தன்மையை உண்டாக்கி வருகிறது.

மற்றொரு கேடு

இது மாத்திரமல்லாமல் பார்ப்பனரின் வாழ்வுக்கு கடவும், மதம் மாத்திரமல்லாமல், மற்றொரு ஆதாரமாயிருந்த அரசியலிலும் புகுந்து, பார்ப்பனரின் (சாதி) உயர்வுக்கு மற்றொரு கேட்டினையும் அளித்துவருவதாக ஆகிவிட்டது. எனவேதான், பார்ப்பனர்கள் நம் மக்களை கடவுள், மத, பக்தியின் பெயரால் முட்டாள்களாக ஆக்குவதிலும், கல்வியின் பெயரால் நம்மவர்களை தரமற்றவர், திறமையற்றவர் என்பதாக ஆக்குவதிலும் தீவிர முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

அதன் காரணமாகவே, இன்று பார்ப்பனர், பார்ப்பனத் தலைவர்கள், அவர்களது குருமார்கள், பார்ப்பனப் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவரும் பக்திப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி விட்டார்கள்.

எல்லாம் சுயநலம்

சாதாரணமாக “பக்தி” என்பது ஒரு மனிதனுக்கு வெறும் பச்சைச் சுயநலமே ஒழிய, அதனால் மற்ற மக்கள் எவருக்கும் எவ்விதப் பயனும் இல்லை என்று நான் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கூறி வந்திருக்கிறேன்.

இது, பார்ப்பனரின் உயர் வாழ்வுக்கும், நம் இழிதன்மைக்குந்தான் பயன்படுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. ஆகவே பக்தி என்பதெல்லாம் முட்டாள்தனமும், புரட்டும், பயனற்ற தன்மையும் கொண்டது தான் என்பதை நம் மக்கள் இனிமேலாவது உணர வேண்டும்.

லஞ்சப்பேர்வழிகளின் பூசை

சமுதாயத்தில் பெரும்கேடு விளையக்காரணமாக இருப்பவர்களும் பெரும் லஞ்சம் பேர்வழிகளும் தான் பூசை, வணக்கம், பக்தி என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு பெரிதுபடுத்துவார்கள்; துள்ளிக் குதிப்பார்கள்.

அதிக பக்தி, பூசை, தானம், தர்மம், உபயம், கட்டளை உள்ள வியாபாரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆகவே, மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஒருவித ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதன் காரணமாக உண்டானது தானே ஒழிய, மனிதர்களை ஒழுக்கமுடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படிச் செய்யவோ அல்ல என்பதை அறிவுள்ளவர்கள் - சிந்திக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக நம்பி உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

தந்தை பெரியார் - நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 34-35

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக