செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12
பூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா? மனிதனா?
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
பூமியின் வடிவம் குறித்த அந்த பதிவில், உருண்டை என குரான் கூறுவதாக சொல்லப்படும் வசனங்களில் பெரும்பாலான வசனங்கள் பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாமல் இரவு பகலின் காட்சியை விவரிக்கும் வசனங்களாக இருக்கின்றன என்பதையும்; தஹாஹா, துல்கர்னைன் குறித்த வசனங்கள் பொய்யாகவும், வலிந்து ஏற்றப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதையும்; இன்னும் ஏராளமான வசனங்கள் பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளன என்பதையும் விளக்கியிருந்தேன். இவற்றில் தஹாஹா குறித்து அந்த வசனத்திற்கு ஜாஹிர் நாயக் தவறான விளக்கம் கொடுத்து வருவதாக நண்பரும் சேர்ந்து கூறியிருப்பதால் அந்த வசனத்தை தள்ளுபடி செய்துவிடலாம். ஆனால் ஜாஹிர் நாயக் மட்டும் தான் வசனங்களுக்கு பொருந்தாத அறிவியல் விளக்கம் கூறியிருக்கிறாரா? வேறு யாரும் கூறுவதில்லையா? துல்கர்னைன் வசனத்திற்கு பிஜே அளிக்கும் விளக்கம் எப்படி அறிவியலற்று இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
முதலில், இரவு பகல் காட்சிகளை விவரிக்கும் வசனங்கள் குறித்து நண்பர் குழப்பமான வாக்கியங்களில் கடந்து செல்கிறார். அந்த வசங்களில் பூமியின் வடிவம் குறித்த விளக்கம் இருக்கிறதா? இல்லையா? நண்பர் அதை சரி காண்கிறாரா? மறுக்கிறாரா? \\அதை தவறு என்று மறுக்கவில்லை. மாறாகஇதை 1400 வருடங்களுக்கு
முன் என்ன 2800 வருடங்களுக்கு முன்இருந்தவர்களாலும்
சொல்ல முடியும் என்கிறார். ஆக, இதற்களிக்கும்விளக்கத்தில்
எந்த மறுப்பும் அன்னாருக்கில்லை என்றாகிவிட்டது// என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அந்த வசனங்கள் பூமி உருண்டை என விளக்குவது போலவும், அதை நான் தகுந்த முறையில் மறுக்கவில்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். ஆனால் புளி போட்டு விளக்கும் அளவுக்கு அந்த வசனங்களில் ஒன்றுமில்லை என்பதை அந்த பதிவில் தெளிவு படுத்தியிருக்கிறேன். \\ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள்// ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது, தொடர்கிறது, அடுத்தடுத்து வருகிறது, ஒன்றை ஒன்று மூடுகிறது இதுபோன்று தான் அந்த வசனங்கள் இரவு பகலை விவரிக்கின்றன. மனிதன் தோன்றிய நாள் முதல் இரவு பகல் இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது. இதைக் கூறுவதற்கு, ஆண்டவனிடம் டியூசன் படித்தவர்களால் மட்டும் தான் முடியுமா? ஆனால் அந்த வசனங்களில் பூமி உருண்டை என கூறப்பட்டிருப்பதாக ஜல்லியடிப்பதற்கு நிச்சயம் ஆண்டவனிடம் டியூசன் படித்திருக்க வேண்டும். அவ்வாறு டியூசன் எதுவும் படிக்கவில்லை என்பதால் தான் நண்பர் அவைகளில் உருட்டு விளக்கங்கள் கொடுக்காமல் தவிர்த்துக் கொண்டார் போலும்.
துல்கர்னைன் வசனங்களை எடுத்துக் கொண்டால், அந்த வசனங்களில் பிஜே அவர்கள் துப்பறிந்து பூமி உருண்டை என்று கண்டுபிடிப்பதை இதை சொடுக்கி கண்டு களியுங்கள். இந்த விளக்கத்தைத் தான் நண்பரும் தன்னுடைய மறுப்பில் எடுத்து வைத்திருக்கிறார். அதாவது பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்கலாம். அப்படி பார்ப்பதாக குரான் கூறுவதால் பூமி உருண்டை என்று உறுதிப்படுகிறது என்கிறார். இது எப்படி அடிப்படையற்றதாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம். திசைகள் என்பவை மனிதனுக்கான அடையாளங்கள் தாம், அண்ட வெளியில் திசைகள் இல்லை. சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, மறையும் திசை மேற்கு என்றால் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் சென்று மறைவதில்லை. பூமி சுழல்வதால் அப்படியான தோற்றம் வருகிறது. இப்போது ஒருவர் பூமியில் கிழக்கு நோக்கி பயணம் மேற்கொள்கிறார்(படம்) என்று கொள்வோம். அவரின் முகத்திற்கு எதிரே சூரியன் இருப்பதால் கிழக்காக செல்கிறார் என்று பொருள். தொடர்ந்து 90 பாகை கடந்ததும் அவர் தன் பாதையில் இயல்பாக மேற்கு நோக்கி திரும்பி விடுவாரா? நிச்சயம் மாட்டார். பூமியின் இரவுப் பகுதியில் நுழையும் போது அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. ஏனென்றால் சூரியனின் மறைவு அவரது பின் தலையில் நிகழும். 180 பாகை கடந்ததும், மீண்டும் அவர் சூரியன் உதிப்பதை காண முடியும். இப்படி அவர் எத்தனை சுற்றுகள் பூமியை சுற்றி வந்தாலும், சூரியன் உதிப்பதை மட்டுமே திரும்பத் திரும்ப காண முடியுமேயன்றி ஒருபோதும் அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. சூரியனின் மறைவை காண வேண்டுமென்றால் அவர் திரும்பி தன் திசையை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே ஒருவர் கிழக்காகவோ, மேற்காகவோ எந்த திசையில் சென்றாலும் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ ஏதாவது ஒன்றை தான் காண முடியுமேயன்றி இரண்டையும் காண முடியாது. இரண்டையும் கண்டிருக்கிறார் என்றால், அவர் தன் திசையை மாற்றியிருக்கிறார் என்பதைத்தவிர வேறு ஒரு பொருளும் இல்லை. இதைத்தான் பதிவில் இப்படி \\நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது// சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.
இதே துல்கர்னைன் வசனத்தில் முதலில் ஒரு பாதை, பின்னர் ஒரு பாதை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அவர் இருவேறு திசைகளில் பயணம் செய்திருக்கிறார் என்று கூறியிருந்ததை மறுத்து நண்பர் \\அவர் இது வரை பயணம் செய்த வழி தரைவழிப்பயணம் எனபதையும் மேற்குத்திசை நோக்கி பயணம் செய்தார் என்பதையும் ….. பின்னர் ஒருவழியில் சென்றார் என்பதன் அர்த்தம் கடல் மார்க்கமாக அல்லது நீர்மார்க்கமாக பயணம் செய்ததை குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்// என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொள்வோம். என்றாலும் அவர் திசையை மாற்றாமல் ஒரே நேர்கோட்டில் சென்றார் என்பதை எப்படி கூறுகிறார்கள்? ஒரே திசையில் தான் சென்றார் என்பதை அந்த வசனத்தில் எந்த சொல்லிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்? அவர்களுக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானலும் வளைத்து, நெளித்து பொருள் சொல்வார்களா?
குரான் 2800 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாவற்றையும் கூறிவிட்டது என்று வாய்ப்புக் கிடைத்த எல்லோருமே கூறித் திரிகிறார்கள். ஜாஹிர் நாயக் கூறியது தவறு என்று நண்பர் கூறுகிறார். பிஜே கூறியதை என்ன செய்வது? ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னால் சௌதி இமாம் ஷேக் இபின் பாஸ் பூமி தட்டை என்பதை ஏற்காதவர்கள் குரானை மறுக்கும் காபிர்கள் என்று வரலாற்று புகழ்மிக்க பத்வாவை வழங்கியிருக்கிறார் என்பது நண்பரின் கவனத்திற்கு.
பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாத வசனங்களை உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்து நீட்டி பூமி உருண்டை என்று கதற வைக்கிறார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும்; பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருளில் குறிப்பிடும் வசனங்களைக் கூட எப்படி உருண்டை என்று பொய் சாட்சி சொல்ல வைத்துவிடுகிறார்கள் என்பதை அந்த பதிவில் விளக்கியிருந்தேன். அதை மறுக்க வேண்டும் என நினைத்த நண்பர் எப்படி மறுப்பது என்பது புரியாததால் அறிவை ஐயப்படுகிறார். பூமியை விரித்தான் என்று கொண்டாலும், பூமியில் விரித்தான் என்று கொண்டாலும் அங்கு பூமி உருண்டை எனும் பொருளை அதிலிருந்து பெறமுடியாது. இதை தெளிவாகவே கேட்டிருக்கிறேன், \\ எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?// சதுரமாக இருந்தாலும், முக்கோணமாக இருந்தாலும் விரிப்பை விரிக்க முடியும். பூமியில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பு எந்த வடிவின் மேல் விரிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு பதில் சொல்ல இன்னொரு முகம்மதா வருவார்? இருக்கும் முகம்மதுகள் தான் பதில் கூற வேண்டும்.
முகம்மது பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே பூமி உருண்டை என்பது மக்களுக்கு தெரிந்து தான் இருந்தது. கடலாடிகள் தங்கள் பட்டறிவின் மூலமும், அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலமும் அதை வெளிப்படுத்தி இருந்தார்கள். இதில் புளகமடையும் விதமாக நண்பர் தன் நேர்மையுணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே செய்தியை நானும் அவரும் கூறியிருப்பதை பாருங்கள். \\கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. ….. பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர்// இது நான். \\இந்தியா, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் குறிப்பிட்டது முகம்மது
நபிக்குஎப்படித் தெரியும்?// இது நண்பர். அரபியர்களை மட்டும் நேர்மையாக மறைத்து விட்டார். தொடர்ந்து எனக்கு நெத்தியடி, சாட்டையடி முதல் இன்னும் பலவாறான அடிகளை அடிப்பதாக எண்ணிக் கொண்டு கேள்விகளாக அடுக்கியிருக்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா, முடியல (வடிவேலு பாணியில் படித்துக் கொள்ளவும்)
பூமி உருண்டை என்று குரான் கூறுகிறதா? என்பது எடுத்துக் கொண்ட தலைப்பு. ஆம் கூறுகிறது என்பதாக சுட்டப்படும் வசனங்களை மூன்றாக பிரித்து 1) இரவு பகல் காட்சி வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 2) தஹாஹா, துல்கர்னைன் வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 3) தட்டை என்று பொருள் கொள்ளத்தக்க வசனங்களிலும் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். மேலதிகமாக முகம்மதின் காலத்திற்கு வெகுமுன்பே பூமி உருண்டை என்பது நிருபணமாகியிருக்கிறது என்பதையும் எடுத்தியம்பி இருக்கிறேன். இதை மறுக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கும் நண்பர், அறிவுடன் தான் எழுதுகிறேனா? என்றும் கேட்டிருக்கிறார். மெய்யாகவே நண்பருக்கு அறிவு முற்றி இருக்கும் துளைகள் வழியாகவெல்லாம் வெளியேறிக் கொண்டிருப்பதாக எண்ணினால் உருப்பெருக்கி கொண்டு குரானின் வரிகளுக்கிடையே தேடி பூமி உருண்டை என்று கூறும் வசனங்களை கூற முயலட்டும், அவரால் முடிந்தால்.