சனி, 17 டிசம்பர், 2011

டைனாசோர்கள் எப்படி அழிந்து போயின.. ஆதாரங்கள் தேடும் விஞ்ஞானிகள்.

 
இன்று இந்தப் பூமிப்பந்தில் மனிதன் ஆதிக்கம் செலுத்துவது போன்று 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஆதிக்கம் செலுத்திய ராட்சத பல்லி வகைகள் என்று கூறப்படும் டைனாசோர்களும் இதர ராட்சத விலங்குகளும் எப்படி பூண்டோடு பூமிப்பந்தில் இருந்து அழிக்கப்பட்டன என்பது தெளிவான விடை காண முடியாத வினாவாகவே இருந்து வந்துள்ளது.

தற்போது அதற்கு விடை தேடி சான்றுகள் அடிப்படையில் ஒரு திடமான விளக்கத்தை விஞ்ஞானிகள் அளிக்க முன் வந்துள்ளனர்.//பாறைகள் சொல்லும் ஆதாரங்கள்.//

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 தொடக்கம் 15 கிலோமீற்றர்கள் விட்டமுடைய ராட்சத விண்பாறை அல்லது வால்நட்சத்திடம் ஒன்று இன்றைய மெக்சிகோ பகுதியில், துப்பாக்கிச் சன்னம் ஒன்றின் வேகத்தை விட 20 தடவைகள் அதிகரித்த வேகத்தில் மோதி ஜப்பான் நாகசாக்கி, கிரோசிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுகள் வெளிப்படுத்திய சக்தியை விட ஒரு பில்லியன் மடங்கு அதிகரித்த சக்தியை பிறப்பித்ததுடன் பெருமளவு தூசிகளையும் கிழப்பி பூமியை இருட்டி விட்டதால் தான் இந்த டைனாசோர்கள் எனப்படும் ராட்சதப் பல்லிகள் அழிந்து போயிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தற்போது திடமாகக் கூறுகின்றனர்.

இந்த கொள்கைக்கு மாற்றுக் கொள்கையாக பூமியில் திடீர் என்று தொடர்ச்சியாக ஏற்பட்டு சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்குத் தொடர்ந்த ராட்சத எரிமலை வெடிப்புக்களின் விளைவாக தோன்றிய பெருமளவு பாறைக் குழம்புகள் பூமியெங்கும் பரவி இந்த டைனாசோர்களை அழிந்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்ற போதிலும்.. தற்போது விண்பாறை ஒன்று பூமியோடு மோதி ஏற்பட்ட தாக்கத்தின் விளைவால் தான் இந்த ராட்சதப் பல்லி இனங்கள் பூமியில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளன என்று திடமாக கூற விளைகின்றனர் விஞ்ஞானிகள்.//ராட்சத விண்கல் மோதியதாகக் கருதப்படும் பூமியின் பகுதி.//

எதுஎப்படி இருப்பினும் உண்மை என்பது அறிவியலின் பார்வை முன் கிடைக்கும் சான்றுகளுக்கு அப்பால் கிடைக்காத சான்றுகளுக்குள் கூட புதைந்து இருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்வதோடு நாளை மனித இனமும் இந்தப் பூமிப் பந்தில் இருந்து இப்படி துடைத்தழிக்கப்பட நேரலாம் எனபதையும் கவனத்தில் எடுத்து ஆராய்ச்சிகளை தொடர்வதும் பாதுகாப்புக்களை மேற்கொள்வதும் நன்றே. ஆனால் அது மனிதன் முன் இருக்கும் இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள இயற்கை விட்டுள்ள மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். சவாலை அறிவியல் கொண்டு முறியடிக்க முடியுமா..??! நிச்சயம் அதைச் செய்ய மனிதன் தொடர்ந்து முயல்வான் என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாக இன்றிருக்கிறது. அதையே இந்த ஆய்வு விளக்கமும் நமக்கு காட்டி நிற்கிறது.

மேலும் காணொளியுடன் கூடிய மேலதிக செய்தி இங்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக