புதன், 21 டிசம்பர், 2011

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 10

 


குரான் கூறுவது அறிவியலாகுமா?
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
குரான் கூறுவது அறிவியலாகுமா? எனும் பதிவில் முஸ்லீம்கள் இஸ்லாத்தை மதமல்ல மார்க்கம் என்று கூறுவது சரியானதா? என்பது முதலாவதாகவும் குரானில் இருப்பதாக கூறப்படும் அறிவியல் செய்திகள் மெய்யாகவே அறிவியலார்ந்து இருக்கிறதா என்பது முதன்மையானதாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.  இதற்கு மறுப்பெழுதும் ஹோதாவில் குதித்த நண்பர் உள்ளீடில்லாமல் உடைபட்டிருக்கிறார்.  மறுப்பு என்றால் எழுதப்பட்டிருந்ததை உள்வாங்கி மறுத்து தன்னுடைய நிலைப்பாட்டை நிலைப்படுத்த வேண்டும். ஆனால் நண்பர் செய்திருப்பது என்ன? மறுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். பாவம் அவரால் முடியவில்லை.
இஸ்லாம் மதமா? மார்க்கமா? என்பதை எடுத்துக் கொள்வோம்.  அது மார்க்கமல்ல மதம் தான் என்பதற்கு சில கருத்துகளை எடுத்துவைத்திருந்தேன்.
  1. எல்லா மதங்களும் நல்லதோ கெட்டதோ தமக்கென்று ஒருவாழ்முறையை நெறிப்படுத்துகின்றன.
  2. எல்லா மதங்களும் இதை செய்ய வேண்டும் இதைச் செய்யக்கூடாது என்று வரையறைகளை கொண்டிருக்கிறது.
  3. எல்லா மதங்களும் தங்களை விட்டு வெளியேறுவோரை எச்சரிக்கின்றன. இணைய விரும்புவோரை வரவேற்கின்றன.
  4. எல்லாமதங்களும் விதிக் கொள்கை மூலம் மக்களை சிந்திக்கும் திறனற்ற பொம்மைகளாகவே கருதுகின்றன.
  5. எல்லா மதங்களும் பரிசீலனைக்கு இடமின்றி ஒற்றைவிதமான சிந்தனையாக இருக்கிறது.
இவைகளில் இஸ்லாமும் ஒன்றுகிறது. பின் எப்படி ஏனையவை எல்லாம் மதம் இஸ்லாம் மட்டும் மார்க்கம் என்பது? இதற்கு மறுப்பாக நண்பர் கூறியது என்ன?
  1. ஏனைய மதங்கள் வாழ்முறையாக சிலவற்றை கூறி சிலவற்றை விட்டிருக்கின்றன.  இஸ்லாம் மட்டுமே எல்லாத் துறைகளுக்குமாக வாழ்முறைகளை கூறியிருக்கிறது.
  1. மதங்கள் மட்டுமல்ல கொள்கைகளும் கூட செய்யவேண்டியவை செய்யக் கூடாதவை என்று வகைப்படுத்துகின்றன. அதில் மெசேஜைத்தான் பார்க்க வேண்டும்.
  2. எல்லா மதங்களையும் போலவா இஸ்லாம் கூறுகிறது (வேறு எப்படி கூறுகிறது என்பது அவருக்கே வெளிச்சம்)
  3. இதில் இஸ்லாம் எப்படி வேறுபடுகிறது என்று கூறவில்லை.
  4. ஆம் அப்படித்தான்.
இந்த ஐந்து கருத்துகளில் முதல் கருத்தில் மட்டுமே ஏனைய மதங்களை விட இஸ்லாம் சற்று அதிகமாக கூறுகிறது என்றிருக்கிறார்.  வாதத்திற்காக அது சரி என்று கொண்டாலுமே கூட, ஏனையவை எல்லாம் மதம் இஸ்லாம் மட்டுமே மார்க்கம் என்பதை அது எப்படி நிரூபிக்கும்? வேண்டுமானால் ஏனையவை சாதா மதம் இஸ்லாம் தூக்கலான மதம் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால் எந்த அடிப்படையில் மார்க்கம் என்பது? இஸ்லாம் ஒன்றும் தனிச்சிறப்பாக எல்லாத்துறைகள் குறித்தும் கருத்து கூறிடவில்லை. புதிதாக என்ன எழுந்தாலும் ஏற்கனவே இருப்பவற்றில் ஒத்த கருத்துடையவைகளை தேடி அதிலிருந்து ஒரு புரிதலுக்கு வருவார்கள். இதைத்தான் எல்லா மதத்திலும் செய்கிறார்கள்.  அரிசி மாவில் கோலம் போடுவது எறும்பு போன்ற சிறு உயிர்களுக்கு தீனி என்பதில் தொடங்கி கன்ஃபெசன் கூண்டில் மன அமைதி கிடைக்கிறது என்பது வரை தேவைகளுக்கு ஏற்ப வேத வசனங்களை, மதச் சடங்குகளை வாழ்க்கையோடு பொருத்திக் கொள்கிறார்கள்.
இதை, இஸ்லாம் எல்லாவற்றையும் கூறியிருக்கிறது, ஏனைய மதங்கள் கொஞ்சம் குறைவாக கூறியிருக்கிறது என்பது அவரவர் மத நம்பிக்கையைப் பொருத்தது. இவைகளைக் கொண்டு எப்படி இஸ்லாம் மதமல்ல மார்க்கம் என்று கூறுவது? அதுவல்லவா முதன்மையான கேள்வி. இதற்கு மறுப்பு கூறுவதை விடுத்து என்னுடைய கட்டுரையின் பகுதிகளை ஆங்காங்கே எடுத்துப் போட்டு அதற்கு பதில் என்ற போர்வையில் ஏதேதோ எழுதிவைத்தால் அது மறுப்பாகிவிடுமா? இதை எப்படி எடுத்துக் கொள்வது, உளறியிருக்கிறார் என்றா? திணறலை மறைக்க முடியாமல் சமாளித்திருக்கிறார் என்றா? ஒருவேளை ஆணித்தரமான பதில்களின் மூலம் எனக்கு சாட்டையடி கொடுத்திருப்பதாகக் கூட நண்பர் எண்ணியிருக்கக் கூடும்.  என்னசெய்வது மூட நம்பிக்கைகளையே வாழ்க்கையாக கொண்டவர்களல்லவா?
அடுத்து, குரானின் அறிவியலை அறியாமைக்காலம் என்பதிலிருந்து தொடங்கியிருக்கிறார்.  அறியாமைக் காலம் எனும் சொல்லை ஒரு சொல் எனும் அடிப்படையில் இருந்து நண்பர் அணுகியிருக்கிறார், அதனால் தான் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலமா? முகம்மதின் காலம் அறியாமைக் காலம் தான் என்கிறார். ஆனால் நான் அறியாமைக் காலம் என்பதை இஸ்லாமிய கலைச் சொல்லாக பயன்படுத்தியிருக்கிறேன்.  என்னுடைய கட்டுரையை நிதானமாக படித்திருந்தால் இதை அவர் உணர்ந்திருக்க முடியும்? ஆனால் மறுத்து எழுத வேண்டும் என்பதற்காகவே படித்திருப்பார் போலும் அதனால் தான் புரியவில்லை.
எந்தக் காலப் பகுதியையும் அதற்குப் பிந்தைய காலப் பகுதியோடு ஒப்பிட்டால் முந்தைய காலம் அறியாமைக் காலமாகவே இருக்கும். ஏனென்றால், சமூக அறிவியல் வளர்ச்சியடைகிறது. ஆனால் ஒரு சொல்லாக அறியாமைக் காலம் என்பதற்கும் இஸ்லாமிய கலைச் சொல்லாக அறியாமைக் காலம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முகம்மதின் சமகாலத்தவர்கள் கூட அறியாமைக் காலம் எனும் சொல்லை சரளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். குரான் கூட இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறது. அதாவது சம காலத்தையே அறியாமைக் காலம் அறிந்த காலம் எனப் பிரித்திருக்கிறார்கள்.  அதாவது ஒருவனின் வாழ்வில் எப்போது இஸ்லாம் நுழைகிறதோ அப்போதிலிருந்து அறியும் காலம் தொடங்குகிறது. அதற்கு முந்திய காலமெல்லாம் அறியாமைக் காலம். முகம்மதின் சமகாலத்தவர்களும், குரானும் இந்தப் பொருளில் தான் அறியாமைக் காலம் எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள் பயன்படுத்தியிருக்கிறது.  ஆனால் தற்போதைய இஸ்லாமிய மதவாதிகள், பரப்புரையாளர்கள் இஸ்லாத்திற்கு முன்னர் உலகம் எதையும் அறியாதிருந்தது, அந்த அறியாமைக் காலத்தில் வந்த குரானின் வசனங்கள் இன்றைய அறிவியலைப் பேசுகிறது என்று அறியாமைக் காலத்திற்கு புது அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த அழுத்தத்திலிருந்து தான் குரானின் அறிவியல் பீறிட்டுக் கிளம்புகிறது.
இதேபோன்று இதனுடன் தொடர்புடைய சொல் தான் ஓதத் தெரியாத உம்மி முகம்மது என்பது. இவ்வளவு அறிவியல் பழுத்து தொங்கிக் கொண்டிருக்கும் குரான் வசனங்களை கூறியது எழுதப் படிக்கத்தெரியாத முகம்மது, எனவே குரானை இறக்கியது அல்லாதான் என்று காட்டுவதற்காக. அதாவது, திரைப்படங்களில் கதைநாயகன் அழகானவனாக தெரியவேண்டும் என்பதற்காக அழகு குறைந்ததான ஒப்பனையில் சிலரை நண்பர்களாக இணைப்பார்களே அது போல. குரானின் அறிவியலை ஜாக்கி வைத்து தூக்குவதற்காக முகம்மதுவுக்கு படிப்பறிவில்லாத பிம்பத்தைப் பூசுகிறார்கள். ஆனால் இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் அன்று கல்வி என்பது எப்படி இருந்தது? இன்று இருப்பது சான்றிதழ் கல்வி, முன்னர் இருந்தது செயற்பாட்டுக் கல்வி.  எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது அன்றைய நிலையில் கட்டாயமில்லை.  மிகத் தேவையுள்ளவர்கள் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர். அன்றைய பொழுதில் எழுதப் படிக்கத் தெரிவது கல்வியின் அடையாளமல்ல, தேவையின் அடையாளம்.  பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சியின் விளைவாகவே கல்வி சான்றிதழ் முக்கியத்துவம் கொண்டதாக, எழுதப் படிக்கத் தெரிவது கல்வியின் அடையாளமாக மாறியது. தெளிவாகச் சொன்னால் இயந்திரங்களை இயக்குவதற்கு நிலப்பிரபுத்துவ கால உழைக்கும் மக்களைப் போல் உடலுழைப்பு மட்டுமே தகுதி என்பது போதுமானதாக இல்லை எனும் தேவை ஏற்பட்ட பிறகே, பரந்துபட்ட மக்களுக்கு படிப்பறிவு புகுத்தப்பட்டது. முகம்மதின் காலத்தில் கல்வி என்பது அனுபவ அறிவாக, செயல்படும் திறனாகத்தான் இருந்தது. அதேநேரம் முகம்மது இன்றைய தகுதியில் ஒரு முதுநிலை செயல் அலுவலர் (சீப் எக்ஸிக்யூடிவ்) போன்று மதிக்கப்பட வேண்டியவர்.  ஒரு பன்னாட்டு வணிக நிறுவனத்தில் (கதீஜாவின் வணிகம் சிரியா, எகிப்து போன்ற நாடுகளோடு தொடர்பு கொண்டிருந்தது என்பதை நினைவில் கொள்க) திறம்பட பணியாற்றி அதன் முதலாளியால் கவரப்பட்டவர் என்பதை கவனம்கொள்ள வேண்டும்.  இதைத்தான் குரானின் அறிவியலை ஊதிப் பெருக்குவதற்காக எழுதப் படிக்கத்தெரியாதவர் என்று பீலா விடுகிறார்கள்.
மறுப்புக்கு திரும்புவோம்,  குரானில் அறிவியல் ததும்பும் வசனங்கள் என்று மதவாதிகள் கூறும் வசனங்களில் எந்த ஒன்றாவது நேரடியாக அறிவியலை அறிவியல் மொழியில் பேசுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.  இதற்கு நண்பர் உட்பட எல்லோரும் ஆயத்தமாக கூறும் பதில் குரான் அறிவியல் நூல் அல்ல என்பதே.  அதிலிருக்கும் அறிவியலெல்லாம் அதில் ஏற்றப்பட்டிருக்கும் அறிவியல் தான். எடுத்துக்காட்டாக, “உங்களுக்கு பயன்படுவதற்காக மண்ணாலான பானையை ஆக்கித் தந்திருக்கிறோம். சிந்திக்க மாட்டீர்களா?” என்றொரு வசனம் இருப்பதாக கொண்டால்,இந்த வசனம் 1400 என்ன 2400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பயன்பாட்டில் இருந்தாலும் ஒரு சாதாரண வாக்கியமாக இருக்கும். எதுவரை? பின்னர் ஒரு காலத்தில் மண்ணிலிருந்து சிலிகான் என்றொரு பொருளை பிரித்தெடுத்து அந்த சிலிகான் மனிதனின் கணிணி உட்பட பெரும்பாலான செயல்பாட்டிற்கு துணையாகும் வரை. அதன்பிறகு பார்த்தாயா அல்லாவின் மகிமையை! சிலிகான் என்றொரு பொருளை மண்ணிலிருந்து கண்டுபிடித்து அது மனிதனுக்கு பெருமளவில் பயன்படும் என்று குரான் 2400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்று ஜல்லியடிக்க வேண்டும்.  இதுதான் குரானில் இருக்கும் அறிவியல்.
இப்படி குரானில் மட்டும் தான் அறிவியல் இருக்கிறதா? பண்டைய இலக்கியங்கள் அனைத்திலும் அறிவியல் அவர்களையறியாமல் எட்டிப் பார்த்திருக்கிறது. குரானைப் பார்ப்பது போல் உருப்பெருக்கிப் பார்த்தால் தமிழ்வாணன் கதைகளில் கூட முப்பதாம் நூற்றாண்டு அறிவியலை கண்டுபிடிக்க முடியும். அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் அந்தக் கட்டுரையில் காட்டியிருந்தேன்.  அதற்கு மறுப்பு எழுதியிருக்கும் நண்பரின் அறிவு கண்டு புளகமடைந்து விட்டேன்.
மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியதொரு நிலை…….  மன்னன் சென்ற தேரின் தடம், சென்று கொண்டேயிருந்து திடீரென விண்ணில் ஏறிச் சென்றது போல் மறைந்துவிட்டது என்று விமானம் குறித்து எந்த அறிவும் இல்லாத காலத்தில் ஒருவரால் எப்படி வர்ணிக்க முடியும்?
ஒரு துகள் துகளாக இருக்கும் அதேநேரம் ஒளியாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்கும் அதே நேரம் குறிக்க முடியாதபடி பேரண்டம் முழுவதிலும் இருக்கிறது. எஃகு கூண்டுக்குள் இருக்கும் ஒரு எலி அதற்கு வெளியே இருப்பதாகவும் கொள்ளமுடியும். ஒரு பொருளின் இருப்பையும் அதன் இயக்கத்தையும் இப்படி விளக்குகிறது குவாண்டம் அறிவியல்.  இந்த நூற்றாண்டின் இந்த அறிவியல் ஈசோ உபனிடதத்தில் இடம்பெற்றது எப்படி? அது நகர்கிறது, அது நகரவில்லை, அது தூரத்தில் உள்ளது, அது அருகேயும் உள்ளது அது உள்ளே இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது. எனக்கு அறிவியல் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால் நண்பர் அளவுக்கு எனக்கு அறிவியல் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஒரே அளவில் இருக்கும் ஆபரணத்தில் எது போலி என்பதை துப்பறிய அதன் அடர்த்தியை எப்படி அளப்பது  என குழம்பிக் கொண்டிருந்த ஆர்கிமிடீஸுக்கு தொட்டியில் மூழ்கிக் குளிக்கும் போது தான் மூழ்கியதால் வெளியேறிய நீரின் அளவுடன் அடர்த்திக்கு தொடர்பு இருக்குமோ என்று சிந்தித்தது தான் ஆர்கிமிடீஸின் அடர்த்தி பற்றிய கோட்பாடு. இதைத்தான் அவ்வையாரும் கூறுகிறார் ஆழ அமுக்கி முகக்கினும் என்று. அவ்வையாருக்கு இந்த சிந்தனை வந்தவழி எது?
சதகூறிட்ட கோணிலும் உளன். அணுவைவிட சிறிய பொருள் இருக்க முடியுமா என்று சிந்திப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத அந்த அறியாமைக் காலத்தில் அணுவை நூறாக உடைத்த அளவில் இருக்கும் அளவிலும் ஒன்று இருக்க முடியும் என யூகித்ததற்கு தூண்டுதலாக இருந்தது எது?
குரானின் வழியில் பார்த்தால் இவைகளையும் அறிவியலாக ஏற்றுக் கொள்ள நேரிடும். ஆனால் இவைகள் மெய்யாக அறிவியலில்லை. அவர்களின் கற்பனை பின்னரான அறிவியல் கூறுகளுடன் ஒன்றிப் போகிறது அவ்வளவுதான். இதே கதை தான் குரானிலும். ஆனால் குரான் இஸ்லாத்திற்கு பசையாக இருப்பதால் அதனை நம்புபவர்களுக்கு அல்லாவையும் அதன் தெய்வீகத்தையும் பிரிக்க முடியாமல் போகிறது. அந்தோ பரிதாபம்! அதை நம்மையும் நம்பச் சொல்கிறார்கள். அது தான் பிரச்சனை.
இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, இனி மனிதன் வாழப் போகும் அத்தனை நூற்றாண்டுகளின் அறிவியல் நுணுக்கங்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குள்ளே மறைவாக சூல் கொண்டுள்ள குரானில் வெளிப்படையாக கூறப்பட்டிருக்கும் ஜின் போன்ற உயிரினங்கள் இருப்பதற்கு என்ன ஆதாரம் என்றால், நண்பர் ஒரு சமன்பாடு சொல்கிறார் பாருங்கள். என்னே ஒரு கண்டுபிடிப்பு. குரானில் இருக்கும் வசனங்கள் அறிவியல் தான் என நிரூபித்து விட்டால், ஒட்டுமொத்தமாக குரானே இறைவன் இறக்கியது என்று நிரூபணம் ஆகிவிடும், அப்படி நிரூபணம் ஆகிவிட்டால், தனித்தனியாக ஒவ்வொரு வசனமாக நிரூபிக்க வேண்டிய தேவையில்லாமல் அத்தனையும் உண்மை என்றாகிவிடும். என்றால் ஜின் இருப்பது உண்மை தானே. கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிப்பது பற்றி செவியுற்றிருக்கிறீர்களா? அதற்கு விளக்கம் வேண்டுமென்றால் நண்பர் இஹ்சாஸை தொடர்பு கொள்ளலாம் தெளிவாக விளக்கமளிப்பார். குரான் இறைவன் தந்தது என்பதும், அதில் அறிவியல் இருக்கிறது என்பதும் முஸ்லீம்களின் நம்பிக்கைக்கு வெளியே ஒன்றுமில்லை. நண்பரோ குரான் இறைவன் தந்தது என்பது அறிவியல் உண்மை என்பது போல் எண்ணிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். விரைந்து மயக்கத்திலிருந்துவிடுபட்டால் அவருக்கு நல்லது.
இறுதியாக, கோல்டன் ஏஜ் ஆஃப் இஸ்லாம் பற்றி கூறியிருக்கிறார். முஸ்லீம்கள் மாங்கா மடையர்கள், அவர்களுக்கும் அறிவியலுக்கும் தொடர்பே இல்லை என்று கூறியது யார்? முஸ்லீம்களில் அறிவியலாளர்கள் இருந்திருக்கிறார்கள், கணிதவியலாளர்களாக, வானியலாளர்களாக பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மதவாதிகள் கூறும் முஸ்லீம்களாக இருந்திருக்கிறார்களா? அல்லது இஸ்லாம் அறிவியலை அரவணைத்ததால் அவர்கள் அறிவியலாளர்களாக இருந்தார்களா? சமூகத்தளத்தில் முஸ்லீம்களாக நடக்கவில்லை என்று யாரை தூற்றுகிறார்களோ அவர்களையே அறிவியல் முஸ்லீம்கள் என்று தூக்கிப் பிடிப்பது வேடிக்கையானது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக