நான் சொன்னால்உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள். பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப்போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவது தான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன? முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது , கடவுள் யாராலும் உண்டாக்கப் படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்கவேண்டும்! மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல் , நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது! இப்போது நீ நினைத்துப்பார் ! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ளவேண்டும்! நீ இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. " தானாக சுயம்புவாகத்தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது. ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதி யாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கும் கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக்கொள்ள வேண்டியவனுக்கும் தாம் கோபம் வரவேண்டும். அதை நான் சமாளித்துக் கொள்கிறேன். - ஈ.வெ.ரா.-உண்மை 14.-3-70 "கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" "கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது. கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே "கடவுள்தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்பு கிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக்கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள் மற்றும் அதற்கு ஆகக்கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள் உற்சவங்கள் பண்டிகைகள் முதலியவைகளை நடத்து கிறவன்கள் செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ , யோக்கியத் தையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவது இல்லை. "கடவுளுக்கு உருவமில்லை குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வவல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்" "கருணையே வடிவானவர்" "அன்பு மயமானவர் " "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும் சக்திகளையும் , தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்விட்டு இந்தக் குணங்களுக்கும் தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மை களை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன். இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்லமுடியுமா? இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக , தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்லமுடியும்? இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு,உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள் , நகைகள் , சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம், ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர். " அன்பும் கருணையும்,ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்" யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான, மக்களை ஆண்களை, பெண்களை கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும் விபசாரம் செய்ததாகவும் , நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர் களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிற வர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்கு கிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன். இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர் களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும். சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 40 கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர் எம்.ஏ. பி.ஏ. ( ஈச்ஷஞ்ச்சு, ங.அ., ஆ.அ.,) படித்த மக்களும் புலவர்கள் வித்வான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பிவருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள் களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய்இருக்க முடியும்? இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண் பெண் கடவுள் களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன். இப்படி நான் எழுதுவதில் சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம். அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! " கோவில்கள் கள்ளர் குகை " என்று கூறிய கிறிஸ்து கொல்லப் பட்டாலும் இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடிமக்கள் "கடவுளுக்கு" மேலாகக் கருதுகிறார்கள். " கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள் மடையர்கள்" என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல பத்துக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாக கருதுகிறார்கள் , இவ்வளவு ஏன்? நம் கண் முன்னால் " கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள். உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக்கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்து வர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன? சிந்தியுங்கள் மற்றும் இந்தப்படியான நம்மை உலகம் - அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும் சிந்தியுங்கள். எவ்வளவோ பொறுமைக்கு மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன். - ஈ.வெ.ரா - உண்மை 14-4-70 "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" "நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்" என்ற தலைப்பில் "உண்மை" மூன்றாவது இதழ் முதல் கட்டுரையில் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என்ற கருத்திற்கு விளக்கமும், நான்காவது இதழ் இரண்டாவது கட்டுரையில் "கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்" என்ற கருத்திற்கு விளக்கமும் எழுதியிருந்தேன் . இந்த மூன்றாவது கட்டுரையில் "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்ற கருத்திற்கு விளக்கம் எழுத ப்படுகிறேன். பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம்என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை ; மற்றெப்படியென்றால் "கடவுளை" மனிதனாகவே கருதிக்கொண்டு மனிதகுணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு , தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ பொருத்தமோ விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டுமென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான். இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும் அறிவாளி என்று சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச்சொல்ல வேண்டுமே ஒழிய யோக்கியர் கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்லமுடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடுவாசல் சொத்துக்களாவது மக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? இது பொது விளக்கமாகும். இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன் மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப் பற்றி ளக்குகிறேன். நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை ! இல்லை !! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன். ஏனெனில் எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத் தான் , மனித உருவத்தைத்தான்,மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப் படும்போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்குதலை, அய்ந்து தலை, ஆறுதலை, ஆயிரம் தலையும் அவைபோன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல், மிருகம், முதலிய உருவங்கள் கொண்ட லைகளையும் வணங்குகின்றான் என்பதே. கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும் ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள் காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்று தான் கேட்கிறேன். மற்றும் கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன். மற்றும் பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த , தினம் அய்ந்து வேளை ஆறுவேளை பொங்கல் அக்கார வடிசில் முதலியன படைத்தல், பால் நெய் தேன் தயிர் இளநீர் எண்ணெய் அபிஷேகம் என்னும்பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா ? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால் , இந்த முட்டாள் தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் (மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கின்றேன். மேலும் இதற்காக ஏற்படும்பொருள் செலவு , நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறமிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன். - ஈ.வெ.ரா.- உண்மை 14-5-70 |
கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. -தந்தை பெரியார்.
வியாழன், 15 டிசம்பர், 2011
கடவுள் மறுப்புத்தத்துவம் ஒரு விளக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக