புதன், 21 டிசம்பர், 2011

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

 


நுழைவாயில்
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 2
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
முன்குறிப்பு: இத்தொடரின் கடந்த கட்டுரையில் நண்பர் அம்பலப்படுத்துவதாக கூறியிருந்தார். இதுவரை செய்யவில்லை, அவரின் அம்பலப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன், எனக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அம்பலப்படுத்துவதாக(!) கருதிக்கொண்டு ஒரு பதிவிட்டிருக்கிறார்.  அம்பலப்படுத்தல் என்றால் என்ன?  எனக்கு எதிராக எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்?  அம்பலப்படுத்தல் என்றால் நான் வெளிப்படுத்தாமல் மறைத்த ஒன்றை அவர் வெளிப்படுத்தி நான் அதை மறைத்திருக்கிறேன் என்பதை விளக்கினால் அது அம்பலப்படுத்தலாக கொள்ளப்படும்.  அவர் அழைத்ததை நான் மறைக்கவில்லை. அவருக்கு நான் பதிலளித்து விட்டதையும் குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும், மீண்டும் அவர் அழைக்கவே அதற்கு பதிலளிக்காமல், வெளியிடாமல், கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன் என்பதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக கூறியிருக்கிறேன். இப்போது நண்பர் அந்த மின்னஞ்சல் செய்திகளை பதிவாக இட்டிருக்கிறார். இதில் எதை நான் மறைத்திருக்கிறேன், எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருக்கும் இன்னொன்று, அவர் தொடர்ச்சியாக இப்படி அழைத்ததன் விளைவாகவே கடந்த பதிவை நேரடி விவாதம் குறித்து எழுதியிருப்பதாகவும், அது அவர் அழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறல்ல, நண்பர் எந்த வரிசையில் எனக்கான மறுப்பை எழுதியிருக்கிறாரோ அந்த வரிசையிலேயே நான் இத்தொடரை எழுதி வருகிறேன். அந்த வரிசையில் அவர் எழுதிய நேரடி விவாதம் தொடர்பான இடுகை வந்ததால் அதற்கு பதிலெழுதியிருந்தேனேயன்றி, நண்பர் அழைத்திருக்கிறார் என்பதால் வரிசை மீறி அதை எடுத்துக் கொள்ளவில்லை.
இப்போது மட்டும் இதை வரிசை மீறி விளக்கமளிப்பதேன் என்றால், அதில் தனிப்பதிவாக இடுவதற்கான விசயம் ஒன்றும் இல்லை என்பதால் முன்குறிப்பாக தெரிவித்திருக்கிறேன், அவ்வளவு தான்.
 ****************************************
என்னுடைய ’இஸ்லாமே கற்பனைகளின் களம் 2’ பதிவில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒன்றிணைவது எப்படி இந்துப் பாசிசங்களுக்கு உதவுகிறது என்பதை விரிவாக விளக்கியிருந்தேன்.  இதற்கு பதில் தருவதாக இருந்தால், நான் கூறியது தவறு என்பதை விளக்கி சரியானதாக அவர் கருதுவதை கூற வேண்டும். இதை நண்பர் செய்திருக்கிறாரா? குறைந்த பட்சம் நான் கூறியிருப்பதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூட இல்லை. மாறாக மேலோட்டமாக எனக்கு நானே முரண்படுவதாக காட்டிக் கொண்டு, உளறுகிறேன்,  லாஜிக் இல்லை, பல்டி அடிக்கிறார், சுயநினைவோடுதான் எழுதினாரா? என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.  ஆனாலும் பதிலெழுதுவதாய் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதால் இரண்டு கேள்விகளையும் கேட்டு வைத்திருக்கிறார்.
\\எதிரி இருந்தால்அழிக்குமே தவிர ஆக்காது! இஸ்லாமியர்கள் ஒண்றினைந்தால் அதைக்காட்டி இந்துக்களும்ஒண்றினந்த்துவிடுவார்களாம். இன்று இஸ்லாமியர்கள்ஒண்றினைந்திருக்கின்றனர்  அதனால் இந்துக்கள்ஒண்றிணைந்துவிட்டனரா?//\\பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கு  விரோதி என்பதால்இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒண்றினைவது கூடாது என்கிறார்.பார்ப்பனியத்தை  ஒழிக்க வேண்டும் என்றால்அதற்கு எதிரியாகவிருப்பவர்கள்ஒன்று கூடினால்தான் முடியும் இதனால்  இஸ்லாமியர்கள் ஒன்று கூடுவது அவசியம்//
பார்ப்பனிய பாசிசங்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்களை தங்களோடு உள்ளவர்களாய் கருதுவதில்லை. ஒடுக்கப்பட்டவர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாகவே வைத்திருக்கிறார்கள்.  அதேநேரம் அடிமைகளாய் வைத்திருப்பவர்களையே தேவைப்பட்ட இடங்களில் தங்கள் இராணுவமாகவும் பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?  அவர்களை இந்து எனும் மதத்திற்குள் ஒன்றிணைத்து வைத்திருப்பதால். அடிமைகளாக்கி ஒடுக்கப்பட்டிருப்பவர்கள் அவர்களுக்கு எதிராக அல்லவா கிளர்ந்தெழ வேண்டும். அதற்காகத்தான் காலம்தோறும் எதிரிகளை உருவாக்கி வருகிறர்கள். சாங்கியம், பௌத்தம் தொடங்கி இஸ்லாம் ஈறாக எதிரிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த எதிரிகளைக் காட்டியே இந்து ஒற்றுமையை கட்டிக் காக்கிறார்கள்.  இந்துப்பாசிசங்கள் இஸ்லாத்திற்கு எதிராக எப்படி பரப்புரை செய்கிறார்கள் என்பதை கவனித்துப்பார்த்தால் இது எளிதாக விளங்கும்.  இன்றுவரை ஒடுக்கப்பட்டவர்கள் தங்களை இந்து என கருதிக் கொள்வதுதான் பார்ப்பனியத்தின் முதன்மையான பலமாக இருக்கிறது.  அவர்கள் தங்களை இந்துவாக கருதிக் கொண்டிருக்கும்வரை பார்ப்பனியத்தை வீழ்த்துவது கடினம்.
இந்தியாவில் சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பார்ப்பனியம் வெகு எளிதாக இஸ்லாமியர்களை பிளவுபடுத்திவிட முடியும். இஸ்லாமியர்களில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு சலுகைகள் அளித்து மற்றவர்களை ஒடுக்குவதை தொடர்ந்து செய்து வந்தால் இஸ்லாமியர்கள் வெகு எளிதாக பிரிந்துவிடுவார்கள்.  ஆனால் கவனமாக அவ்வாறு செய்யாமல் தவிர்த்து வருகிறது பார்ப்பனியம்.  பண்டைய இந்தியாவில் சிறுபான்மையினர் என்று ஒதுக்கமுடியாத அளவில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள். இதை வெகு தந்திரமாக பிரித்தாண்டார்கள். கவனிக்க, பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை முதலில் முஸ்லீம்களிடமிருந்து எழவில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் தான் முதலில் இந்த திட்டத்தை முன்மொழிந்து பரப்பினார்கள். தந்திரமாக பெருவாரியான முஸ்லீம்களை தனிநாடாக பிரித்துவிட்டு இந்திய முஸ்லீம்களை ஒன்றிணைத்திருக்கிறார்கள்.
இவர்களை தனிப்பட்ட மதத்திற்கு எதிரானவர்களாக கருதமுடியாது. அனைத்து மதங்களிலும் இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானவர்கள்.  மத அடிப்படையில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவன் என்று பிரிந்து ஒன்றிணைவது அந்த பாசிசங்களுக்கு ஆதரவாகவும், சொந்த வர்க்க நலனுக்கு எதிராகவும் அமைகிறது.  மலம் அள்ளும் ஒரு ஒடுக்கப்பட்டவனும், மகிந்திராக்களும் இந்து எனும் அடிப்படையில் ஒன்றாகிவிட முடியுமா? ஒரு ஏழை சுமைதூக்கும் தொழிலாளியும் பால் தினகரன்களும் கிருஸ்தவன் எனும் அடிப்படையில் ஒன்றாகிவிடமுடியுமா? அதுபோல் தான் முஸ்லீம்களும். உழைக்கும் வர்க்கமாக இவர்கள் ஒன்றிணைய வேண்டும், மத அடிப்படையில் ஒன்றிணைய ஒன்றிணைய அது பார்ப்பனிய பசிசங்களுக்குத்தான் உதவுமேயன்றி ஒருபோதும் சொந்த வர்க்கத்திற்கு உதவியாய் இருக்காது.  பாட்டாளி வர்க்கத்திற்கு சொந்த மதத்திலிருக்கும் ஆளும்வர்க்கம் எதிரானது தான். இதை புரிந்து கொள்ளாதவரை பாட்டாளிவர்க்கம் பயன்படுத்தப்படுமேயன்றி பலன் பெறாது.
மத பரப்புரை நிகழ்சிகள் ஒருவித ஹீரோயிஸ மனப்பான்மையாகவே அமைகின்றன.  ஒரு அமைப்பின் பிரபலமான தலைவர் ஒருவரின் நிகழ்சிக்கும் அதே அமைப்பின் பிரபலமில்லாத ஒருவரின் நிகழ்ச்சிக்கும் மக்களின் ஆர்வம் ஒரேபோல் இருப்பதில்லை. இது ஏன் என்பதை சிந்தித்தால் மத பரப்புரை நிகழ்சிகளின் உள்ளீடு என்ன என்பது எளிதில் புரிந்து போகும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட மக்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை நுழைவாயில் பகுதியிலும் எளிதாக காட்டியிருக்கிறேன். \\ இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது//  இந்நிலை ஆய்வு நோக்கிலிருந்து சரி தவறுகளை உள்வசமாய் பரிசீலித்து பெறப்பட்ட முடிவு அல்ல. நெகிழ்வுத்தன்மையுடன் ஆன்மீகத்தை அணுகுவது போல் காட்டிக் கொள்வது இந்து மதத்தை பின்பற்றும் சாதாரண மக்களிடம் எப்படி இயல்பாக இருக்கிறதோ, அதுபோலவே உறுதித்தன்மையுடன் இருப்பது போல் காட்டிக் கொள்வது சாதாரண முஸ்லீம்களிடம் இயல்பாக இருக்கிறது.  மதவிவகாரங்களைக் கடந்து செல்வது ஒரு இந்துவுக்கு சாதாரணமாக இருப்பது போல் முஸ்லீம்களுக்கு இல்லை என்பது நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தின் இறுக்கத்தில் இருக்கிறது. இதை இஸ்லாம் உண்மையானது என்பதால் தான் கேட்டவுடன் ஈர்க்கிறது என்று மொழிபெயர்க்க முடியாது.  ஏனென்றால் கேட்கப்படும் எல்லோரையும் அது ஈர்ப்பதில்லை.  இதை முஸ்லீம்களுக்கு மதத்தின் மீதுள்ள ஆர்வம் என்றோ, இஸ்லாத்தின் உண்மையான தன்மையின் சான்று என்றோ கூறமுடியாது. அது முஸ்லீம்களுக்கு கற்பிக்கப்பட்ட வடிவத்தை மட்டுமே காட்டுகிறது.  இந்த வடிவம் இஸ்லாத்தின் உண்மைத்தன்மையல்ல என்பதை விளக்குவதற்கே என்னுடைய தொடரை (இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே) எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இஸ்லாம் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது.  ஏனென்றால் இஸ்லாம் என்பது  வணிகர்களின் நிர்வாகத்தை நாடோடி, விவசாய, வணிக அரபுக் குலங்களின் பொதுவான நிர்வாகமாக வளர்த்தெடுக்கும் ஒரு முயற்சியாக தோன்றியது தான்.  இதை தொடரின் இறுதிப் பகுதியில் நான் விளக்கவிருக்கிறேன்.  முதலாளித்துவம் ஒட்டுமொத்த மனித இனத்தை எவ்வாறு பாதிக்கிறது, மக்களைச் சுரண்டி ஒருபக்கம் குவிக்கிறது என்பது பலவாறாக உலகில் விளக்கப்பட்டுள்ளது.  மட்டுமல்லாது உலக மக்கள் வரலாறு சமூக காலகட்டங்களின் வழியாக எப்படி கடந்து வந்துள்ளது என்பதெல்லாம் மக்கள் முன் ஆய்வுரைகளாக உள்ளன. அவைகளை விளக்கினால் அது தனி தலைப்பாக நீண்டு செல்லும்.  முதலாளித்துவத்தின் ஆன்மாவான லாபக்கோட்பாட்டை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதால், மக்களின் மனங்களை முதலாளித்துவம் கட்டமைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் எப்படி கட்டுப்படுத்த விரும்புகிறதோ அதே விதத்தில் தான் இஸ்லாமும் மக்களின் மனங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது என்பதால் முதலாளித்துவத்தின் கொடுமைகளை மக்களிடமிருந்து இஸ்லாத்தால் நீக்க முடியாது. இது போராட்டங்களோடும், வெற்று கோசங்களோடும் முடிந்துவிடும் விசயமல்ல. எனவே இஸ்லாத்தின் இறுக்கங்களை உடைத்து முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்க அடிப்படையில் அணிதிரட்ட வேண்டியது அவசியமாகிறது. (இது எல்லா மதங்களுக்கும் பொருந்துவது)
நண்பர் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய இறையியல் குறித்து நான் கூறுவதாக கூறிக் கொண்டிருக்கிறார். ஒன்று விளங்கவில்லை என்றால் மீண்டும் கேட்கலாம். தவறில்லை. ஆனால், நான் விளக்கமளித்த பிறகும் அதையே தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அதை பிடிவாதம் என்று தான் வகைப்படுத்த முடியும். \\ அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள்//  இது தான் நான் நுழைவாயில் பகுதியில் எழுதியிருக்கும் வாக்கியம்.  இதில் அரபு தேசியவாதம், அரபு மார்க்சியம் இவையிரண்டும் இஸ்லாமிய இறையியல் என்று நான் எங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இஸ்லாமிய இறையியலை அதாவது இஸ்லாத்திலிருக்கும் கடவுள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்காமல், சமூகத்திற்கு மார்க்சியக் கொள்கைகளையும், ஆன்மீகத்திற்கு இஸ்லாமிய கடவுட் கொள்கையையும் கலந்து அரபு மார்க்சியம் என்று தனி கோட்பாடு ஒன்றை உருவாக்கினார்கள். சில காலம் இது செல்வாக்கிலும் இருந்தது. ஆனாலும் அது முதலாளித்துவத்தின் நிதி மூலதனத்தின் முன்னால் செயலற்றதாகிவிட்டது. இது தான் இந்த வாக்கியத்தின் பொருள் என்பது, தமிழ் தெரிந்த யாருக்கும் எளிதில் விளங்கும். இதைத்தான் என்னுடைய முந்தைய பதிவிலும் சுட்டிக் காட்டியிருந்தேன் \\ அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரணடையும் இணைத்து, கடவுட் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மார்க்ஸிய தத்துவங்களை இஸ்லாத்துடன் இணைத்து உருவானது தான் அரபு மார்க்ஸியம்// ஆனால் நண்பர் மீண்டும் தன்னுடைய பதிவில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், \\ இவர் இஸ்லாமிய இறையியலாக அரபு தேசியவாதம்,அரபு மார்க்ஸியம் போன்றவற்றை குறிப்பிட்டார். அதை தவறு என்று கூறியதற்கு அவர் அளிக்கும் சமாளிப்பு பதில்தான் இது// \\ அரபு மார்க்ஸியம், தேசியவாதம் என்பன இஸ்லாமிய இறையியல் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்// மேற்குறிப்பிட்ட அந்த வாக்கியம் எப்படி அவர் கூறும் பொருளில் இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.  அல்லது இதில் அவர் வறட்டு பிடிவாதம் பிடித்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.
நுழைவாயில் பகுதியில் நான் ஒரு வேண்டுகோளை வைத்திருந்தேன்.  அதாவது இந்தத்தொடரை முன்முடிவுகளுடன் அணுகாதீர்கள் என்று. ஒருவரின் முன்முடிவு என்பதற்கும், அவரின் நிலைப்பாடு என்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லையா? நண்பருக்கு மெய்யாகவே இரண்டு சொற்களுக்கும் இடையே பொருள் வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை என்றால், நல்ல தமிழாசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.  இந்த தொடரில் எனக்கு ஒரு நிலைபாடு இருக்கிறது, நண்பருக்கு ஒரு நிலைபாடு இருக்கிறது. இருவரும் அவரவர் நிலைபாடுகளில் நின்று தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலைபாட்டை விட்டுவிட்டு விவாதம் செய்யுங்கள் என்று சொன்னது யார்? நண்பர் இப்படி எழுதியிருக்கிறார், \\ இஸ்லாம் சரியானது என்று நம்பாமல் அதைப்பற்றி எழுத வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது என்பது அறிவுடமையா? சந்தேகத்தில் இருந்தால் அது சரி என்று எந்தவகையில் ஒருவர் வாதிட முன் வருவார்// இஸ்லாத்தை மறுப்பது என்னுடைய நிலைப்பாடு, அதேநேரம் எந்த பரிசீலனையும் இல்லாமல் விமர்சனமாக வைக்கப்படுவது அனைத்தும் தவறானது என்று நான் முடிவு செய்ய இயலுமா? இது என்னுடைய கருத்து அதற்கு எதிராக வைக்கப்படுவது மாற்றுக் கருத்து எனும் அடிப்படையில் தான் என்னுடைய வாதங்கள் அமைந்திருக்கும்.  ஆனால் நண்பரின் வாதங்களைப் பார்த்தால், \\ உளறிக் கொட்டுகிறார், அறிவில்லாமல் எழுதியிருக்கிறார், சமாளிக்கிறார், சுயநினைவோடு இருந்தாரா? மூடிக் கொண்டு போகவேண்டும், தைரியமில்லாத கோழைகள்// இப்படிப் போகும். இவ்வாறு எப்போது ஒருவரால் எழுதமுடியும். எங்கு விமர்சனம், மாற்றுக் கருத்து எனும் எண்ணம் இல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அது தவறாக மட்டுமே இருக்கமுடியும் என்ற முன்முடிவு இருக்கும் இடத்தில் தான் இதுபோன்ற சொல்லாடல்கள் பிறக்க முடியும்.  ஒருவேளை என்னுடைய வாதங்கள் நண்பருக்கு உளறலாக தெரிந்தால், அது என்ன விதத்தில் உளறலாக இருக்கிறது என்பதை விளக்க வேண்டுமேயல்லாமல், உளறல் என்று எழுதக்கூடாது. இது போன்றவைகளெல்லாம் கண்ணியமாக, அழகான முறையில் விவாதம் செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக