ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பாகிஸ்தான் : மத அடிப்படைவாதத்தின் கோரமுகம்!

 




சல்மான் தசீர், ஆசியா பீபீயுடன்

ப்படியொரு நெருக்கடியில் பாகிஸ்தான் இருக்கிறது என்பதையும், என்ன விதமான அச்சத்தில் அங்குள்ள மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள் என்பதையும் சல்மான் தசீரின் கொலை உலகுக்கு உணர்த்திக்கொண்டு இருக்கிறது. மத அடிப்படைவாதத்தின் கோரப் பிடியில் ஒரு தேசம் சிக்குண்டு இருப்பதை வேதனையோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

சல்மான் தசீர் ஒன்றும் சாதாரண மனிதர் அல்லை. பாகிஸ்தானில் பஞ்சாபின் ஆளுனர். ஆளும் கட்சியில் மிக முக்கியமானவர். அதிபர் சர்தாரிக்கு நெருக்கமானவர். அப்பேர்ப்பட்டவரைத்தான், அவரது பாதுகாவலர்களின் ஒருவனான ஹூசேன் காதரே சுட்டிக் கொன்றிருக்கிறான். “அவரைக் கொன்றது நியாயமே” என்று பகிரங்கமாக மத அடிப்படைவாதிகள் பிரகடனம் செய்கிறார்கள். அவரது இறுதிச்சடங்கில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது, அவருக்காகப் பேசுபவர்களுக்கும் இதே நிலைதான் என்று சத்தமாய் சொல்கிறார்கள். கொலையாளியான 26 வயது காதரை கொண்டாடுகிறார்கள். கோர்ட்டுக்கு அவன் அழைத்து வரப்பட்டபோது,  ரோஜா இதழ்களை அவன் மீது சொரிந்து  “இறைவன் மகத்தானவன்” எனப் போற்றுகிறார்கள். அரசு வேடிக்கப் பார்க்கிறது. மெல்ல முணுமுணுக்கும் சிலரைத் தவிர பொதுவாக, மக்கள் வாய்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். இந்தக் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் ஒருவரால் உள்வாங்க முடியுமானால் பாகிஸ்தான் என்னும் நம் அண்டைய தேசம் எந்தவிதமான சூழலில் விழிபிதுங்கி நிற்கிறது என்பதை எந்த விளக்கமும், விவரணைகளும் இல்லாமல் உணர முடியும்.

ஆசியா பீபீ என்னும் சிறுபான்மை கிறித்துவ மதத்தைச் சார்ந்த பெண்மணி, முகம்மது நபியை இழிவாகப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டார். பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மத நம்பிக்கையுள்ளவராயிருந்தாலும், மனிதாபிமானமும், மதச்சார்பின்மைப் பார்வையும் கொண்டு இருந்த சல்மான் தசீர் இதனைக் கண்டித்தார். சிறையில் இருக்கும் ஆசியா பீபீயைச் சந்தித்து, ஆதரவாகப் பேசியதோடு, பத்திரிகையாளர்களுக்கு, மத நிந்தனைச் சட்டத்தை கறுப்புச் சட்டமென பேட்டியளித்தார். இந்த மத நிந்தனைச் சட்டம், சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கும், அச்சத்தில் வாழ்வதற்குமான ஏறபாடாகவே தொடர்ந்து  இருந்து வருகிறது. அதை எதிர்த்த ஜனநாயக வேட்கை கொண்ட மனிதர்களின் ஒற்றைக்குரலாக சல்மான் தசீர் இருந்தார். அடங்காத வெறுப்பும், தீராத கோபமும் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் மூர்க்க உருவமாய் காதர், முகம்மது நபியின் பேரில் அவரைச் சுட்டிக்கொன்று, “என் கடமையை செய்திருக்கிறேன்” என அறிவித்திருக்கிறான்.

‘அவன் மட்டும் இந்தக் காரியத்தைச் செய்தானா, அவனுக்குப் பின்னால் எந்த அமைப்பு இருந்தது’ என்று இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் விசாரிக்க வேண்டிய வேறு முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, பாதுகாப்பு என ஒரு தேசத்தின் பலமுனைகளுக்கும் சேதம் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்திலும், இந்த படுகொலை குறித்து கருத்துச் சொல்கிறவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அரசு, பத்திரிகைகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பிலும் வார்த்தைகளுக்கிடையில் ஒரு கனத்த மௌனம் அடைந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது. அதுதான் பாகிஸ்தான் என்னும் நிலப்பரப்பின் விதியாகக் கிடக்கிறது. கொலையைக் கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். கொலையைக் கண்டித்து விட்டு, இறைவன் மீது தீவீர நம்பிக்கை உள்ளவர்களின் செயல் இது என முணுமுணுக்கிறார்கள். இதே அபிப்பிராயங்கள்தான் தற்கொலைத் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகும்போதும் வெளிப்படுகிறது.  “இந்தச் செயல் மோசமானது” என்று சொல்லிவிட்டு “இஸ்லாத்திற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் கோபம் இப்படி வெளிப்படுகிறது” என்ற வார்த்தைகளைத்தான் கேட்க முடியும்.

இத்தனைக்கும், மத அடிப்படைவாதக் கட்சிகள் பாகிஸ்தானில் தேர்தல்களில் வெற்றி பெறுவது இல்லை. அதில் தெளிவாக இருக்கிற மக்கள், ஏன் இதுபோன்ற சோதனையான நேரங்களில் மௌனம் சாதிக்கிறார்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டியதும், அறியப்பட வேண்டியதும் ஆகிறது. மத நம்பிக்கையுள்ள மக்களிடம், மத அடிப்படைவாதிகளால், ஆதிக்கம் செலுத்தவும், செல்வாக்கு கொண்டு இருக்கவும் முடிந்திருக்கிறது. இதனை முறியடிக்க கிளம்பும் முயற்சிகள் மிக குரூரமாகவும் முளையிலேயே கிள்ளியெறிவதில் மதவெறியர்கள் வன்மத்தோடு இருக்கிறார்கள். அமைகின்ற அரசுகளும் மதச்சார்பின்மை, ஜனநாயகம் குறித்து அழுத்தமாகப் பேசாமல், மத அடிப்படைவாதிகளோடு சமரசம் செய்துகொள்வதாக இருக்கின்றன. இவைதாம் இன்று பாகிஸ்தானின் சாபமாகவும், மக்களின் மௌனமாகவும் திரண்டு நிற்கிறது.

‘இந்தியா எவ்வளவோ பரவாயில்லை’ என்று சொல்வதையும் இந்த நேரத்தில் கேட்க முடிகிறது. உண்மைதாம். இந்தியாவில் மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தைத் தூக்கிப் பிடிக்கிற சக்திகள் ஓரளவுக்கு வலுவாக இருக்கின்றன. அவர்களின் தொடர்ந்த பிரச்சாரங்களினால், இயக்கங்களினால்தான் ‘பரவாயில்லை’ எனச் சொல்ல முடிகிறது. இதனை பாகிஸ்தான் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளையில், மத அடிப்படைவாதம் என்பது எவ்வளவு குரூரமானது எனபதையும், பெரும்பான்மை அடிப்படைவாதம் எப்பேர்ப்பட்ட பாசிசத்தை உள்ளடக்கியது என்பதையும், மௌனம் சாதித்தால் இந்தியாவில் இந்துத்துவா சக்திகளும் இத்தகைய  தீய சக்திகளாக உருப்பெறும் என்கிற அபாயத்தையும் பாகிஸ்தானிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போது அதற்கான வெளிச்சமும் பாகிஸ்தானில் தெரியத்தான் செய்கிறது. இத்தனை மிரட்டல்களுக்குப் பின்னரும் மெழுகுவர்த்திகளோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் சல்மான் தசீர் என்னும் அந்த மகத்தான பாகிஸ்தானியப் புதல்வனுக்கு இறுதி மரியாதை செலுத்தியிருக்கிறர்கள். கீழே, ஒரு குழந்தையின் கையில் வைத்திருக்கும் அந்த செய்தியில்தான் நாம் இப்போது நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது.

_50675291_010947374-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக