ஞாயிறு, 11 டிசம்பர், 2011

நான் ஏன் நாத்திகன்?


கேள்வி கேட்பது தான் எல்லா பதில்களுக்கும் ஆரம்பம்!. தெரியாதது, புரியாதது என பலவகை விசயங்கள் முடிவில் அனைத்தும் கடவுள் செயல் என கைவிடப்படுகின்றன! மனித நாகரிகம் ஆறாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது, சிந்து சமவெளிநாகரிகம், கிரேக்க நாகரிகம், மாயன், இன்கா என அனைத்தும் ஆறாயிரம் வருடங்களுக்கு உட்பட்டதே! ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் படிமங்கள் லட்சகணக்கான வருடங்களாக மனிதனின் முன்னோர்கள் பூமியில் வாழ்ந்து வந்திருப்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. மனிதனின் முன்னோர்களான நியாண்டர்தால், ஹோமோஎரக்டஸ் போன்ற உயிரினங்களை மதம் அடியோடு மறுக்கிறது, ஆனால் இவைகள் இல்லாமல் இன்று மனிதனை பற்றி அறிவியல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்!ஒவியகலை, கட்டிடக்கலைக்கு முன்னோடி போர்கலை அதை மனிதன் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போதே பழகிவிட்டான், கூட்டம் கூட்டமாக வாழப்பழகிய மனிதன் தனக்கென ஒரு நகரத்தை உருவாக்கினான், கிடைத்திருக்கும் நாகரிக படிமங்கள் அவனது காலனி வாழ்க்கைக்கு ஆதாரம், அவைகளின் வளர்ச்சி கட்டிடகலை வளர்ச்சியாக முன்னேறியது, பிரமிக்கவைக்கும் பிரமீடுகள், ஒவ்வொரு நாகரிகத்திற்கும் தனிபட்ட அடையாள கட்டிடங்கள் என மனித நாகரிகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் கி.பி 1600 வரை மனிதன் அறிவியலில் பல விசயங்கள் புரியாமல் தான் இருந்தான். 2000 வருடங்களுக்கு முன்னரே பூமி உருண்டையானது, பூமி சூரியனை சுற்றி வருகிறது என சந்திரனில் விழும் நிழலை வைத்து கண்டறிய முடிந்த மனிதனுக்கு அவையெல்லாம் ஏன், அதன் இயக்கம் எப்படி என்பது புரியாத புதிர், அவைகளுகெல்லாம் அவன் வைத்த பெயர் தான் கடவுள்!ஆனால் அறிவியல் தாகம் நின்றுவிடவில்லை, எதையும் கேள்வி கேட்டு கொண்டே தான் இருந்தது, முயற்சியில் மனம் தளராத சிலரால் சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டு, சூரியனின் ஆற்றலில் பிரமித்து பூமியிலும் ஆற்றலை உருவாக்க நினைத்தார்கள், யோசித்து பாருங்கள் 5000 வருட மனித நாகரிகத்தில் மின்சாரம், கடைசி 400 வருடங்களுக்குள் தான் கண்டுபிடிக்கப்பட்டது, ஏதேன் தோட்டத்தில் மனிதனை படைத்த கடவுள் அப்போதே ஏன் அவனுக்கு அனைத்து அறிவுகளையும் கொடுக்கவில்லை, ”மனிதன்” அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றால் எனக்கு அடிமையாக இருக்க விருப்பமில்லை, நானாகவே அறிவு பெற்றேன் என்றால் எனக்கு கடவுள் தேவையில்லை!


இந்த உலகில் இருக்கும் அதிகாரமுள்ள கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து, சீக்கியம், பெளத்தம், சமணம் மதங்களிடயே கொள்கை முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் பல உண்டு, ஆனால் அனைத்திற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா!? இவை அனைத்தும் ஆசிய கண்டத்திலேயே உருவானவை! ஆபிரகாம மதங்கள் மத்திய கிழக்கு ஆசியாவிலும்!. இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் இந்தியா மற்றும் இந்தியாவிற்கு அருகிலும்!. ஏன் இப்படி, மற்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா!? அவர்கள் மேல் ஏன் கடவுளுக்கு அக்கறையில்லை, இன்றும் அந்தமான் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பழங்குடியினருக்கு இத்தனை மதங்கள் இருப்பதே தெரியாது, அதே போல் தான் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும்!


பூமியில் உயிரினத்தின் பரிணாமத்திற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன, மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து பின் பிரிந்து சென்றான் என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது, மனித இனத்திற்குள்ளாகவே தோற்ற பிரிவு! ஒரு தாய்மொழியில் இருந்து பிரிந்த கிளை மொழிகள் அதை நிருபிக்கும். கடவுளின் இருப்பு எங்கேயும் இல்லை, கடவுள் என்ற ஒன்று உயிரினத்தின் வாழ்க்கைக்கு தேவையும் இல்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையிலிருந்தே தெரிகிறது, ஆனாலும் மதவாதிகளிடம் விவாதிக்கும் போது, ஆதியில் இருந்த ஓரணுவுக்கு வருவார்கள், அதை படைத்தது யார் என்பார்கள்! அவர்களால் கடவுள் இல்லை என்றால் ஜீரணிக்க முடியாது, ஆனால் அந்த ஓரணுவுக்கு காரணம் கடவுள் என்று முற்றுபுள்ளி வைத்தால், அந்த ஓரணுவுக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது!, 4000 வருடங்களாக இருந்த பல புதிர் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டது போல், இதையும் கண்டுபிடிக்க முடியும்! அதற்கு தடையாக இருக்கும் கடவுளை சற்றே ஒதுக்கி வைத்தால் தான்!

ஆகையால் நான் நாத்தியகானவே இருக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக