ஞாயிறு, 18 டிசம்பர், 2011

சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் !

 

உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்ததவன் இறைவன் என்பதாக அவ்வப்போது ஆன்மிகவாதிகளால் சொல்லப்படுகிறது, இதே கருத்து மதவாதிகளிடமும் பலமாகவே உள்ளது. மதவாதிகள் மதத்தை மார்கெட் செய்யும் உத்தியில் தங்களை முழுமனதாக ஊக்கப்படுத்திக் கொள்ளுவதற்கு 'தங்கள் இறைவனும், தங்கள் வேதபுத்தகமுமே' முழுக்க முழுக்க உண்மையானது மற்றவையெல்லாம் மனிதர்களே படைத்துக் கொண்டார்கள், போலியானவை என்று விளம்பரம் செய்வார்கள் அல்லது பிற மதங்களைப் பின்பற்றும் மனிதக் குழுக்களிடம் இருக்கும் குறைகளைக் குறிப்பிட்டு, அவை நீங்கள் பின்பற்றும் மதத்தின் காரணாமாக அமைந்தது என தூற்றுவார்கள்.

அனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெறும் மதவெறிச் செயல்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமா ? என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சிறப்பான விளக்கம் எந்த ஒரு மதத்திலும் இல்லை என்பதே உண்மை. தனிமனித, இனக்குழு செயல்களுக்கும், இயற்கையின் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கெல்லாம் மதமோ, மதங்கள் காட்டும் இறைவனோ பொறுப்பு ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன ? விட்டுத்தள்ளுவோம், அவை என்றுமே பதில் பெற முடியாத கேள்விகள். வேதப்புத்தகங்களிலும், மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது

தன்மதம் மனிதர்களிடையே ஒற்றுமை போற்றும் என்பதாகவும், பிற மதங்கள் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக அம்மதங்களிலேயே சொல்லப்பட்டுள்ள உண்மை என்றெல்லாம் வியாக்யானங்கள் வருவது உண்டு.

இந்துக்களின் வேதம் எனச் சொல்லப்படும் பகவத் கீதை பற்றிய சர்சைகள் ஒருபுறம் இருந்தாலும் (இதை பொதுவான இந்து வேதம் என்று சொல்லமுடியாது, பிற மதங்களுக்கு வேதப்புத்தகங்கள் இருக்கிறது, அவை நீதிமன்றங்களில் சத்தியவாக்குப் பெற பயன்படுத்தப்படுகிறது என்பதால் வைணவ தத்துவ நூல்களில் ஒன்றான பகவத்கீதை பாலகெங்காதாரா திலகர் போன்றோரால் முன்மொழியப்பட்டது, இந்திய சமயங்கள் அனைத்தையும் இந்து மதம் என்று சொல்வதால், பகவத் கீதை பொதுவானது என்று சொல்லப்படுவது நிராகரிக்கக் கூடியதும் ஆகும், குறிப்பாக சிவனை வழிபடுபவர்களுக்கு பகவத் கீதை சிவ நெறிகளைவிட உயர்ந்தது கிடையாது) , பகவத் கீதையின் கீழ்கண்ட செய்யுள் எப்போதும் பெரிதும் சர்சை செய்யப்படுகிறது, குறிப்பாக பகவத் கீதையின் தத்துவங்கள் சார்ந்த பிற செய்யுள்களை அறிந்திடாத பகுத்தறிவாளர்களும், பிறமதத்தினரும் தெரிந்துவைத்திருக்கும் ஒரே செய்யுள்,

"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்"
- பகவத் கீதை

இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.

அண்மையில் இஸ்லாம் தொடர்புடைய சில நூல்களைப் படிக்கும் போது கீழ்கண்ட குரான் வசனம் ஒன்றையும் அதன் பொருளையும் படிக்க நேர்ந்தது

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)
மேற்கண்ட குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் தெரியவில்லை, ஏனெனில் இவை கூறப்பட்ட காலங்களில் இனங்களை ('உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்') இருந்ததை குரான் சுட்டி இருப்பதும், 'நான்கு வருணங்கள்' இருந்ததை பகவத்கீதை சுட்டுவதாகவும் தான் கொள்ள முடிகிறது. நான்கு வருண அமைப்புகள் அரேபியாவில் இருந்திருந்தாலும், இன அடிப்படை அமைப்புகள் இந்தியாவில் இருந்திருந்தால் பகவத்கீதை மற்றும் குரான் வசனங்களில் இடம் பெரும் சொற்கள் அதற்கேற்றவாறு மாறி இருந்திருக்கும் என்பதைத் தவிர்த்து வேறெதும் வேறுபாடு இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நடப்பில் இருந்ததைத்தான் இரண்டுமே சொல்கின்றன.

வருண அமைப்பிற்கும், இன அமைப்பிற்கும் பொறுப்பேற்கும் இரு வேதங்களில் ஒன்று மட்டுமே எப்போதும் தூற்றப்படுகிறது. இனக்குழுக்குள் வருணம் வேற்றுமை போற்றுகிறது என்றால், உலக அளவில் மனிதருக்குள் இனவேறுபாடுகள் அதைச் செய்கின்றன. இந்தத் தூற்றலை பகுத்தறிவாளர்களும் ஒருபக்கச் சார்பாக செய்துவருவது தான் வேடிக்கை.

என்னைக் கேட்டால், இவைகள் முறையே பகவத் கீதை காட்டும் வருணம், குரான் குறிப்பிடும் இனம் ஆகியவை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் போது, "வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக