ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பரிணாமம் - முன்னுரை

பரிணாம வளர்ச்சி பற்றி பேசினாலே நண்பர்களின் முதல் கேள்வி இப்பொழுது ஏன் குரங்கு மனிதனாகவில்லை என்பது! இது ஆத்திகவாதிகள் மட்டும் கேட்கும் கேள்வியல்ல, கடவுள் மறுப்பாளர்களும் என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள், தவறில்லை, நமக்கு ஆரம்பம் எல்லாமே கேள்வி ஞானம் தானே, அதன் பின் தொடர்ச்சியாக அதை பற்றி அறிய முயற்சி செய்தால் தானே உண்மையின் அதிகபடியான சாத்தியகூறுகளை அறியமுடியும்! அதை செய்தவன் அறிகிறான், வேத புத்தகங்களை மட்டும் படிப்பவன் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு கொண்டிருக்கிறான்!

இந்த தொடரை எழுத எனக்கு படிப்பறிவு தகுதியில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும், ஆனால் பரிணாமம் பற்றி பேச, எழுத படிப்பறிவு தேவையில்லை, சுற்றுசூழலை ஊன்றி கவனித்தாலே போதுமானது! நம்மை சுற்றி ஆயிரமாயிரம் பரிணாமத்தின் சுவடுகள் சிதறி கிடக்கின்றன, அலட்சியம் செய்வது மதவாதிகளின் குணம், அது ஏன், எவ்வாறு, எப்படி என்று கேள்வி கேட்பது பகுத்தறிவாளனின் குணம்!, அதையும் கூட சொன்னவுடன் நம்பவேண்டியதில்லை, அதற்க்குண்டான சாத்தியகூறுகளை ஆராயும் தனிபட்ட உரிமை தனியொரு மனிதனுக்கும் இருக்கிறது! சிந்திக்க தான் அந்த மூளை மறுக்கிறது!

பரிணாமம் என்றால் மாற்றம் என சொல்லலாம், வளர்ச்சி என்பது எல்லாவற்றிலும் உண்டு, ஆனால் உள்ளது சிறத்தல் என்பதே பரிணாம வளர்ச்சியின் முக்கிய கோட்பாடு!
பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமே உண்டு என்பது இன்னும் பலரின் நம்பிக்கை, ஆழ்ந்து நோக்கினால் எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு என்பதை அறியலாம், எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெருகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி!ஒருவேளை திருவள்ளுவர் இன்று தமிழகம் வருகிறார் என்று கற்பனை செய்து கொள்வோம்! அவரால் இன்றிருக்கும் தமிழை படிக்க முடியுமா!? இது சத்தியமாக தமிழில்லை வேறு எதோ மொழி என்பார், அதற்கு காரணம் என்ன!? மொழியின் சிறப்பு மாற்றம், அதுவே அதன் பரிணாம வளர்ச்சி!

தூரத்தில் இருக்கும் எதிரியையோ, உணவையோ தாக்க முதன் முதலில் மனிதன் கல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்தினான், அதை விட சரியான இலக்கை தாக்க ஈட்டி, அதைவிட வேகமாக தாக்க வில், பின் துப்பாக்கி, இயந்திரதுப்பாக்கி, ஏவுகணை இவையெல்லாம் என்ன காட்டுகிறது! கல் என்னும் ஆயுதம் சிறப்பு பெற்று பயன்படுத்த இலகுவான ஆயுதமாக மாறி ஆயுத பரிணாமத்தின் வளர்ச்சியை காட்டுகிறது!கம்பியூட்டர் இல்லாமால் இன்று மளிகைகடை கூட இல்லை! ஆனால் ஆரம்பகால கம்பியூட்டரை வைக்கவே தனியாக ஒரு அறை வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே! இன்று அதன் வளர்ச்சியை கண் முன்னே பார்த்து கொண்டிருக்கிறோம்! நமது சட்டைப்பைக்குள் அடங்கும் கைப்பேசி இன்று ஒரு கணிணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது, அலைபேசியின் பரிணாம வளர்ச்சியும் நாம் அறிந்ததே! இவை தான் உள்ளது சிறத்தல் என்ற பரிணாம வளர்ச்சி!


சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் தந்தை என அழைக்கபடுகிறார், அவர் பரிணாம கருத்துகளை முதன்முதல் வெளிட்டதால் அந்த பெயர், மேலும் பலர் நினைத்து கொண்டிருப்பது போல் அவர் மனிதனின் பரிணாமத்தை பற்றி மட்டுமே ஆராயவில்லை, பரிணாமம் என்ற கண்டுபிடிப்பே அவருடய வாழ்வில் தற்செயலாக நடந்தது எனவும் சொல்லலாம்! ஒவ்வோரு தீவுகளில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் வடிவ வேற்றுமைகளும், குண வேற்றுமைகளும் இருந்ததை கண்டு ஆராய்ந்து தான் அவர் புத்தகம் எழுதவே ஆரம்பித்தார்! அவருடய காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தில் அவரால் சொல்ல முடிந்தது மனிதனுக்கும், குரங்குக்கும் சம்பந்தம் உள்ளது, மனிதன் குரங்கின் வம்சாவழியாக இருக்கலாம் என்று, ஆனால் தற்போது பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன! இன்றைய கண்டுபிடிப்பில் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று ஒரே மாதிரி செல்வதல்ல, அது ஒரு மரத்தின் கிளைகளை போல ஒரே குடும்பம் பல வடிவங்களை பெற்றது கண்டு பிடித்திருக்கிறார்கள்!

அவற்றில் உள்ள உண்மையின் சாத்தியகூறுகளை அலசுவோம், எல்லோருக்கும் அவரவர் கருத்துகளையும் , சிந்தனைகளையும் சொல்ல உரிமையுண்டு! வாதம் என்பது சண்டையிட அல்ல, தெளிவு பெற மட்டுமே! அது பற்றி நண்பர்கள் அறிந்த விபரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்! சுட்டி கொடுத்தாலும் சரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக