வியாழன், 8 டிசம்பர், 2011

மதம் மனிதனுக்கு தேவையா?

அண்மைக்காலத்தில், பரவலாக, உலகெங்கும், மதச்சார்பான வன்முறைகளையும், மனிதத்தை மாசு படுத்தும் பல நிகழ்வுகளையும் நாம் பார்க்கிறோம். அறிவியலின் துணை கொண்டு, மதமென்ற போர்வைக்குள், மனிதனை மனிதனே அடித்துக்கொள்ளும் ஒரு அவல நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். வாழ்வின் நிலை மறந்து, மிருகங்களை விட மோசமான நிலையில், மற்றவர்களை துன்புறுத்துவதையே நம் வெற்றியாக பார்க்க நம்மை பழக்கப்படுத்தி கொண்டுள்ளோம். துன்பங்களின் விளைவு விபரீதமாகி, ஒன்றும் அறியா அப்பாவி மக்கள் அத்தகைய துன்பங்களுக்கு பலிகடாவாகி அல்லற்படுகின்றனர்.
இத்தகைய நிகழ்வுகளை ஆராய்ந்து பார்க்கையில் ஒரு கேள்வி நம் மனதுள் ஏழுகிறது; "மதம் மனிதனுக்கு தேவையா?". மதம் என்ற ஒன்று இல்லாமல் மனிதன் செயல்பட இயலுமா? இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன், இதனைச் சார்ந்த வேறு சில கேள்விகளுக்கு விடை காண முற்படுவோம்.
இறையான்மை மற்றும் மதம், இவ்விரண்டும் வெவ்வேறானவையா?
இறையான்மை என்பது ஒரு கோட்பாடு; நடக்கும் ஒவ்வொரு செயலும் இறைவனால் விதிக்கப்பட்ட இயக்கமாக கருதும் ஒரு நிலை. இந்த நிலையை தான் பின்பற்றவும், தான் கண்ட அந்த நிலையை மற்றோர்க்கு பகிரவும் மனிதனுக்கு ஒரு மார்கம் தேவைப்படுகிறது. அந்த மார்கமே மதம் எனப்படுவது.
கடவுளுக்கு மதம் தேவையில்லை; ஆனால், ஒரு மதத்துக்கு, கடவுள் கட்டாயம் தேவை. எனவே கடவுள் எனும் இலக்கை அடையப்பயன்படும் கருவியே மதம். அத்தகைய கருவி பலவாகவும் இருக்கலாம். ஒரு கருவியை அந்த கருவிக்கான இலக்குடனே ஒப்பிட இயலாது. எனவே இறையான்மை என்பது வேறு; மதம் என்பது வேறு.
கடவுளுக்கு மதம் தேவையில்லையா?
கடவுளுக்கு மதம் தேவையில்லையா? இக்கேள்வியை இரு நிலைகளுக்கு உட்படுத்தி விடை காண முற்படுவோம்.
கடவுள் என்று ஒருவன் இல்லையென்று கொள்வோமானால், மதத்தினை பின்பற்றுவோர், இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பச்செய்து, மதமென்ற அமைப்பை, தங்கள் சுய லாபங்களுக்காகவோ அல்லது, வேறு சில காரணங்களுக்காகவோ, பயன்படுத்துகின்றதாக பொருள் கொள்ளலாம். இந் நிலையில் கடவுள் என்பவன் இல்லை என்பதால், அவன் மதத்துக்கு தேவையா என்ற கேள்வி எழவே வாய்ப்பில்லை, காரணம், இல்லை எனப்படும் ஒன்றை, தேவையா இல்லையா என்ற கேள்விக்கு உட்படுத்த இயலாது.
இனி கடவுள் என்றொருவன் உள்ளான் எனக்கொண்டு ஆராய்வோம். உலகில் உள்ள ஒவ்வொரு மதமும், கடவுள் ஒருவனே என்றும், அவனே எல்லா செயல்களுக்கும் காரணம் என்ற கருத்தை நிலை நாட்டுவதாகவுமே உள்ளது. கடவுள் ஒன்றே எனும் போது, ஒன்றாக உள்ள இறைவனுக்கு, வெவ்வேறாக விதம்பிரிக்கும் மதம் எனும் கருவி தேவையாகாது.
இவ்வாறு, இவ்விரு நிலைகளிலும், கடவுளுக்கு மதம் தேவை இல்லையென நிரூபணமாகிறது.
மதமெனும் மார்கம்...
மேற்கூறியபடி, கடவுளுக்கு மதம் தேவையில்லையாதலால், மதங்கள் என்ற கருவிகள் யாவும், ஒன்றாகிய அவ்விறைவனை அடைய, மனிதர்கள் பயன்படுத்தும் மார்கங்களாகும். இவ்வித மார்கங்கள் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், அவரவர் வாழ் நிலைக்கு ஏற்ப, மனிதனால் வரையறுக்கப்பட்ட கருவிகளேயாகும்.
எப்படி பரிதியிலிருந்து, எண்ணிக்கையில்லா ஆரங்கள், வட்டத்தின் மையத்தை அடைகின்றனவோ, அத்தகைய வகையில், மதம் எனும் பல்வேறு மார்கங்கள், இறைவனை அடையப் பயன்படும் எண்ணற்ற கருவிகளாகும். மையத்தை பொருத்தவரை, எல்லா ஆரங்களும் ஒன்றே. அப்படி இருக்கையில், எல்லா ஆரங்களுக்கும் மையமும் ஒன்றாகவே இருப்பதே இயற்கை.
பல மதங்கள் தோன்றக் காரணங்கள்
மதங்கள் தோன்ற, கீழ் விளக்கப்படும் வகையில் மூன்று வகையான காரணங்கள் இருக்கக்கூடும்:
1. தனிவழித் தோற்றம் 2. செயற்கை வேற்றுமை 3. மரபு திரிதல்
இம்மூன்று வகை நிலைகளையும் கீழ் காண்போம்.
1. தனிவழித் தோற்றம்
மதங்களின் அடையாளங்கள் பண்டைக்காலத்தில், சமூக நிகழ்ச்சிகளில் நடைபெற்று வந்த சடங்குகளின் பழக்க வழக்கங்களேயாகும். பண்டைகாலத்தில், மனித சமூகங்கள், சிறு சிறு குழுக்களாக, மற்ற குழுக்களிலிருந்து தங்களை பிரித்து அடையாளம் காட்டியபடியே வாழ்ந்து வந்தனர். இதற்கான சான்றுகளாக, இன்றைய நாட்களில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்முறையே ஆகும். இன்றும், அந்தமான் தீவுகளில் வாழும் இத்தகைய பழங்குடியினர், தம் குழு சாராத வேறெவரையும் தங்களை நெருங்க அனுமதிப்பதில்லை.
இப்படிப்பட்ட தனித்து வாழும் வாழ்முறையில், தாங்கள் பின்பற்றிய சடங்குகளே, தங்களை வழிமுறைபடுத்துவதாகவும், அவைகளே இவர்களின் வாழ்விற்கு வழிகாட்டிகளாகவும் நம்பப்படுகின்றன. இத்தகைய ஒரு அமைப்பு பின் நாளில் மதம் என்ற ஒரு கோட்பாடாக மாறுகின்றது.
இத்தகைய வேறுபட்ட வழிமுறைகளை பின்பற்றும் இரு குழுக்கள், இணைய முற்படும் போதோ அல்லது இணைந்து இயங்க முற்படும் போதோ, தத்தம் சடங்குகளை பின்பற்ற மற்ற குழுவை வற்புறுத்துகையில், உலகின் முதன் முதல் மதச்சண்டை நடந்ததற்கான சூழ் நிலையாக கொள்ளலாம்.
2. செயற்கை வேற்றுமை
இந் நிலை என்பது, இரு மதங்களுக்கிடையே செயற்கையாக வேற்றுமையை எழச் செய்து அதன் மூலம் தங்களின் மதத்தை தழைக்கச்செய்யும் வழியே ஆகும். இத்தகைய செயற்கை மாற்றங்கள், போரின் மூலமோ அல்லது, தத்தம் வாய்த்திறன் மூலமோ தோன்றிய வரலாறுகள் நாம் அறிந்தவையே. ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு சிறு இயக்கமோ எதிர் மதங்களின் கோட்பாடுகளை கெடுத்தோ, உடைத்தோ, தத்தம் மதங்களை தகுந்ததாக காட்டி, நிலை பெறச் செய்வதாகும்.
3. மரபு திரிதல்
இருக்கும் மதங்கள் இணைந்தோ, பிரிந்தோ புது மதங்கள் உண்டாகும் முறையே இத்தகைய முறையாகும். மதத்தின் பாரம்பரியமான மரபுகள் திரிந்து, ஒரு புது நிலையை அடைந்து புது மதமாக பரிமளிப்பதே இவ்வகையை சார்ந்ததாகும்.
மதம் மனிதனுக்கு தேவையா?
இந்த கட்டுரையின் முதலில் கேட்ட இக்கேள்விக்கு இப்போது விடை காண முற்படுவோம். இன்று உலகிலுள்ள ஒவ்வொரு மதத்திலும் கூறப்படும் கொள்கைகளை கூர்ந்து நோக்கின், எந்த மதங்களின் சாராம்சத்திலும், எத்தகைய எதிர்மறை கொள்கைகளும் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு மதமும், மனிதன் வாழவும், அவனை நல்வழிப்படுத்தவும், பல குறிப்புகளையும், நெறிமுறைகளையுமே கூறுகின்றன. மதம் சார்ந்த புராணங்களும், கிளைக்கதைகளும், நல்வழி வாழ, நெறிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.
மனிதன் என்னதான் தன் ஆறாம் அறிவை பயன்படுத்தி பல அறியவைகளை கண்டுபிடித்தாலும், தன் பிறப்பு முதல் இறப்பு வரை, மற்றவர்களை சார்ந்தே வாழ்கிறான். குழந்தை பருவத்தில் தாயையும், வளறும் பருவத்தில் தந்தையையும், பருவமடைந்தபின் தன் வாழ்க்கை துணையையும், பின் முதுவயதில், தன் குழந்தைகளையும் சார்ந்தே வாழ்கிறான். தனி மனிதனாய் வாழாமல், தன் சமூகத்துடன் சேர்ந்தே வாழ விழைகிறான். இதுவே இயற்கை. இத்தகைய வாழ்வில், தன் சமூகத்தை வெளிக்காட்டவும், தான் இன்னார் சமூகத்தை சேர்ந்தவன் என்பதை பறை சாற்றவும், மனிதனுக்கு, ஒரு வடிவமும், ஒரு குறிப்பிட்ட வாழ்முறையும் தேவைப்படுகிறது. இதன் வெளிப்பாடே மதமாய் அமைகிறது. அப்படிப்பட்ட அமைப்புகள் மதத்தை தவிர பல இருந்தாலும், மதம் என்ற ஒன்றை, அவன் அளவில் ஒரு பரந்த சமூகமாகவே அவன் எண்ணுகிறான்.
இத்தகைய நல்வழியை, எத்தகைய மதத்தை சாராமலும் பின்பற்ற இயலுமே எனும் கேள்வி எழக்கூடும். மேற்கூறியபடி, மதம் என்பது, பல்வேறுபட்ட சமூக அமைப்புகளை உள்ளடக்கிய, மற்றுமொறு பெரிய சமூகம் ஆகும். அப்படிப்பட்ட மதம் எனும் கலத்தின் ஊடே, பல நல்லுணர்வுகளையும், நல்வழிகளையும் வெகு விரைவாக பரப்ப இயலும். அப்படிப்பட்ட அடிப்படை ஆற்றலை கொண்டதாகவே மதங்கள் அமையப்பெற்றுள்ளன.
எனவே, ஒவ்வொரு மதமும், தத்தம் கோட்பாட்டிற்குள் அமைந்து, மனிதர்களை நல்வழிப்படுத்த மட்டுமே பயன்படும் வகையில் இருப்பின், மதம் மனிதனுக்கு தேவையே.
அத்து மீறுவது மதமா, மனிதனா?
மேற்கூறியபடி, மதமென்பது, சில கோட்பாடுகளின் வடிவம் ஆகும். இத்தகைய கோட்பாடுகளின் வடிவம், பல மனிதர்களை ஒருமித்து ஒரு இயந்திரமாக செயற்படுகிறது. இன்றைய உலகில் அவ்வப்போது நிகழும் மத வன்முறைகள் என்பது, இந்த இயந்திரம் கோளாறு அடைவதால் உண்டாவதேயாகும். இக்கோளாறு என்பது, கோட்பாடுகளை மீறும் மனிதர்களால் உருவானதேயன்றி, கோட்பாட்டின் குறை அன்று. மனிதன் தன் மதத்தில் கூறப்படும் கோட்பாடுகளை மீறுவதே இத்தகைய கோளாறுகள் உருவாக காரணமாக அமைகின்றன.
நாம் விழையும் மதம்
தனி மனிதனோ அல்லது ஒரு இயக்கமோ, எதுவென்றாலும், தத்தம் சுதந்திரம், மற்றவர்களின் சுதந்திரத்திற்கு இடையூறு நேராத வரை தான், அமைதியும் மானிடத்துவமும் காக்கப்பெறும். அத்தகைய வகையிலே, மதம், மக்கள் இவை இணைந்த இயந்திரங்களும் அவைகளின் முக்கிய நோக்கமான மனிதமாண்பை வலுயுறுத்துகிறதாகவே அமைந்திடின், மனித நலம் காக்கப்பெறுவதோடு மட்டுமல்லாமல் மதங்கள் அமைந்ததற்கான காரணம், காரிய சித்தி பெறும் என்பதில் ஐயம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக