ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கடவுள் குறித்த விவாத அறிவிப்பு

 



கடவுளின் இருப்பு மனிதனுக்கு இன்றியமையாததா?


கடவுள், மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே என்னை அடையாளப்படுத்தும் கருவியாகி விடக் கூடாது என்பதில் நான் கவனம் கொள்ள விரும்புகிறேன். ஆனாலும், கடவுள் குறித்த விவாதங்களிலேயே நான் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டிய சூழல் நேர்கிறது. மனிதனின் வாழ்வில் மதமோ கடவுளோ ஆழமான பங்களிப்பைச் செய்வதில்லை. ஆனால், மேலோட்டமான பார்வையில் கடவுளே அனைத்தையும் தீர்மானிப்பதாக, தங்கள் வாழ்வை வழி நடத்துவதாக நம்பிக் கொள்கிறார்கள். ஆக கடவுள் குறித்த விவாதம் என்றால் அது வாழ்வின் ஆழமான பார்வைக்கும், மேலோட்டமான பார்வைக்குமான முரண்பாடு என்பது என்னுடைய நிலைப்பாடு.
பதிவர் குலாம் அவர்களை சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்தார். அவர் பதிவுகளின் சுட்டிகள் சிலவற்றை தந்து படிக்கப் பணித்தார். அந்த வகையில் எனக்கும் குலாமுக்குமான விவாதம் செங்கொடி தளத்தில் நடந்தது. அந்த தொகுப்பை, விரும்புபவர்கள் இங்கு படித்துக் கொள்ளலாம். அதில் அவர் பதிவுக்கு எதிர்பதிவு எனும் ரீதியில் விவாதித்துக் கொள்ளலாம், பின்னூட்டத்தில் ஆழமாக விவாதிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். அப்போதிலிருந்து நல்லூர் முழக்கத்தில் எதிர்ப்பதிவு இடுவது குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். பின்னர் அவரே நல்லூர் முழக்கத்தில் அழைப்பு விடுத்தது, இந்த தொடர் பதிவுக்கான வாய்ப்புகளை துரிதப்படுத்தியது.
எதிர்ப்பதிவு வகையான இந்த விவாதத்தில் ஒரு பதிவு இடுவதற்கு ஒரு வாரகாலம் போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன். எனவே பதிவு இடப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் அதற்கான எதிர்ப்பதிவு இடப்பட வேண்டும். (இது குறைந்த கால அளவு என நண்பர் கருதினால் உகந்த கால அளவை குறிப்பிடலாம்) தவிர்க்க முடியாமல் ஒரு பதிவு வெளியிட தாமதமானால் அந்த காலத்திற்குள் தாமதமாவதையும், அந்தப்பதிவை எப்போது பதிவிடமுடியும் என்பதையும் குறிப்பிட்டு பின்னூட்டம் இடவேண்டும். பதிவிட்டதும் எந்தப் பதிவை மறுத்து இடப்படுகிறதோ அந்தப் பதிவில் மறுப்பு இடப்பட்டுள்ளதை பின்னூட்டம் மூலம் தெரிவிக்க வேண்டும். விவாதம் தொடர்பான அனைத்தையும் வெளிப்படையாக பின்னுட்டம் இடுவதன் வாயிலாகவே தெரிவிக்க வேண்டும், மின்னஞ்சல் தொடர்பு கூடாது. பொதுவான வேறு விதிமுறைகள் எதுவும் இருந்தால் நண்பர் தெரிவிக்கலாம்.
வழக்கம் போல என்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீட்டுடனும், போதிய வீரியத்துடனும், வீண் அலங்காரங்களோ, வசைகளோ இன்றி எடுத்துவைப்பேன் என உறுதி கூறுகிறேன்.
அடுத்து, குற்றச்சாட்டைப் போன்ற ஒன்றை என்மீது நண்பர் குலாம் சுமத்தியிருக்கிறார். \\பின்னூட்டரீதியாக விவாதித்த வரையில் கும்மி, தருமி ஐயா, தமிழன், செங்கொடி வரை ஒரு நிலையில் கடவுள் – நாத்திகம் குறித்த கேள்விகளுக்கு இஸ்லாத்தை முன்னுருத்தியே பதிலிட்டனர்// இதில் கும்மி, தருமி ஐயா, தமிழன் போன்றோர் குறித்து அவர்களே பதில் தரும் பொறுப்புள்ளவர்கள். என்னைப் பொருத்தவரையில் நான் கடவுள் என்ற பொதுவான அம்சத்தைக் கொண்டுதான் பதில் கூறியிருந்தேனே தவிர, குறிப்பாக இஸ்லாத்தை முன்வைத்து பதில் கூறவில்லை. ஆனால் சிலவற்றை விளக்குவதற்கு இஸ்லாத்தையும் எடுத்துக் கொண்டிருந்தேன். அதேநேரம் நண்பர் குலாமின் வாதங்கள் கடவுள் மதம் என்று பொதுவான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அவை இஸ்லாத்தையே உள்ளடக்கமாக கொண்டிருந்தன. கடவுளுக்கான வரைவிலக்கணமாக அவர் கூறியிருந்தது ஏனைய மதக் கடவுளர்களுக்கு பொருந்தாமல் இஸ்லாமிய மதக் கடவுளுக்கே பொருந்தியிருந்தது. எனவே என்னுடைய பதிலும் இவற்றை கவனத்தில் கொண்டதாக இருப்பது தான் சரியானது. தவிரவும், நண்பரின் நோக்கம் இஸ்லாமாக இருக்கும் போது அதை தவிர்க்கவும் முடியாது.
அடுத்து, நண்பர் இரண்டு கேள்விகளை விவாதத்திற்கான முன்நிபந்தனையாக குறித்திருந்தார். \\ இஸ்லாமும் அது கூறும் கோட்பாடுகளும் இவ்வுலக வாழ்க்கைக்கு பொருந்தாதென்றால் அதைவிட விரிவாக தெளிவாக எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் வகையில் சட்டங்களை இயற்ற முடியுமா…?
கம்யூனிஷ வர்க்க சட்டங்களால் அந்நிலை முடியும் என்றால் முதலில் அந்த கம்யூனிஷம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்- பாதுக்காப்புகள் சமூகரீதியான மேம்பாடுகள் குறித்து சுருக்கமாக சொல்லுங்கள்., // கடவுள் குறித்த விவாதத்தில் சட்டங்களும், பெண்களுக்கான பாதுகாப்பும் என்ன பாத்திரத்தை வழங்க முடியும்? என எழும் ஐயத்தை ஒதுக்கிவிட்டு நண்பரின் கேள்விகளை எடுத்துக் கொள்ளலாம். முதலில் சட்டம், அரசு, வர்க்கம் என்பவை குறித்து சரியான புரிதல் இருந்தால் தான் இதற்கான பதிலை முழுமையாக உள்வாங்க முடியும்.
மனித இனம் எனும் அடிப்படையில் அனைவரும் ஒன்று என்றாலும் வாழ்நிலை, வாய்ப்புகள், உழைப்பு, உற்பத்தியின் பலன்கள் போன்றவற்றின் அடிப்படையில் மனிதர்கள் பலவாறாக பிரிந்திருக்கின்றனர். இந்த வர்க்கப் பிரிவுகளுக்கிடையே எழும் முரண்பாடுகளைத் முடித்து வைப்பதற்காக தோன்றிய அமைப்பே அரசு என்பது. அந்த முரண்பாடுகளை முடித்துவைக்கத் தோன்றிய வழிமுறைகள் தான் சட்டம் என்பது. இதில் அரசை எந்த வர்க்கம் கைப்பற்றிக் கொள்கிறதோ அந்த வர்க்கத்திற்கு சாதகமாகத்தான் சட்டங்கள் வடிக்கப்படுகின்றன. ஒரு வர்க்கத்திற்கு பலன் தரும் வகையில் வார்க்கப்பட்ட சட்டங்கள் அரசின் அதிகாரத்தாலும், பலத்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக ஏற்றுக் கொள்ளச் செய்யப்படுகின்றன. இதுவரை உலகில் பயன்பாட்டில் இருந்த, இருக்கும் அனைத்து சட்டங்களுக்கும் இது பொருந்தும்.
நண்பரின் முதல் கேள்வியை எடுத்துக் கொண்டால் \\எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும்// என்று இரண்டு கருத்துகளை வைத்திருக்கிறார். இஸ்லாமியச் சட்டங்கள் இந்த இரண்டையும் நிறைவு செய்தனவா? இல்லை. ஏற்கனவே இருந்த நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது தான் இஸ்லாம். இஸ்லாம் கூறும் கலாச்சார வழிமுறையை ஏற்று மரபை விட்டுவிட முன்வந்தவர்களால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடிந்தது தான் இஸ்லாமியச் சட்டம். ஆக, எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அதன் பணி ஏற்கனவே இருந்துவரும் நடைமுறை வாழ்வை மாற்றுவதும், அரசின் அதிகாரத்தையும் பலத்தையும் கொண்டு அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதும் தான். உழைப்புக் கருவிகள் எதுவும் சொந்தமாக இல்லாத, உற்பத்தியின் பலனை குறைந்த அளவே பெறுகிற ஒரு பாட்டாளிக்கும், உற்பத்திக் கருவிகளையும், வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் உற்பத்தியின் பலனை அதிக அளவில் அனுபவிக்கும் ஒரு முதலாளிக்கும் பொருந்தி வருகிற ஒரே சட்டம் என்று ஒன்று இருக்க முடியுமா? ஒரு சட்டம் அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானதாக, பின்பற்றக் கூடியதாக இருக்க முடியும் என எண்ணுவதே இதில் ஆழமான புரிதல் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகத் தான் கொள்ளமுடியும்.
மேற்கூறிய அடிப்படையில் அமைவது தான் சோசலிச சட்டங்களும் என்றாலும் இரண்டு விதங்களில் அது ஏனைய சட்டங்களிலிருந்து மாறுபடுகிறது. ஒன்று, இதுவரை உலகில் அமைந்த அனைத்துவித அரசுகளும் அதன் சட்டங்களும் சிறுபான்மை வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக கொண்டு அமைந்திருக்கின்றன. சோசலிசம் மட்டுமே பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை ஆளும்வர்க்கமாக கொண்டு அமைந்தது, அமையும். ஆகவே இதுவரையான சட்டங்கள் குறைந்த அளவு மக்களுக்கு சாதகமாகவும், பெருமளவு மக்களுக்கு பாதகமாகவும் இருந்த நிலை மாறி சோசலிசத்தில் பெருமளவு மக்களுக்கு சாதகமாகவும், குறைந்த அளவு மக்களுக்கு பாதகமாகவும் மாறும். இரண்டு, இதுவரை அமைந்த அனைத்து அரசுகளும் அதன் சட்டங்களும் இருக்கும் வர்க்க வேறுபாடுகளை தக்கவைப்பதன் மூலம் அரசு எனும் அமைப்பை நீட்டிப்பதை நோக்கமாக கொண்டவை. சோசலிசம் மட்டுமே வர்க்க வேறுபாடுகளை களைந்து மக்களை ஒரே வர்க்கமாக மாற்றும் திட்டத்துடன் அரசு எனும் அமைப்பை உதிரச் செய்வதை நோக்கமாக கொண்டது. எனவே அனைத்து அரசுகளும் வர்க்கங்களை தக்கவைத்துக் கொண்டே வர்க்கச் சட்டத்தை பொதுச் சட்டமாக மாற்றுகையில் சோசலிசம் வர்க்க பேதங்களை அகற்றி மெய்யான பொதுச்சட்டத்தை கட்டியமைக்கும் பணியை தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆகவே, ஏனைய அனைத்து சட்டங்களை விட சோசலிச சட்டமே சிறப்பானது.
இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொண்டால், சோவியத்களில் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புகள். அனைவருக்கு கட்டாயக் கல்வி எனும் அடிப்படையில் (முதியோர் கல்வி உட்பட) பெண்கள் முழுமையாக கல்வியறிவு கொண்டவர்களாக ஆக்க சட்ட வழிமுறை ஏற்படுத்தப்பட்டது. குழந்தை வளர்ப்பு, சமையல் போன்ற பெண்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவராத, அடிமைத்தளையில் கட்டுண்டு கிடப்பதை உறுதிப்படுத்தும் உழைப்பு முறையை அகற்றுவதற்காக பொது குழந்தை வளர்ப்பு மையங்களையும், பொது சமையல் கூடங்களையும் ஏற்படுத்தியது. அரசியலிலும், சட்ட வடிவமைப்பிலும் பெண்களின் கருத்துகளும், எதிர்வினைகளும் ஏற்றுக்கொண்டு நிர்வாக விதிகளை திருத்தியது. சமவேலைக்கு சமகூலி முறையை கொண்டுவந்தது, அதாவது ஒரே வேலையைச் செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே கூலி. ஆணும் பெண்ணும் சமமாக கருதப்படுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்தது. இதுபோல் நிறைய கூறலாம், சுருக்கமாக இவை போதுமானவை.
இனி விவாதக் கேள்விகளுக்குள் நுழையலாம். \\நீங்கள் கடவுள் மறுப்பாளர் என்றால் ஏன் கடவுளை மறுக்க வேண்டும்? அப்படி மறுக்கக்கூடிய கடவுள் எப்படிப்பட்டவர்?// \\கடவுள் ஏன் இருக்க கூடாது?// இதில் நீங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டவர்? எனும் கேள்விக்கு செங்கொடி தளத்தில் நடந்த விவாதத்தில் பதில் கூறப்பட்டு விட்டது. அது குறித்து நண்பர் மேல் விளக்கங்கள் அளிக்கும்போது விரிவாக அலசலாம். எனவே, கடவுள் ஏன் இருக்கக் கூடாது? எனும் கேள்வியை எடுத்துக் கொள்வோம்.
கடவுள் ஏன் இருக்கக் கூடாது என்பதை விட கடவுள் இருப்பதாக ஏன் நம்பக் கூடாது? என்பதே பொருட்பிழையற்ற கேள்வியாக இருக்கும் என கருதுகிறேன். இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம். ஒன்று, கடவுள் இருப்பதாக கருதப்படுவதால் மக்களுக்கு கிடைத்த பலன்கள் என்ன? இரண்டு, கடவுள் இருப்பதாக கருதப்படுவதால் மக்களுக்கு கிடைத்த தீதுகள் என்ன?
மதவாதிகளின் விளம்பல்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கடவுளின் இருப்பால் இரண்டு முதன்மையான பலன்கள் மக்களுக்கு கிடைப்பதாக கருதப்படுகிறது. ஒன்று, தவறு செய்யாமல் நேரிய வழியில் நடக்க உதவுகிறது. இரண்டு, துயரமான போதுகளில் துவண்டுவிடாமல் ஆறுதலளிக்கிறது. இந்த இரண்டுமே மக்களின் கடவுள் குறித்த நம்பிக்கையிலிருந்து பிறந்திருக்கிறதேயன்றி உண்மையிலிருந்து பிறந்த கருத்துகளல்ல. உலகின் பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஒரு விதத்தில் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்பவர்கள் தான். உலகில் சட்டரீதியில் குற்றமிழைத்தவர்களில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே மிக அதிகம். எனவே கடவுள் நம்பிக்கை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கிறது என்பது சரியான கூற்றாக இருக்க முடியாது. அதேநேரம் உலகின் பெரும்பான்மையோர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களே இதில் கடவுள் நம்பிக்கையின் பங்களிப்பு இருக்கிறதா? சமூகம் தான் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. குற்றம் வெளிப்பட்டாலோ, தண்டனை கிடைத்தாலோ அதனால் ஏற்படும் சமூக மதிப்பிழப்பு தான் குற்றம் செய்வதிலிருந்து தடுக்கிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால் இயல்பான கூடி வாழும் பண்பு, தனிமைப் படுத்தப்படுதலின் வலி, தண்டனையின் மீதான பயம் இவை அனைத்தும் ஒன்றுகூடித்தான் மனிதன் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பெருமளவில் தடுக்கிறதேயன்றி கடவுள் நம்பிக்கை அல்ல. கடவுளின் மீதான நம்பிக்கையும் இதற்கு உதவுகிறது என்றாலும் சமூகத்துடன் ஒப்பிடும்போது சொற்ப அளவுதான்.
எல்லா மதங்களின் கடவுளர்களும் தாங்கள் மக்களை பாதுகாப்பதாக பல வழிகளில் கூறுகின்றன. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மனிதர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்களை கடவுளால் தரப்பட்ட சோதனை எனக் கருதுகிறார்கள். அந்த வகையில் தங்களின் வணக்க வழிபாடுகளை செயல்படுத்துவதன் மூலம் அதிலிருந்து மீளமுடியும் எனும் ஆறுதல் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் மெய்நிலையில் எந்த ஒரு அற்ப பிரச்சனையானாலும் அதற்கெதிராக மனிதன் போராடியே மீள வேண்டியதிருக்கிறது. யதார்த்தத்தில் தங்களின் உழைப்பும், போரட்டங்களுமே வாழ்வில் தங்களின் இன்னல்களை, பிரச்சனைகளை தீர்த்திருக்க அதற்கு மாறாக போராட்டங்களின் வெம்மைகளை தணித்துக் கொள்ள பொய்யான இளைப்பாறலை கடவுள் நம்பிக்கையின் மீது அடைகிறான். இந்த இளைப்பாறல் எந்த விதத்திலும் மனிதனுக்கு மீளாற்றலை தந்துவிடுவதில்லை. இதை கடவுள் எனும் கருத்தியல் தான் செய்யமுடியும் என்பதும் இல்லை. தனக்குகந்த எந்த அம்சத்தைக் கொண்டும் இந்த இளைப்பாறலை மனிதன் பெற்றுவிட முடியும். ஆகவே, கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தே தீரவேண்டும் எனும் அவசியம் மனிதனுக்கு இல்லை.
கடவுள் நம்பிக்கையை மனிதன் கொண்டிருப்பதால் ஏற்படும் தீதுகளைப் பார்த்தால், எல்லா கடவுளும், மதங்களும் விதிக் கொள்கையை கொண்டிருக்கின்றன. இதன் சாராம்சமான விளைவு மனிதனுக்கு இந்த உலகில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தீர்வை நோக்கி பயணப்படும் பாதையை மடைமாற்றுவது தான். என்ன நடந்தாலும் அது கடவுளிடமிருந்து வந்தது எனும் நம்பிக்கை ஒருவனிடம் ஏற்பட்டு விட்டால் அவன் நிகழ்வின் மெய்யான காரணிகளை நோக்கி நகரவே மாட்டான். உலகில் மனிதர்கள் மேலெழுந்தவாரியாக சிந்திப்பதும் பேசுவதுமே இதன் சான்று. ஏனென்றால் குழந்தைப் பருவத்திலேயே மனிதனின் சிந்திக்கும் பாதையை கடவுள் நம்பிக்கை கைப்பற்றி விடுகிறது. அதை மீறி சிந்திப்பதற்கு அவனின் சூழலும் அனுமதிப்பது இல்லை. மட்டுமல்லாது, விதிக்கொள்கையை திரளாக பார்த்தால் அது மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்றே பொருள் தருகிறது. ஆனால் மனிதன் சிந்திக்கிறான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கப் போவதில்லை. எனவே யதார்த்தத்திற்கு முரணான கருத்தை சிந்தையில் ஏற்றிவைத்திருப்பது தேவையற்றது.
எல்லா கடவுளின் மதங்களுமே ஏதோ ஒரு வடிவத்தில் மறுபிறப்பு கொள்கையை கொண்டிருக்கின்றன. இது மனிதர்களுக்கு ஏற்படும் சரியான கோபங்களைக் கூட தணித்து விடுகின்றன. மக்கள் விரோத செயலொன்றை சந்திக்கும் மனிதன் அதை எதிர்த்து வினையாற்றாமல் கடவுள் தண்டிப்பார் என்று தம் பலம் பலவீனம் சார்ந்து ஒதுங்கிவிடுவது கடவுளின் மறுபிறப்பு வகைப்பாட்டின் பின்னணியிலேயே வருகிறது. ஆனால் துலக்கமான வாழ்வு பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் மட்டுமே நிலவுவதால், அந்த வாழ்வில் போரட்டத்திற்கான வீரியத்தை இழந்து விடுகிறான். நிச்சயமற்றதாக இருக்கும் மறுபிறப்பிற்காக நிச்சயமான வாழ்வின் களங்கள் சிதைக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
மனிதனல்லாத பிற உயிரினங்களில் கடவுள் எனும் தாக்கம் இல்லை. ஏனென்றால் அவைகளுக்கு தமது தேவைகளைத் தாண்டிய சிந்தனை இல்லை. மனிதன் மட்டுமே சூழலை தனக்கு உகந்ததாக திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். இதில் அவனுக்கு தோன்றும் இயலாமைகளின் உருவெளியே கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்திக்கான தேவையை ஏற்படுத்துகிறது. அதேநேரம் கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது எனும் எண்ணம் மனிதர்களுக்கு ஏற்படவே இல்லை என்று கொண்டால் இன்று மனிதன் கண்டிருக்கும் எந்த முன்னேற்றமும் தடைபட்டிருக்காது என்பதோடு மட்டுமன்றி இன்னும் மேலதிக உயரங்களை மனிதன் எட்டியிருக்கக் கூடும். எப்படி என்றால், கடவுள் இருப்பு, கடவுள் மறுப்பு என்ற நிலை மட்டுமே பூமியில் இல்லை. கடவுள் இருப்பின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் கட்டமைக்கப் பட்டிருப்பதால், வரலாற்றில் மனிதனின் ஆற்றல் பெருமளவில் மதங்களுக்கிடையேயான முரண்பாட்டிற்காகவே செலவழிக்கப்பட்டிருக்கிறது, செலவு செய்யப்பட்டும் வருகிறது. ஆகவே கடவுள் நம்பிக்கை மனிதர்களுக்கு, மக்களுக்கு இருந்தே தீர வேண்டும் எனும் காரணி எதுவும் இல்லை என்பதால் கடவுள் இருக்கிறார் எனும் நம்பிக்கை மனிதனுக்கு அவசியமில்லை. அது மனிதனுக்கு எந்த விதத்திலும் பலன் தரப் போவதுமில்லை.
எதிர்ப்பதிவு வகைப்பட்ட இந்த விவாதத்தின் முதல் பதிவான இதில் தொடக்க வாதங்களை வைத்திருக்கிறேன். நண்பர் குலாமின் எதிர்ப்பதிவில் இருக்கும் வீரியத்தைப் பொருத்து என்னுடைய உள்ளீட்டை நான் தீர்மானித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக