ஆரம்பத்தை நோக்கி: பகுதி 2
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு. WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் சஹர் (அதிகாலை) நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும், நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. வரலாறைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன்.நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ ஆரம்பமானது குழப்பம். நபி, மரணப் படுக்கையில் இருக்கும் பொழுதே வாரிசுரிமை விவாதம் துவங்கிவிட்டதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. அபூபக்கர் சித்தீக் அவர்களின் காலத்தில் பதுங்கியிருந்த ரத்தவெறி உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் விஷம் தோய்த்த ஈட்டியாக உமர் அவர்களின் உயிரைப் பறித்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற வெளிப்பட்டது ஒரே கொள்கையின் கீழ் சகோதரர்களாக, ஒழுக்கசீலர்களாக, மனிதநேயமிக்கவர்களாக, பெருந்தன்மை கொண்ட பண்பாளர்களாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட நபித்தோழர்கள், ஒருவருக்கொருவர் நயவஞ்சகமாக, கொலை வெறி பிடித்தவர்களாக நடந்து கொண்டர்கள்.
புஹாரி ஹதீஸ் : 4024
சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது.
முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ஹர்ரா போர் நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.
(ஸல் – “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” என்று கூறி முஹம்மது நபிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. தனது பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூறவேண்டும் என்று முஹம்மது நபி முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் .
அலை – “அலைஸலாம்” இதர நபிகள் (இறைத்தூதர்களின்) பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூற நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல்.
ரலி – “ரலியல்லாஹுஅன்ஹு” குறிப்பிட்ட அந்த நபித் தோழருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல். “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” போன்று “அலைஸலாம்” “ரலியல்லாஹுஅன்ஹு” போன்ற பிரார்த்தனைகளைக் கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.)
என்பத்தி இரண்டு வயதான முதியவர் உஸ்மான் அவர்களின் உயிரைப் பறித்தது எது? இதில் மிகப் பெரும் கேவலம் என்னவென்றால், அந்த கேவலமான நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் பல முக்கியமான தோழர்களும் அவர்களுடைய புதல்வர்களின் பங்களிப்புதான். இவர்களில் பலர் சொர்கவாசிகளென்று நபியால் அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள். எத்தனை நபித்தோழர்கள் இயற்கையான மரணத்தை சந்தித்தனர்? இன்னும் சிலர், அலீ அவர்கள் உட்பட தவறுகளைக் கண்டு நியாயத்தை வெளிப்படுத்தாமல் வாய் மூடி மவுன சாமியார்களாக இருந்தனர். அலீ அவர்கள் பதவி ஏற்றவுடன், உஸ்மான் அவர்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று முழங்கினார். நாற்காலி மோகம் யாரையும் விடவில்லை.
குழப்பங்கள் தோன்றும் வேளைகளில் அதை எதிர்த்து எழுந்து நிற்பவனை விட அமைதியாக அமர்ந்திருப்பது மேலானது என்ற ஹதீஸை அவர்கள் நிலைநிறுத்தினர். விளைவு ரத்த வெறி இன்று வரை தொடர்கிறது.
புஹாரி ஹதீஸ் : 7082
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான், அதில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ யார் பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதில் மாற்றான் மனைவியை அபகரிக்கும் செயல் வேறு. அந்த நிகழ்வுகளை நினைத்தால் மலக்கழிவுகளுக்குள் விழுந்ததைப் போன்ற உணர்வு. இது யாருடைய தவறு? சஹாபாக்களுக்குள் சுயநலம், அதிகாரவெறி, நயவஞ்சகம், உச்சகட்டமாக கொலைவெறி.
உதாரணத்திற்கு, உஸ்மான் அவர்களின் கொலைக்கு பழிவாங்குவதாக கூறி, நான்காவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா அலீ அவர்களை எதிர்த்து, முஹம்மது நபி அவர்களின் அன்புக்குரிய மனைவி ஆயிஷா அவர்கள் தலைமையில் பஷராவிற்கு அருகில் குரைபா என்ற இடத்தில் போர் நிகழ்ந்தது.
போர்களத்தில், ஆயிஷாவின் ஒட்டகத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததால் இந்தப் போர் Battle of the Camel (ஒட்டகப் போர்) என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆயிஷா அவர்கள் தோற்கடிக்கப்பட்ட அந்த போரில், முஸ்லீம்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகம். வேறு சில வரலாற்றுக் குறிப்புகள் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்கிறது. இருதரப்பிலும் இறந்தவர்களில் பலர் முஹம்மது நபி மற்றும் கலீபாக்களான அபூபக்கர், உமர் உஸ்மான் ஆகியோர் தலைமையிலும் ஒன்றாக காஃபிர்களை (மாற்று மதத்தினர்- முஹம்மது நபியை இறைத்தூதர் என்று ஏற்க மறுப்பவர்கள்) எதிர்த்து போரிட்ட மிக முக்கியமானவர்கள், அலீ அவர்களுக்கும் நன்கு தெரிந்த சஹாபாக்கள்.
இவ்வுலகிலேயே, முஹம்மது நபி (ஸல்) அவர்களால் அறிவிப்புச் செய்யப்பட பத்து சொர்க்கவாசிகளுள் அலீ அவர்களும் ஒருவர். போற்றுதலுக்குரிய நான்கு கலீபாக்களுள் ஒருவர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அன்புக்குரிய மகளின் கணவர் என்று பல சிறப்புக்களை உடையவர்.
ஆயிஷா முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மிகவிருப்பமான மனைவி மேலும் உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் தாய் என்ற தகுதியுடையவர்.
போர் என்பது ஒரு உச்சகட்ட நடவடிக்கை. இந்தப் போர் ஏற்பட இவர்களில் காரணம் யார்?
இந்த ஒட்டகப் போரில் கொல்லப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களின் மரணத்திற்கு பொறுப்பு யார்?
அலீ அவர்களின் ஆதரவாளர்களில் சிலர், உயிருடன் இருக்கின்ற தோல்வியடைந்த ஆயிஷாவின் ஆதரவாளர்களை அடிமைகளாக்கி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றனர். அலீ அந்த கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். உடனே அவர்கள் பஷரா நகரத்து மக்களின் உடைமைகளை சூறையாட அனுமதி கேட்கின்றனர். அதையும் அலீ மிகக் கடுமையாக மறுத்து, போர்களத்தில் கிடைத்த பொருட்களை பகிந்தளித்தார்.
போரில் தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு பெரும் செல்வம் ஈட்டலாம் என்று அலீ அவர்களுடன் இணைந்து போரிட்ட பலர், தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி முவஆவியா அவர்களுக்கு எதிரான போருக்கு படை திரட்டுவதில் அலீ அவர்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது என்கிறது வரலாறு. இந்த போருக்கு அடிப்படைக் காரணமான உஸ்மான் அவர்களின் கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.
புஹாரி ஹதீஸ் :7070
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
புஹாரி ஹதீஸ் : 7072
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்.
இவர்களில் நம்மை (முஸ்லீம்களை)ச் சேராதவர்களும் நரகத்தில் வீழ்பவர்களும் யார்? இன்று நான் காணும் ஒரு சராசரி மனிதனிடம் இருக்கும் பெருந்தன்மையும், மனிதநேயமும் நபி (ஸல்) அவர்களின் நேரடிப் பார்வையில் வளர்ந்த நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலும்கூட இல்லாமல் போனது ஏன்?
பதவி அதிகாரங்களுக்காக நெருங்கிய உறவினர்கள் தங்களுக்குள், உறவுமுறைகளின் முக்கியத்துவம் அறியாமல், மனிதாபிமானமின்றி சண்டையிட்டுக் கொள்வது போற்றுதலுக்குரியதா?
பெண்கள், தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கூறும் இஸ்லாமில், மருமகனை எதிர்த்து போர்க்களத்திற்குச் சென்ற ஆயிஷா அவர்களின் செயல் விநோதமாகத் தோன்றியது.
நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் அதிகாரங்களுக்காக ஒருவரையொருவர் கொல்லத் துணிந்த அலீ-ஆயிஷா ஆகிய இருவரிடமும், முஹம்மது நபியின் நற்போதனைகள் பயனளிக்காமல் போனது ஏன்?
மிக நெருங்கிய உறவினர்களிடமே பெருந்தன்மையாக நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் மாற்று மதத்தினரை என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் என் மனதைக் குத்திக் கிழித்தது. இத்தகையவர்களால் அறிவிக்கப்படும் செய்திகளின் நம்பகத் தன்மை என்ன? என்ற கேள்விகள் என்னுள் ஆரம்பமானது. இந்தக் கேள்விகள் என்னை உறங்க விடவில்லை.
இரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாற்றை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. வருத்தம் தாங்க முடியாமல் 72 கூட்டத்தினர் யார்? என்ற உரையின் இறுதிப் பகுதிகளைக் கேட்க விரும்பவில்லை. என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை தொடர்ந்து சில நாட்கள் உறங்கவும் முடியவில்லை. நான் அந்த மிகப்பெரிய தவறுகளைச் செய்ததைப் போல என்னுள் இனம் புரியாத வலி. ஒருவேளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் வரலாற்று செய்திகள் என்ற பெயரில் தவறான தகவலைத் தெரிவித்திருக்கலாம் என நினைத்து வேறு சில மார்க்க அறிஞர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட பொழுது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் கூறிய செய்திகளனைத்தும் உண்மை என்று ஆதாரங்களையும் குறிப்பிட்டனர்.
நான் என்னுடைய வேதனையை தெரிவித்தேன். அதற்கு அவர்கள், இப்பொழுது உங்கள் மனதில் தோன்றும் சஹாபக்களின் (நபித்தோழர்கள்) மீதான தாழ்வான எண்ணம் தவறானது. அந்த துயரமான நிகழ்வு அல்லாஹ்வின் விதி. சஹாபாக்களுக்குள் நிகழ்ந்த அத்தகைய குழப்பம் அவர்களின் மீது தாழ்வான எண்ணத்தை உருவாக்கி விடும். எனவேதான் இதைப் போன்ற செய்திகள் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் மறைக்கப்பட்டது என்றனர். சிலர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரை குறை கூறினர்.
என்னால் சிறிதும் ஏற்க முடியவில்லை. இறைவனின் விதி(!?) அனைத்து பழியையும் தன் தலையில் ஏற்க இறைவன் இருக்கிறான்!. இவர்கள் எந்த பாவமும் அறியாதவர்கள்(?). மார்க்கவாதிகள், வரலாறு முழுமையாக தெரியாத பாமர மக்களிடம் மழுப்பலான பதிலைக் கூறியே சுமார் 1400 வருடங்களை கடத்தியிருக்கின்றனர். எல்லோரும் கேள்வியை ஆரம்பித்தால் எதில் முடியும் என்ற அச்சமும் பதில் கைவசமில்லை என்பதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.
என் சிந்தனை வேறு திசையில் நகரத் தொடங்கியது. விரும்பத்தகாத நிகழ்வாயினும் மறுக்க முடியாத உண்மையல்லவா, இதை ஆராய்ந்தால் நிச்சயமாக சில உண்மைகள் வெளிவரும் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. மார்க்க அறிவை பெருக்கவும், மறைக்கப்பட்ட செய்திகளை அறியவும் ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக